Sunday, June 5, 2011

வரலாற்றுத் துயர்

தினைந்து ஆண்டுகளுக்குப் பின் என் புத்தகப்பை என்னைத் தேடி வந்த போது ஆச்சரியம் மட்டுமே என்னுள் தோன்றியது. அதைத் திறந்து பார்த்த போதுதான் மனங்கொள்ள முடியாத மகிழ்ச்சி ததும்பிற்று. செழிப்பான மலர்ச்சி படர்ந்திருந்த காலப்பகுதியில் நான் எழுதிய - முற்றுப்பெறாத - சிறுகதையன்று சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘செம்மீன்’ நாவலுக்குள் மடிந்து கசங்கிக் கிடந்தது. நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை அது. அது ஓர் உண்மைக்கதை. ‘துளிர்க்கும் அரும்பு’ எனும் தலைப்பிட்டு, எனது மாமாவின் மகனின் முயற்சிகளையும், வெற்றிகளையும் பதிவாக்கும் நோக்கில், அதனை நான் தொடங்கியிருந்தேன். கதையின் முடிவு பற்றி அப்போது என்ன தீர்மானித்திருந்தேன் என்று ஞாபகத்திலில்லை. என்றாலும் மனதுக்கு இதமான, இளைய தலைமுறையினரை கல்வி ரீதியாக ஊக்குவிக்கின்ற தோற்றத்தைக் கதைக்கு வழங்க வேண்டுமென எண்ணியிருந்திருக்கக் கூடும். கடந்து வந்த பாதையின் ரணப் புகைக்குள் அக்கால நினைவுகளெல்லாம் அள்ளுண்டு காணாமல் போய்விட்டன. இதற்குள் கதைக்கரு பற்றிய நினைவெல்லாம் எங்கே வரப்போகிறது.

இனம் புரியாத சலனம் ஒன்று என்னுள் படர்கிறது. எனது மாமாவின் மகன் நஜீம், - அவனது தந்தையைத் தவிர - குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்தமான ஒருவனாக இருந்தான். தந்தையின் இடையூறுகள், கண்டிப்புகளுக்கு மத்தியிலும் உயர்ந்த இலட்சியத்தை நோக்கிப் பயணித்தான். அதில் வெற்றிக்கான வாயில்களையும் திறந்து கொண்டான். ஆனால் அவனது முடிவு இவ்வளவு அகோரமாகி விடும் என யாரும் நினைத்திருக்கவில்லை. நஜீமின் எப்போதும் மலர்ந்திருக்கும் முகமும், மென்மையான சிரிப்பும் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கின்றன. என் உணர்வுகளைக் குடைகின்றன.


முற்றுப் பெறாதிருக்கும் இந்தக் கதையின் மீதியை எழுத வேண்டும். கதையின் முடிவு பற்றித் தீர்மானிக்க வேண்டும். ஆனால் உண்மையை எழுதும் போது, முடிவு என்பது துயரங்கள் செறிந்ததாகவே இருக்க முடியும். ஏனெனில் தற்போதைய நிஜம் மிகவும் சோகமானது.

சிந்தனைகளைத் தறித்து விட்டு, எழுத்துப் பிரதியைக் கையிலெடுத்துக் கொண்டு தனிமையில் அதை வாசிக்கத் தயாரானேன். கடந்த காலம் என்னை நோக்கி எழுந்து ஓடி வரலாயிற்று.

********************

நள்ளிரவு தாண்டிய பிறகுதான் வீட்டை வந்தடைந்தார் தாவூத். நாசிக்குள் நிறைந்திருந்த நெல் மணிகளின் சுகவாசம், உடற்சோர்வையும் தாண்டி அவரை உற்சாகப்படுத்திற்று. தன்னை எதிர்பார்த்திருந்த மனைவியின் வரவேற்பும், மண்பானைக்குள்ளிருந்து அவள் மொண்டு தந்த குளிர் நீரும் அவரை மேலும் ஆசுவாசப்படுத்தின.

“சுடச்சுட தேத்தண்ணி எடுத்து வா புள்ள” என்று மனைவியைப் பணித்து விட்டு, சாய்மனைக் கட்டிலில் அமர்ந்து கீழிருந்த வட்டாவை எடுத்து மடிக்குள் வைத்துக் கொண்டார். வெற்றிலையை எடுத்துக் காம்பைக் கிள்ளியெறிந்து விட்டு, சுண்ணாம்பு தடவி, பாக்கு, கைப்பு இத்யாதிகளை வைத்துச் சுருட்டிக் கொடுப்புக்குள் தள்ளினார். வட்டாவைக் கீழே வைத்து விட்டு, படிக்கத்தை மடிக்குள் தூக்கி வைத்துக் கொண்டார். வலுவான பற்களிடை நசிந்து அரைந்து சிவப்புச்சாறாகும் வெற்றிலையை படிக்கத்துள் துப்பியவாறே மனைவியை நோக்கிக் குரல் கொடுத்தார்.

“சுபைதா”

கொதி நீருக்குள் தேயிலைத்தூளைக் கொட்டிக் கொண்டிருந்த அவரது மனைவி சுபைதா, தலையைத் திருப்பி முகபாவனைக்குள் வினாக்குறியை முடக்கினாள்.

“வயல் நல்லா விளஞ்சிருக்கு. நாளைக்கு வெட்டணும். ஆக்கள்ளாம் பாத்திட்டன். இவன் நஜீமயும் கூட்டிட்டுப் போனா கூடமாட ஒத்தாசையா இருக்குந்தான. அதுதான் இப்ப அவசரமா வந்த நான். இதுக்கு முதலும் எத்தனயோ தரம் கூப்புட்டுப் பாத்தன். பெரிசா படிக்கப் போறன், கிழிக்கப் போறனெண்டு ஏலாண்டுட்டான். இந்த லோங்ஸ் போட்டுக்கிட்டு மாசாமாசம் சம்பளம் எடுக்கிற வேலயெலாம் நமக்கு சரிவருமா? எடுக்கிற சம்பளம் லோங்ஸ் வாங்கிறதுக்குத்தான் கணக்கா இருக்கும். என்னோட வந்தானெண்டா, வயல் வேல, மாடு மேய்க்கிற வேலயெலாம் பழகிக்குவான். அரசாங்க வேலயில  இருந்து ஆறு மாசத்தில எடுக்கிற சம்பளத்த, இங்க ஒரு நாள்ள, ரெண்டு நாள்ள எடுத்துரலாம். இதெல்லாம் அவனுக்கு நல்லா தெரியும். தெரிஞ்சிக்கிட்டும் மடயன்ட வேல பாத்துத் திரியிறான்”

தேனீர் கிளாசுடன் வந்த மனைவியைக் கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டு, படிக்கத்துள் வெற்றிலை துப்பினார் தாவூத். தேனீரைக் கணவரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பெரிய கிளாசில் வாய் கொப்பளிக்கத் தண்ணீரும் எடுத்து வந்து கொடுத்தாள் சுபைதா. நஜீமை, மாட்டுப் பண்ணை முதலாளியாகவோ, வெள்ளாமை செய்யும் போடியாராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற கணவரின் ஆர்வத்துடிப்பும், அவரது இழுப்புக்குள்ளிருந்து நழுவி படிப்பில் மிக விருப்போடு ஈடுபடப் போராடும் நஜீமின் உழைப்பும் வீட்டில் நிலவி வரும் நீண்ட காலச் சண்டைப்பேச்சுக்கான காரணமாக இருந்து வருவதை சுபைதா அறிவாள். மகன் படித்துப் பெரியாளாய் வரவேண்டுமென்று அவளுள் ஆசை இருந்தாலும், கணவரின் பிடிவாதத்திற்குப் பயந்து மகனையே சமாதானப்படுத்தி வந்தாள். என்றாலும் கணவருக்கு கோபம் தலைக்கேறி விடும் போது, மிக அசிங்கமாக அவனைத் திட்டுவதும், உறுமிக் கொண்டே அடிக்கத் துரத்துவதுமான அவரது நடவடிக்கைகளைக் காணும் போது அவள் உள்ளுக்குள் புளுங்கிக் குமுறுவாள்.

“என்ட மூத்தப்பா படிச்சாரா? என்ட வாப்பா படிச்சாரா? நான் படிச்சனா? உனக்கு மட்டும் என்னடா படிப்பு? பற நாயே”

இது, அவருக்கு வாய்ப்பாடமாகவும் அவளுக்கு மனப்பாடமாகவும் ஆகிப் போன பேச்சு. இவையெல்லாம் நஜீமின் உள்ளத்தைப் பாதித்திருக்கக் கூடும். ஆனால் அவனது கல்வித் தேடலுக்கான உழைப்பை எவ்வகையிலும் அவை பாதித்து விடவில்லை. அதனால்தான், கல்வியமைச்சரிடம் கௌரவ விருது வாங்குமளவு  மிகச்சிறப்பாக உயர்தரத்தில் அவனால் சித்தியடைய முடிந்திருக்கிறது. நாளைக்கு நடைபெறவுள்ள நிரந்த ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்குப் படித்து விட்டு, இப்போதுதான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நஜீமை கவலையுடன் நினைவு கூர்ந்தாள் சுபைதா. அவன் மீதான பாசம், பரிதாப வாய்க்காலூடு அவளுள் பொங்கித் தளும்பிற்று.

வரிசையாக நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பின், கடைசியாகப் பிறந்தவன் நஜீம். அதனால் அவன் மீது கொள்ளைப் பிரியம் சுபைதாவுக்கு. அவனுக்கு சிறு தலைவலி என்றால் கூட துடித்துப் போய்விடுவாள். ஒரே தம்பி என்பதால் சகோதரிகளும் கூட அவன் மீது மட்டற்ற பாசத்தோடுதான் நடந்து வந்தனர். வயல் வேலைகளுக்கு நஜீமை இழுக்கும் தந்தையின் உரையாடலும், அதற்கான சகோதரிகளின் மறுப்புரைகளும் சிலவேளை முரண்பட்டு மோதிக் கொள்வதுமுண்டு. அச்சமயங்களில் தாவூத், கண்களில் அனல் தெறிக்கக் கொதிப்பார். பெண் பிள்ளைகள் என்றும் பாராது, வார்த்தைகளில் அகோரம் பூசியெறிவார்.

“மகனுக்கு நாளைக்கு சோதன இருக்காம். கண்ணேரமா கண்முழிச்சிப் படிச்சிப் போட்டு இப்பதான் படுக்கான். நீங்களும் களச்சிப் போய் வந்திருப்பீங்க. நாளைக்கு எல்லாத்தயும் ஆறுதலாக் கதெக்கலாம். இப்ப ராஹத்தா கொஞ்சம் படுத்தெழும்புங்க”

மேற்கொண்டு பேச்செழாதவாறு முத்தாய்ப்பு வைத்து விட்டு எழுந்த சுபைதா, புருவங்களை நெறித்துப் பாயும் கணவரின் கர்ன கடூரப் பார்வையைத் தன் முதுகில் உணர்ந்தவாறு அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மறுநாள், அவள் எதிர்பார்த்தவாறே எல்லாம் நடக்கத் தொடங்கின. வெள்ளாமை வெட்டு நேரம்; துணைக்கு ஆள் வேண்டுமென்று தாவூத் நஜீமை இழுக்க, தான் பரீட்சைக்குப் போக வேண்டுமென்று அவன் கையை உதற, அந்த சந்தடிக்குள் சகோதரிகள் தம் குரலை நுழைக்க, வீட்டில் பெரும் ரகளை எழுந்தாடலாயிற்று. யாரை சமாதானப்படுத்துவதென்று அறியாது நெஞ்சு படபடக்கக் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள் சுபைதா. கணவரின் விருப்பம், மகனின் இலட்சியம் இரண்டிலும் நியாயங்களிருக்கையில், தான் எதை எடுத்துக் கூறுவது!

இறுதியில், நஜீமின் இலட்சியமே வென்றது. தந்தையைத் தள்ளிவிட்டு எழுந்த அவன், இனியும் தாமதிக்க முடியாது என்பது போல், விறுவிறுவென்று நடந்து வெளியேறி விட்டான்.

தீயை மிதித்தவர் போல் நின்றிருந்த தாவூதின் கண்களில், போராடித் தோற்ற வெறியின் அதிர்வு, பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அந்த வெறியும், அதன் வெளிப்பாட்டுச் சண்டைகளும் கொஞ்ச காலத்துக்கு வீட்டைத் தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருக்கும் என்பது சுபைதா நன்கறிந்ததுதான்.

*****************

முற்றுப் பெறாதிருக்கும் கதையின் இறுதிப் பகுதி இது. நஜீம் போட்டிப் பரீட்சையில் பங்கு பற்றிய நாள்தான், அவனது வாழ்வின் கடைசி நாள் என்பதை அன்று அவன் அறிந்திருக்க முடியாது. வெற்றிகரமாக பரீட்சை எழுதிவிட்டு, பல கோடிக் கனவுகளுடன் வீட்டுக்குத் திரும்பிய அவன், மறுநாள் உதயத்திற்கிடையில் தனது வாழ்வே கனவாகிப் போன சோகத்துள் திணிக்கப்பட்டது ஆறாத் துயராய் இன்னும் என் உள்ளத்தை நெருடுகிறது. நஜீமின் முடிவு என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ள விழையும் உங்களது துடிப்பை நான் உணர்கிறேன். விவரிக்க முடியாத அந்த வரலாற்றுத் துயரை எழுத்துள் அடக்க முடியாது என்ற யதார்த்தத்தை மீறி, என் முயற்சியைத் தொடர்கிறேன்.

********************

போட்டிப் பரீட்சை, நஜீம் எதிர்பார்த்ததை விடவும் மிக இலகுவாக அமைந்தது அவனுக்குக் கொஞ்சம் வருத்தமாகவே போய்விட்டது. ‘இவ்வளவு சிரமப்பட்டுப் படித்திருக்க வேண்டாமோ!’ என்று தோன்றிற்று. என்றாலும் நியமனம் நிச்சயம் என்ற உறுதி ஏற்படுத்திய மகிழ்ச்சியில் முகத்தை மலர்த்திக் கொண்டே வீட்டுக்குத் திரும்பினான். காலை நிகழ்வு பற்றியும், சீற்றத்துடன் தந்தை வயலுக்குத் திரும்பிச் சென்றது பற்றியும் பேச முனைந்த தாயையும், சகோதரிகளையும் கையுயர்த்தி அடக்கினான்.

“இன்ஷா அல்லாஹ், இந்த வேலை எனக்குக் கிடைச்சிடும். ஒவ்வொரு சோதனயா எழுதி, படிப்படியா முன்னேறி சமூகத்தில மிகப்பெரிய ஆளா நான் வருவன். கைநிறைய காசு இருக்கும். சமூகத்தில மரியாதை இருக்கும். என்ட ராத்தாமாரப்போல எத்தனயோ பொம்பளப் புள்ளெகள் கஷ்டத்தில வாழுறாங்க. அவங்கட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு தீர்வ ஏற்படுத்துவன். அல்லாஹ்ட உதவியால இதெல்லாம் நடக்கும். ராத்தாமாருக்கெல்லாம் பெரிய ஊடு கட்டி கல்யாணம் முடிச்சி வைக்கலாம். வயல்லயும், மாட்டுக்குப் பின்னாலயும் இழுபட்டுக் கஷ்டப்பட்டதெல்லாம் போதுமெண்டு வாப்பாவ ஊட்ல வந்திருந்து ஓய்வெடுக்கச் செல்லலாம். அதுக்குப் புறவு எல்லாம் சரியாயிடும்மா. இப்ப சென்னா வாப்பாவுக்கு ஒண்டும் விளங்காது. காலம் வரக்குல அவராவே விளங்கிக்குவாரு”

இரவில் தூங்கச் செல்லுமுன் ஏதாவது புத்தகம் வாசிப்பது நஜீமின் வழக்கம். அன்று மா. செல்வராஜாவின் ‘முகாமைத்துவச் சிந்தனைகளும் செயற்பாடுகளும்’ நூலை வாசித்துக் கொண்டிருந்த போது, மிக வித்தியாசமான சத்தமொன்று காற்று வெளியில் மிதந்து வருவதை உணர்ந்தான். பல குரல்கள் ஈனஸ்வரங்களாய் கலந்து கசங்கி அழுவது போன்ற தவிப்பை அது உணர்த்தவே நஜீம் திடுக்கிட்டான். அபயம் தேடும் அவலக்குரல்களாய்க் கசியும் அந்த ஓலங்கள் அவனது உள்ளத்துள் ஒரு பதட்டத்தைத் திணித்தன.

“என்ன மகன்! சனங்கள்ளாம் கத்துறாப்போல கேக்குது. ஊருக்குள்ள என்னமோ பிரச்சின நடக்குது போல இரிக்கு”

அறைக்குள் தலை நீட்டிய சுபைதாவின் குரலின் கலக்கம், நஜீமின் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்திற்று. புத்தகத்தை மடித்து வைத்து விட்டு எழுந்து, ஜன்னலூடு பார்வையை வெளியே எறிந்தான். முகத்திலும் குரலிலும் கலவரம் தொனிக்கத் தாயை நோக்கினான்.

“உம்மா! மாமாட ஊட்டுப்பக்கம் இருந்து கத்துற மாதிரி சத்தமெல்லாம் வருவுது. என்ன பிரச்சினயோ தெரியல்ல. எதுக்கும் நான் போய் பாத்திட்டு வாறன்”

அவன் சொல்லி முடிப்பதற்குள் வீட்டுக்கதவைத் தாண்டியிருந்தான்.

“கவனம் மகன்!”

அவளது பேச்சு அவனுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. அவசரத்தில் சட்டை மாட்டிக் கொள்ளவும் தோன்றாமல், அணிந்திருந்த பெனியனுடன் ஓடிச் செல்லும் மகனைக் கவலையுடனும் பதட்டத்துடனும் விழி அழுத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுபைதா.

சற்றைக்கெல்லாம் துப்பாக்கிச் சத்தம் விட்டுவிட்டுக் கேட்கலாயிற்று. ஊரில் இனம் புரியாத அச்சம் இருட்டுடன் இணைந்து அச்சுறுத்தத் தொடங்கிற்று. பக்கத்து வீட்டுக்காரர், மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பதட்டத்துடன் ஓடி வந்தார்.

“என்ன சுபைதா! கதவத் திறந்து வெச்சுக்கிட்டு நிக்கிறீங்க? ஊர்ல என்ன நடக்குது தெரியுமா? ஆக்கள வெட்டி வாறானுகள்; சுட்டுக் கொல்றானுகள். டக்குண்டு கதவ மூடுங்க”

“என்னது ஆக்கள வெட்றானுகளா? என்ட அல்லாஹ்! என்ட புள்ள இப்பதான வெளிய போனான்”

சுபைதா பரிதவித்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் அவளை வீட்டினுள்ளே இழுத்தார். ஏனையோரையும் உள்ளே வைத்து, கதவைச் சாத்தித் தாளிட்டார். விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு, யாரும் சத்தம் போட வேண்டாமென்று, உதடுகளில் விரல் வைத்து எச்சரித்தார்.

திடீரென வீட்டுக்கதவு படபடவென தட்டப்படும் சத்தம் கேட்டது. எல்லோரும் திகில் முகங்களுடன் உறைந்து போய் நின்றனர்.

“பறச்சோனிட மக்களே! கதவத் திறங்கடா” என்ற கர்ன கடூரச் சத்தமும், அதைத் தொடர்ந்து டப்டப்பென்ற தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும், அதன்பின் “ஆமி வந்திட்டான் போலக்கிடக்கு; வாங்கடா ஓடுவம்” என்ற சத்தமும் கேட்டு ஓய்ந்தன. வீட்டினுள் மயான அமைதி நிலவிற்று. சத்தமில்லா மூச்சுடன் இணைந்து சுப்ஹானல்லா கலிமா வீடெங்கும் நிரம்பி மிதந்தது. பயங்கரமான இருள் எல்லோரையும் சூழ்ந்து போர்த்திக் கொண்டிருந்தது.

சுபைதா, தன் பெண் பிள்ளைகளை கைகளிலும், நஜீமை நினைவிலும் இறுக்கிக் கட்டியவாறு நடுங்கிக் கொண்டிருந்தாள். வெளியே போன மகனை இன்னும் காணவில்லை; அவனுக்கு என்னவாகி விட்டதோ என்ற தவிப்பும், எதுவும் நடந்திருக்கக் கூடாதே என்ற ஏக்கமும் அவளது உள்ளத்தைப் பொசுக்கும் நெருப்புக் கங்குகளாய் கொழுந்து விட்டெரிந்தன. அந்த இரவு அவர்களது தூக்கத்தை விழுங்கித் துயரத்தையும் அச்சத்தையும் ஏப்பம் விட்டது.

மறுநாள், உயிரைக் கருக்கும் அந்தத் துயரச் செய்தி அவர்களது வீடு தேடி விரைந்து வந்தது. விடுதலை வீரர்கள் நடத்திய முஸ்லிம் மனித வேட்டையில் நஜீமும் பலியாகிப் போனான் என்பதுதான் அந்தச் செய்தி.

சுபைதா உட்பட எல்லோரும் துடித்துப் போனார்கள்.

“என்ட மகனே! நஜீம்!”

அலறிக் கொண்டு விழுந்தாள் சுபைதா. அவளை எழுப்பித் தேற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்தோர் வெளியே சென்றனர். விடுதலை வீரர்கள் நஜீமின் மாமாவின் வீட்டுக்கு வந்து, அங்கிருந்தவர்களைக் கொன்று குவித்துவிட்டுத் திரும்பும் போது வாயிற் கதவருகில் நஜீமைக் கண்டிருக்கிறார்கள். நெஞ்சைக் குறிபார்த்துக் கிளம்பிய துப்பாக்கித் தோட்டாவிலிருந்து தப்பிக்க அவகாசமின்றி இரத்தம் கொப்பளித்த நெஞ்சை அழுத்தி “என்ட உம்மா” என்று அலறியவாறு, மல்லாந்து விழுந்திருக்கிறான் நஜீம். விடுதலை வீரர்கள், தம் கையிலிருந்த வாள், கத்திகளினால் அவன் உடலைச் சின்னாபின்னப் படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

சுபைதா, ஓடி வந்து மகனைப் பார்த்தாள். கால்களை விரித்து, கைகளை நெஞ்சில் அழுத்தி விழுந்து கிடப்பது தன் அன்பு மகன் நஜீம்தான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. உதடுகளிலும் மூக்கிலும் சதைத்துண்டுகள் கிழிந்து காயங்களிலிருந்து வழிந்த இரத்தத் துளிகளில் உடல் முழுக்கத் தோய்ந்திருந்த தன் மகனைக் கண்ட போது துயரம் அவளது தொண்டையை அடைத்தது. கண்ணீர் நிறைந்து, அழுகையும் ஓலமும் கொப்பளித்துக் குமுறின. “என்ட மகனே!” எனக் கத்திக் கொண்டே அவனது உயிரற்ற உடல் மீது சரிந்தாள். குமுறிக் குமுறி அழுதாள். அந்த அழுகையினூடே மயங்கி விழுந்தாள்.

ஒரு சமூகத்தின் உயிர் மூச்சை உலுக்கிய அந்த வரலாற்றுத் துயர், நஜீமின் மென்மையான கனவுகளை நசுக்கித் துவம்சம் செய்து விட்டுச் சென்றது. அவனது கனவுகளைப் போலவே அவனும் மண்ணுக்குள் மறைந்து கனவாகிப் போனான்.

***************

பேனாவை மூடி வைத்த போது, கடந்த கால ரண வடுக்கள் என் உள்ளத்தை அழுத்தித் துவைத்தன. எவ்வித நியாயமுமின்றி நசுக்கி அழிக்கப்பட்ட அப்பாவி உயிரின் உணர்வுகள், பதினைந்து வருடங்கள் தாண்டியும் என் மனதுள் சலனமாய் படர்ந்துள்ளன.

தாவூத், இப்போதும் உயிருடன் இருக்கிறார். அந்த நிகழ்வுக்குப் பின்னர், வயல் காணிகளையும், நூற்றுக்கணக்கான மாடுகளையும் இழந்து அநாதையாய் நின்ற போது, கைகொடுப்பதற்கு மகனில்லையே என்ற ஏக்கம் அவரை நடைப்பிணமாக்கிற்று.

சுபைதாவும் உயிருடன்தான் இருக்கிறாள். ஆனால், ஒரு தாய் காணக்கூடாத அந்த சரித்திரச் சோகம், அவளது எல்லா ஆற்றல்களையும் பிடுங்கி, உயிரை மட்டும் பிச்சையிட்டுச் சென்றுவிட்டது. தன்னைப் பற்றியோ, தன்னைச் சூழவுள்ளவை பற்றியோ இப்போது அவளுக்கு ஒன்றுமே தெரியாது. அப்படித் தெரியாமலிருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில், ஒவ்வொரு முறையும் நம்பி, நம்பி ஏமாறும் தன் சமூக மக்களின் துயரம் அவளுக்கு இல்லை.

No comments:

Twitter Bird Gadget