Friday, May 27, 2011

மகன்


சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பே எழுந்து விட்ட இப்ராஹீம் ஸாப், மிஸ்வாக்கை எடுத்து ஜுப்பாப் பைக்குள் திணித்துக் கொண்டே பள்ளிவாயலை நோக்கி நடந்தார். ஒவ்வொரு முறையும் பள்ளிவாயலை நெருங்கும் போது உள்ளத்திலேற்படும் மனமகிழ்வும் ஆன்ம நிறைவும் இப்போது தனக்கு ஏற்படவில்லையென்பது அவருக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. நேற்றுக் காலை தொடக்கம் தனது உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கும் ஒருவித நெருடலில் வழமையான தனது சுறுசுறுப்பையும் முகமலர்வையும் முற்றாகத் தொலைத்துவிட்டு கூனிக்குறுகும் மனத்துடன் உலாவிக் கொண்டிருந்தார் அவர். இப்படி நடந்து விட்டதே எனக் கடந்த காலத்தையிட்டு அவர் வருந்தவில்லை. இனி எவ்வாறு நடந்து கொள்வது என்ற எதிர்கால வினாக்குறியே அவரது விலாவை இறுக்கிக் கொண்டிருந்தது. அதற்கும் அப்பால், தனது ஐந்து வருட மஹல்லா அமீர்ஸாப் அனுபவத்தில் இப்படியரு மார்க்க விளக்கத்தை அறியாது இருந்து விட்டதை நினைத்தும் அவர் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

கொழும்பிலிருந்து வந்திருந்த சில்லா ஜமாஅத்தில் இஸ்மாயில் ஹஸ்ரத்தும் இருந்தார். இரண்டு நாட்களாக தனது உள்ளத்தின் மென்சுவர்களை அரித்துக் கொண்டிருக்கும் நெருடலுக்கும் கேள்விக்கும் பதிலிறுப்பதற்குப் பொருத்தமானவர் அவர்தான் என்பதை இனங்கண்ட இப்ராஹீம் ஸாப், எதிர்பார்ப்புடன் பள்ளிவாயலுக்குள் கால் பதித்தார்.

எதிர்ப்பட்ட தாடிகளின் கனமான 'அஸ்ஸலாமு அலைக்கும் அமீர்ஸாப்'களுக்குப் பதிலளித்துக் கொண்டே, விறாந்தையில் இறைந்து கிடக்கும் மூட்டை முடிச்சுகளிடை நெடுஞ்சாண் கிடையாக உறங்கிக் கொண்டிருப்பவர்களில் இஸ்மாயில் ஹஸ்ரத்தைத் தேடினார் இப்ராஹீம் ஸாப். சற்று முன்னாலிருந்த மிம்பருக்கருகில் ஏந்திய கைகளுடன் முதுகைக் குலுக்கிக் குலுக்கி மூக்கை உறிஞ்சிக் கொண்டிருப்பது இஸ்மாயில் ஹஸ்ரத்துத்தான் என்பதைக் கண்டு கொண்ட இப்ராஹீம் ஸாப், தஹஜ்ஜுத் தொழுகையும், பிற்பாடு சுபஹ் தொழுகையும் நிறைவுறும் வரை பொறுமையாக இருந்தார்.


சுபஹ் தொழுகையின் பின் இடம்பெறும் வழமையான மஷ¨ராவைத் தலைமை தாங்கி நடத்திய பின், தஃலீம் வாசிக்கும் பொறுப்பை அப்துர்ரஹீம் கார்கூனிடம் ஒப்படைத்து விட்டுக் கண்களை மூடிச் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார் இப்ராஹீம் ஸாப். நேற்றும் இவ்வாறுதான், சுவரில் சாய்ந்து கண்களை மூடித் தஃலீம் வாசிக்கப்படுவதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தவர், கார்கூன் வாசித்த அந்த ஹதீஸைக் கேட்டதும் அதிர்ச்சியுற்றுக் கண் திறந்தார். அந்த ஹதீஸை மீண்டுமொரு முறை வாசிக்கும் படியாக கேட்ட போது கார்கூன் அதனை வாசித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் அறிந்து கொண்டே, தம் தந்தை அல்லாதவரைத் தம் தந்தை என்று வாதிடுகின்றாரோ, அவர் மீது சுவர்க்கம் ஹராம் ஆக்கப்பட்டுள்ளது. விலக்கப்பட்டுள்ளது. (புகாரி, முஸ்லிம்)

(ரியாலுஸ்ஸாலிஹீன் தமிழ் மொழிபெயர்ப்பு, பாகம்:4, பக்;280)

நேற்று வாசிக்கப்பட்ட அந்த ஹதீஸின் வரிகள், இன்னும் அவரது உள்ளத்தில் ஒலிப்பதிவு செய்தாற் போல் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. எவரும் தம் தந்தையல்லாதோரைத் தம் தந்தையென வாதிடக்கூடாதென்றால், அதன் மறுபக்கம், தம் பிள்ளையல்லாதோரைத் தம் பிள்ளையென வாதிடக்கூடாது என்பதுதானே.

தன் மனதின் ஆழத்தில் ஏற்படும் கொந்தளிப்பையும் துடிப்பையும் மிக அசௌகரியமான வஸ்துக்களாக அவரது உணர்வுகள் அடையாளங் கண்டுழன்றன.

'அப்படியானால் சுமார் மூன்று வருடமாக நான் செய்து வந்தது பாவச் செயலா?'

அந்த ஹதீஸைக் கேட்டுவிட்டு வீட்டுக்குச் சென்ற போது, "வாப்பா..." என்று ஓடி வந்து தன் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு குதூகலித்த சித்தீக்கை வழமை போன்று "மகேன்..." என்று அன்புடன் அழைத்துத் தழுவ முடியாது தவித்த அந்தத் தவிப்பு இன்னும் அவர் முகத்தில் இருளாக அப்பிக் கொண்டிருக்கிறது.

சித்தீக் அவரது பிள்ளையில்லைதான். ஆனால் அவரது மனைவி ஆயிஷாதான் அவனைப் பெற்றெடுத்தாள். அதுவும் அவருக்கு மனைவியான பின்னர். திருமணம் தொடக்கம் இன்றுவரை அவள் அவருக்கே மனைவியாகவும் வாழ்கிறாள்.

கடந்து விட்ட மூன்றாண்டுகளில், சித்தீக்கின் மீது அவர் காட்டி வந்த அன்பும் பாசமும் மிக அதிகம். தனது சொந்தப் பிள்ளைகளை விடவும் உயர்வாகவும், அதிகமாகவும் சித்தீக்கின் மீது அவர் அன்பு காட்டி வந்தமைக்கு, வரிசையாக நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பின் தன் மனைவி பெற்றெடுத்த ஆண் பிள்ளை என்பது மட்டுமன்றி, தனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றில்லாமல், அரபிகளின் வெள்ளை நிறத் தோலுடன் மிக அழகாக அவன் இருந்ததும் ஒரு முக்கிய காரணம்தான்.

"மகேன்..." என்று அணைத்துத் தழுவ ஓர் ஆண் வாரிசில்லையே என்ற அவரது நீண்ட நாளைய முறுகிய எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பிறந்த அந்த அழகு மகனாரை இனி மகேன் என அழைக்க முடியாதே என்ற எண்ணக் கவலை இப்ராஹீம் ஸாப்பை மிகக் கடுமையாக வதைத்தது.

தஃலீம் வாசித்து முடித்த கையோடு கஸ்து போவதற்கென மும்மூவராய் எல்லோரும் கிளம்பிப் போய்விட, இஸ்மாயில் ஹஸ்ரத்தைத் தன்னுடன் அழைத்துக் கொண்ட இப்ராஹீம் ஸாப், ஒரு மூலையில் ஒதுங்கி, கால்களை மடித்து அவர் முன்னால் பவ்யமாக அமர்ந்து கொண்டார். மருதாணி பூசிச் சிவந்திருந்த தன் நீண்ட தாடியைக் கையால் இழுத்துவிட்டுக் கொண்டவாறே சம்மணமிட்டு அமர்ந்திருந்த இஸ்மாயில் ஹஸ்ரத், தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி ஜுப்பாப் பைக்குள் பத்திரமாக வைத்து விட்டு, இப்ராஹீம் ஸாப்பை ஏற இறங்கப் பார்த்தார்.

"என்ன அமீர்ஸாப்! ஏதோ முக்கியமான விஷயத்தப் பத்திக் கதைக்கப் போறீங்க போல இருக்கு. என்ன, சொல்லுங்க"

இப்ராஹீம் ஸாப், குரலைத் தாழ்த்திக் கொண்டு தயங்கித் தயங்கிச் சொன்னார்: "முக்கியமான விஷயம் மட்டுமில்ல, ஹஸ்ரத். இரகசியமான விஷயமும் கூட. நான் இந்த ஊருக்கு வந்து குடியேறி ரெண்டரை வருஷமாவுது. இது வரைக்கும் யாருக்கிட்டயும் சொல்லாம ஒரு ரகசியத்தக் காப்பாத்தி வந்தன். இப்போ அவசியம் ஏற்பட்டதால உங்களுக்கிட்ட சொல்ல வேண்டியதாப் பெய்த்து. என்ட சந்தேகத்த நீங்கதான் தீத்து வைக்கணும்"

"உங்கட ரகசியத்தக் காப்பாத்திறது என்ட பொறுப்பு. தயங்காம சந்தேகத்தக் கேளுங்க"

இஸ்மாயில் ஹஸ்ரத் சற்றுத் தைரியப்படுத்தவே, மனதைத் திடப்படுத்திக் கொண்டு மிகத் தணிந்த குரலில் தன் கதையைத் தொடங்கினார் இப்ராஹீம் ஸாப். ஐந்து நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டிய விடயத்தை, தயங்கித் தயங்கியும், யாரும் ஒட்டுக் கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டும், சுற்றி வளைத்தும் மிகத் தாழ்ந்த குரலில் கூறியதில் அரை மணி நேரத்துக்கும் மேலாகி விட்டதையிட்டு அலுப்பேற்பட்ட போதும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நல்ல பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் இஸ்மாயில் ஹஸ்ரத்.

இப்ராஹீம் ஸாப், கூறியதன் சுருக்கம் இதுதான்; அவரது மனைவி ஆயிஷா ஐந்து வருடங்களுக்கு முன் குவைத்துக்குச் சென்றாள். நான்கு பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து சாப்பாடும் போடுவதற்குப் போதாதிருந்த இப்ராஹீம் ஸாப்பின் பீடி வியாபாரத்தில் கிடைத்த வருமானம், ஆயிஷா குவைத்துக்குச் செல்வதற்கான உடனடிக் காரணமாயிற்று. கட்டுக்குலையாத கறுப்புத் தேகத்துடன் விமானமேறியவள், ஒன்றரை வருடம் கழித்து உப்பிப் பெருத்த அடிவயிற்றுடன் ஊர்வந்து சேர்ந்தாள். அரபிக்காரன் மிரட்டிப் பணியவைத்து விட்டதாகக் கூறிக் கதறியழுத ஆயிஷாவின் முகத்தில் காறித்துப்பினார் இப்ராஹீம் ஸாப். முகத்தில் எரிமலை தகிக்க அவளது கன்னங்களைப் பதம் பார்த்தார். ஆனாலும் பிள்ளைகள் ஓடி வந்து தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதையும், தற்கொலை செய்யப் போகிறேன் என்று ஆயிஷா புடவையைச் சுருட்டி மோட்டுக் கைமரத்தில் எறிவதையும் கண்டதும் சீற்றம் வடிந்து அமைதியானார்.

"நீங்க கணக்கா உழச்சித் தந்தா, நான் ஏன் வெளிநாட்டுக்குப் போவணும்? ஏன் இப்படியெல்லாம் அவமானப்படணும்?" என்ற அவளது குற்றச்சாட்டின் நியாயம் அவரது கையையும் வாயையும் கட்டிப்போட்டு, அவரது கோபத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. மிச்சம் மீதியிருந்த வடுக்களெல்லாம், வெள்ளை வெளீரெனப் பிரகாசித்துக் கொண்டே பிறந்த சித்தீக்கைப் பார்த்த போது முற்றாகத் தொலைய, "மகேன்..." என ஆசையுடன் அழைத்துக் குழந்தையை வாரியணைத்துத் தழுவிக் கொண்டார் இப்ராஹீம் ஸாப்.

ஆயிஷாவின் பக்க நியாயங்களைத் தன் மனைவியென்பதற்காக இப்ராஹீம் ஸாப் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஊர் மக்களும் அசட்டுத்தனமான புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன? பதில் சொல்லிக் களைத்துப் போனார் இப்ராஹீம் ஸாப். ஊர் மக்களின் கேலிப் பேச்சுகளை விட ஜமாஅத் வேலையிலிருந்து தான் 'இன்டடிக்' செய்யப்பட்டது அவரை மிகவும் பாதித்தது. இறுதியில் வீடு வளவை விற்று விட்டு, மிகத் தொலைதூரம் பயணித்து தற்போதுள்ள ஊரில் வந்து குடியேறினார்.

இங்கு மக்களுடன் இணைந்து பழகி, தனது ஆர்ப்பாட்டமான பயான் திறமையின் மூலம் ஊரில் முக்கியமான ஒருவராகவும், மஹல்லா அமீர்ஸாப்பாகவும் உயர்ந்தார். கோழி வியாபாரம், - செலவு போக- ஆயிஷா ரங்குப் பெட்டிக்குள் நூறு இரு நூறு ரூபாய்களை மீதப்படுத்தி வைக்குமளவு வருமானத்தையும் ஈட்டிக் கொடுத்தது.

இப்படி எந்தக் கவலைகளுமின்றிச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில், திடீரெனப் பெரும் புயலடித்தாற் போல், அந்த ஹதீஸ் அவரையும் அவரது வாழ்க்கையின் ஆணி வேரையும் ஆட்டுவித்து விட்டது. தஃலீப் கிதாபுகளின் மொத்த உருவமாக வாழ்பவர் அவர்.

இனி சித்தீக்கை மகன் என்றழைப்பதா? தம்பியென்றழைப்பதா? அல்லது உறவுகளைக் குறிப்பிடாது 'சித்தீக்' என்றழைப்பதா? அவனுக்கு சித்தீக் எனப் பெயரிட்டதே அவர்தானெனினும், இதுவரை அந்தப் பெயர் கூறி அவர் அவனை அழைத்ததேயில்லை. "மகேன்..." என்று அழைப்பதிலுள்ள சுகமும் கிளுகிளுப்பும் வேறு எப்படி அழைத்தாலும் ஏற்படாது என்று அவர் பலமுறை தன் மனைவியிடம் பெருமையாகக் கூறியிருக்கிறார். ஆனால், இனி......

இஸ்மாயில் ஹஸ்ரத் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் தீர்மானமாகக் கூறிவிட்ட ஒரு விஷயத்தில் சலுகை தேடுவதென்பது சாத்தியமற்றது; பிழையானது. எனவே தெளிவாகத் தெரிந்த பின் பிறன் மகனைத் தன் மகனென யாரும் அழைக்க முடியாது. அதேவேளை, ஒரு தந்தையின் உணர்ச்சிகள், ஆதங்கங்கள், எதிர்பார்ப்புகள் என்பவை முறையாக அணுகப்படவில்லையெனில், அதன் விளைவுகள் தந்தையை அல்லது பிள்ளையை ஏதோ ஒரு வகையில் பெருமளவில் பாதிக்கக் கூடும். இந்த இரண்டு முக்கிய விடயங்களையும் கருத்திற் கொண்டு மார்க்கத்தீர்ப்பை வழங்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார் இஸ்மாயில் ஹஸ்ரத்.

இது ஒரு சின்னப் பிரச்சினைதானே என்றெண்ணி, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பதில் கூறிவிட்டு அகல விரும்பவில்லை இஸ்மாயில் ஹஸ்ரத். மார்க்கத்துக்கு முரண்படக் கூடாது; அதேவேளை, ஒரு தந்தையின் உணர்ச்சிகளும் மதிப்பளிக்கப்பட வேண்டும். நீண்ட நேர மௌனத்தின் பின், இப்ராஹீம் ஸாப்பை ஆதுரமாக நோக்கினார் இஸ்மாயில் ஹஸ்ரத்.

"அமீர்ஸாப்! நீங்க ஒண்டுக்கும் கவலப்படாதீங்க. இது ஒரு சின்ன விஷயம்தான். பாவம் செஞ்சிட்டமோ எண்டு நீங்க யோசிக்கத் தேவையேயில்ல. எதுக்கும் நான் கொஞ்சம் கிதாபுகள எடுத்து வாசித்துப் பார்க்கணும். டக்கெண்டு ஒரு ஃபத்வா தரேயேலாதுதானே. நல்லா தேடிப் பாத்திட்டு கொஞ்ச நாள்ள உங்களுக்கு விளக்கத்த சொல்லியனுப்புறன். அதுவரைக்கும் சித்தீக்க 'தம்பி'யெண்டு கூப்பிடுங்க. இப்ப அனேகமான இடங்கள்ள உம்மாவும் சரி வாப்பாவும் சரி பிள்ளைகள தம்பியெண்டுதானே கூப்பிடுறாங்க. ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ரெண்டு மூணு கிழமைக்குள்ள நான் உங்களுக்கு தகவல் அனுப்புறன். சரிதானே"

இஸ்மாயில் ஹஸ்ரத்தின் வார்த்தைகள் பெரிய திருப்தியாக அமையவில்லை இப்ராஹீம் ஸாப்புக்கு. இரண்டு மூன்று வாரங்கள் சித்தீக்கை தம்பியென்றழைக்க வேண்டிய கொடுமையை எண்ணி அவர் கவலைப்பட்ட போதும், அதன் பிறகு இஸ்மாயில் ஹஸ்ரத் வழங்கவிருக்கும் தீர்ப்பின்படி மீண்டும் மகேன் என்றே ஆசை தீர அழைக்க முடியும் எனும் நம்பிக்கை தந்த ஆறுதலில், ஹஸ்ரத்திடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் இப்ராஹீம் ஸாப்.

இது நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. இப்ராஹீம் ஸாப் இன்னும் 'தம்பி' என்றுதான் சித்தீக்கை அழைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது அது அவருக்குப் பழக்கமாகி விட்டது.

1 comment:

Boosary Sallih said...

அப்போ இஸ்மாயீல் ஹஸ்ரத் இப்ராஹீம் புள்ளக்கி இன்னும் சரியான தீர்ப்பொண்டச் சொல்லல்ல போல?

Twitter Bird Gadget