Wednesday, September 4, 2013

சிரியாவுக்கெதிரான அச்சுறுத்தல்கள், அந்நாட்டை இஸ்ரேலுக்கு அடிபணியச் செய்வதையே நோக்காகக் கொண்டவை


சிரியாவுக்கெதிரான மேற்கத்தேய மற்றும் அரபு முயற்சிகள் மற்றும் அந்நாட்டுக்கெதிரான இராணுவ அச்சுறுத்தல்கள் அனைத்தும் அந்நாட்டை இஸ்ரேலுக்கு அடிபணியச் செய்வதையே இலக்காகக் கொண்டவையாகும்.

இவ்வாறு, லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராட்ட முன்னணியின் ஆய்வாளர் செய்யித் முஹம்மத் அல்மூசவி, இக்னா செய்தி ஸ்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இத்தகைய முயற்சிகளின் பின்னாலுள்ள குறிக்கோள், போராட்டக் குழுக்களின் வலிமையைப் பலவீனப்படுத்துவதும் பிராந்தியத்தில் சியோனிச அரசுக்கு சாதகமான நிலைகளை உருவாக்குவதுமாகும் என்றார்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவதெனில், ஜோர்டான், சைப்ரஸ் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளையே அமெரிக்கா இதற்காகப் பயன்படுத்த முனையும். இதனால் சிரியாவையும் அமெரிக்க நலன்களைப் பேணும் நாடுகளில் ஒன்றாக மாற்றி விடுவதே அமெரிக்காவின் நோக்கமாகும்.

சிரியாவுக்கெதிரான யுத்தம் நீண்ட காலங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்ட அல்மூசவி, அது ஈராக் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தற்போது அமுல்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு 20 நாட்களே இடம்பெற்றன. அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் கோலின் பவல், ஈராக்கைத் தொடர்ந்து அடுத்த இலக்காக சிரியா இருக்கும் என பஷர் அல்அசாத்திடம் தெரிவித்திருந்தார். எனவே, சிரியா இதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த போதிலும் இவ் யுத்தம் அமெரிக்காவினால் பிற்போடப்பட்டு வந்தது.

லெபனான் மற்றும் காஸா மீதான சியோனிச அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பிற்போடப்பட்டமைக்கான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், லெபனான் மற்றும் காஸா ஆக்கிரமிப்புகளின் போது போராட்ட இயக்கங்களை இஸ்ரேல் அழித்து விடும் என அமெரிக்கர்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இஸ்ரேல் இவ் யுத்தங்களில் படுதோல்வி கண்டிருந்தது எனவும் குறிப்பிட்டார்.

அல்மூசவி மேலும் குறிப்பிடுகையில், மூன்று நாட்களில் அழித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மீதான தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கர்கள் 33 நாட்களாகியும் தமது இலக்கை அடைய முடியாது தோல்வி கண்டனர் என்றார்.

ஹிஸ்புல்லாஹ்களுக்கும் ஈரானுக்கும் இடையே பாலமாக அமைந்திருப்பதனால், சிரியா மிக முக்கிய கேந்திர நிலையமாக விளங்குகின்றது. இவ்விரு பகுதியினருக்கும் இடையிலான தொடர்பு அறுக்கப்படுமானால் மேற்கத்தேய சக்திகள் முன்னெப்போதுமில்லாதவாறு பெரும் பலம் பெறும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.

சிரியாவுக்கெதிரான இவ் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ந்தும் தொடர்புபட்டு வருகின்றது எனக் குறிப்பிட்ட லெபனானிய ஆய்வாளர், லெபனான் மற்றும் காஸாவில் போராட்ட இயக்கங்கள் மீது தொடுத்த யுத்தங்களில் படுதோல்வி கண்ட இஸ்ரேல், அதற்குப் பழிவாங்குமுகமாக, இப்போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்து வரும் சிரியா மீதான தாக்குதல்களின் போது முன்னணியில் நின்று செயற்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தின் இஸ்லாமிய எழுச்சிப் போராட்டங்களுடன் இணைந்ததாக சிரிய வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், இஸ்லாமிய எழுச்சி பிராந்தியத்தை தூய்மைப்படுத்துவதாகக் காண்பித்துக் கொண்டு, எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரப்போக்குடைய அறிஞர்கள் மற்றும் சமயப் பெரியார்களைக் கொண்டு சிரியாவில் வன்முறைகளையும் எதிரிகள் தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர் என மேலும் குறிப்பிட்டார்.

சிரியாவுக்கான ஹிஸ்புல்லாஹ்களின் ஒத்துழைப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், சிரியாவின் 40 உள்கிராமங்களில் லெபனான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதனால், இம்மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது லெபனான் அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.

அம்மக்களைப் பாதுகாத்து தமது பொறுப்புகளை சரியாகச் செய்வதில் லெபனான் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதனால், இக்கிராமங்களிலுள்ள இளைஞர்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஆதரவாளர்களாக மாறினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முதலாவது நடவடிக்கையாக அமைந்தவை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதும், இளைஞர்களுக்கு தம்மையும் தமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதுமாகும் எனவும் அல்மூசவி குறிப்பிட்டார்.

சில காலங்களுக்குப் பின் குறித்த கிராமங்களில் வாழும் கிறிஸ்தவர்களும் தமக்கும் இத்தகைய பயிற்சிகளை வழங்குமாறு கோரி ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு விண்ணப்பித்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இனத்துவேஷமான ஃபத்வாக்களை வெளியிட்டு வரும் அல்நுஸ்ரா அமைப்பு ஷீஆ சமுதாயத்தை அவமதிக்கவும் அவர்களது புனித சின்னங்களை அழிக்கவும் என ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதனால், இவர்களிடமிருந்து தமது புனிதஸ்தலங்களைப் பாதுகாக்கவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு போராடி வருகின்றது என மேலும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கவே அமெரிக்கா இப்பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், சிரியாவைத் தாக்கும் விடயத்தில் அமெரிக்கா தவறிழைக்குமானால், பின் சிரியாவின் தாக்குதல் இலக்காக இஸ்ரேல் நிர்ணயிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

சிரியாவிலுள்ள தக்பீரி குழுக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், இவர்கள், ஷீஆ சமுதாயத்தினரை கொல்வதன் மூலமாக தாம் சுவர்க்கம் செல்ல முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள மிகக் காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதக் குழுவாகும் என்றார்.

அல்நுஸ்ரா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள், லிபியா, எகிப்து, மொரோக்கோ, சூடான், பிரான்ஸ், சாட், புர்கினா பஸோ, நோர்வே, அல்ஜீரியா, தூனிசியா, நெதர்லாந்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாலிபான் போன்ற தீவிரப்போக்குடைய அரசாங்கமொன்றை சிரியாவில் அமைப்பதே அல்நுஸ்ரா அமைப்பின் நோக்கமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Twitter Bird Gadget