Friday, February 5, 2010

சவூதியும் ஆயுதங்களும்

சவூதியில் கல்வி கற்று வந்த ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் சொன்னார்: உலகிலுள்ள முஸ்லிம் நாடுகளில் அதிகமான மற்றும் நவீனரகமான ஆயுதங்களைக் கொண்டுள்ள ஒரே முஸ்லிம் நாடு சவூதிதான். எனவே, சவூதிதான் உலகின் பலமான முஸ்லிம் நாடு.

நான் கேட்டேன்: அந்த ஆயுதங்கள் சவூதியில், சவூதி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டவையா அல்லது வேறு எங்காவதிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா?

அவர் சொன்னார்: அவையனைத்தும் அமெரிக்காவினால் அன்பளிப்பாகவும் மற்றும் விலைக்கும் கொடுக்கப்பட்டவை. உலகில் பலமான வல்லரசான அமெரிக்கா, தன் நேச நாடு என்பதனால், சவூதிக்கு இவ்வாறு பெருந்தொகை ஆயுதங்களைக் கொடுத்து உதவுகின்றது.

நான் கேட்டேன்: அமெரிக்கா கொடுத்த அந்த ஆயுதங்களை முழுமையாக இயக்கத் தெரிந்த சவூதியர் எவரும் சவூதியில் உள்ளனரா?

அவர் சொன்னார்: இல்லை. எனினும் தேவையான போது அதற்கான ஆட்களையும் ஆலோசனைகளையும் அமெரிக்கா சவூதிக்கு வழங்கும்.

நான் கேட்டேன்: பிற நாடுகளுடன் யுத்தம் புரிய வேண்டிய தேவைகள் சவூதிக்கு ஏற்படுகின்றனவா? அல்லது அமெரிக்காவுக்கு ஏற்படுகின்றனவா?

அவர் சொன்னார்: பெரும்பாலும் அமெரிக்காவுக்குத்தான் ஏற்படுகின்றன.

நான் கேட்டேன்: யுத்தம் புரிய வேண்டிய நிலையொன்று அமெரிக்காவுக்கு ஏற்படும் போது, சவூதியிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா கேட்டால் சவூதி கொடுக்குமா?

அவர் சொன்னார்: நிச்சயமாகக் கொடுக்கும்.

நான் கேட்டேன்: ஆயுதங்களை கொடுப்பது அமெரிக்கா, அதனை இயக்குவதற்கான ஆள்பலத்தைக் கொடுப்பதும் அமெரிக்கா. அதனைப் பயன்படுத்துவதற்கான கட்டளைகளை இடுவதும் அமெரிக்கா. இதில் சவூதியின் பங்கு களஞ்சியக் காப்பாளர் என்பது மட்டுமே. எனில், இதில் சவூதி பெருமைப்பட என்ன இருக்கின்றது?

அவர் பேசவில்லை, சிந்திக்கத் தொடங்கினார்.

1 comment:

Anonymous said...

Fantastic. well done.
Riyaza Nazmin
Iran

Twitter Bird Gadget