Sunday, April 4, 2010

அவளின் கதை


புயலுக்குள் சிக்கி
அள்ளுண்டு போகும்
தூசுகளின் ஜீவன் எனது

நிர்வாணப்படுத்தப்பட்ட
காதலின் சுவையாய்,
பூமிக்குள் புதையுண்ட
மூச்சின் உஷ்ணமாய்
என் உணர்வுகளை
நெருடிச் செல்வது
அவளது நினைவொன்றுதான்

அவளை -
உங்களுக்குத் தெரியுமா?

பனி படரும் - ஓர்
அதிகாலை இரவின் குளிர்மை போல்
மனதை வருடும் - ஒரு
காதல் கவிதையின் குறியீடு போல்
மிக மென்மையானவள் அவள்

பூவுதிர்க்கும்
மழைக்கால மாலையொன்றில்
அவள் முகம்
எனக்கறிமுகமாயிற்று

மிக இறுக்கமான
என் மூளைக்குள் கருக்கொண்டு
எழுத்துகளாய் உதிர்ந்தாள்

பசுமை குமையும் ஒரு கதை போல்
என்னுள் இடறுவது
அவளது நினைவு

அவளின் கதை
அவளைப் போலவே
மிக அழகானது

என்னை
பலமாக இழுத்துச் செல்லும் விசை
முற்றுப்புள்ளியின்றித் தொடரும்
அவளின் அழகான
கதைக்கு மட்டுமேயுண்டு

February 2006

1 comment:

Anonymous said...

காதல் கவிதைதான் என்றாலும் புதுமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

Twitter Bird Gadget