சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.
ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.
விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள். ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே. புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே. புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.
எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.
அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.
ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர். அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.
காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.
முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.
வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர். ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர். தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.
மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர். 25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.
வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 250 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது. அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.
இது தவிர, புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் போன்றோரின் தொகையும் அளப்பரியது. 400க்கு மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள், 113 முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், 50க்கு மேற்பட்ட முஸ்லிம் சிற்றூழியர்கள், 25க்கு மேற்பட்ட கல்வி நிருவாக சேவை அதிகாரிகள், 10 நிருவாக சேவை அதிகாரிகள் எனத் தொடரும் இப்பட்டியல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருவறுத்த புலிகளின் குரூரத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுவப் போதுமானவையாகும். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 5000க்கும் அதிகமாகும்.
மன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்றோர் இத்தகைய முஸ்லிம் புத்தி ஜீவிகள் உயரதிகாரிகள் போன்றவர்களுள் முக்கியமானவர்கள்.
இவர்கள் அனைவரும் எஸ்.எல்.ஏ.எஸ். மற்றும் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ். போன்ற நாட்டின் அதியுயா நிருவாகப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து, மாவட்ட நிருவாக அதிகாரிகளாகக் கடமையாற்றிய மிகப் பெரும் முஸ்லிம் ஆளுமைகள். இவர்கள் மீதான புலிகளின் படுகொலைகள், முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கிருந்த இனவெறியையும் குரூரத்தையுமே காட்டுகின்றன.
இவை தவிர, புலிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பொருளாதாரங்கள் என்பனவற்றின் மொத்தப் பெறுமதி 50 கோடிகளுக்கும் அதிகமானதாகும்.
ஒட்டுமொத்தமாக, படுகொலைகள் எனும் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாதகச் செயல்களின் மொத்த வடிவமே இந்தப் புலிகள் இயக்கமாகும். ஆரம்பத்தில் தமது சக போராட்டக் குழுக்களை அழிப்பதில் கவனம் செலுத்திய புலித் தலைவர் பிரபாகரன், அதன்பின், தனது போராட்ட நடவடிக்கைகளை மறுக்கின்ற, எதிர்க்கின்ற, மற்றும் நியாயம் பேசுகின்ற தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். துரோகம் என, தான் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு நியாயமும் கற்பித்தார்.
அதன்பின், முஸ்லிம் சமூகத்திலிருந்த கல்விமான்கள், புத்திஜீவிகளையும் சமூக முன்னோடிகளையும் தேடித் தேடிக் கருவறுத்தார். முஸ்லிம்களின் பொருளாதாரங்களை சூறையாடினார். குறிப்பாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலித்தலைவர் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவர்களை அகதிகளாக விரட்டி விட்டார்.
முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக நசுக்கியது போதாதென்று, கல்வி ரீதியாகவும் அவர்களை நசுக்க முனைந்தனர் புலிகள். தமக்கு ஆதரவாக உள்ள தமிழ் நிருவாக அதிகாரிகள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகளைக் கொண்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்து வந்த கல்வி வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்தெடுத்தனர்.
இதற்கும் மேலாக முஸ்லிம்களின் காணிகளையும் வயல் நிலங்களையும் பறிமுதல் செய்து, அதில் தமது ஆதரவாளர்களைக் குடியமர்த்தியதோடு முஸ்லிம்களின் வயல் நிலங்களில் தாங்கள் பயிர்களையும் விவசாயங்களையும் மேற்கொள்ளவும், அல்லது முஸ்லிம்களை விவசாயம் மேற்கொள்ள அனுமதித்து விட்டு, அறுவடைக் காலப்பகுதியில் அவர்களை அச்சுறுத்தி, பிரதேசத்துக்குள் வர விடாது தடுத்து தாங்களே அறுவடை செய்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ளவும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுப் போயினர்.
முஸ்லிம்கள் தமது விவசாயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வாகனங்கள், அன்றாடப் பாவனைக்காக வைத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புலிகளினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. அவை ஒரு போதும் மீள ஒப்படைக்கப்பட்டது கிடையாது. ஜீரணிக்க முடியாமல் தமது வாகனங்களைத் தேடித் தமிழ்ப் பகுதிக்குள் செல்லும் முஸ்லிம்கள் திரும்பி வந்தால் சடலமாக வருவார்கள், அல்லது காணாமல் போவார்கள்.
இவ்வாறு அரசியல், கல்வி, அபிவிருத்தி, பொருளாதாரம், வர்த்தகம், நிலம் என எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பேரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மற்றும் அவரது சகாக்களும்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வளவு குரூரத்தையும் செய்து முடித்த பின்னும், பிரபாகரனை தேசியத் தலைவர் என்றும், புலிகள் விடுதலைப் போராளிகள் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சில இந்திய அரசியற் கட்சித் தலைவர்கள் குறித்தும் நாம் மிகவும் விசனங் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.
தமது அற்ப அரசியல் நலன்களுக்காகவும், பிழைப்புவாதத்துக்காவுமே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி, புலிகள் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமையை எதிர்த்தும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வரும் இவர்கள், சில காலங்களுக்கு முன்பு, புலிகளின் பாசிசவாதத்தினால் தமிழ் மக்கள் சுதந்திரமும் உரிமையும் இழந்து சிறைப்படுத்தப்பட்ட கைதிகள் போன்ற வாழ்ந்த போதும், புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வித நியாயமுமின்றிக் கொன்று குவிக்கப்பட்டு வந்த போதும் எங்கே போயிருந்தார்கள்?
உண்மையில் இவர்களது நோக்கம் தமிழ் மக்களைப் பாதுகாப்பதா? அல்லது தமது அரசியல் பிழைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கொழுகம்பாகப் பயன்படுத்திக் கொள்வதா?
எவ்வாறாயினும்,இத்தகைய குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பிழைப்புவாத அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிக்கி விடாமல், சுயமாகச் சிந்தித்து சொந்த புத்தியுடன் நடப்பதொன்றுதான், இந்தியத் தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் செய்யும் பேருதவியாக அமையும்.
March 2010
3 comments:
Read your articles and pray allah to perform in future
i'm AGM.Sadhaka.
நாங்கள் மதத்தால் திட்டமிடப்பட்டு பிரிக்கப்பட்டோம் .புலிகளுக்கு இஸ்லாமியர்கள் எதிரி என்ற கருத்தை மாற்றுங்கள். ஏன்என்றால் கடைசியாக இடம் பெற்ற ஆனந்தபூரிப் போரில் பிரபாகனைக் கப்பாற்ற தற்கொலை செய்தவர்களில் ஒரு இஸ்லாமியப் பெண்ணும் உண்டு .அவளைப் போல் பல இஸ்லாமியர்கள் நாங்கள் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்து புலிகளோடு சேர்ந்து மாவிரர் ஆகினார்கள்.
நாம் ஈழத்தில் இஸ்ரேல் -இந்திய-சிறிலங்கா ஆகிய நாடுகளின் கூட்டுச்சதியால் பிக்கப்பட்டோம். எப்படியென்றால் புலிகளுக்கு போரியல் பயிற்சி வழங்கியவர்கள் பாலஸ்தீனிய நண்பர்கள்.அந்த நண்பர்களுக்கு நன்றிக்கடனாக புலிகள் பாலஸ்தீன் பகை நாடாகிய இஸ்ரேலை எமது பகை நாடாக கொண்டு அவர்களுக்கு எதிராக போரிட்டர்கள் புலிகள் .புலிகளினால் இஸ்ரேல் கடுமையான இழப்புக்களை சந்தித்தது .இதனால் புலிகளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று எண்ணிய இஸ்ரேலுக்கு தமிழர்களியே அப்போது ஈழத்தின் கிழக்கில் காணப்பட்ட இந்து- இஸ்லாம் சிறிய பகை வாய்ப்பாக அமைந்தது.இதற்கு நேரடியாக களத்தில் இறங்கியது இ்ஸ்ரேலின் உளவுத்துறை மொசார்ட். அது சிங்கள படைவிரர்களை பயன்படுத்தியது எப்படியென்றால் அந்த சிங்கள படைவிரர்களுக்கு புலிகளி்ன் சீருடைகளைப் போட்டு சில இஸ்லாமியர்களைத் தாக்கியும் படுகொலையும் செய்தது. இது எங்களை பிரிக்க பகைவன் செய்து சுழ்ச்சி என்பதை விளங்காத சில இஸ்லாமியப் புலிகள் தமது பழியைத் திர்ப்பதற்காக புலிகளைக் காட்டிக்கொடுத்தார்கள் .(இவர்கள் விலைபோய் காட்டக் கொடுக்கவில்லை மாறாக பழிவாங்குவாதற்கா காட்டிக்கொடுத்தார்கள்.)பகைவரின் கெடுகெட்ட சுழ்ச்சி என்பதைப் புரியாத புலிகளும் உடனே எடுத்த முடிவு இஸ்லாமியர்கள் என்போர் எமக்கு இரண்டகர்கள் என்று (பின்பு புலிகள் விளங்கிக் கொண்டார்கள் சதிக்காரர் சதி என்பதை) .இதனால் புலிகள் அவ்வாறு தம்மைக் காட்டிக் கொடுத்த இஸ்லாமியப்புலிகளைப் படுகொலை செய்தனர். இதன் பின்புதான் பல இஸ்லாமியர்களும் புலிகளுக்கு எதிராக சிங்களப் படையில் சேர்ந்து புலிகளுக்கு எதிராக போரிட்டார்கள். பின்பு சதிக்காரர்கள் எப்படியும் இவர்கள் ஒற்றுமை ஆவர்கள் என்று எண்ணி மதபகையை வளர்க்க புலிகளிடமிருந்து இஸ்லாமிய மக்களைப் பாதுகாக்க என்று முஸ்லிம் ஊர்காவல் படையை உருவாக்கி அதற்கு தானே பயிற்சியும் படைக்கருவிகளும் வழங்கியது. இந்த ஊர்காவல் படையில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் புலிகளினால் தாக்கப்பட்டவர்கள் தான். இவர்களில் சிலர் சில இந்து மக்களை படுகொலை செய்தனர். இந்த சில ஊர்காவல் படையினரைப் போல் சில வெறி கொண்ட புலிகளும் இருந்தார்கள். முஸ்லிம் ஊர் காவல் படையினரை படுகொலை செய்த திட்டமிடப்பட்டது தான் சதிக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்த மதவெறிபிடித்த சில புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாசலில் நடாத்தப்பட்ட கொரப்படுகொலை. உண்மையில் இந்தக் கொலை புலிகளால் திட்டமிடப்பட்டது தான் ஆனால் பள்ளிவாசலில் அல்ல அதுவும் ஏதுவும் அறியாத பச்சக் குழந்தையை கொலை செய்யவும் இல்லை. இது நாடாத்தப்பட்டது நான் மேலே சொன்னாது போல சதிக்காரராலும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த சில மதவெறி பிடித்த புலிகளால் தான் .இதே போல் தான் சதிக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்த சில இஸ்லாமியர்களால் செய்யப்ட்டது இந்து,கிறிஸ்தவ படுகொலைகள். இது எல்லாம் திட்டமிட்டு எம்மை சதிகாரர் பிரித்தார்கள் என்பதை உணர்ந்த பல இஸ்லாமியர்கள் புலிகளுடன் இனைந்து போரிட்டார்கள் கடைசி வரை இதற்குப் பிறகும் சதிகாரர் நின்றுவிடவில்லை புலிகளுக்கு பக்க பலமாக இருக்கும் கிறிஸ்தவர்களையும் பிரிக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் விக்டருக்கும் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவிற்கும் இடையில் பிணக்கை வளர்த்தனர். ஆனால் அவர்கள் இது சதிக்காரரின் சுழ்ச்சி என்பதை புரிந்து அவர்கள் தப்பித்தார்கள். இந்து கிறிஸ்தவ மத பகையும் தடுக்கப்பட்டது. என்என்றால் கிட்டு ஒர் இந்து விக்டர் ஒர் கிறிஸ்தவர். .இவர்களுக்கிடையில் பகையை வளர்த்து விட்டால் இவர்களுக்கும் இடையில் பகை வளரும் மதப் பகையும் வளரும் நாம் இவர்களை இலகுவாக வென்றுவிடலாம் என்று சதி செய்தார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாமியர் விடயத்தில் வென்றது போல் அதில் வெல்ல முடியாது மண் கவ்வினர்கள்.புலிகளின் தலைவரின் பாதுகாப்புப் படையாக இருப்பது இம்ரான் பாண்டியன் படைப்பிரிவு. இதில் வரும் இ்ம்ரான் என்பது ஒரு இஸ்லாமியப் பெயர் ஆகும் ஆனால் இந்தப் பெயரில் வரும் ஆள் இஸ்லாமியர் இல்லை அவர் ஒரு இந்து ஆனால் தனது இஸ்லாமிய நண்பரின் ஆவாவிற்கு இணங்க அந்தப் பெயரை தனக்குச் சூட்டி இருந்தார்.இனப்பிரச்சினைக்காக கொண்டுவந்த நிர்வாக சபையில் ஒரு இஸ்லாமியர் வேண்டும் என்று இலங்கை அரசிடம் புலிகள் கோரியிருந்தார்கள் ஆனால் அவர்களால் அது நிராகரிக்கப்பட்டது. ஏன் ? இவ்வாறு மதப் பகையை வளர்க்க என்பதை அனைத்து தமிழ் பேசும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் கேட்டுக் கொள்ளகிறேன்.
பலரதபாத
Post a Comment