Saturday, July 19, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அபுபக்கர் அல்பக்தாதி

ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்பக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவினால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, 'விடுதலைப் போராளிகள்' என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.

ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கம், சவூதியினால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபிச மற்றும் சலபி சிந்தனையிலிருந்து தோன்றிய ஒரு தீவிரவாத இயக்கமாகும். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல்பக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் 'அல் பாக்தாதி' என்றே அழைக்கப் படுகிறார்.

இவர், தனது மோசமான தீவிரவாதச் செயல்கள் காரணமாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2005 முதல்,
Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். இக்காலப் பகுதியில், மத்திய கிழக்கில் குழப்பங்களையும் அமைதியற்ற நிலையையும் உருவாக்கும் நோக்கில், அல்பக்தாதிக்கு இராணுவப் பயிற்சிகளையும் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் படியான விசேட பேச்சுப் பயிற்சிகளையும் இஸ்ரேலின் மொசாட்டும் அமெரிக்காவின் சிஐஏயும் இணைந்து வழங்கின. பிரித்தானியாவும் இதில் பங்கெடுத்திருந்தது. பயிற்சிகளின் முடிவில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிரியாவில் அவரை இறக்கி விட்ட அமெரிக்கா, அரச படைகளுக்கு எதிரான சண்டைக்கு ஆட்சேர்க்க அவரைப் பயன்படுத்திக் கொண்டது. சிரிய அரசாங்கத்திற்கெதிராக அமெரிக்காவின் அனுசரணையில் அல்கைதாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் செயல்களில், அல்பக்தாதி குழுவினர், மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இக்காலப் பகுதியில் சிரிய முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் செய்த அநீதிகளும் சித்திரவதைகளும் சொல்லி அடங்காதவை.

அப்போது சிரியாவில், இன்னொரு இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அல் நுஸ்ரா இயங்கிக் கொண்டிருந்தது. அல்பக்தாதி குழுவினர், அல் நுஸ்ராவுடன் கூட்டுச் சேர்ந்து, 'ஈராக், சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு'
(Islamic State of Iraq and Syria) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி விட்டது அமெரிக்காவும் இஸ்ரேலும். அவர்கள் தங்களுக்குள் அடித்து ஆளையாள் கொன்று குவித்தனர். இஸ்லாமிய தனி அரசுக்காக ஐக்கிய முன்னணி அமைத்தவர்கள், எதிரிகளாக தமக்குள் மோதிக் கொண்டார்கள்.

ISIS, லெபனான் முதல் ஈராக் வரை, ஒரு இஸ்லாமிய அரசு அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு சர்வதேச அமைப்பாக பரிணமித்தது. மேற்கு ஐரோப்பாவிலும், பிற அரபு நாடுகளிலும் இருந்து, ஜிகாத் மீது பற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அல் நுஸ்ரா, ISIS ஆகிய இயக்கங்களுக்கு தேவையான நிதியுதவி, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தாராளமாக கிடைத்து வந்தது. அவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்த நாடு எது? வேறு யார், அமெரிக்கா தான்! இசிஸ் (ISIS) போராளிகளுக்கு, ஜோர்டானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினால் பயிற்சியளிக்கப் பட்டது. சண்டையில் காயமடைந்த போராளிகளுக்கு, துருக்கியிலும், இஸ்ரேலிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது. இதிலிருந்து இசிஸ் அமைப்பும் அதன் தலைவர் அல்பக்தாதியும் முற்று முழுக்க அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பு என்பது தெளிவாகியது. உசாமா பின்லாடனைக் கொண்டு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகக் காட்டி, மத்திய கிழக்கில் அநியாயங்களையும் சுரண்டல்களையும் கட்டவிழ்த்து விட்ட அமெரிக்க இப்போது, புதிய பெயரில் புதிய நபரைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளது.
அல் நுஸ்ரா, இசிஸ் ஆகிய இயக்கங்கள், சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் பெற்று, பலமான இயக்கங்களாக வளர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். சிரியாவிலும் ஈராக்கிலும் மிகவும் கொடூரமான கொலைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அல்பக்தாதியை முஸ்லிம்களின் கலீபாவாக ஏற்குமாறு மக்களை வற்புறுத்துகின்றார்கள். ஏற்க மறுப்பவர்களை எவ்வித ஈவிரக்கமுமின்றிச் சுட்டுக் கொல்கின்றார்கள். மொசுல் நகரில் இவ்வாறு பொதுமக்களையும் ஈராக்கியப் படை வீரர்களையும் கைகளைக் கட்டிக் குப்புறப் படுக்க வைத்துவிட்டு அவர்களது தலைகளில் சுட்டுத் தள்ளும் இசிஸ் தீவிரவாதிகளின் கொடூரமான வன்முறைகளைக் கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. அப்படியும் வெறி அடங்காத இவர்கள், கொல்லப்பட்டவர்களின் கழுத்துகளை வெட்டி வேறாக்கிப் பார்த்துத் தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள்.

இசிஸ் இயக்கம், திடீரென ஒரு சில நாட்களுக்குள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 'இஸ்ரேலை யாராலும் வெல்ல முடியாது' என்பது போன்ற மாயை, இசிஸ் இயக்கத்தை சுற்றியும் பின்னப் பட்டது. உண்மையில், அமெரிக்காவின் உதவியின்றி, இசிஸ் மட்டுமல்ல இஸ்ரேல் கூட, ஒரு திடீர் யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்க முடியாது. தற்போது, ஈராக்கிய நலன்களை பாதுகாப்பதற்காக, 'இசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்' அமெரிக்கா குதித்துள்ளது. அதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான்.

ஏற்கனவே, இசிஸ் இயக்கத்தினர் எண்ணைக் கிணறுகளை கொண்ட மொசுல் நகரை கைப்பற்றிய நாளில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணையின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. அது அவர்களது பொருளாதாரத்திற்கு நல்லது. மேலும், ஈராக்கில் பிரச்சினை இருப்பதாகவும், அமெரிக்காவை தவிர வேறு யாரும் அதனை தீர்த்து வைக்க முடியாதென்றும் 'நிரூபிப்பதன்' மூலம், ஈராக்கை தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும். எண்ணெய் வளத்தையும் சுரண்ட முடியும்.

அத்துடன், இசிஸ் போராளிகள் படிப்படியாக முன்னேறி வருவதனால், தாம் நாட்டை இழக்க வேண்டி வந்து விடும் என்று அரபு மன்னர்கள் அஞ்சத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அமெரிக்காவை உதவிக்கு அழைப்பார்கள். அமெரிக்கா, அந்த முட்டாள் அரபு மன்னர்களுக்கு (காலாவதியாகிப் போன) தனது ஆயுதங்களை விற்றுப் பணம் பெறும். அவற்றைக் கொண்டு புதிய ஆயுதங்களைத் தயாரிக்கும். தேவைப்படும் போது, அல்பக்தாதியை சர்வதேச பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்து கொண்டு, யுத்தமொன்றைத் தொடங்கும். அதில் தனக்கு விருப்பமற்றவர்களை ஒழித்துக் கட்டும். இதில், இஸ்லாமிய கிலாபத் கனவில் ஆங்காங்கே இருந்து ஒன்று திரண்டுள்ள இசிஸ் தீவிரவாதிகள் கூண்டோடு சூறையாடப்படுவார்கள். இந்த எல்லா சதிகளுக்கும் பின்னால் நிற்பது அமெரிக்க, இஸ்ரேலிய, சவூதிய, பிரித்தானிய நலன்கள் மட்டுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, ஐஎஸ்ஐஎஸ் என்பதும், அபுபக்கர் அல்பக்தாதி என்பதும், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய மனித விரோத நாடுகளினால் கூட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு பொம்மையாகும்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் செய்ய வேண்டியது, இப்படியான முட்டாள் ஜிஹாதியர்களிடமிருந்தும், வஹ்ஹாபிசத் தீவிரவாதிகளிடமிருந்தும், அமெரிக்க-இஸ்ரேலிய சதிகளிலிருந்தும் உலக முஸ்லிம்களைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்வைப் பிரார்த்திக்க வேண்டும்.

குறிப்பு:

01.    ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவளிப்பதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

02.    சர்வதேச மார்க்க அறிஞரும் முப்தியுமான பேராசிரியர் யூசுப் கர்ளாவி அவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அதற்கு ஆதரவு வழங்குவது மார்க்க விரோதச் செயல் எனவும் வலியுறுத்தியுள்ளார். அபூபக்கர் அல்பக்தாதியின் இஸ்லாமிய கிலாபத் பிரடகனத்தையும் முற்றாக நிராகரித்துள்ளார். 

No comments:

Twitter Bird Gadget