Monday, April 12, 2010

அழகு இனிமை நிறைவு


அதற்கு அழகுண்டு.

அலைகளில் அவிழும்
வெண்ணுரைகளின் செறிவாக
அல்லது -
மலர்களில் பட்டுத் தெறிக்கும்
மிஞ்சிய மழைத்துளியாக
அல்லது -
மேற்கு வானில் மோதிக் கரையும்
சூரியனின் செஞ்சிதிலங்களாக
அல்லது -
இரவிருளைக் கிழித்தொளிரும்
முழு நிலவின் மலர் முகமாக
அதற்கு அழகுண்டு.

அதற்கு இனிமையுண்டு.

சோலைகளிடை நெளியும்
ஓடைகளின் சலசலப்பாக
அல்லது -
காற்று அறைந்தெழுப்பும்
இலைகளின் சரசரப்பாக
அல்லது -
கருமுகில்கள் கவிழ்ந்து கொட்டும்
பெருமழையின் சோ இரைச்சலாக
அல்லது -
பேசத்துடித்துக் குழையும்
மழலையின் மொழித்துணுக்காக
அதற்கு இனிமையுண்டு.

அதற்கு நிறைவுண்டு.

கஷ்டப்பட்டு எழுதி முடித்த
கவிதையின் முற்றுப்புள்ளியாக
அல்லது -
நீண்ட முயற்சிக்குப் பின்னரான
அவள(ன)து புன்சிரிப்பாக
அல்லது -
முன்றலில் உள்ள ரோஜாவின்
மொட்டவிழும் முதலிதழாக
அல்லது -
பசிக்குத் தானமீந்த
பக்கெட்டின் ஒரு ரூபாயாக
அதற்கு நிறைவுண்டு.

அது என்ன

வழிநடுவில் திருமணத்தை
உடனழைத்துக் கொண்டே
முடிவுறாப் பயணம் தொடரும்
ஒரு நல்ல காதல்!

May 2006

2 comments:

Anonymous said...

6 :)

Anonymous said...

i'm 6 :-)..

Twitter Bird Gadget