Friday, May 7, 2010

நெருப்பு இரவுகளுக்கு விடை கொடுத்தல்



இரவுகளின் இம்சிப்பில்
விலாவொடிந்த காலங்கள்
இப்போதில்லை

கற்பனைகள் செறிவுண்டு
பற்றியெரியும் தனிமைத் தீ
முதுகின் கீழ் தகிக்கும்

கண்களூடு உள்நுழைந்து
கருக்கொண்டு உசும்பும்
பாலுணர்வுக் கீறல்கள்
தேர்ந்த விவசாயியின் மண்வெட்டியாய்
உறக்கத்தைக் கொத்தியெறியும்

நடுச்சாமத்திற்கு
நன்கு பரிச்சயமாகிப் போயிற்று
உணர்வுகளின் விழிப்பு

கண் வலிக்க, காது வலிக்க
உடல் வலிக்க
விம்மி வெடித்த
அந்த நெருப்பு இரவுகளுக்கு
விடை கொடுத்தாயிற்று இப்போது

உள்ளும் புறமும்
மேலும் கீழும்
வாசனை குழைத்து
மென்மையாய்ப் படரும்
சிறு கொடியிடை
கட்டுண்டு கிடக்கிறது
இப்போதென் வாலிபம்

June 2006

No comments:

Twitter Bird Gadget