Tuesday, August 10, 2010

பிச்சைச் சம்பளம்

செய்னம்பு கிழவிக்கு சந்தோஷமாக இருந்தது. காலையில் கண் விழிக்கும் போதே அதை உணர்ந்தாள். மழை மேகங்கள் பூத்தூவிய மாரிகாலத்தின் செழிய மரங்களாய் பசுமையுற்றிருந்தது அவளுள்ளம். தனிமையும் வறுமையுமே வலதும் இடதுமாகி விட்ட வாழ்க்கையதால் சின்னச் சின்னத் தூறல்களையே வியாபித்த வறட்சியின் தினவுக்குப் போதுமாக்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் நீண்ட காலங்களுக்கு முன்பிருந்தே அவளுக்கு இயல்பாகி விட்டிருந்தது. ஒட்டிப் போன கன்னக் கதுப்பைகளில் சந்தோஷத்தின் சாயலைப் படர விட்டிருந்தாள்.

வறிய வயோதிபர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிச்சைச்சம்பளம் கிடைக்கும் நாளே கிழவி ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்த்து நிற்கும் முக்கிய நாள். அவளளவில் வருடத்தில் இரண்டு தடவைகளே வந்து செல்லும் பெருநாட் தினத்தை விடவும் அதீத முக்கியத்துவத்தை அது பெற்றிருந்தது. வழிய வழியத் தேன் நிரம்பிய குவளையில், ரோஜா இதழ்கள் மிதப்பதான உணர்வை அது அவளுக்கு ஏற்படுத்தும்.

அந்த நாள் இன்றுதான் என்பதை நினைக்கையில் கிழவிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மனமெங்கும் திருப்தியும் நிறைவும் முழுமை பெற்றுப் பளிச்சிட்டன. காலை உதயத்தில் களிப்புறும் மலர்களின் பரவசம்.



விடிந்தும் விடியாத அந்த மெல்லிய இருளின் தாமதமான விலகலை அதிருப்திப்பட்டுக் கொண்டே வீட்டுப்படிகளில் வந்தமர்ந்தாள் கிழவி. வீடு என்றதும், குறைந்த பட்சம் ஒரு திண்ணை, ஒரு சமையலறை, ஓர் உள்ளறை என்பவைகளாவது இருக்கும் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய சிதைந்த களிமண் சுவர்களிலான ஒரு சிறிய அறையே கிழவியின் வீடு. அதற்குள்தான் அவளது வாழ்க்கையின் பெரும் பகுதி கழியும்.

இரண்டு மாதங்களுக்கு முன் நிலை பெயர்ந்து விழுந்ததில் தனியாகிப் போன கதவுதான் அவளது வீட்டைப் பாதுகாப்பதற்கு இன்னும் பயன்படுகிறது. அருகில் வசிக்கும் மம்மனிவா சொந்தப் பணத்தில் ஓலை மட்டைகள் வாங்கி சிலாகைகள் பொருத்திச் செய்து தந்தது அந்தக் கதவு.

மூடிவிட்டாலும் சூரிய வெளிச்சம் ஊடுருவி உள்ளே சென்று திண்ணையில் விழுவதற்குத் தோதான துவாரங்கள் அதில் பலவுண்டு. வெளியே செல்வதற்கு முன் அதையெடுத்து வழியை அடைத்து வைப்பாள் கிழவி. கற்கள் கம்புகள் பொறுக்கியெடுத்து கதவுக்குக் குறுக்கே சாத்தி வைத்து, வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்தும் கொள்வாள்.

சிலாகைகள் பொருத்தப்பட்டு கனதி பெற்றிருந்தாலும் கூட அதனைத் தூக்கிப் பயன்படுத்துவது ஒன்றும் அவளுக்குச் சிரமமாக இருப்பதில்லை. நரம்பு முறுக்குக் குறையாத வலுவுற்ற உடல்வாகு அவளது.

எண்பது வயதைத் தாண்டி விட்ட பிறகும், தனது உடம்பில் இருக்கும் சக்தியை நினைத்து பெருமிதப்பட்டுக் கொள்வாள்கிழவி. இப்போதைய இளசுகளெல்லாம் முப்பது வருவதற்குள்ளேயே இடுப்புக் கடுப்பு என்றும், மூட்டு வலியென்றும் முடங்கிப் போக, தான் மட்டும் இத்தனை வயதைத் தாண்டியும் உடல் சோர்ந்து விடாதிருப்பதற்கு தனது இளம்பராய உணவும், உழைப்பும்தான் காரணம் என்று பலரிடமும் அவள் பெருமிதமாகக் கூறிக் கொள்வாள்.

ஐம்பது வயதாக இருக்கும் போது கணவனை இழந்த கிழவி, ஏற்கனவே சொத்துகளைச் சுருட்டிக் கொண்டு சென்று திரும்பியும் பாராதிருந்த தன் ஆண் மக்களிடம் சென்று நாசூக்காக அடைக்கலம் கோரிப் பார்த்தாள். ஆனால், அவள் பெற்றவைகளும், அவை இணைத்துக் கொண்டவைகளும் விரட்டாத குறையாக அவளை வெளியே துரத்திய போது, ஆத்திரத்தில் அவர்களைச் சபித்துத் தீர்த்து விட்டு வந்தாள். அன்றோடு பிள்ளைகளுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிந்து விட்டவள், பல சிரமங்களுக்கு மத்தியில் தனியாகவே வாழத் தொடங்கினாள்.

அவளது வாழ்க்கைக்கு அக்கம் பக்கத்தாரின் சிறு உதவிகள், கைமாத்துகள் என்பவற்றோடு, அந்தப் பிச்சைச்சம்பளமும் பெரும் உதவியாக இருந்து வந்தது. அது கிடைக்கும் நாள் வந்து விட்டால், கிழவிக்கு சந்தோஷம் பொங்கும். மனதின் மிருதுவான பகுதிகளெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும்.

அவள் மேல் பரிதாபப்பட்டு, யாராவது பணத்தாள்களை அவளது கையில் திணிக்கும் போது, தனது பொக்கை வாயைத் திறந்து, வெற்றிலைக் காவி படிந்த முன்பற்கள் இரண்டும் பளீரிட மலர்ந்து சிரிப்பாள் கிழவி.

"என்ட சீதேவி மகனாரு. நல்ல புள்ள. அல்லா உனக்கு ரகுமத்து செய்வான்"

நெஞ்சில் நிரம்பி வழியும் மகிழ்ச்சிப் பூரிப்புடன் அவர்களை வாயாரப் புகழ்வாள். முகத்தைச் சுற்றியெடுத்து நெற்றியின் புறத்தில் நெட்டி முறிப்பாள்.

சாப்பாட்டு விடயங்களைக் கிழவி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஒரு குவளைத் தேனீர், தொட்டுக் கொள்ள கொஞ்சம் சீனி, அதன் பின் வாயில் போட்டுக் குதப்பிக் கொள்வதற்கு வெற்றிலை பாக்கு இத்யாதிகள். இவையே அவளது அடிப்படைத் தேவை. சீனியை உள்ளங்கையில் கொட்டி, மறுகையில் குவளையைப் பிடித்துக் கொண்டு, சீனி கொஞ்சம், தேனீர் கொஞ்சமாகச் சுவைத்துச் சுவைத்துக் குடிக்கும் போது ஏற்படும் சுகத்தின் தித்திப்பு, அவளது இதயத்தின் அடியாழம் வரை சென்று கிளுகிளுப்பூட்டும். மனது நிறைந்து போகும். அந்த நிறைவில் சோறு சாப்பிடவில்லையென்ற எண்ணத்தையே மறந்து விடுவாள்.

அதன்பின், வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டால், அவற்றின் கடைசிச் சொட்டு ருசியை உறிஞ்சி எடுக்கும் வரை அசைத்து அசைத்துக் குதப்பிக் கொண்டேயிருப்பாள். சோறு கறி சாப்பிடாமல் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் தேயிலை குடிக்காமல், வெற்றிலை சப்பாமல் ஒரு நாளும் இருக்க முடியாது என்பது அவளது உறுதியான அனுபவத் தீர்மானம்.

தன் ஒளிக்கதிர்களால் உலகை ஆர்வமுடன் தழுவிக் கொண்டே பொழுது புலர்ந்தது. பறவை இனங்கள் உணவு தேடி எங்கோ பறந்து செல்லத் தொடங்கின. கிழவிக்கு தன் உழைப்பு பற்றிய சிந்தனை எழுந்தது. உழைக்காமலேயே மாதா மாதம் சம்பளம் பெறுவதற்கு வசதியாக பிச்சைச் சம்பளத்தை ஏற்பாடு செய்து தந்துள்ள அரசாங்கத்தை மனதுக்குள் பாராட்டினாள்.

ஆனாலும், இது பற்றிய சில கதைகள் அவளுக்கு கவலையையும், பயத்தையும் ஏற்படுத்தி விட்டிருந்தன. பிச்சைச் சம்பளத்தைப் பகிரும் சமயங்களில் விதானைமார் அதிலே களவெடுப்பதாகவும், சென்ற மாதம் தனக்குக் கிடைத்த காசில் அரைவாசியை ஜஃபர் விதானைக்குக் கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று எனவும் அடுத்த தெருவில் வசிக்கும் ராசாத்திக் கிழவி சொன்னாள். பிச்சைச் சம்பளத்திற்குப் பரிந்துரை செய்வது விதானைமார்தான். அப்பரிந்துரைக்காகத் தமக்குக் கிடைக்கும் சம்பளத்தில் அரைவாசியை விதானைமாருக்குப் படியளக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்த ஆதரவற்ற வயோதிபர்களுக்கு இருந்து வருகின்றது. பிச்சைக்காரர்களிடமே பிடுங்கித் தின்ன முனையும் இந்தக் கேடுகெட்ட விதானைமாரை என்ன சொல்ல!

"அந்த அல்லாதான் நமக்கெல்லாம் உதவி செய்யணும்"

இயலாமைப் பெருக்கின் அடையாளப் பெருமூச்சு மெல்லிய உஷ்ணத்துடன் அவளது அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்டது.

அதிகாலையின் சௌந்தர்ய வாசம் வீசும் இளந்தென்றல், அவளது சுருக்கம் விழுந்த கன்னங்களைச் சுகமாக வருடிச் சென்றது. காய்ந்த எலும்புகளைப் போர்த்தியிருக்கும் கறுப்புத் தோலின் மீது மிதமான கிளுகிளுப்பை அது ஏற்படுத்திற்று.

வாய் புளிப்பது போல் உணர்ந்தாள் கிழவி. கொஞ்சம் தேனீர் குடித்தால் இதமாக இருக்கும் போல் தோன்றியது. மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி உள்ளே சென்றாள்.

விறகுச் சுள்ளிகளை எடுத்து அடுப்பை மூட்டி நெருப்பை எரிய விட்டாள். பானையில் சிறிது தண்ணீரை எடுத்து அடுப்பில் வைத்தாள். புகைந்து புகைந்து எரியத் தொடங்கிய நெருப்பின் உஷ்ணம், அந்தக் குளிர்ந்த காலைப் பொழுதில் அவளது உடலைச் சூடேற்றிச் சுகம் கொடுத்தது. புகையின் நெடி சுவாசத்தை நிறைத்து கண்களில் எரிச்சல் ஏற்படுத்திற்று. சற்று நகர்ந்து அடுப்பை விட்டும் தூரமானாள்.

எரியும் நெருப்பிடை அவளது நினைவுகள் இடறி வீழ்ந்தன. அவளது தங்கையின் மகன் நெருப்பில் எரிந்து துடிதுடித்து மௌத்தாகிப் போன காட்சி, அவளது கண்களில் பயங்கரமாக நிழலாடிச் சோகத்தை அவளுள் அழுத்தித் திணித்தது. சென்றால் பாடசாலை, வந்தால் வீடு என்று, யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காது, தானுண்டு, தன்படிப்புண்டு என்றிருந்த அந்தச் சின்னக் குருத்தைப் பலவந்தமாகத் தம் படையில் சேர்த்து, இறுதியில் நெருப்பில் கருகச் செய்துவிட்டு, ஊரை விட்டே ஓடிப்போன ஆயுததாரிகளை நினைத்த போது, அவளுள் சீற்றம் நிறைந்து வெப்பிசாரம் வெடித்திற்று.

நாட்டை மீட்கிறோம் என்று புறப்பட்டவர்கள் இன்று எத்தனை உயிர்களைப் பறித்து விட்டார்கள். எத்தனை சொத்துகளை அழித்து விட்டார்கள். இன்னும் என்னென்ன அழிவுகளை ஏற்படுத்தப் போகிறார்களோ!

புயலுக்கு அலையெழும் கடலின் இரைச்சலாய் நோவினையில் இரைந்திற்று அவளுள்ளம்.

பானையில் நீர் கொதிக்கத் தொடங்கியது. தேயிலைத்தூளை அளவுக்குக் கொட்டி பானையைப் பதமாக கீழே இறக்க வேண்டும். போத்தலை எடுத்து மூடியைத் திறந்து கையை உள்ளே விட்டுத் துழாவினாள் கிழவி. அதன் வெறுமை அவளைத் திடுக்கிட வைத்தது.

"தூள் முடிஞ்சி பெய்த்தே..."

எதிர்பார்ப்பு ஒடிந்து போனாலும் மனதைத் தேற்றினாள்.

"பரவால்ல. சுடு தண்ணிய சீனியோட சேத்துக் குடிக்க வேண்டியதுதான்"

சீனி போத்தலை எடுத்துத் திறந்து பார்த்த போது, அதுவும் வெறுமையாய் இருப்பது அவளுக்குள் எரிச்சலைக் கிளர்த்திற்று.

"என்ன எழவுடா இது. ஒரு தேத்தண்ணி குடிச்சிக்க ஏலாம இரிக்கி"

நேற்றுப் பின்னேரம் தேனீர் குடிக்கும் போதே இவையிரண்டும் காலியாகிப் போயிருந்தது இப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது. தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

பக்கத்தில் கிடந்த அழுக்குச் சீலைத் துண்டையெடுத்து, பானையைப் பிடித்துக் கீழே இறக்கி வைத்தாள். வெறுமையாகக் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீர் அவளை மோப்பம் பிடித்துத் திரியும் வறுமையை நினைவுறுத்திக் கேலிச் சிரிப்பை உமிழ்ந்திற்று. ஒரு குவளையில் அந்தச் சுடுநீரை அள்ளியெடுத்துக் கொண்டே மீண்டும் படிக்கட்டுகளில் வந்தமர்ந்தாள் கிழவி.

வறுமை, வலிய கரமாக உருக்கொண்டு கழுத்தை நெரிக்க முனைவதாகத் தோன்றியது.

"கொஞ்சம் பொறுத்துக்க பிச்சச்சம்பளம் இண்டைக்கி கிடெய்க்கும். முதல் வேல சீனியும் தேயிலத்தூளும் வாங்கிறதுதான்"

மனதுக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டதும் சற்று ஆறுதலாக உணர்ந்தாள் கிழவி. குவளையிலிருந்த சுடுநீரை ஊதி ஊதிக் குடித்த போது, தொண்டை வழியாக உள்ளே இறங்கிய அதன் சுகமான உஷ்ணம் உடலுக்குச் சற்று தெம்பை ஏற்படுத்திற்று.

சூரியன் மேலேறி, சனங்களின் நடமாட்டமும் கலகலக்கத் தொடங்கியது. 'நேரமாயிட்டு, இனிப் போவம்' என்றெண்ணியவாறு சேலையை உதறிக் கொண்டே எழுந்து நின்றாள் கிழவி. பஞ்சுக் கற்றைகளாக அவிழ்ந்து கிடந்த தன் தலைமுடியை இறுகக் கட்டிக் கொண்டையிட்டாள். உள்ளே சென்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கைத்தடியையும், ரங்குப் பெட்டிக்குள் பத்திரமாக மறைத்து வைத்திருந்த பிச்சைச் சம்பள அட்டையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

இளங்காலைப் பொழுதின் சத்தான ஒளிக்கதிர்கள் எலும்பு வரிசைகளுக்கிடையிலான பள்ளங்களில் வீழ்ந்து கிடந்த தோல்களுடைய அவளது முகத்தை ஆதுரமாகத் தழுவி வரவேற்றன. குறுகுறுப்புடன் தடியை ஊன்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து, மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

முன்னொழுங்கையால் நடந்து வந்து, கப்பல் ஹாஜியாரின் வீட்டு வாசலால் சென்று, வலது பக்கமாகப் பாதை முறித்து, பெரிய பள்ளிக் குறுக்குச் சந்தில் நுழைந்தாள். கோழிக்குடல் போல் நீண்டு கிடந்த சொரசொரப்பான அதன் மணற்பரப்பில் கால்கள் அழுந்த நடந்து சென்று பிரதான வீதிக்கு ஏறுவதற்குள் அரைமணி நேரம் கடந்து விட்டிருந்தது.

வாழ்க்கைச் சுமையை இறக்கிக் கொள்ளப் பறந்து திரியும் சனங்களின் நடமாட்டமும் புகை துப்பிச் செல்லும் வாகனங்களின் பேரிரைச்சலுமாக கலகலத்துக் கொண்டிருந்த அந்த வீதியைப் பார்த்த போது, கிழவிக்கு மலைப்பு ஏற்பட்டது. சொற்ப வருடங்களிலான ஊரின் வளர்ச்சியை மனதுக்குள் வியந்தாள். இவ்வளர்ச்சிக்கெல்லாம் காரணமாக அமைந்த இனச்சண்டைகளையும் விரோதங்களையும் மனதுக்குள் அசைபோட்டாள்.

கல்யாணம் முடிந்த புதிதில் கணவருடன் மாட்டு வண்டிலில் மரப்பாலத்திலுள்ள தங்களது வயலுக்குச் செல்வதும், இரண்டு நாள் முழுக்க அங்கு நின்று வயல் வேலைகளைக் கவனிப்பதும், கணவரின் கைத்திறனை நெற்கதிர்களின் உப்பிய வயிற்றழகில் கண்டு ரசிப்பதும், கணவர் பிடித்துக் கொண்டு வரும் குளத்து விரால்களைத் துடிக்கத் துடிக்க அறுத்துக் கறி சமைத்துச் சாப்பிடுவதுமாக சுகமாகக் கழிந்த அந்த நினைவுகள் இன்னும் அவள் மனதில் பசுமையாக இருக்கின்றன. சுட்டுப் பொசுக்கினாலும் விட்டுப் போகாத இரம்மியமான வாழ்வின் ஞாபகத் தடங்களவை.

ஆனால், ஆயுத கலாசாரத்தின் அடக்குமுறைகள் தொடங்கியதன் பின், அந்தச் சுகங்களெல்லாம் வெறும் நினைவுகளாகவே மனங்களில் பத்திரப்படுத்தப்பட்டு விட்டன. பொன் கொழிக்கும் அந்த வயல்களெல்லாம் இப்போது எப்படியிருக்கின்றனவோ!

தலைமுறை தலைமுறையாகப் போடியார் என்றும், பணக்கார ஹாஜியார் என்றும் தலை நிமிர்ந்து ஊருக்குள் நடமாடியவர்களெல்லாம், ஒரே நாளில் தமது மாட்டுப் பண்ணைகளையும் வயல் நிலங்களையும் இழந்து பிச்சைக்காரர்களாகிப் போன அந்தக் கொடூர நிகழ்வு இனி எப்போதும் ஏற்பட்டு விடக்கூடாது.

சொத்துகளைக் களவாடிக் கொள்வதற்கு இப்படி ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு மக்களைக் கருவறுத்த அந்த ஆயுதக் கலாசாரப் பற்றுறனர்கள் மீது கிழவிக்கு இப்போதும் கோபம் இருந்தது. கசிவு தட்டும் கண்களை படபடவென இமை கொட்டி உதைப்பைக் கட்டுப்படுத்த முனைந்தாள்.

இன்று பலரது வீடுகளுக்குள் மேயும் வறுமைக்கும், வாழ்க்கை தரும் கஞ்சத்தனமான சுகத்திற்கும் இவர்களையன்றி வேறெவர் காரணமாக இருக்க முடியும்!

இன்றைய வாரிசுகளெல்லாம் தமது சொந்த வயல் நிலங்கள் பற்றியோ, என்றும் அலுப்புத் தட்டாத சோற்றுணவின் விளைச்சல் பற்றியோ அறியாது காலந்தள்ளும் நிலையினால் பின்னாளில் என்னென்ன துன்பங்கள் விளையப் போகின்றனவோ!

சவ எறும்பாய் மோப்பம் பிடித்து வந்த அந்த நினைவுகள் அவளுக்குள் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்திற்று. குழந்தைகளுக்கு மூக்கு வடிவது போல், அவளது உள்ளத்தில் இறுகிய சோகம் தீர்த்தமாக ஒழுகத் தொடங்கிற்று. நினைவுகளின் சோகத்தழுவலில் உடல் கூசிப்போனாள்.

சுதாகரித்துக் கொண்டே நடக்கவாரம்பித்தாள் கிழவி. வீதியின் இரு மருங்குகளிலும் வானளாவ உயர்ந்து நின்ற மாடிக் கட்டடங்களும், அவற்றில் துவைத்து உலரப்போட்ட துணிகளாகக் காற்றுக்கு மடமடக்குமாப் போல் அழகாகத் தொங்கவிடப்பட்டிருந்த சீலைகளும் அவளது கண்களை விழுங்கின. எதிர்பார்ப்பின் அந்தரத்தில் மனது சஞ்சரித்தது.

கழுவிப் போட்டால், உடுத்துக் கொள்ள வேறெதுவும் இல்லாதவாறு ஒரேயோர் உடையுடன் காலந்தள்ளும் தன் வறுமை நிலை பற்றியதான எண்ணம், அவளது உள்ளத்தில் கல்லெறிந்து சலனத்தை ஏற்படுத்திற்று. கணவனை இழந்த கைம்பெண்களுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தும், அக்கறையும் எவ்வளவு அநியாயமானது!

சூரியன் நன்கு மேலேறியிருந்ததால் அதன் இயல்பான உஷ்ணம் அவளது நொடிந்து போன உடலை மேலும் வாட்டியது. இடுப்பில் சொருகியிருந்த காசு முடிச்சை அவிழ்த்துப் பார்த்தாள். அதன் வெறுமை அவளது கண்களுக்குள் நகைப்பாக ஓடியது. சேலைத்தலைப்பால் தலையை மூடிக் கொண்டாள்.

இன்னும் சற்று தூரம் செல்ல வேண்டியிருந்தது. பயில்வானுடைய கரேஜைத் தாண்டி, அடுத்துள்ள பஸ் நிறுத்துமிடத்தில் நின்றவாறே மெயின் வீதியைக் கடந்து எதிர்ப்பக்கம் சென்று, பக்கவாட்டில் திரும்பி ஒரு ஏழெட்டு நடை நடக்க வேண்டும். தபாற்கந்தோர் வந்து விடும்.

இப்போது கிழவியின் உள்ளத்தில் தடுமாற்றம். பிச்சைச்சம்பளம் கிடைத்தவுடன் அதற்கு சீனி, தேயிலைத்தூள், வெற்றிலை வாங்குவதா? அல்லது புடவை சட்டை வாங்குவதா? இரண்டு தேவைகளும் தத்தமது அவசியத்தின் நினைவுறுத்தலுடன் அவளது கண்களின் முன் நர்த்தனமிட்டு, நெஞ்சில் முட்டி மோதின. துன்பமுற்றவனின் சிரிப்பாய் சிரித்து வைத்தாள்.

பயில்வானின் கரேஜ் அண்மித்தது. அதனுள் செறிந்து கிடந்த வாகன உதிரிப் பாகங்களைக் கண்களுக்குள் பொறுக்கிக் கொண்டே பஸ் நிறுத்தத்தை அடைந்தாள். இன்னும் சொற்ப தூரம்தான். வீதியைக் கடந்து அப்பால் சென்று விட்டால், ஏழெட்டு எட்டில் தபாற்கந்தோர் வந்து விடும்.

பிறகென்ன கைநிறையக் காசுதான். செலவழிப்பதற்குத்தான் வழி பார்க்க வேண்டும். கிழவியின் கண்களில் சந்தோஷ மின்னல்கள் பளிச்சிட்டன. பொக்கை வாயைத் திறந்து மெல்லச் சிரித்துக் கொண்டாள். வெளியில் தெரிந்த அவளது மௌனத்தின் ஏகாந்தத்தில் பூரிப்பின் படர்வு செழுமையுற்றிருந்தது.

வீதியின் இரு மருங்குகளிலும் பார்வையை அனுப்பி, வாகனங்கள் வரவில்லையென்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, கால்களை முன்வைத்த போது, எதிர்த்திசையிலிருந்து சைக்கிளில் வந்த ஒருவன், இவளைப் பார்த்து அக்கறையுடன் சத்தமிட்டு விசாரித்தான்.

"என்ன மூத்தம்மா! எங்ககா போறா?"

கண்களை இடுங்கிக் கொண்டு அவன் பக்கம் பார்வையை எறிந்தாள் கிழவி. அவளது வீட்டுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் மம்மனிவா. நல்ல புள்ள. இருந்திருந்தாப் போல குடிசைக்கு வந்து அவளைச் சுகம் விசாரிப்பான். ஐம்பது, நூறு ரூபாய்த் தாள்களை அவளது நடுங்கும் கையில் வைத்து அழுத்துவான்.

"ஆரு... மம்மனிவாவா?"

"ஓங்கா"

"நான் தபாற்கந்தோருக்குப் போறன் மவன். பிச்சச் சம்பளம் எடுக்க"

"சரிகா. வாகனமெல்லாம் வரும். பாத்துப் போ"

தலையாட்டி விட்டுத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்த கிழவி, திடீரென எங்கிருந்தோ முளைத்து பக்கவாட்டில் மிக வேகமாகத் தன்னை அண்மித்துக் கொண்டிருக்கும் அந்த பஸ்ஸைக் கண்டு அதிர்ந்தாள். இடைவெளிகள் மிகக் குறுகியதாக இருந்த அந்தச் சில நொடிப் பொழுதுகளில் அவளுக்கோ, பஸ்ஸிற்கோ தம்மை நிதானித்துச் சுதாகரித்துக் கொள்ள முடியாமற் போயிற்று.

"யா முஹைதீன் ஆண்டவரே.....!"

பிசிறடித்த கிழவியின் அபயக்குரல் ஒலித்து ஓய்வதற்குள், பஸ் அவளை ஆக்ரோஷமாக உந்தித் தள்ளி, தனக்கு முன்னால் பல யார் தூரத்துக்கு அவளைத் தூக்கியெறிந்து விட்டு ஓய்ந்தது.

இடுப்பில் உந்தப்பட்ட அந்தப் பலத்த அடியை எதிர்கொள்ள முடியாது மேலெழுந்து தொப்பென்று கீழே விழுந்த கிழவி, நடுவீதியில் இரத்தங்கள் சூழ மல்லாந்தாள். அவளது கரை சுருண்ட அழுக்குச்சீலை, சிவப்பு இரத்தத்தின் ஆழ்ந்த தோய்தலில் நிறம் மாறிப் போயிற்று. மூன்றாவது காலாக அவளுக்குத் துணை நின்ற அந்தக் கைத்தடி, வாகனத்தின் சக்கரங்களில் நசிபட்டு நொறுங்கிக் கிடந்தது. கன்னங்களிலும் கைகால்களிலும் பீறிட்டிருந்த இரத்தத் துளிகளோடு, இறுதி மூச்சை விட்டு இறந்து போயிருந்தாள் கிழவி. அவள் தனது கைகளில் பாதுகாப்பாகக் கொண்டு வந்த அந்தப் பிச்சைச் சம்பள அட்டை, காற்றின் விசுறலில் இலட்சியமற்று எங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.

No comments:

Twitter Bird Gadget