பளபளப்பான இரையுடன்
ஈர்க்கும் வாசத்துடன்
நீருக்குள் இறங்கிற்று
ஒரு தூண்டில்
சடைத்த தாவரங்களில்
படர்ந்த பாசிகளில்
வழுக்கி நழுவிப்
பூமியைத் தீண்டிற்று
உடல் மினுக்கி
செழிப்பான சுதந்திரத்திடை
நீந்திப் பழகும்
இளம் மீன்களின் கண்களில்
மோகத்தைப் பாய்ச்சிற்று
ஆர்வமும் ஆசையும் உந்த
தூண்டிலை நெருங்கிற்று
இளமை முதிராத
அழகிய மீனொன்று
எச்சிலூற
பிஞ்சு வாயை அகலத் திறந்து
இரையைக் கௌவிற்று
மீன்.
அதன் பிற்பாடு
நீர் அறைந்த பிடரி வலியும்
மூச்சைத் தடுத்து
உடலைச் சுட்ட
மணற் சூடுமே
அதற்கெஞ்சிற்று
கொஞ்சம் கொஞ்சமாக
அடங்கிற்று
அதன் உயிர்த்துடிப்பு!
இதிலொன்றும்
அநீதியில்லை
தூண்டில் நீயாகவும்
மீன் நானாகவும்
இருக்கும் வரை
இதிலொன்றும்
அநீதியில்லை தேவி!
July 2006
No comments:
Post a Comment