மிக அழகான பூவாய்
எனக்கறிமுகமானாய்
சலனமற்றிருந்த
என் உளக்குளத்தில்
நீரொலி
உணர்வுகளுக்குள் சிக்காத
என் நரம்புத் தொகுதிகளை
கொத்தாக அள்ளிச் சென்றது
உன் மென்கை.
புயலுக்கும் அசையாத
என் விறைப்பான ஆளுமையை
உசுப்பிச் சூடேற்றிற்று
உன் புன்னகை
நீ சென்று விட்டாய்,
தற்காலிகப் பிரிவுதானெனினும்
மனதுக்கு உறைக்கிறது
என் கண்களில்
உன் முக வசீகரமும்,
என் செவிகளில்
உன் சிரிப்பதிர்வுகளும்,
என் நாசிகளில்
உன் உடல் வாடையும்
எஞ்சி நிற்கின்றன
மூடிய விழிகளுக்குள்
நீ முறுவலித்துத்
தலைசாய்க்கிறாய்
நத்தையாய் ஊரும்
என் இரவுகளின் முதுகில்
உஷ்ணம் தடவுகிறாய்
சிரமப்பட்டு வரும்
உறக்கத்தின் மத்தியில் தோன்றி
கிளுகிளுப்பூட்டுகிறாய்
இங்கே நான்
காத்திருக்கிறேனடி
இனிப் பிரிவு நிகழா உன்
நிரந்தர வருகைக்காக...
June 2006
No comments:
Post a Comment