ஒரு சர்வாதிகாரி போல்
கைப்பற்றிக் கொண்டாய்
முரட்டுப் போர்வைக்குள் துடிக்கும்
என் மிருதுவான உள்ளத்தை
அண்டவெளியெங்கும் சஞ்சரிக்கும்
கற்பனைகளின்
சிறகொடித்தாய்
சுதந்திரம் களைந்து
சிறைப்பிடித்தாய்
ஒரு பறவையாய்
ஒரு தென்றலாய்
ஒரு மேகமாய்
அந்தரித்த என்
வாழ்க்கைச் சுவாசங்கள்
அடங்கிற்று
உன் ஒரே கண் பார்வைக்குள்
என் கனவுகளின் மூச்சுகளில்
கண்களின் வீச்சுகளில்
கடிவாளமிட்டாய்
உன் நினைவு
நெஞ்சுறுத்தும் தகிப்பை
நெளிய வைக்கும் அவஸ்தையை
வீசும் அனற்திரட்சியை
மிஞ்சிற்று
கைகளில் விலங்கிட்டு
படுக்கையில் முட்பரப்பி
நெஞ்சில் ஆணி அறைந்து
கால்களைப் பிணைத்து
அராஜகம் பண்ணிற்று
உன் கொடுங்கோன்மை
ஆனாலும் -
உன் சர்வாதிகாரத்திலும்
உன் கொடுங்கோன்மையிலும்
உன் அராஜகத்திலும்
எனக்குள்
ஒரு மகிழ்ச்சி பரவுகிறதே
ஒரு நிம்மதி நிறைகிறதே
அது ஏன் கண்மணி
நீ என்
காதலி என்பதாலா?
June 2006
No comments:
Post a Comment