Friday, January 8, 2010

இலங்கை முஸ்லிம்களிடையே இந்திய கலாசாரத் தாக்கம்


இலங்கை முஸ்லிம்களிடையே இந்திய கலாசாரத் தாக்கத்தை, குறிப்பாக தென்னிந்திய முஸ்லிம்களின் கலாசாரத் தாக்கத்தைப் பெருமளவில் அவதானிக்க முடிகிறது. மிக அண்மை நாடுகளாக இவ்விரு நாடுகளும் இருந்தமையும், இரு நாடுகளிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்தமையும், அவர்களிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்த ஏதுவாயின. வர்த்தக, கலாசார, கல்வித் தேவைகளுக்காகவும், தொழில் புரிவதற்காகவும் இலங்கை இந்திய முஸ்லிம்கள் இரு நாடுகளுக்குள்ளும் அடிக்கடி போய் வரலாயினர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமய, கலாசாரத் தேவைகளை நிறைவு செய்வதில் தென்னிந்தியாவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனால் இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்துக்கும், தென்னிந்திய முஸ்லிம்களின் கலாசாரத்துக்குமிடையே நெருக்கமான தொடர்பேற்பட்டது.

இலங்கையில் அரேபிய முஸ்லிம்களின் குடியேற்றங்கள் இருந்ததுபோல், தென்னிந்திய முஸ்லிம் வர்த்தக சமூகங்களிலிருந்து வந்து குடியேறியவர்களும் கணிசமான அளவில் இருந்தனர். அவர்கள் இலங்கையிலும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தின் நடைமுறைகளையே பின்பற்றினார்கள். பொதுவாக தென்னிந்திய கரையோரங்களில் முஸ்லிம்கள் தம்முடைய குடியேற்றங்களை எந்த அமைப்பில் அமைத்திருந்தார்களோ அந்த அமைப்பினையே இலங்கையிலும் பின்பற்றினார்கள். கள்ளிக்கோட்டைப் பகுதியில் துறைமுகங்களுக்கு அருகாமையில் முஸ்லிம்கள் 'பங்கசாலா' என அழைக்கப்பட்ட தமது பண்டகசாலைகளை அமைத்துக் கொண்டு அவற்றைச் சுற்றி வர மிக நெருக்கமாக தமது இல்லங்களை அமைத்துக் கொண்டனர். இதே அமைப்பை அவர்கள் இலங்கையிலும் பின்பற்றினர். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த நகரமான கொழும்பில் துறைமுகத்துக்கு அருகாமையில் இந்த வணிகர்களின் பங்கசாலாக்கள் இருந்தன. பழைய பண்டகசாலைகள் இருந்த பகுதியே தற்போதைய புறக்கோட்டையிலுள்ள டீயமௌhயடட வீதியாகும். இந்த பங்கசாலாக்களைச் சுற்றி முஸ்லிம்களின் இல்லங்கள் அமைந்திருந்தன. பள்ளிவாயலும், மையவாடியும் நகருக்குள்ளேயே அமைந்திருந்தன. தமிழையே தாய்மொழியாகக் கொண்ட இம்முஸ்லிம்கள் தம் சமய வாழ்க்கையில் எவ்வித நெகிழ்ச்சியையும் காட்டாது சமயப் பற்றுடையவர்களாக வாழ்ந்ததோடு தமது வியாபாரத்திலும் நேர்மையைக் கடைப்பிடிக்கலாயினர். இவர்கள் மேற்கொண்ட இவ்வாறான நேர்மையான வியாபாரம் இலங்கையில் இஸ்லாத்தின் பரவலுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

தென்னிந்தியாவில் சூபித்துவம் செல்வாக்குப் பெற்றபோது அங்கிருந்து பெருமளவு ஆன்மீக ஞானிகள் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கில் இலங்கை வந்துள்ளனர். உதாரணமாக கீழக்கரையைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என அழைக்கப்படும் ஸெய்யது லெப்பை ஆலிம் என்ற மகான் இலங்கையில் காதிரிய்யா தரீக்காவை வளர்ப்பதற்கு முயற்சித்துள்ளார். வணிக நோக்கில் வந்தவர்களிடையே ஆன்மீக ஞானிகளும் இருந்துள்ளனர். இவர்கள் தமது வணிகத்தை நடத்திக் கொண்டு இஸ்லாமிய பிரசார வேலைகளிலும் ஈடுபட்டு வாழ்ந்துள்ளனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் மஸ்ஜிதுகளைக் கட்டி, சமயக் கலாசாரப் பாரம்பரியாங்களை வளர்த்ததோடு மஸ்ஜிதுகளில் கதீப்களாகவும், முஅத்தின்களாகவும் கடமை புரிந்துள்ளார்கள். இந்நிலை தென்னிந்திய கலாசாரப் பாரம்பரியங்கள் இலங்கையில் ஊடுருவ வழி செய்தது.

இலங்கை மாணவர்களின் சன்மார்க்கக் கல்வி விடயத்திலும் தென்னிந்திய உலமாக்கள் கணிசமானளவு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இங்குள்ள குர்ஆன் மதரசாக்களில் மட்டுமன்றி, அறபு மதரசாக்களிலும் இந்திய உலமாக்கள் அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும் கடமை புரிந்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலப்பிரிவில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோன்றிய எழுச்சியின் விளைவாக சன்மார்க்கக் கல்வித் துறையில் ஓர் உத்வேகம் தோன்றியது. இலங்கையிலிருந்து தென்னிந்தியாவிலுள்ள மதரசாக்களுக்கு கல்வி பயிலச் செல்லும் ஒரு மரபு இக்காலப் பிரிவில் தோன்றியது. அதனைத் தொடர்ந்து இலங்கையிலும் அரபுமொழி, சன்மார்க்கக் கலைகளின் போதனைகளுக்காக மதரசாக்களை உருவாக்கும் பணி ஆரம்பமாகியது. இந்தியாவில் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய மதரசாக்கள் உருவாக்கப்பட்ட அதே காலப்பிரிவில் இலங்கையிலும் அத்தகைய மதரசாக்களை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக ஹிஜ்ரி 1301 (கி.பி. 1884) ஆம் ஆண்டு வேலூரில் ஸெய்யித் ஷா அப்துல் லதீப் அவர்கள் 'அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்' மதரசாவை நிறுவிய அதே ஆண்டு இலங்கையில் இஸ்லாமியப் பணியில் அப்போது தீவிரமாக ஈடுபட்டுழைத்த கீழக்கரையைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ஹிஜ்ரி 1232-1316) அவர்களால் வெலிகாமத்தில் 'அல்மதரஸத்துல் பாரி' என்ற பெயரில் ஒரு மதரஸா நிறுவப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் தோன்றிய இம்மதரஸாவில் தென்னிந்தியாவிலிருந்து வந்த மாணவர்களும் கல்வி பயின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை முஸ்லிம்களின் அறிவு மறுமலர்ச்சிக்கு உதவும் பொருட்டு, அறபுத்தமிழ், தமிழ் மொழியினாலான சமய இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன. இந்திய உலமாக்களின் இந்நடவடிக்கை இலங்கை முஸ்லிம்களிடையே தென்னிந்திய இஸ்லாமிய இலக்கியங்களும், கலாசார மரபுகளும் ஊடுருவ ஏதுவாயமைந்ததுடன் தமிழை எழுத வாசிக்கத் தெரியாத முஸ்லிம்கள் அறபுத்தமிழ் நூல்களினூடாக தங்களது சன்மார்க்க அறிவை விருத்தி செய்யவும் வழிகோலியது.

வணிக நோக்கிலும், சமய பிரசார நோக்கிலும் வந்த பெருமளவு தென்னிந்திய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்களிடையே விவாகத் தொடர்பையும் ஏற்படுத்தியதால், அவர்களின் சந்ததியினர் இலங்கையில் பரவவும், தென்னிந்திய திருமண சம்பிரதாயங்கள் இலங்கை முஸ்லிம்களிடையே ஊடுருவவும் வழியேற்பட்டது. அத்துடன் இலங்கை முஸ்லிம்களிடையே இன்று பரவலாகக் காணப்படும் சமயக் கடமைகள் அல்லாத பெருமளவு சடங்குகளின் ஊடுருவலுக்கும் தென்னிந்திய கலாசாரச் செல்வாக்கே காரணமாகும். இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வரும் இலங்கை முஸ்லிம்களிடையே நிகழ்ந்த தென்னிந்திய கலாசார ஊடுருவல், அவ்வணக்க வழிபாடுகளைப் புறக்கணித்து அல்லது அவற்றை விடக்கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து, சமயக்கடமையல்லாத சடங்குகளைச் செய்யும் நிலையைத் தோற்றுவித்தது. பெருமளவு பாமர மக்கள் இவற்றால் பெரிதும் கவரப்பட்டதோடு, அவற்றில் அளவு கடந்த ஈடுபாடு காட்டியமையால், இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் கைக்கொள்ளலாயினர். எனவே, தொகுத்து நோக்குமிடத்து தென்னிந்திய கலாசாரத் தொடர்பானது இலங்கை முஸ்லிம்களிடையே பெருமளவு சாதகமான விளைவுகளைத் தோற்றுவித்தமையும் மறுப்பதற்கில்லை எனலாம்.
April 2003

1 comment:

shoukie boosary said...

v.v.v. usful to A/L islsm & IC students. congrts!

Twitter Bird Gadget