Friday, April 26, 2019

இலங்கை முஸ்லிம்களும் சமய சுதந்திரமும்



இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். எனினும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பல நாடுகளில் கிடைக்காத சமய சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, சவூதி அரேபியாவில், வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பேருரையின் போது ஒரு மார்க்க அறிஞர் தான் விரும்பும் எதனையும் பேசி விட முடியாது. மன்னர் குடும்பத்திற்கு பாதகமில்லாத வகையில் அரசாங்கத்தால் எழுதிக் கொடுக்கப்படும் விடயங்களையே உரையாக முன்வைக்க முடியும். அதேபோன்று, தொழுகைக்கான அழைப்புக்கு மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.

ஆனால், இலங்கையில், இவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவுமின்றி முழுமையான சுதந்திரம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

·        இலங்கையில் பள்ளிவாயல்கள் தமது ஒலிபெருக்கிகளை எவ்வித கட்டுப்பாடும் இன்றி எவ்வளவு நேரமும் எதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

·        ஒரு தனிநபரோ ஓர் அமைப்போ எத்தனை பள்ளிவாயல்களையும் அமைத்துக் கொள்ள முடியும். அந்தப் பள்ளிவாயல்களில் எவ்வளவு நேரமும் ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்ய முடியும்.

·        மார்க்கப் பிரச்சாரம் என்ற பெயரில் நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், சிடிக்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் என எவற்றையும் எவ்விதமான உள்ளடக்கங்களுடனும் எவ்வித மேற்பார்வையுமின்றி வெளியிட முடியும்.

·        ஒரு மார்க்க அறிஞரோ ஒரு குழுவோ தான் விரும்பும் எதனையும் எவ்வித கட்டுப்பாடும் தடைகளுமின்றி முழுமையாகப் பேசி விட முடியும். அது மற்றொரு சமூகத்தையோ, சமுதாயத்தையோ, மனிதனையோ, அமைப்பையோ, குழுவையோ விமர்சிப்பதாக, அவமதிப்பதாக, தூசிப்பதாக இருந்தாலும் சரியே.

·        தாம் விரும்பும் இடத்தில், விரும்பும் பெயரில் அரபுக் கல்லூரிகளை அமைத்துக் கொள்ள முடியும்.

·        தாம் விரும்பும் நாடுகளிலிருந்து விரும்பும் தொகையில் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த இவ்வாறான தங்குதடையற்ற சுதந்திரத்தை பல முஸ்லிம் அமைப்புகள் முறையாகவும் சரியாகவும் பயன்படுத்திக் கொண்ட போதிலும், தௌஹீத் ஜமாஅத் போன்ற அடிப்படைவாத அமைப்புகள், முழுமையாக துஷ்பிரயோகம் செய்து விட்டன.

இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தித்தான், இலங்கையில் இந்த  அடிப்படைவாதிகள், அந்நிய சமயங்களை அவமதித்தனர். தமது கொள்கை சாராத இதர இஸ்லாமிய இயக்கங்களை தாறுமாறாக விமர்சித்தும், தரக்குறைவாகத் திட்டித்தீர்த்தும், அபாண்டங்களையும் அவதூறுகளையும் புனைந்தும் தமது வன்மங்களைத் தீர்த்துக் கொண்டனர். இதற்காக, பொதுமேடைகளையும், பள்ளிவாயல் அரங்குகளையும், இணையத்தளங்களையும், சமூக வலைத்தளங்களையும், வெளிநாட்டு நிதிகளையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இஸ்லாம், முரண்பாட்டுக்குள் உடன்பாடு காண வழிகாட்டியிருக்கும் போது, அதனை முற்றாகப் புறக்கணித்து விட்டு, மற்றைய சமூகங்களை தூற்றுவதிலும் விமர்சிப்பதிலும் தமது பாரிய நிதியைச் செலவிட்ட இந்த தௌஹீத் கும்பல்கள், இன்று தமது உண்மைச் சொரூபம் வெளிப்பட்டு விட்ட நிலையில், முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டு, தலைகுனிந்து நிற்கிறார்கள்.

இந்த அடிப்படைவாதிகள் தமது சமய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள இந்த அநீதிக்கு, இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் பெரும் விலைகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற, நிம்மதியற்ற, கௌரவமற்ற நிலைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படைவாதிகளின் செயல்களை அவ்வப்போதே கண்டிக்காது, அலட்சியம் செய்த, அல்லது அமைதியாக இருந்து ஆதரித்த ஏனையோரும் இந்த அநீதிக்குப் பங்களிப்புச் செய்தவர்கள் என்றே கருத வேண்டும்.

எனவே, ஏனைய சமயங்களை, இனங்களை, இயக்கங்களை, கொள்கைகளை, சிந்தனைகளை மதித்து, பரஸ்பரம் ஒற்றுமை, ஐக்கியம் பேணி வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்படுவோமாக!

ஸபீர் ஹாபிஸ்

No comments:

Twitter Bird Gadget