இறுக்கி மூடிய கண்களுடன் மெல்லிய சத்தமெழுப்பித் தூங்கிக் கொண்டிருந்தார் உம்மா. தலை மாட்டில் நின்றிருந்த நான் கைகளைக் கட்டிக் கொண்டு, கண்ணீர்க் கண்களுடன் அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு எதிரில் வாப்பா நின்றிருந்தார். அவரது முகத்தில் வர்ணிக்க முடியாத கவலையின் வடுக்கள் இருளாக அப்பியிருந்தன. நவலோகா மருத்துவமனையின் நான்காம் மாடியிலுள்ள 42ம் இலக்க அறையில் நாம் இருந்தோம். ஆறு மணி நேரத்திற்கு முன்பு, தாதியர் மூவர் வந்து உம்மாவை தள்ளுக் கட்டிலில் தூக்கி வைத்துத் தியேட்டருக்குக் கொண்டு சென்றிருந்தனர். கட்டியிருந்த பற்களைக் கழட்டி வைத்து, வெண் நீல நிறத்தில் முழு ஆடை தரித்து கண்ணீர் மல்கத் தயாராகயிருந்த உம்மாவைப் பார்த்த போது எனக்கு அழுகை பொங்கியது.
நினைவு தெரிந்த நாளிலிருந்து குளிசையும் மருந்துமாக
முழு நேர நோயாளியாகவே உம்மாவைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன எனக்கு அவரது பயம்
படிந்த முகத்தில் அப்போது தோன்றிய வெகுளியான சிரிப்பைத் தாங்க முடியவில்லை. 'போயிட்டு வாறேன்' என்று அவர் என்னிடமும் வாப்பாவிடமும் கண்ணீர் மல்க
விடை பெற்ற போது, எந்த நேரத்திலும்
நான் உடைந்து அழுது விடுவேன் போலிருந்தது. லிஃப்ட்டின் கதவுகள் மூடும் வரை அவரது அபயந்தேடும்
ஏழ்மைப் பார்வை எங்களிருவர் மீதும் பசை போல் ஒட்டியிருந்தது.
எனது இரண்டு வருடச் சம்பளத்தையொத்த தொகையொன்றை மருத்துவமனையில்
முந்திய நாளே நாங்கள் செலுத்தி விட்டோம். மிக நீண்ட காலமாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு
வந்தார் உம்மா. ஆயுர்வேதம், நாட்டு மருத்துவம்,
ஆங்கில மருத்துவம் என எமக்குத்
தெரிந்த, கேள்விப்பட்ட எல்லா
வழிகளையும் நாம் முயற்சி செய்து பார்த்து விட்டோம். நாட்டு மருந்துகள் எல்லாம் பயனற்றுப்
போன பின், மாவட்டத்தின் பிரபல
சேர்ஜனான டொக்டர் சேவியரிடம் சென்றோம். அவர், உம்மாவை மல்லாந்து படுக்க வைத்து, சிறு மணல் மூடைகளை அவரது இரு பாதங்களிலும் கட்டி
நரம்பிழுத்து மைனர் ஒபரேஷன் ஒன்று செய்தார். சிறிது காலத்திற்கு சுகமாக இருந்தார் உம்மா.
இரண்டாவது தடவையும் அதே போன்றுதான். அதன் பின் டொக்டர் கையை விரித்து விட, மரதங்கடவலவில் சக்தி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்
ஒருவர் இருப்பதாக அறிந்து அங்கு உம்மாவை அழைத்துச் சென்றோம். அவர், மிகச் சூடான மூலிகைகளைக் கலந்து நெடிய பலகையொன்றுடன்
முதுகில் இறுக்கிக் கட்டி சுடும் வெயிலில் உம்மாவைப் படுக்கப் போட்டார். எரிவும் வலியும்
சேர்ந்து முதுகுத் தோலைச் சுட்டதுதான் மிச்சமானது. ஊரிலும் எல்லா டொக்டர்களும் கைவிட்டு
விட உம்மாவை எழுந்திருக்க முடியாதளவு படுக்கையில் தள்ளியது இடுப்பு வலி. கொஞ்ச நேரம்
எழுந்து இருந்தாலும், இடுப்பெங்கும் நெருப்புச்
சுட்டது போல் துடித்துப் போய்விடுவார். வீட்டுக்கு வருபவர்களை உபசரிப்பதில் தன்னை மிகவும்
வருத்திக் கொள்ளும் பழக்கமுள்ளவர். இப்போது படுக்கையிலிருந்தவாறே வருவோருடன் அளவளாவ
வேண்டியிருந்த நிர்ப்பந்தம் அவரை மிகக் கடுமையாக வதைத்தது. அவரது கண்களில் வற்றாத குளமாக
கண்ணீர் தேங்கியது. கவலை, முகத்தை மூடிப் படுத்துக்
கிடந்தது.
ஒரு பெரிய பணக்கார ஹாஜியாரின் இரண்டாவது மகள் எங்கள்
உம்மா. பணக்காரக் குடும்பத்திற்குரிய எந்த சுகபோகத்தையும் அவர் அனுபவித்ததில்லை. அதிகாலை
நான்கு மணிக்கு எழுந்ததிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத் தூங்கச் செல்லும் வரையும்
அவருக்கு ஓய்வில்லாத வேலைகளிருக்கும். காலையில் அகன்ற வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வது,
எல்லோருடைய ஆடைகளையும் கழுவிக்
காயப் போடுவது, நெல்லை மூடை மூடையாக
அவித்து வெயிலில் காய வைத்து, உரலில் இடித்து அரிசாக்குவது,
சந்தைக்குச் சென்று கறி வாங்கி
வந்து சமைப்பது, உணவைப் பரிமாறிப்
பின் சுத்தம் செய்வது என ஒரு நிறுவனத்தில் பத்துப் பதினைந்து பேர் செய்யும் வேலைகளை
ஒரே ஆளாக நின்று ஒவ்வொரு நாளும் ஓய்வின்றிச் செய்து வந்தார் உம்மா. இடையில் ஏற்படும்
சிறு சிறு தவறுகளுக்காக, அவரது உம்மாவிடமிருந்து
கிடைக்கும் ஏச்சும் அடியும் மிகக் கொடுமையானவை. மண்வெட்டிப் பிடிதான் மூத்தம்மாவின்
தடி. அதைத் தூக்கித் தூக்கி உம்மாவின் இடுப்பில் அடிப்பார். அந்த அடிதான், என் இடுப்பை முறித்து விட்டது என வலி அதிகரிக்கும்
போதெல்லாம் உம்மா எங்களிடம் சொல்லியழுவார்.
மூத்தம்மா மிகவும் கடுமையானவர். சிறிய பிரச்சினையென்றாலும்
மூத்தப்பாவுடன் முரண்பட்டுப் பொட்டணி கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார். கணவருடனோ பிள்ளைகளுடனோ
அவர் இரக்கமாக நடந்து கொண்டதில்லை. எங்கள் உம்மாவுக்கு இரண்டு தம்பிகள். அவர்களைப்
பராமரிப்பதெல்லாம் எங்கள் உம்மாவும் பெரியம்மாவும்தான். தம்பிமார் படுக்கையை நனைத்து
விட்டால், மழையோ பனியோ பாராது
தூக்கி வெளியே போட்டு விட்டுக் கதவைச் சாத்தி விடுவார் மூத்தம்மா. உம்மாவும் பெரியம்மாவும்
பதறியடித்துக் கொண்டு சென்று தம்பிமாரை அள்ளியெடுத்துக் கழுவிச் சுத்தம் பண்ணி,
அழுகையை நிறுத்தித் தூங்க
வைப்பார்கள். வேளாண்மை, புகையிலை வாடி என
அதிக காலத்தை வெளியிலேயே கடத்தும் மூத்தப்பாவுக்கு இவற்றைக் கவனிப்பதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை.
பதினெட்டு வயதில் உம்மாவுக்குத் திருமணம் இடம்பெற்றது.
பெற்றோரிடம் இருக்கும் போது எந்த சுகத்தையும் அவர் கண்டதில்லை. மண வாழ்க்கையின் பின்னும்
நெருக்கடி அவரைத் துரத்தியது. மூத்தம்மாவின் தகராறைப் பொறுக்க முடியாது வாப்பா வேறிடம்
சென்று விட, உம்மா தாய் வீட்டில்
தனித்து விடப்பட்டார். வாப்பா மீது உம்மாவுக்கு நல்ல அன்பு இருந்தது. அவரின் பிரிவைத்
தாங்க முடியாது கலங்கினார், கதறினார். யாரும்
அவரைப் பொருட்படுத்தவில்லை. வேறு திருமணம் முடித்துத் தருகிறேன் என மூத்தப்பா கூறிச்
சென்று விட்டார். பெருமழை அடித்துக் கொண்டிருந்த ஒரு நாளிரவு அசட்டுத் தைரியமொன்று
உம்மாவுக்குத் தோன்றிற்று. எங்களது மூத்த நானா ஆறு மாதக் குழந்தையாய் அவர் மடியில்
கிடந்தார். அவரைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். மழை அவரை அள்ளியது.
அடர்த்தியான மழை நீருக்குள் அவரது கண்ணீர்த் துளிகள் காணாமல் போயின. இரு கைகளாலும்
குழந்தையைப் பாதுகாப்பாக அணைத்துக் கொண்டு அவர் அழுது கொண்டே நடந்தார். வெறுங்கால்களில்
மழை நீர் நழுவி ஓடியது. நீர் இடுப்பளவு பாய்ந்து செல்லும் ஓடைகளை, மிகுந்த மனோ பலத்துடன் தாண்டிச் சென்றார்.
வாப்பாவுக்கும் உம்மா மீது நல்ல இரக்கம் இருந்தது.
அவர் மிகுந்த விருப்புடன் உம்மாவின் வருகையை எதிர்கொண்டார். எனினும் அங்கும் உம்மாவால்
நிம்மதியாக இருக்க முடியவில்லை. மாமியாரின் நெருக்குதல்கள் மீண்டும் அவரைப் பிறந்தகத்திற்குத்
துரத்தின. ஒருவாறு இருவரும் புது இடத்தில் இணைந்து வாழத் தொடங்கிய போது, உம்மா மிகக் கடுமையாகப் போராடிச் சோர்ந்து போயிருந்தார்.
'எக்ஸ்கியூஸ் மீ...' சொல்லிக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரன் உள்ளே வந்த போது,
நானும் வாப்பாவும் நகர்ந்து
அவருக்கு இடம் கொடுத்தோம். உம்மாவைப் பரிசோதித்த அவர், ஒபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், இனிப் பிரச்சினை எதுவுமில்லையென்றும் எங்களுக்கு
தைரியம் கூறிவிட்டுச் சென்றார். அவர்தான் உம்மாவுக்கு ஒபரேஷன் செய்தவர். மிகுந்த திறமைசாலி.
தலைநகரிலுள்ள நம்பர் வன் சிங்கள மருத்துவமனையொன்றில் உயர் பதவியில் தமிழர் ஒருவர் இருப்பதென்றால்
அவர் எவ்வளவு திறமை படைத்தவராக இருக்க வேண்டும். ஸ்ரீதரன் அப்படி இருந்தார். இதற்குப்
பத்து வருடங்களுக்கு முன்பும் நாம் அவரிடம் உம்மாவைக் காண்பித்தோம். பரிசோதித்து விட்டு
அவர் சொன்னது, 'குளிசை மருந்துகளினால்
இதைக் குணப்படுத்த முடியாது. ஒரே வழி ஒபரேஷன்தான்'. இடுப்பு மூட்டுப் பகுதியில் முக்கிய சில எலும்புகள்
தேய்ந்து முறிந்து கிடக்கின்றன. அவற்றைச் சேர்த்து வைத்து ஸ்குரூ போட்டுப் பூட்ட வேண்டும்
என்று அவர் கூறிய போது உம்மா வெலவெலத்துப் போனார். கொஞ்சமாவது எழுந்திருக்க இப்போது
முடிகிறது, அதையும் பாழாக்கணுமா
என்று அவர் பயந்தார். ஆனால் அதிலிருந்து பத்து வருடங்களின் பின், வேதனை பொறுக்க மாட்டாது மீண்டும் டாக்டர் ஸ்ரீதரனிடம்
கொண்டு சென்று காட்டிய போது, எக்ஸ்ரே, ஸ்கேனிங் ரிப்போட்டுகளைப் பார்வையிட்ட அவர்,
அட்சரம் பிசகின்றி அதே வார்த்தைகளைச்
சொன்னார். எங்களை யாரென்று அப்போது அவருக்கு நினைவே இருக்கவில்லை.
ஊருக்கு வந்து சேர்ந்த போது, ஒபரேஷன் பண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எல்லோருக்கும்
தெரிந்தது. உம்மாவுக்கு எழுந்து இருக்கவும் முடியாது என்பதனால், கொழும்புக்குச் செல்லும் போதும் திரும்பும் போதும்
வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திப் படுக்க வைத்தே கொண்டு செல்வோம். ஏழு மணித்தியாலங்கள்
தூக்கம் வராத கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு வேனின் மேற்தகடைப் பார்த்துக் கண்ணீர்
வடித்துக் கொண்டிருப்பார் உம்மா. வாகனத்தின் அசைவுக்கேற்ப உடல் குலுங்கிக் கொண்டிருக்கும்.
ஒபரேஷனுக்காக மருத்துவமனையில் செலுத்த வேண்டிய தொகையை
எப்படிப் புரட்டுவது என்று நாம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினோம். உம்மாவுக்கு,
மூத்தப்பா சீதனமாகக் கொடுத்த
இரண்டு காணித் துண்டுகள் இருந்தன. அதிலொன்று நகருக்கு மிக அண்மையில் இருந்தது. அதில்தான்
எங்கள் வீடு. மற்றைய காணித் துண்டு வீதியிலிருந்து சற்றுத் தள்ளி உள்ளேயிருந்தது. ஐந்தாறு
தென்னை மரங்களைக் கொண்ட வெறும்பூமி. அதை விற்க முடியாது. விற்றாலும் பெரிய விலைக்குக்
கொடுக்க முடியாது. வீடு இருக்கும் வளவை விற்பதானால் உடனடியாக நல்ல விலைக்குக் கொடுக்கலாம்.
ஆனால் எதையும் விற்பதற்கு உம்மாவுக்கு விருப்பமில்லை. எங்களது நீண்ட முயற்சியின் பலனாக,
தள்ளியுள்ள வெறும்பூமியை விற்க
அரை மனத்துடன் சம்மதம் தெரிவித்தார். நாம் ஓடினோம். வெறும் பூமிக்கு கொஞ்சமேனும் திருப்திப்பட்டுக்
கொள்ளும்படியான விலையொன்று பொருந்தி வரச் சில நாட்களாயிற்று.
தென்னை மரங்களைக் கொண்ட அந்தப் பூமியை விற்றுப்
பணமும் பெற்று விட்டோம். அதை நம்ப முடியாதவர் போல உம்மா இருந்தார். தன் கைகளிலிருந்த
குழந்தையொன்றை இழந்து விட்டது போன்ற உணர்வே அவரில் வெளிப்பட்டது. இரண்டு மாதங்களுக்கொரு
முறை முப்பது நாற்பது தேங்காய்கள் அங்குள்ள மரங்களினூடாகக் கிடைத்து வந்தன. வெள்ளிக்கிழமைகளின்
மாலை நேரங்களில் மரவெள்ளிக்கிழங்கு அல்லது நிலக்கடலை அவித்தெடுத்துக் கொண்டு அங்கு
சென்று ஆறுதலாக இருந்து பொழுதைப் போக்கி விட்டு வருவது எங்கள் வழக்கம். உம்மா படுக்கையில்
விழுந்த பிறகு அது முடியாமற் போயிற்று. இப்போது ஒரேயடியாகவே அந்த நிலமும் வழக்கமும்
போய் விட்டன.
காலையில் புறப்பட்டுக் கொழும்புக்கு வந்து சேர்ந்து
மாலையே மருத்துவமனையில் உம்மாவை அட்மிட் ஆக்கி விட்டோம். பரிசோதனைகளையெல்லாம் முடித்து
விட்டு இரண்டு நாளில் ஒபரேஷன் நடக்கும் என அந்த வார்டுக்குப் பொறுப்பாக இருந்த தொப்பி
அணிந்த தாதியொருவர் கூறிச் சென்றார். துணைக்கு வாப்பா இருந்து கொள்ள நான் மாமா வீட்டில்
தங்கினேன்.
கொழும்பு வீதிகளிலும் அலுவலகச் செயற்பாடுகளிலும்
போதிய பரிச்சயம் இருந்ததால், உம்மாவை கொழும்புக்கு
அழைத்து வருவது எப்போதும் எனது கடமையாகவே இருந்தது. உம்மா, அன்பு காட்டுவதில் நான்கு பிள்ளைகளிலும் எவ்வித
ஏற்றத்தாழ்வையும் காண்பித்ததில்லை. ஆனால், நானே மூன்று நானாமாரையும் விட உம்மா மீது அதிக அன்பு காட்டுவதாக எப்போதும் பெருமிதப்பட்டுக்
கொள்வேன். இரண்டாவது நானாவும் உம்மா மீது அன்பு காட்டுவதில் என்னை விடக் குறைந்தவரல்ல
என்பதை எப்போதும் நிரூபிப்பார். நான் வெளியூருக்குச் சென்று விட்ட பிறகு, உம்மாவைக் கவனிக்கும் முழுப் பொறுப்பும் அவர் மீதே
விழுந்திருந்தது. அதைக் கொஞ்சமும் முகங்கோணாது அவர் செய்து வந்தார். உம்மாவையும் வாப்பாவையும்
முழு நேர ஓய்வில் இருக்கச் செய்து, அவர்களுக்குத் தேவையான
அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. நான்கு பேரிலும்
கடைசி மகன்தான் உங்களைப் பார்ப்பான் என்று வீட்டுக்கு வருவோர் என்னைச் சுட்டிக்காட்டிச்
சொல்லும் போது எனக்கு உச்சி குளிரும். ஆனால், எவ்வளவுதான் செய்தாலும் உம்மா காட்டும் அன்புக்கு
முன் அவையெல்லாம் வெறும் தூசு என்பது எனக்குத் தெரியாமலில்லை. நான் வாழ்நாளில் கண்டு
வியந்த முதலும் முடிவுமான பெண் எங்கள் உம்மாதான். துடிப்பு மிக்க நான்கு ஆண் பிள்ளைகளைக்
கட்டுக்கோப்பாக வளர்ப்பதென்பது எவ்வளவு சிரமமானது என்பது இப்போது எங்களுக்குப் புரிகிறது.
உம்மா அதைச் சாதித்திருக்கிறார்.
எனது எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை வாப்பாவின்
காலம் சவூதியிலேயே கழிந்தது. அவர் நல்ல சாரதி. மாத முடிவில் வாப்பாவிடமிருந்து கடிதமும்
செக்கும் வரும். எழுதப் படிக்கத் தெரியாத உம்மாவுக்கு எனது இரண்டாவது நானாதான் துணை.
உம்மா சொல்லச் சொல்ல நானா எழுதுவார். இரண்டு மூன்று பேரிடம் கொடுத்து உம்மா அதை மெய்ப்புப்
பார்த்துக் கொள்வார். தபாலில் இடுவது மூன்றாவது நானாவின் பொறுப்பு. குள்ளமான எங்கள்
உம்மாவின் கைகளுக்குள் கோழிக் குஞ்சுகள் போல் நாங்கள் அடங்கிக் கிடந்தோம். உம்மா எங்களை
ஒழுக்கமாக வளர்த்து ஆளாக்கினார். அவசியப்படும் நேரங்களில் முதுகில் அடியும் போடுவார்.
அப்போது அந்த ஏரியாவிலேயே எங்கள் வீட்டில் மட்டுந்தான்
ரீவி இருந்தது. அதுவும் வெள்ளை ரீவி. வாப்பா
வாங்கி அனுப்பியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு ஏழு மணிக்கு ரூபவாஹினியில் 'பொன்மாலைப் பொழுது' ஒளிபரப்பாகும். தமிழ் சினிமாப் பாடல்கள் ஒலியும்
ஒளியுமாக எங்களை மகிழ்வூட்டும். இலங்கைத் தொலைக்காட்சியில் இடம்பெறும் ஒரேயொரு தமிழ்
நிகழ்ச்சி அதுதான். அதைப் பார்ப்பதற்காக நாங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்
காத்துக் கிடப்போம். குறித்த நேரத்திற்குச் சற்று முன்பே ஏரியாவில் பாதிப்பேர் எங்கள்
வீட்டில் குழுமி விடுவார்கள். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த அரை மணி நேரத்திற்கு எல்லோரும்
மோனத்தவத்தில் மூழ்கிக் களித்திருப்பர்.
வெள்ளை ரீவிக்குப் பதிலாக கலர் ரீவி ஒன்றை வாங்க
வேண்டும் என்பது உம்மாவின் விருப்பம். இருக்கிற ரீவி போதும், டெக் ஒன்று வாங்க வேண்டும் என்பது நானாமாரின் விருப்பம்.
எவ்வளவு சொல்லியும் உம்மா ஏற்கவேயில்லை. டெக் இருந்தால் அடிக்கடி படம் பார்த்துப் பார்த்துக்
கெட்டுவிடுவீர்கள் என்றார். கலர் ரீவி கேட்டுத்தான் வாப்பாவுக்கு கடிதம் எழுத வேண்டும்
என்றும் கூறிவிட்டார். நானாமார் மூவரும் திட்டமிட்டார்கள். கடிதத்தில் டெக் என்றுதான்
எழுதுவது, ஆனால் உம்மாவுக்குப்
படித்துக் காட்டும் போது கலர் ரீவி என்று வாசிப்பது, இதுதான் திட்டம். கடிதம் எழுதிய நானா படித்துக்
காட்டி விட்டார். முதலாவது மூன்றாவது நானாமாரும் படித்துக் காட்டிவிட்டார்கள். எல்லோரும்
கலர் ரீவி என்றே வாசித்தனர். தற்செயலாக அங்கு வந்த எங்கள் பெரியம்மாவின் மகள் கடிதத்தை
வாசித்து விட்டு, 'நல்லந்தான்,
நாமளும் அடிக்கடி படம் பார்த்துக்கலாம்,
டெக் வாங்கினா' என்று போட்டு உடைத்து விட, வாப்பா வரும் போது வாங்கி வந்தது கலர் ரீவி.
உம்மாவின் விருப்பத்திற்கு மாறாக வாப்பா எதையும்
செய்ததில்லை. அவர்கள் அந்நியோன்னியமான நல்ல தம்பதிகளாக வாழ்ந்தனர். புதிய வீட்டில்
குடியேறி தனிக்குடித்தனம் அமைத்த கொஞ்ச காலத்திலேயே வாப்பாவுக்குக் கால் வருத்தம் பிடித்துக்
கொண்டது. முழங்காலிலிருந்து பாதம் வரையும் இரண்டு கால்களிலும் கொப்புளங்களும் சீழ்களுமாக
வாப்பா நடமாட முடியாதவராகிப் போனார். வாப்பாவுக்கு மருந்தும் செய்து கொடுத்து,
வீட்டு நிருவாகத்தையும் தளர்வின்றி
முன்னெடுத்த உம்மாவின் ஆளுமையை இப்போதும் பிரமிப்புடனும் நன்றியுடனும்தான் வாப்பா நினைவு
கூர்வார். இருபத்தைந்து, முப்பது கோழிகள் உம்மாவின்
கூட்டுக்குள் வளரும். யார் எப்போது வந்து கேட்டாலும் விற்பதற்கு அவரிடம் கோழி முட்டைகள்
இருக்கும். மிக நேர்த்தியாகப் பாய்கள் இழைப்பார். நெல் குத்தி அரிசாக்கி விற்பனை செய்வார்.
இவற்றில் கிடைத்த வருமானத்தைப் போதுமாக்கிக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருந்தது.
ஒரு மாதத்திற்கு வாப்பாவை உட்கார வைத்துப் பணிவிடை செய்தார் உம்மா.
அறைக் கதவைத் திறந்து கொண்டு தாதியொருவர் உள்ளே
வந்தார். அவர் கையில் சில மாத்திரைகள் இருந்தன. மறுகையில் மிகச் சுத்தமான கிளாசில்
தண்ணீர் இருந்தது. சிறிது நேரம், தூக்கத்திலிருந்த
உம்மாவைப் பார்த்துக் கொண்டு நின்றார். பின் எங்கள் பக்கம் திரும்பி, 'எழும்பினதும் கூப்பிடுங்க' எனக் கூறிச் சென்று விட்டார். உம்மாவுக்கு இன்னும்
விழிப்பு ஏற்படவில்லை. ஐந்து மணி நேர ஒபரேஷன். மயக்கம் தீர அதை விடக் கூடுதலான நேரம்
எடுக்கும் என நான் ஊகித்தேன். உம்மாவின் முகம் எவ்விதச் சலனங்களுமின்றி மிகச் சாந்தமாக
இருந்தது. கண்கள், சிறு காற்றும் புக
முடியாதவாறு மிக இறுக்கமாக மூடியிருந்தன. வயிறு மட்டும் வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
அந்தச் சாந்தமான முகத்தை நான் பரிதாபம் வழியப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நேரம் இரவு ஒன்பது மணி தாண்டிக் கொண்டிருந்தது.
ஒருவர் மாத்திரமே, நோயாளியுடன் தங்க
முடியும். நான் இப்போது மாமாவின் வீட்டுக்குச் செல்ல வேண்டும். நவலோகாவிலிருந்து பெட்டாவுக்கும்
அங்கிருந்து வத்தளைக்குமாக இரண்டு பஸ்கள் மாறிச் செல்ல வேண்டும். நேரமாகி விட்டால்,
பஸ் எடுப்பதும் சிரமம். வாப்பாவின்
வற்புறுத்தலில், நான் அங்கிருந்து
வெளிப்பட்டேன். மனதெங்கும் உம்மாவின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தன.
எங்களது வீட்டு முற்றத்தில் பெரிய மாமரம் ஒன்றுள்ளது.
எனது இரண்டாவது நானாவுக்கும் அதற்கும் ஒரே வயது என்பார் உம்மா. பரந்து விரிந்த அதன்
அகலக் கிளைகளில் வருடத்திற்கு இரண்டு தடவைகள் காய்கள் குடை விரிக்கும். மரத்திலேறியும்
கொழு கம்பினாலும் பறித்து சாக்கு மூடைகளில் மாங்காய்களை நிரப்புவோம். எஞ்சியவை வெளவால்களுக்கும்
அணில்களுக்கும் காகங்களுக்கும் சில சமயங்களில் குரங்குகளுக்கும் உணவாகும். காய்க்கின்ற
காலங்களில், எங்கள் வீட்டில் மூன்று
வேளையும் சாப்பாட்டுடன் மாம்பழக் கரையலொன்றும் கண்டிப்பாக இடம்பெறும். தோல்களைச் சீவி,
துண்டு துண்டாக நறுக்கி வைத்திருப்பார்
உம்மா. மாம்பழக் கரையலென்றால் எனக்கு மிகவும் பிரியம். சில நேரங்களில் கறியைத் தொட்டும்
பார்ப்பதில்லை. சாப்பிட உட்கார்ந்து விட்டால் வயிறு முட்டச் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால்
எழும்பவே விடமாட்டார் உம்மா. வாப்பாவும் நாங்கள் நாலு பிள்ளைகளும் உண்டு முடித்து மிஞ்சியதுதான்
உம்மாவுக்கு. தான் உண்பதை விட நாங்கள் உண்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே அவர்
அதிக திருப்தியை உணர்ந்தார்.
நால்வரும் திருணம் முடித்து ஆளுக்கொரு திசையில்
சென்று விட வாப்பாவும் உம்மாவும் தனித்து விடப்பட்டனர். அப்போதும் கூட மாம்பழத்தை வெட்டி
வைத்துக் கொண்டு, அல்லது ஏதாவது பலகாரங்கள்
தயாரித்து வைத்துக் கொண்டு எங்களின் வரவுக்காக ஏங்கிக் காத்திருப்பார் உம்மா. சுயமாக
எழுந்து நிற்கவே சிரமப்படும் நிலையிலும் பாரமான கொழுகம்பைத் தூக்கிப் பிடித்து உயரத்தில்
இருக்கும் மாம்பழங்களைத் தேடி ஆய்ந்து, சாக்குகளில் கட்டி ஆளுக்கொரு சாக்காகத் தந்து அனுப்புவது அவருக்கு மிகப் பிரியமான
செயல். யாரேனும் ஏதும் தின்பண்டங்களைக் கொடுத்தாலும், தன் கைபடாமல், எங்களுக்காகப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருப்பார்.
மாமாவின் வீட்டையடைந்து படுக்கையில் தலைவைக்கும்
போது நேரம் பன்னிரண்டு தாண்டிவிட்டிருந்தது. உறக்கம், கண்களுக்கு வெகு தொலைவில் நின்றது. படுக்கை விரிப்பில்
முட்கள் முளைக்கத் தொடங்கின. பாம்புப் புற்றுக்குள் நுழைந்தது போல் இதயம் கிடந்து பரிதவித்தது.
கண்கள் எரிய எரியக் காலையில் கண் விழித்தேன்.
மருத்துவமனையை வந்தடைந்த போது நேரம் எட்டு மணியைக்
காட்டிக் கொண்டிருந்தது. லிஃப்ட்டின் வாயில்கள் திறக்க, நான்காம் மாடியில் கால் வைத்ததுமே பெரிய சத்தமொன்று
கரடு முரடாகக் காதுகளில் மோதியது. சத்தம் வருவது உம்மாவின் அறையிலிருந்துதான் என்பதைக்
கண்டுபிடித்ததும் மனம் பதைபதைக்கத் தொடங்கிற்று. மூளையின் கட்டளைக்குக் காத்திராமல்
கால்கள் வேகமான ஓடின. அறைக்கதவைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த போது,
உம்மாவைக் கண்டேன். எழுந்திருக்க
முடியாது, தலையை மட்டும் உயர்த்தி
வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார். வாப்பா பாத்திரமொன்றை உம்மாவின் வாய்க்கருகில் பிடித்துக்
கொண்டு பரிதாபமாக என்னைப் பார்த்தார். மயக்க மருந்து முழுமையாக வெளியாகும் வரை வாந்தி
வந்து கொண்டிருக்கலாம் என நேற்று சொல்லிச் சென்றிருந்தார் டொக்டர். இவ்வளவு கரடு முரடான
சத்தத்துடன் கூடிய வாந்தியை இதுவரை நான் கண்டதில்லை. பேசத் திராணியற்றுக் கிடந்த உம்மா,
இந்த நரகிலிருந்து என்னைக்
காப்பாற்ற மாட்டாயா? என்பது போல் ஏங்கி
ஏங்கி என்னை ஒரு பார்வை பார்த்தார். பார்த்தவுடனேயே அணைக்கட்டுகளைத் திறந்து விட்டது
போல் அருவியாகக் கொட்டிற்று அவரது கண்ணீர். என் கண்களும் நிறைந்தன. வலியின் வேதனையில்
தவித்து முனகி முகம் வெளிறிப் போன உம்மாவைப் பார்ப்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இன்று
அவற்றில் உச்சம். ஒவ்வொரு முறையும் வயிற்றை எக்கி வாயை அகலத் திறந்து பெரும் ஒலி எழுப்பித்
துடிதுடிப்பதைப் பார்க்கப் பார்க்க எனக்கு உடல் குளிர்ந்து நடுங்கத் தொடங்கிற்று. பற்களிடையே
நாவு இழுபட்டது. நானும் வாப்பாவும் மாறி மாறிப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டிருந்தோம்.
நிரம்பியதும் வாஷ் பேசினில் கொட்டி விட்டு மீண்டும் ஏந்தினோம். நண்பகல் உம்மா முழுவதுமாகச்
சோர்வுற்று ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லும் வரையும் இப்படியே நடந்து கொண்டிருந்தது.
அப்போதும் கூட உம்மாவால் எதுவும் பேச முடியவில்லை. வாப்பாவையும் என்னையும் அனுதாபம்
பொங்கப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனார்.
என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. உம்மா அறிவுரையாக
எதையேனும் சொன்னால், கொஞ்சமும் ஈவு இரக்கம்
பாராது எதிர்த்துக் கதைத்து விடுவது. பல தடவைகளில் அவர் மனம் நொந்து வேதனைப்படுவதை
முகத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது நினைத்தால் என் மீதே எனக்கு அருவருப்பு வரும்.
உம்மா எப்போதாவதுதான் எங்களுக்கு அடிப்பார். அதுவும் அவரது உயரத்தைத் தாண்டும் வரைதான்
நடந்தது. அதன் பிறகு அறிவுரையும் புத்திமதியும் மட்டுந்தான். ஏனைய மூவரையும் விட,
எனக்குத்தான் அடிவிழும் காலப்பகுதி
சற்றுக் கூடிப் போனது. உம்மாவின் கடைசி அடி இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
செங்கலடி சாரதா தியேட்டரில் 'குங்குமச்சிமிழ்' திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பன்னிரண்டு வயதிலிருந்த
நான், துணிந்து பத்து ரூபா எடுத்துக்
கொண்டு படம் பார்க்கப் புறப்பட்டு விட்டேன். குடும்பத்தில் யாருக்கும் தெரிந்து விடக்
கூடாது என்பதில் வெகு அவதானமாக இருந்தும் எப்படியோ மூன்றாவது நானாவுக்குத் தெரிந்து
விட்டது. தியேட்டரைக் கண்டுபிடிக்க முடியாது வழி தவறித் திரிந்து மீண்டும் வீட்டுக்கே
நான் வந்து சேர்ந்த போது, சுள்ளிப் பிரம்புடன்
உம்மா வாசலில் நின்றார். ஒரு அடிதான் விழுந்தது. மற்ற அடிக்கு அவர் கையுயர்த்திய போது,
உம்மாவை நோக்கி ஒரு முறைப்பை
எறிந்தேன். அவ்வளவுதான். ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு, பிரம்பைத் தூக்கி எறிந்து விட்டுச் சென்றுவிட்டார்.
மகன் வளர்ந்து விட்டான் என்று நினைத்திருப்பார். அதிலிருந்து அவர் பிரம்பைத் தொட்டதேயில்லை.
உம்மா நல்ல புத்திசாலி. துரதிர்ஷ்டவசமாக பாடசாலைக்குச்
சென்று படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. படித்திருந்தால் பெரிய கல்விமானாக,
குறைந்தது ஒரு மருத்துவராகவேனும்
வந்திருப்பார் என நாங்கள் அடிக்கடி உம்மாவை கிண்டலடிப்போம். சுயமாக முயன்று தனது பெயரை
எழுத அவர் பழகிக் கொண்டார். வெறும் ஒரு வாரத்திற்குள் அதனைப் பழகியவர், அதன் பிறகு தேவைப்படும் போது பத்திரங்களில் தைரியமாக
பேனையை எடுத்துக் கையொப்பமிடுவார். பழமொழிகளும் பழைய தத்துவப் பாடல்களும் உம்மாவுக்கு
அத்துப்படி. சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான பாடல்களை அவ்வப்போது எடுத்து விடுவார்.
தூர நோக்கோடு சிந்திப்பதிலும் காத்திரமான தீர்மானங்களை எடுப்பதிலும் எங்கள் எல்லோரையும்
விட உம்மாதான் மிகச் சிறந்தவர். என் விடயத்தில் அவர் எடுத்த தீர்மானங்களின் அனுகூலங்களை
இன்றும் நான் பெருமகிழ்வுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது வேலையும் வசிப்பிடமும் வெளியூரில் அமைந்த போது,
எனக்கும் உம்மாவுக்கும் இடையே
பெரிய இடைவெளி விழுந்தது. அதைப் பழக்கப்படுத்திக் கொள்ள நான் மிகவும் சிரமப்பட்டேன்.
சனி, ஞாயிறிலும் ஏனைய விடுமுறை
தினங்களிலும் சிரமங்களுக்கும் வேலைப்பழுக்களுக்கும் மத்தியிலும் உம்மாவைச் சந்தித்துவரும்
பழக்கத்தை என் மீது கடமையாகத் திணித்துக் கொண்டேன். விடுமுறை தினங்களில் மிகவும் ஆவலுடன்
என்னையும் என் சிறிய குடும்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருப்பார் உம்மா. அவருடன்
இணைந்து, அன்றைய வாரம் அவருக்குக்
கிடைத்த உணவுப் பண்டங்களும் எங்கள் வருகைக்காகக் காத்திருக்கும். இந்தக் கஷ்டங்களைத்
தவிர்க்க, எங்களுடன் வந்து இருந்து
விடுங்களேன் என்று எவ்வளவு கெஞ்சினாலும் சம்மதிக்கவே மாட்டார். அந்த வீட்டின் மீது
அப்படியொரு பிடிப்பு.
எப்போதாவது ஒரு நாள், வாப்பாவும் உம்மாவும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.
நானும் மனைவியும் விழுந்து விழுந்து கவனிப்போம். நான்கு மணி வரைதான். அதன் பிறகு கொஞ்சமும்
தாமதிக்க மாட்டார்கள். மாலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடங்கிவிட வேண்டும் என்பது
உம்மா எங்களுக்குப் பழக்கிய பழக்கம். சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் தவிர,
இன்று வரையும் நாங்கள் அதைக்
கடைப்பிடித்து வருகின்றோம்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த உம்மாவிடமிருந்து சிறிய
முனகல் ஒலி எழுந்தது. நானும் வாப்பாவும் பதட்டமானோம். வலியால் முகம் சுளித்துக் கொண்டே
கண்களைத் திறந்தார் உம்மா. குளம் இன்னும் வற்றியிருக்கவில்லை. முனகல் ஒலி மெல்ல மெல்ல
அதிகரிக்கத் தொடங்கியது. கண்களை முழுதாகத் திறந்து எங்களைப் பார்த்தவர் குழறி அழத்
தொடங்கினார். தலையணை நனைந்து பெருத்தது. நாங்கள் இரு பக்கத்திலும் நின்று கொண்டு,
அவரைத் தேற்ற முயற்சித்துத்
தோற்றுக் கொண்டிருந்தோம். இந்த வேதனையை என்னால் தாங்க முடியவில்லையே என்று கூறி அவர்
குலுங்கிக் குலுங்கி அழுதார். எத்தகைய வேதனையையும் சோகப் புன்னகையொன்றுடன் எதிர்கொள்ளும்
அவரிலிருந்து இப்படியொரு வார்த்தை. எங்கள் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.
வலது பக்கத்திலிருந்து எலும்புத் துண்டொன்றை வெட்டியெடுத்து
முறிந்திருந்த இடது பக்க எலும்பில் பொருத்தி ஸ்குரூ போட்டுப் பூட்டி வைத்திருந்தார்
டொக்டர். இரண்டு பக்கங்களிலும் பெரிய வெட்டுக்காயம். அதனால் மல்லாந்து படுப்பதைத் தவிர
வேறெதுவும் செய்ய முடியாது. சலம் வழியக் குழாயொன்றும் பொருத்தப்பட்டிருந்தது. தலையை
மட்டுமே அவரால் தூக்க முடிந்தது. அதுவும் மிகச் சிரமப்பட்டு. பொங்கியெழுந்த வேதனையையும்
கவலையையும் கண்ணீராகவும் அழுகையாகவும் கொட்டித் தீர்த்தார். ஏன்தான் இந்த ஒபரேஷனுக்கு
வந்தேனோ என்று கதறினார். அந்த வளவுத் துண்டை விற்காதிருந்திருக்கலாமே என்றும் அழுதார்.
நாங்களோ, அந்த உயிர் படும்
வேதனையைப் பார்த்து நிற்கச் சக்தியற்று உள்ளுக்குள் கதறியழுது தவித்துக் கொண்டிருந்தோம்.
மூன்று நாட்களாயிற்று உம்மா எழுந்து உட்கார. இரு
வாரங்களின் பின், மருத்துவமனையிலிருந்து
உம்மாவை டிஸ்ச்சார்ஜ் செய்தார்கள். ஏகப்பட்ட மாத்திரைகளும் மருந்துகளும் இடுப்புக்கு
அணிய பலகை பொருத்தப்பட்ட பெல்ட்டும் எங்கள் கைகளிலிருந்தன. மேலதிகமாகப் பணம் செலுத்தி
அவற்றைப் பெற்றிருந்தோம். வாடகைக்கு அமர்த்திய வேனில், உம்மாவை அலுங்காது குலுங்காது ஒரு பூவைப்போல ஏற்றினோம்.
இரவு எட்டு மணிக்கு, எங்கள் ஊரை நோக்கி
வேன் புறப்பட்ட போது, ஒரு சிறிய சந்தோஷம்
என்னுள் மலர்ந்தது. அது, நீண்ட நாட்களுக்குப்
பின், எனது மனைவியையும் மகளையும்
பார்க்கப் போகிறேன் என்ற சந்தோஷம்.
- 2007
No comments:
Post a Comment