Tuesday, April 20, 2010

நானும் நீயும்


மென்மை அடர்ந்த
என் இதய மத்தியில்
இருக்கிறதுன் முகம்

நீ பேசுகிறாய்,
பாடுகிறாய்,
விழிகளில் மகிழ்ச்சி துப்பிச்
சிரிக்கிறாய்

உன் நினைவுகளில்
பசை எதுவும் இருக்கிறதா
என் இதயச் சுவர்களில்
அழுத்தமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறாயே!

உற்று உற்றுப் பார்த்தும்
உணர்ந்து கொள்ள முடியா
அருவமாய் நின்று
என் புதையல்களைக் கிளறுவது
உனக்கெப்படிச் சாத்தியமாயிற்று?

எனினும்,
வழியும் நிலவொளியாய்
நெளியும் சிற்றாறாய்,
காற்றுதிர்க்கும் பூவிதழாய்
மனமள்ளும் தென்றலாய்
நீ அழகானவள்தான்

இப்படியெல்லாம்
உன்னைப் பற்றிய
உண்மைகளை எழுதினால்
பெண்ணை வர்ணிக்கும் இழிஞனென
என்னைத் தூற்றுவர்
நீ என் மனைவி என்பதை
அறியாதவர்கள்!

April 2006

No comments:

Twitter Bird Gadget