Friday, June 3, 2011

வாழ்தலுக்கான அழுதல்


சுபஹ் தொழுதுவிட்டு எல்லோருடனும் முஸாபஹா செய்து கொண்ட கலந்தர்லெப்பை, பள்ளிவாயலை விட்டு வெளிப்பட்டார். கடமையை நிறைவேற்றிய திருப்தியின் மதர்ப்பு அவரது உள்ளத்தில் நிரம்பியிருந்த போதிலும், மயிர்களடர்ந்த அவரது முகமோ கவலையில் தோய்ந்து தெரிந்தது. வெய்யிலுக்குச் சுருங்கிய மென்கொழுந்தின் பலவீன இழைகளாய் நெற்றியில் கோடிழுத்திருந்த நெஞ்சுச் சுமைகளோடு தோளில் கிடந்த துண்டைச் சரிப்படுத்திக் கொண்டே நடக்கவாரம்பித்தார்.

முன்விளக்குகளை எரிய விட்டு வெளிச்சம் பரப்பிய பஸ் ஒன்று, வேகமாக அவரைக் கடந்து சென்றது. அது கக்கி விட்டுச் சென்ற அழுக்குப் புகை, அவரது நாசியை நிறைத்து இருமலை ஏற்படுத்திற்று. தலையில் தட்டி இருமலைக் கட்டுப்படுத்த முனைந்து தோற்றுப் போனார். சற்றைக்கெல்லாம் பஸ்ஸின் இரைச்சல் சுத்தமாக அடங்கிப் போனாலும், அது ஏற்படுத்தி விட்டுச் சென்ற நினைவுகளின் சலசலப்பு, தன் நீண்ட வலிய கால்களை நீட்டி அவரது உள்ளத்தில் உதைக்கலாயிற்று.

இரவிலும் பகலிலுமான வாகனப் போக்குவரத்துகளும் மனிதப் பயணங்களும் என நாடு முழுக்க நிலவி வந்த வாழ்க்கைச் சுதந்திரத்துக்கு வடகிழக்கில் மட்டும் ஏற்படுத்தப்பட்டிருந்த இறுக்கமான தடை, ஆட்சிக்கு வந்த புதிய அரசுக்கும், தசாப்தங்கள் தாண்டிய போராட்டக்காரர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடு தளர்த்தப்பட்டதிலிருந்து இப்படியான வாகன இரைச்சல்களை இரவிலும் கேட்க முடியுமாக இருக்கின்றது. மக்களோ சந்தோஷத்தில் திளைக்கின்றனர். சமாதானத்தையும் அதை ஏற்படுத்தித் தந்த அரசையும் மனதாரப் பாராட்டுகின்றனர். இறந்த காலக் கனவுகளின் முரட்டுப் பிராண்டலில் இதயத் துடிப்புகளெங்கும் காயமுற்றுப் போயிருந்த அவர்கள், எரிநட்சத்திரத்தின் சில விநாடி ஆயுள் கொண்ட அந்த ஆரம்ப மினுக்கத்தை முழுமதிக்கு ஒப்பிட்டு நோக்கியதில் ஆச்சரியமில்லைதான். வரண்ட பாலை நிலத்தின் மீது பசுமையை விதைக்கும் அடர் மழையின் மீதான எதிர்பார்ப்பின் பேராசையும் பெரும் நம்பிக்கையும் இயல்பாகவே அவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகள்தான் வாழ்வை இறுக்கும் கடந்த காலம் பற்றிய கசப்பான நினைவுகளின் இம்சிப்பிலிருந்து தற்காலிக ஓய்வையும் அவர்களுக்கு வழங்கியிருந்தன.


கலந்தர்லெப்பைக்கோ இவற்றிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. கண்ணீரை உலர வைக்கும் பெருமூச்சுகளுடனான கடந்த கால வாழ்வனுபவங்கள் இருண்ட சமவெளியாக அவர் முன் பரந்து கிடந்தன. சமாதானம் என்ற வார்த்தைக்கான வரைவிலக்கணம் என்ன என்பதை அவர் அறிந்திருக்கவில்லை; ஆயினும், தற்போது நிலவும் சூழலும் நடைபெறும் நிகழ்வுகளும் சமாதானத்துடன் எந்த வகையிலும் தொடர்புபட்டவையல்ல என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத சூன்ய நிலையில் மக்களின் இந்தப் பூரிப்பும், பாராட்டும் அர்த்தமற்றதாகவே அவருக்குத் தோன்றின.

ஓர் இனத்துக்கு மட்டும் சுதந்திரத்தை வழங்கி, மறு இனத்தை மேலும் அடிமைப்படுத்த முயல்வதான ஒரு சதித்திட்டத்தை சமாதானம் என ஏற்றுக் கொள்வது எப்படிச் சாத்தியமாகும்!

தன் சமூகத்தின் இருப்பு பற்றியோ, அதன் வாழ்வாதாரங்களின் இயல்பு நிலை பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. அவ்விதமெல்லாம் சிந்திக்குமளவுக்குப் போதிய அறிவும் அவருக்கிருக்கவில்லை. ஆனாலும், அவர் தன்னைப் பற்றிச் சிந்தித்தார். தன் வாழ்க்கைத் தேவைகள் பற்றியும், அவற்றை நிவர்த்திப்பதற்கான தன் முயற்சியில் எதிர்நோக்கும் தடங்கல்கள் பற்றியும் ஆழமாகவே சிந்தித்தார்.

இன்றைய நிலையில், வாழ்வை நகர்த்திச் செல்வதற்காக என் போன்றவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள்தான் எத்தனை! ஈடுபட நிர்ப்பந்திக்கப்படும் நடைமுறைப் போராட்டங்கள்தான் எத்தனை!

முஸ்லிம் என்ற தன் நிலை, சிலருக்கு எரிச்சலூட்டி துவேஷம் கொள்ளச் செய்வதை கலந்தர்லெப்பையால் தெளிவாகவே உணர முடிந்தது. தாமரைப் பனியென்றான தழுவலுடன் குரோதமும் இணைந்த அவர்களது மனோ நிலை அவர் நன்கறிந்ததுதான். மற்ற சமூகத்தை சகோதரத்துவ உணர்வுடன் அணுகத் தெரியாத அந்த இனவாதிகள் மீதும், அவர்களது இறுகிப் போன உள்ளங்கள் மீதும் வெறுப்பும் அச்சமும் ஒருசேர அவருக்குத் தோன்றியிருந்தன.

மற்றவர்களது உரிமைகளையும் தேவைகளையும் நியாயப் பார்வைக்கு உட்படுத்த விரும்பாத இத்தகையோருடன் உறவு பேண முனைந்து, உதவிகள் வழங்கிய என் அறியாமைச் செயலுக்கு எத்தனை இழப்புகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

கசக்கப்பட்டு ரண வாசனை நுகரப்படுவதான வாழ்வின் எஞ்சிய பகுதிகளெல்லாம் சௌந்தர்ய வாசமற்ற தம் வெறுமை நிலையையுணர்த்தி நிற்கும் பயங்கரச் சமகாலம், விடை தெரியாக் குரூரக் கேள்வியென அவர் முன் விழுந்து கிடந்து அச்சுறுத்திற்று. இவற்றையெல்லாம் எதிர்த்துப் பேச முடியாத இயற்கைப் பலவீனத்தின் அழுத்தத்தில் அவருக்கு மூச்சு முட்டியது.

மலையுச்சியிலிருந்து தள்ளி விடப்பட்டு மரணத்தைத் துரத்திச் செல்லும் பலவீனனுக்கும் தனக்கும் இடையிலே, எதிர்காலம் பற்றியதான உணர்வில் அதிக வித்தியாசம் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.

இப்போதுள்ள தேவையெல்லாம் ஒரு கிளை. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வலுவுடன் தாங்கி நின்று காப்பாற்றக் கூடிய ஒரு மரக்கிளை. ஆனால், நீண்டு வரும் கிளைகளோ ஆணி வேரே பலமற்ற அடி மரத்தில் துளிர்த்தவை என்பதுதான் ஜீரணிக்க முடியாது உள்ளம் விசனப்படத் தூண்டுகின்றது.

கலந்தர்லெப்பை தன் கண்களின் ஓரத்தில் அரும்பிய கண்ணீர்த் துளிகளைத் தோளில் கிடந்த துண்டால் ஒற்றியெடுத்தார். இறுக மூடிய விழிகளுக்குள் அவரது ஒரே சொத்தான வண்டிலும் இழுவை மாடுகளும் நிழலாடி மறைந்தன.

தமிழ்ப் பயங்கரவாதிகளிடம் இரண்டாம் முறையாகவும் அவற்றை இழந்து, இன்றோடு ஒரு வாரம் பூர்த்தியாவதை நினைத்த போது, வெப்பிசாரத்தில் அவரது நெஞ்சு விம்மி வெடித்தது. தன் வாழ்க்கைக்குத் தேவையான வருவாயை ஈட்டிக் கொள்ளும் தொழில் கருவியாக விளங்கிய தனது மாட்டு வண்டில் மீதும் அதன் மாடுகள் மீதும் கலந்தர்லெப்பை மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எப்போதும் மாடுகளின் முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுப்பார். தன் வயிறு நிரம்பலுக்காக அவை படும் பாட்டை நினைத்து உள்ளத்தில் சஞ்சலமுறுவார். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, தன் பிள்ளைகளைப் போல் அவற்றை அன்புடன் குளிப்பாட்டுவார்.

வண்டில் ஓட்டிச் செல்லும் போது அவரது கையில் கேட்டிக் கம்பு இருக்கும். ஆனால் ஒரு தடவையேனும் அதனை விசுக்கி மாடுகளை அவர் அடித்தது கிடையாது. அவற்றுக்கு நோய் வந்து விட்டாலோ அது குணமாகும் வரை அவருக்குத் தூக்கம் தடைப்பட்டு விடும். அவற்றுக்கு உடலில் குறி வைத்த போதும், லாடம் அடித்த போதும் அந்தக் கொடூர வலியைத் தாங்கிக் கொள்ள முடியாது அழுகை ஆர்ப்பரிப்புடன் பதறித் துடித்த அவற்றின் உடலசைவு இன்று நினைத்தாலும் அவரது உள்ளத்தைப் பிசைய வைக்கும்.

தொலைவிலுள்ள கடற்கரைக்குச் சென்று மண் ஏற்றி வந்து விற்பதுதான் கலந்தர்லெப்பையின் ஒரே தொழில். ஒரு லோடு ஏற்றி வந்தால், நூறு ரூபா கிடைக்கும். ஏற்றி வரும் லோடு சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகும் விற்பனையாகும். அப்போதெல்லாம் சாப்பிட ஒன்றுமில்லாமல், அவரும் அவரது மனைவி பிள்ளைகளும் படும் துன்பம் சொல்லி மாளாது.

சராசரியாக நாளன்றுக்கு நூறு, ஐம்பது ரூபாய் சம்பாதித்துத் தரும் மாட்டு வண்டிலை நம்பியே அவரது வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

கடற்கரையைக் குறுக்கறுத்துப் படுத்துக் கிடக்கும் காடுகளும் தரிசு நிலங்களும் தமிழ்ப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலை கலந்தர்லெப்பை போன்ற மாட்டு வண்டில் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. அவர்களது கண்களில் அகப்பட்டு விடாமல் மண்ணை ஏற்றிக் கொண்டு ஊர் வந்து சேரும் வரைக்கும் இவர்களுக்கு நிம்மதியிராது. நம்பிக்கையும் இருப்பதில்லை. சில சமயங்களில் பயங்கரவாதிகளின் கண்களில் அகப்பட்டு விட்டாலோ அவர்களது கடூரமான முறைப்பும், உம்மா-வாப்பா மீதான தூஷண வார்த்தைகளும் இவர்களைக் கூனிக் குறுக வைக்கும். அச்சத்தில் இரத்த நாளங்கள் உறைந்து போகும்.

"எடே சோனி! எங்கட மண்ணை எப்படியடா நீ கொண்டு போவாய்....?"

அனல் தெறிக்கும் வார்த்தைகளோடு ஆக்ரோஷமான முஷ்டிப் பிரயோகங்களும் ஆவேசமாக இறங்கி முகங்களில் இரத்தங் கன்றச் செய்யும். பயங்கரவாதிகளது கைகளில் உறுமிக் கொண்டிருக்கும் ஆயுதங்களின் முறைப்பும் வீட்டில் தமது வருமானத்தை நம்பிக் காத்திருக்கும் ஏழை ஜீவன்களின் பசியும் இணைந்து, இவர்களது கைகளையும் வீரத்தையும் கட்டிப்போட்டு விடும்.

அதன்பின், உடலை முறுக்கி வியர்வை சிந்தி மேற்கொண்ட ஒரு நாள் முழுவதுமான உழைப்பை திரும்பிச் சென்று அள்ளிய இடத்தில் மீண்டும் கொட்டி விட்டு வர வேண்டும். கூடவே சட்டைப் பையிலிருக்கும் பத்துப் பதினைந்து ரூபாய்களும் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டு விடும். அவமானத்தோடும் விரக்தியோடும் ஊர் திரும்புவார்கள். பிறகு இரண்டு மூன்று நாட்களுக்குத் தொழில் தடைப்பட்டு விடும்.

ஆயினும், பட்டினியின் கொடுமையில் வயிறு ஒட்டி கண்கள் குழி விழுந்து மூலைக்குள் முடங்கிப் போகும் குடும்பத்தாரின் பரிதாப நிலையும், வேறு தொழில்களில் இறங்க முடியாதுள்ள மூலதனமும் அனுபவமுமற்ற இயலாமையும் இணைந்து மீண்டும் அவர்களைக் கடற்கரையின் பால் உந்தித் தள்ளி விடும்.

"எங்கட மண்" என்ற பயங்கரவாதிகளின் கூற்றைக் கேட்கும் போதெல்லாம் கலந்தர்லெப்பைக்குப் பற்றிக் கொண்டு வரும். எரிச்சலில் பற்கள் நறநறக்கும். இந்த சொந்தம் கொண்டாடுதலில் இருக்கும் அராஜகத் தனத்தையும் மிகப் பகிரங்கமான உரிமை மறுப்பையும் நினைத்து உள்ளுக்குள் புழுங்கிக் குமுறுவார். மூச்சடக்கி ஊதிப் பெருத்துக் கிடாமாடாகத் தோற்றமளிக்க முயலும் இந்தத் தவளைகளுக்கெல்லாம் பயந்து வாழ வேண்டிய தன் வாழ்வு நிலையின் மீது வெறுப்பும் விரக்தியும் அவருக்கேற்படும்.

சில காலங்களுக்கு முன், கலந்தர்லெப்பை மண் ஏற்றுவதற்கு கடற்கரைக்குச் சென்ற போது, வழிமறித்த பயங்கரவாதிகள், அவரை அடித்து இம்சைப்படுத்தியதோடு, வண்டிலையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டனர். பத்தாயிரம் ரூபா கட்டிவிட்டு வண்டிலைக் கொண்டு செல்லுமாறு கூறி அடித்துத் துரத்தி விட்டனர்.

கலந்தர்லெப்பைக்கு அழுகை வெடித்துப் பறந்தது. தன் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் ஒரே தொழில் கருவியான மாட்டு வண்டில் பறிபோய்விட்டதை நினைக்கையில் அவருக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. கண்ணீர் வடித்து வாய் விட்டு அழுதார். பிறந்த ஊருக்கே புதியவனாய்ப் போய்விட்டதான உணர்வின் தவிப்பு அவரைச் சுட்டெரித்து வருத்தியது.

நாளாந்த ஜீவனோபாயத்திற்கே நாயாய் அலையும் அவரால் மொத்தமாகப் பத்தாயிரம் ரூபாவை எப்படித் திரட்ட முடியும்! அதுவும் உடனடியாக!

ஏக்கத்தின் முரட்டுக் கரங்கள், கால்கள் அடித்துக் கொள்ள அவரது கழுத்தைப் பிடித்துத் தூக்கி உயர்த்தின. எம்பிக் குதித்த உச்ச நிலையிலான விரக்தியுணர்வுகளைத் தட்டி அடக்குவது ஒன்றும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை அவருக்கு. கண்ணீர்த் துளிகளின் தொடரிருப்பில் கண்கள் பரிதாபமாகப் பளிச்சிட்டன.

சோர்வுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, தகவலறிந்து கொண்ட மனைவி, பிள்ளைகள் ஒப்பாரி வைத்து அழுது பிரலாபிக்கலாயினர். நிம்மதியையும் மகிழ்வையும் களைந்து, தம் வாழ்வை நிர்வாணப்படுத்த முனையும் பயங்கரவாதிகளைத் தழுதழுத்த குரலில் சபித்துத் தீர்த்தனர். அநீதியிழைக்கப்பட்ட நெஞ்சின் பொறுக்க முடியா வலியோடு வான் நோக்கி அவர்களது நடுங்கும் கரங்கள் உயர்ந்து தரித்தன.

கலந்தர்லெப்பை மனதொடிந்து போனார். வீட்டின் சுவர்களிலும் வெறுமையான உள்ளறைகளிலும் ருத்ரத் தாண்டவமாடும் வறுமையின் அகோரத் தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக் கொண்டே வண்டிலை மீட்கும் கடிய போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு அவரது உடலிலும் உள்ளத்திலும் வலுவோ உறுதியோ இருக்கவில்லை.

இரு விழிப்புகளுக்கிடையிலான உவகையூட்டும் அழகிய கனவின் மென்சுகம், தன்னிலிருந்து காயங்களுடன் களவாடப்பட்டது போன்ற துயரத்தை அவர் உணர்ந்தார்.

ஆயினும், தூரத்து உறவினர் ஒருவரின் உதவி ஊக்கத்தினாலும் தொடரான சுய முயற்சியினாலும் சிறு தொகைப் பணத்தைச் சேகரித்து, அக்கம் பக்கங்களில் நிறைய கடனும் வாங்கி பத்தாயிரம் ரூபாவைச் சேர்த்தெடுத்துக் கொண்டார். அதற்கு முன்னர் எப்போதும் அவ்வளவு தொகைப் பணத்தை மொத்தமாகக் கண்டதாக அவருக்கு நினைவில்லை.

பணத்தை எடுத்துக் கொண்டு, பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று, அதனை அவர்களிடம் கொடுத்து விட்டு, வண்டிலை மீட்டு வருவதற்குள் அவர் அடைந்த அவமானங்களும் அலைக்கழிப்புகளும் சொல்லி மாளா.

பதறிப் பதறிச் சேர்த்தெடுத்த பணத்தை அவர்களிடம் கொடுக்கின்ற போது, தன் கைகளில் ஏற்பட்ட நடுக்கமும் கண்களில் கோர்த்துக் கொண்டு கன்னங்களில் கோடிழுத்த கண்ணீர்த் துளிகளும் இன்னும் அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்திருந்து உள்ளத்தை வருத்தின.

இந்நிலையில், சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போது, எல்லோருக்கும் போலவே அடிமனதின் ஆழத்திலிருந்து திரட்சியுற்ற நிம்மதிப் பெருமூச்சொன்று கலந்தர்லெப்பையிலும் வெளிப்பட்டு ஓடிற்று. ஏழைகளின் வாழ்வுத் துயர் களையும் ஆத்மார்த்தமான செயல் வடிவமென அது நறுமணம் பரப்பிற்று. எதிர்பார்ப்பின் ஏக்கப் பெருமூச்சுகள் மெலிந்து சிறுத்துக் காணாமல் போயின. சந்தோஷத்தின் ஆரத்தழுவலில் உள்ளம் கிளுகிளுப்புற்றுச் சிலிர்த்து நின்றது.

ஆனாலும், அந்த மகிழ்வும் நிறைவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. மனைவி பிள்ளைகளிடம் விடை பெற்றுக் கொண்டே கடற்கரை நோக்கிப் புறப்பட்ட கலந்தர்லெப்பை இடையிலிருந்த காட்டின் மத்தியில் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்டார். தன்மானத்தைக் கேள்விக் குறியாக்கும் தூஷண வார்த்தைகளும் ஏச்சுகளும் ரௌத்ராகரமாக அவரது முகத்திலறைந்தன. முதுகந் தண்டில் மேலிருந்து கீழாக ஒரு பலத்த நடுக்கம் அவரில் பரவியோடிற்று. தன் சமூகத்தின் மீது அவர்களுக்குள்ள பொறாமைகள் வன்மங்களாகத் தன் மீது திணிக்கப்படுவதை அவர் உணர்ந்தார். கண்களில் நீர் ததும்ப பரிதாப முகத்தோடு அவர்களை நோக்கினார்.

மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களோடு தன் வண்டில் பலவந்தமாகப் பறிக்கப்படுவதை உணர்ந்ததும் அதிர்ச்சியிலும் திடுக்கத்திலும் உறைந்து போனார் கலந்தர்லெப்பை. ஆற்றாமையினால் நெஞ்சு வெடித்துக் கண்ணீர் விட்டு அழுதார். தன் வாழ்வு நிலை பற்றிப் பரிதாபமாக எடுத்துரைத்து மன்றாடினார். அண்மையில்தான், தன் வண்டில் பறிக்கப்பட்டதையும் பத்தாயிரம் ரூபா கட்டி அதனை மீட்டெடுத்ததையும் கண்ணீர் ஒழுக இரைஞ்சிக் கூறினார்.

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அவையள் வேற ஒரு குழு செய்திருக்கினம். நாங்கள்தான் உண்மையான புலிகள். இப்ப எங்களுக்குப் பத்தாயிரம் ரூவா தந்தாத்தான் வண்டிலத் திருப்பித் தருவம். இல்லாட்டி கிடெய்க்காது"

மிகக் கொடூரமாக வெளிப்பட்ட அந்த வார்த்தைகளில் நெக்குருகி அதிர்ந்து போனார் கலந்தர்லெப்பை. இதற்கு முன்னர் கொடுத்த பத்தாயிரம் ரூபாவைச் சேர்த்தெடுப்பதற்குள் தான் பட்ட கஷ்டமும் அடைந்த அவமானமும் வாழ்க்கையில் எப்போதுமே அவரால் மறந்து விட முடியாதவை. அதற்கெனப் பெற்ற கடனையே இன்னும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அதற்குள் மீண்டும் இன்னொரு பத்தாயிரம்!

கலந்தர்லெப்பைக்குத் தலை கிறுகிறுத்தது. கண்கள் இமைகளுள் செருகி, உலகமே இருண்டு உறுமிற்று. கண்ணுக்குப் புலப்படாத இராட்சத மிருகமொன்று அவரது கால்களில் பிடித்து மேலுயர்த்தி வலிய பாறைகளின் மேல் அவரை ஓங்கி அடித்தது. மண்டை பிளந்து மூளை வெளிச் சிதற, பாறை பிசுபிசுத்துச் சிவப்பைத் துப்பிற்று. 

அந்நிலையிலும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார்:

"தம்பி! இது சமாதானக் காலமில்லுவா...?"

அவரது அனுதாபமான விசாரிப்பு, அவர்களுக்குள் எகத்தாளமான ஆணவச் சிரிப்பை ஏற்படுத்திற்று.

"அடே சோனிக் காக்கா! சமாதான் எங்கிறது எங்களுக்கும் கௌமண்டுக்கும் இடயில மட்டுந்தான்; உங்களுக்கும் எங்களுக்கும் இடயில இல்ல, சரியா?"

சொல்லி விட்டு தன் மாட்டு வண்டிலைப் பலவந்தமாகப் பறித்து இழுத்துச் செல்லும் அந்தக் கல்நெஞ்சம் படைத்த பயங்கரவாதிகளை எரித்து விடுவது போல் பார்த்தார் கலந்தர்லெப்பை. இவ்விதம் பார்க்க மட்டுமே தன்னாலும் தன் சமூகத்தாலும் முடியும் என்பதை நினைக்கையில் அவமானத் தலைகுனிவு அவருக்குள் வெப்பிசாரமாய் வெடித்திற்று.

இன்றோடு ஒரு வாரமாகின்றது. அவருக்கு எந்த நல்ல முடிவும் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தை, முஸ்லிம்களின் உரிமை என்ற கதைகளெல்லாம் பத்திரிகையிலும் வானொலியிலும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஓர் ஏழைத் தொழிலாளியின் வாழ்வாதார உரிமையையே அனுமதிக்க முடியாத இந்தக் கொடியவர்களிடமிருந்து தமக்கான வாழ்வியல் சுதந்திரத்தையும் உரிமையையும் எதிர்பார்ப்பது எவ்வளவு மடமையான செயல் என்பது கலந்தர் லெப்பைக்கு நன்றாகவே புரிந்தது. தனது மாட்டு வண்டிலைப் போல எத்தனை சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், நெற்காணிகள், வர்த்தக நிலையங்கள், மற்றும் பொருளாதாரங்கள் அவர்களது பயங்கரவாதத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனவோ!

வண்டிலை மீளவும் பெற முடியும் என்பதில் கலந்தர்லெப்பைக்குத் துளியும் நம்பிக்கை இருக்கவில்லை. தொழிலும் இல்லையென்றாகிப் போனது. இந்நிலையில் முதற் தடவை பறிக்கப்பட்ட போது வண்டிலை மீட்பதற்காகப் பெற்ற கடனைத் திருப்பித் தரும்படியான நச்சரிப்புகள் அவரைத் துரத்தத் தொடங்கி விட்டன. கடனை எவ்வாறு அடைக்கப் போகின்றேனோ என்ற சிந்தனையின் தவிப்பு அவரை வெகுவாகப் பாதித்தது. எதிர்காலத்தை வரையறுத்துக் கொள்ள முடியாத இயலாமைப் பெருக்கில் உள்ளம் வெதும்பினார். நம்பிக்கையிழந்த துயரில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று.

கண்களைத் துடைத்துக் கொண்டார் கலந்தர்லெப்பை. வறுமையின் பயங்கரக் குறியீடாக ஒடிந்து கிடக்கும் அவரது வீடு முகச்சுளிப்போடு அவரை வரவேற்றது. பல நாள் பட்டினியின் அகோரத்தைத் தாங்க முடியாது, ஓரங்களில் சுருண்டு கிடக்கும் மனைவி, பிள்ளைகளைப் பார்க்கும் சக்தி அவருக்கு இருக்கவில்லை.

முன்னறையில் போடப்பட்டிருந்த கிழிந்த பாயில் தொப்பென அமர்ந்தார். வாழ்வுச் சுமையும், அது பற்றிய சிந்தனையும் அவரை இறுக்கிப் பிடித்துக் கழுத்தை நெரிக்க முயன்றன. மூச்சுத் திணறினார்.

வயிற்றுப் பசியை மறக்க முயல்வதான பிரயத்தனத்தில் வெற்றி கிடைக்கும் அறிகுறி எதுவும் அவருக்குத் தென்படவில்லை. முழங்கால்கள் இரண்டையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பார்வையை உயர்த்தினார். பல வருடங்களுக்கு முன் வேயப்பட்டு ஓட்டைகள் விழுந்திருந்த முகட்டுத் தென்னங்கூரை மட்டைகள் அவரைப் பார்த்துக் கேலியாகப் புன்னகைத்துப் பழிப்புக் காட்டின. சோர்ந்த பெருமூச்சொன்று உஷ்ணக் காற்றாய் அவரிலிருந்து வெளிப்பட்டுக் கரைந்து போயிற்று.

இனியென்ன... ளுஹர் தொழுகை வரை வீட்டுக் கூரையை வெறித்த படியே இருக்க வேண்டியதுதான்...!

No comments:

Twitter Bird Gadget