Monday, June 6, 2011

வெறி

விடிகாலைக்கு முன்னமே அவன் வெளிப்பட்டு விட்டான். எங்கும் அழுத்தமாகக் கவிந்திருந்த இருள் பயமுறுத்திற்று. ஆனாலும் அவன் பயப்படவில்லை. வைராக்கியத்துடன் பாதையில் கால்பதித்தான்.

அவனது உள்ளம் இறுகிக் கிடந்தது. இதற்கு முன் எப்போதுமே அவன் அப்படியிருந்ததில்லை. புதிதாக இதழ்விரித்த பூப்போல் சிரிப்பான். மென்மையாகப் பேசுவான். மெதுவாக நடப்பான். அனைவரையும் நேசிப்பான். அன்பாகப் பழகுவான். ஆனால், இப்போது எல்லாவற்றுக்கும் மாறுபட்டிருந்தான். அவனது இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. மூச்சுக் காற்று உஷ்ணம் துப்பிற்று.

வீட்டுக்குள்ளிருக்கும் மனைவியைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. வீட்டிலிருந்து வெளிப்படும் போது அவன் அவதானித்தான். அவள் மல்லாந்து படுத்திருந்தாள். முந்தானைச் சேலை விலகியிருந்தது. கைகால்கள் துவண்டிருந்தன. விழி பிதுங்கியிருந்தது. திறந்திருந்த வாயினூடு நாக்கு தலைநீட்டியிருந்தது. கழுத்தை இறுகச் சுற்றியவாறு ஒரு நைலோன் கயிறும் இருந்தது.

அவன் வெளிப்பட்ட போது அவள் தடுக்கவில்லை. அவளால் தடுக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். ஏனெனில், அவளது உடல் மட்டுமே அங்கிருந்தது. உயிரைத்தான் அவன் திருகி எறிந்துவிட்டானே.

அவனது முகத்தில் இப்போது மலர்ச்சி தோன்றிற்று. குரூரமான மலர்ச்சி. நைலோன் கயிற்றுக்கு நன்றி கூறிக் கொண்டான்.

'ஒரு சமுதாயத்தின் அசிங்கத்தைத் துடைத்து விட்டாய். ஒரு நச்சுக் களையை வேரோடு பிடுங்கி விட்டாய். ஒரு பெரும் நாசத்தை முற்றாக முறியடித்து விட்டாய். நன்றி நைலோன் கயிறே'

அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அந்த இருளின் செறிவிலும் அவனது முகம் பளபளத்தது. அவன் அழகானவன். ஆறடி உயரத்தில் கம்பீரமாகவும் இருந்தான். அவசரத்தில் சட்டையை மாட்டியிருந்தான். அதனால் பொத்தான்கள் சரியாகப் போடப்படவில்லை. குளிர் காற்று நெஞ்சில் மோதியது. அந்தச் சூழலில் அது அவனுக்கு இதமாக இருந்தது. விறைப்புடன் நடந்தான்.

ஆறு மாதங்களாக அவனுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு. இரவோடு அதற்கு நீரூற்றி அணைத்தாயிற்று. இனி ஆசுவாசப்பட வேண்டும். மனம் லேசாக வேண்டும். கவலைகளைக் களைந்து வீசவேண்டும். மீண்டும் வியாபாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும். அவன் தனக்குத்தானே உபதேசித்துக் கொண்டான்.

அவன் பெற்றோரைக் காதலித்தான். வியாபாரத்தைக் காதலித்தான். திருமணத்தின் பின் மனைவியைக் காதலித்தான். ஆனால், அவளோ அவனது பணத்தை மட்டுமே காதலித்தாள். அவனது அன்பு அவளுக்கு சுமையாயிற்று. அவனது பாசம் அவளுக்கு சிறையாயிற்று. அவள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்தாள். ஆடம்பரத்திற்கும் ஆணவத்திற்கும் சுதந்திரமெனப் பெயரிட்டாள். அவனது காதலைப் புறக்கணித்தாள். அவனது அழைப்பை நிராகரித்தாள். அவனது பணம் மட்டுமே அவளுக்குத் தேவையாயிற்று.

அவன் ஒழுக்கமாகப் பிறந்து வளர்ந்தவன். மனைவியின் பழக்கவழக்கங்கள் அவனை வெகுவாகத் தாக்கின. ஊரார் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர். அவள் புகைப்பதாகக் கூறினர். மதுவுக்கு அடிமையாகி விட்டதாய்க் கவலைப்பட்டனர். வீதிகளில் விழுந்து கிடப்பதாகக் குமுறினர்.

அவன் பொறுமையிழப்பதுமுண்டு. அப்போதெல்லாம், அவளது ஏழைத்தாயின் கெஞ்சல் அவனது கைகளைக் கட்டிப்போட்டு விடும். ஆனால், இரவு அவன் முற்றாகப் பொறுமையிழக்க வேண்டியதாயிற்று. சில கதைகள் ஊருக்குள் உலவின. அவை காதுகளினூடு அவனது நெஞ்சுக்குள் நெருப்பைக் கொட்டின. அவன் முற்றிலும் எதிர்பார்க்காத செய்தி அது. ஆனால் முற்றாக அவனை நொறுங்க வைத்த செய்தி. பிற ஆடவன் ஒருவனுடன் அவள் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாளாம்.

இரவு, வழமைக்கு முன்பாகவே அவன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். கேள்விப்பட்ட கதைகள் மனதை நைத்தன. உண்மையை அறிய வேண்டுமென்ற ஆவல் உந்திற்று. தெருக்கோடியில் காரை நிறுத்தினான். மழைத்தூறல் அவனைக் குளிர்வித்தது. அவனது வன்மத்தீயை அணைக்க முயன்றது. எதிரில் வந்தோர் அவனை அடையாளங் கண்டனர். நின்று பேச முயன்றவர்களை அவன் தவிர்த்தான். அவனுக்குத் தெரியும்; அவனது நடைக்கான காரணம் பற்றி அவர்கள் கேட்பர். மனைவியைப் பற்றி முறையிடுவர். எல்லாம் முடிந்த பின் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு அப்பால் செல்வர். அவர்களுக்கெல்லாம் விடை சொல்லும் மனோநிலையில் அவன் இல்லை.

வீட்டை நெருங்கி விட்டான். வெளியில் நின்றவாறே நோட்டமிட்டான். அகன்றுயர்ந்த வாயிற் கதவு. முற்றத்தில் செழித்துக் குலுங்கும் மலர்ச்செடிகள். பளபளப்பான புற்தரை. அவனது உழைப்புத் திறனின் பிரதிபிம்பம் அந்த வீடு. அவனும் அவனது மனைவியும் மட்டுமே அங்கு வாழ்ந்தனர். திருமணத்தின் பின் சில நாட்களிலேயே பெற்றோர் பிரிந்து சென்று விட்டனர். அவளது நடவடிக்கை பிடிக்கவில்லை என்றனர். அவளது பணமோகத்துடன் தம்மால் தாக்குப் பிடிக்க முடியாதெனக் கறுவினர். எனினும், நீ சேர்ந்து வாழு எனப் பெருந்தன்மையுடன் விலகிச் சென்றனர்.

அவன் வாயிற் கதவைத் திறந்தான். சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அமைதியாக நின்றிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அடர்ந்த செடிகளிடை அது பாதி மறைந்து தெரிந்தது. முன்வாசலைத் தவிர்த்தான். பின்வாசலை நோக்கி மெல்ல நகர்ந்தான். உள்ளிருந்து, கதைக்கின்ற சிரிக்கின்ற ஒலிகள் கசிந்தன. ஆண் பெண் குரல்கள் மாறி மாறி ஒலித்தன. பெண்குரல் அவனது மனைவியுடையது. ஆண்குரல்!?

பின்கதவின் அருகே வந்துவிட்டான். தனக்குத் தெரிந்த உத்தியினூடாகக் கதவைத் திறந்தான். சந்தடியில்லாமல் உள்ளே நுழைந்தான். கதவைச் சாத்தித் தாளிட்டான். இப்போது பேச்சுகளும் சிரிப்புகளும் சத்தமாகவே கேட்டன.

அவள் சிரிக்கின்றாள்; சிணுங்குகின்றாள். கூட இருப்பவன் சீண்டுகின்றானோ! இவனுக்கு உள்ளம் பற்றியெரிந்தது.

மாலை இருள் வீடெங்கும் மிதந்தது. படுக்கையறைக் கதவு அரைகுறையாகச் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே மிருதுவான வெளிச்சம் தெரிந்தது. அவன் தளபாடங்களில் தட்டுப்பட்டு விடாமல் பதுங்கி நடந்தான். இரைக்காகப் பதுங்கும் புலியின் விழிப்பு அவனது கண்களிலிருந்தது. மனதுக்குள் வன்மம் கனன்று கொண்டிருந்தது.

மண்டப அறை விசாலமானது. அதைத் தாண்டினால் எதிர்ப்படுவது படுக்கையறை. நெருங்கிச் சென்று நின்று கொண்டான். செவிப்புலனைக் கூர்மையாக்கி ஒலிகளை உள்வாங்கினான். கனமான மூச்சுச் சத்தங்கள் அவன் காதுகளைக் கடித்தன. இதயம் பலமாக அடித்துக் கொண்டது. மிகப் பயங்கரமாயின அந்தக் கணங்கள்.

அவனுக்கு அவமானமாக இருந்தது. சொந்த வீட்டிலேயே திருடன் போலாகிவிட்டான். சொந்த மனைவியையே ஒளிந்திருந்து கண்காணிக்கிறான். எவ்வளவு இழிவான நிலை இது. இதற்கெல்லாம் யார் காரணம். அந்தக் கிராதகி! மனைவி எனும் அந்தப் பாதகி!

அவனுக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. பற்கள் நறநறத்தன. நெஞ்சம் எரிந்தது. உடல் முழுக்க உஷ்ணம் பரவிற்று.

மனதைத் தைரியப்படுத்திக் கொண்டான். எதற்கும் துணிந்தவனானான். கைகளில் பலத்தைத் திரட்டினான். கதவினருகே சென்றான். பாதி திறந்திருந்த கதவில் கை வைத்தான். படீரெனக் கதவைத் திறந்து விட்டான். சுவரில் மோதித் திரும்பியது கதவு. அதைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். உள்ளே பார்த்த போது....

டிரீங்... டிரீங்... டிரீங்...

எழுதிக் கொண்டிருந்த நான், தவம் கலைக்கப்பட்ட முனிவரின் சீற்றத்துடன், அலறிக் கொண்டிருந்த தொலைபேசியில் பார்வையை எறிந்தேன். எழுத்தாளனுக்கு இருக்கும் இயல்பான எரிச்சலும் கோபமும் என் கண்களில் தெறிப்பதை, சமையலறையில் மும்முரமாக இருந்த என் மனைவி கண்டு கொண்டாள். சீலையில் கைகளைத் துடைத்துக் கொண்டே ஓடிவந்து ரிஸீவரைத் தூக்கி காதில் பொருத்திக் கதைத்தவள், தயக்கத்துடனும் சங்கடத்துடனும் என்னை நோக்கினாள்.

ஆர்வமாகக் கதையெழுதிக் கொண்டிருக்கும் போது சிந்தனையை அறுப்பது போல் ஏதேனும் தொந்தரவுகள் வந்தால் எனக்கு மிகக் கடுமையான ஆத்திரம் வரும் என்பது அவளுக்குத் தெரியும். 'முக்கியமான போட்டி ஒன்றுக்காக கதை எழுதப் போகிறேன். யாரும், எதுவும் என்னைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்' என்ற முன்னறிவிப்புடன்தான் பேனையும் தாளுமாக மேசையில் அமர்ந்தேன். மிக நிதானமாக செதுக்கி, மூளையைக் கசக்கி, வார்த்தைகளைப் பொருத்தி எழுதிக் கொண்டிருந்த கதையின் முக்கிய திருப்பத்தின் போது, சிந்தனைகளைத் தறிப்பது போல் ஒலித்த அந்த தொலைபேசியும் அதைக் கையிலேந்தியவாறு நெளிந்து கொண்டிருக்கும் என் மனைவியையும் முறைத்துப் பார்த்தேன்.

புரிந்த கொண்ட அவள், ஏதோ கதைத்து ரிஸீவரைச் சாத்திவிட்டு, சமையலறை நோக்கி விரைந்து சென்று மறைந்தாள்.

அருவியெனத் தொடர்ந்து பிரவாகமெடுத்துக் கொட்டிய சிந்தனைகளை ஒருங்கிணைத்து, மீண்டும் பேனாவைத் தாளில் பதித்தேன். பேனா முனையில் கதை முட்டிற்று.


...............

கதவைத் தள்ளினான். அறைக்குள் நுழைந்தான். உள்ளே பார்த்த போது அதிர்ந்தான். அவன் கொஞ்சமும் அதை எதிர்பார்க்கவில்லை. கட்டிலில் அவனது மனைவி இருந்தாள். அவளது செல்லப் பிராணி பப்பி. அவளது மடியில் சுருண்டு விளையாடிக் கொண்டிருந்தது. முன்னால் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. நிகழ்ச்சியன்றில் ஆண் அறிவிப்பாளர் பேசிக் கொண்டிருந்தார்.

அவன் நிதானமாக அவதானித்தான். சொற்ப நேரத்துக்குள் அனைத்தையும் விளங்கிக் கொண்டான். தன்னை நொந்தான். அவள், இவனை வியப்புடன் நோக்கினாள். கண்களால் மிரண்டாள். வினாக் குறியை பார்வையில் வீசினாள்.

அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டான். சாதாரணமாக அங்குமிங்கும் பார்த்தான். தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினான். மின்விளக்கை எரியவிட்டான். உடை மாற்றினான். மௌனமாக அறையிலிருந்து வெளிப்பட்டான்.

அவளது வியப்பு இன்னும் நீங்கவில்லை. சந்தேகப் பார்வை இவனது முதுகில் உறைத்தது. அவள் மீண்டும் பப்பியுடன் விளையாடினாள். சிரித்தாள்; சிணுங்கினாள்; ஆண்குரல் கேட்கவில்லை. தொலைக்காட்சியை நிறுத்தியாயிற்றே.

அவன் மண்டபத்தில் வந்தமர்ந்தான். எவ்வளவு மோசமான சந்தேகம். வேலையில்லாதவன் ஆயிரம் கதை கட்டுவான். உனக்கு அறிவிருக்க வேண்டும். நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவன் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். ஆங்கில சஞ்சிகையன்று மேசையில் கிடந்தது. அதையெடுத்து விரித்தான். எழுத்துகளில் பார்வையைப் பதித்தான். வரிகளில் மேய்ந்தான். மனதுக்குள் எதுவும் நுழையவில்லை. காரின் நினைவு வந்தது. தெருக்கோடியில் அதை நிறுத்தியிருந்தான். எல்லோரும் அதைப் பார்த்திருப்பார்கள். கேள்விகளுக்கு விடை சொல்லியாக வேண்டும்.

சஞ்சிகையை வைத்து விட்டு எழுந்தான். முன்வாசலைத் திறந்து நடந்தான். கேள்விகளுக்கும் சுகவிசாரிப்புகளுக்கும் சிரித்து வைத்தான். காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவனது கவனம் சிதறியிருந்தது. மனைவியை நினைவில் இழுத்தான். அவள் இவனைப் பார்த்து நகைத்தாள். கைகொட்டிச் சிரித்தாள். மடையா என மண்டையில் குட்டினாள். ஏஸியிலும் அவனுக்கு வியர்த்தது.

வாயிற் கதவு திறந்தே கிடந்தது. உள்ளே காரைச் செலுத்தும் போது அவதானித்தான். சற்று முன்பிருந்த மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. அவனது புருவங்கள் சுருங்கின. சிந்தனை உடைந்தது.

விலையுயர்ந்தது அவனது கார். சத்தமில்லாமல் கரேஜுக்குள் சென்று இளைப்பாறியது. அவன் கரேஜை சாத்திவிட்டு, வீட்டைச் சுற்றி வந்தான். எங்கும் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. இன்னும் சந்தேகப்படக் கூடாதென்று மனதைத் தேற்றினான்.

உள்ளே நுழைய முனைந்தான். மனைவியின் பேச்சுக் குரல் கேட்டது. அமைதியாகக் காது கொடுத்தான். தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள். மீண்டும் உணர்வுகள் இறுகின. காதுகளைத் தீட்டிக் கொண்டான். இப்போது அவள் பேசுவது நன்றாகக் கேட்டது.

"நல்லவேளை, தப்பித்து விட்டோம். இன்னும் கொஞ்சம் பிந்தியிருந்தால் மாட்டியிருப்போம்"

".........................."

"அந்தத் தண்டம் இவ்வளவு விரைவாக வருமென்று யாருக்குத் தெரியும். கேட் திறக்கும் சத்தம்தான் நம்மைக் காப்பாற்றியது. இல்லையெனில் உங்களைக் கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருக்க முடியாது போயிருக்கும்"

"..........................."

"ம். எல்லாம் முடிந்து ஓய்வெடுக்கும் போதுதானே வந்தது. அதனால் பிரச்சினையில்லை. இன்றைக்கு வந்ததை விடக் கொஞ்சம் முன்னதாகவே நாளை வந்து விடுங்கள்"

"........................"

"தண்டம் எங்கே போயிருக்கென்று தெரியவில்லை. கேட் திறக்கும் சத்தம் கேட்டால் ஃபோனை வைத்துவிடுவேன். அதுவரை பேசிக் கொண்டிருக்கலாம்"

"......................"

"சீ... நீங்கள் மிகவும் மோசம். இன்றைக்கு மிகத் தீவிரமாக........."

அதற்கு மேல் அவனது காதுகள் அடைத்துக் கொண்டன. நெஞ்சுக்குள் நெருப்புப் பொறி பறந்தது. உடலெங்கும் வெஞ்சினம் கொதித்துக் குமுறியது. அனல் மூச்சு செவிகளில் மோதிற்று. அவளது துரோகம் அவனைப் பொசுக்கிற்று. அதை விட அவளது ஏமாற்று அவனது உணர்வைக் கருக்கிற்று. அவன் உள்ளத்தால் துடித்தான். அவமானம் அவனது முதுகிலேறி நர்த்தனமிட்டது. அவன் கூனிக்குறுகினான்.

எனினும் அனைத்து உணர்வுகளையும் அடக்கினான். சாந்தப்படுத்தினான். எதையும் வெளிக்காட்டாது அவள் முன்னால் போய் நின்றான்.

திடீரென அவனைக் கண்டதும் அவள் நடுங்கிப் போனாள். பேச்சுத் தடைப்பட்டது. முகத்தில் திகிலறைந்தது. தொண்டைக்குள் எச்சில் சிக்கிக் கொள்ளத் தடுமாறினாள். கைகளின் நடுக்கம் முந்தானைக்குள் புதைந்தது. ஆனாலும், நொடிப்பொழுதில் தன்னை சுதாகரித்துக் கொண்டாள். சிரித்துக் கொண்டே தொலைபேசியை வைத்தாள். எழுந்து சேலையை சரிசெய்து கொண்டாள். படுக்கையறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

அவளது செய்கைகளையெல்லாம் அவன் கவனித்தான். மௌனமாக நின்றான். அவனது இரத்தம் கொதித்தது. நெஞ்சுச் சுவாசம் உஷ்ணம் கக்கியது.

படுக்கையறைக்குள் நுழைந்தான். அவள் மல்லாந்து படுத்திருக்கக் கண்டான். கட்டிலுக்கடியில் கிடந்த நைலோன் கயிறைத் தேடியெடுத்தான். இரு முனைகளை இரு கைகளிலும் இறுக்கமாகச் சுற்றிக் கொண்டான். அவள் கண் மூடியிருந்தாள். தூங்குவது போல் நடித்தாள். 'நடித்ததெல்லாம் போதும். இன்றிலிருந்து நிரந்தரமாகவே தூங்கிவிடு'

அவளது தலைப்பக்கமாக அவன் அமர்ந்தான். மிக நிதானமாக செயற்பட்டான். அவளது கழுத்தில் கயிற்றைச் சுற்றினான். கண் விழித்தவள், சட்டென அனைத்தையும் விளங்கிக் கொண்டாள். பதறிப் போய் கைகளினால் கயிற்றை இழுத்தாள். சத்தமிட்டுக் கத்த முனைந்தாள். அதற்கெல்லாம் அவன் அவகாசம் கொடுக்கவில்லை. பலம் கொண்ட மட்டும் கயிற்றை இறுக்கினான். ஆவேசமாகக் கத்திக் கொண்டே இறுக்கினான். அவள் கால்களை அடித்துக் கொண்டாள். துடித்தாள். பரிதாபக் குரலெழுப்பினாள். கண்களால் கெஞ்சினாள். கைகளை அசைத்துப் பதறினாள். உமிழ்நீருடன் இரத்தம் கக்கினாள். ஆனாலும் அவன் விடவில்லை. அவளது துடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் வரை இறுக்கினான்.

அவனது கைகள் நடுங்கின. இதயத் துடிப்பு செவிகளில் அறைந்தது. அவன் இறுக்கத்தைத் தளர்த்தினான். அவளது தலை துவண்டது. கைகால்கள் இயக்கமற்றுச் சரிந்தன. விழிபிதுங்கி, நாக்கு தலைநீட்டிற்று. அவள் செத்துப் போயிருந்தாள்.

அவன் கட்டிலை விட்டு எழுந்தான். மண்டபத்தில் வந்தமர்ந்தான். நெஞ்சின் படபடப்பு இன்னும் நீங்கவில்லை. முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான். கண்ணீர் சிந்தினான். ஒரு சுமை அகன்றது. பிறிதொரு சுமை அவனை அழுத்திற்று. மேற்சட்டையைக் கழற்றினான். தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மின்விசிறியின் தாலாட்டில் உறங்கிப் போனான்.

கண்விழித்த போது நள்ளிரவு தாண்டியிருந்தது. விடிகாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான். வீட்டிலிருந்து வெளிப்பட்டான். இரவின் இருள் அவனைத் தடுக்கவில்லை. உள்ளக் கொதிப்பை அடக்கிக் கொண்டே நடந்தான். ஓர் அமானுஷ்யமான நிறைவும் வலியும் அவனை ஆட்கொண்டன. அவன் தடுமாறினான். மனதைத் தேற்றினான்.

லேசாகப் பனி விழுந்து கொண்டிருந்தது. அதிகாலை இருளுடன் வெண்பனிப் புகை கலந்திருந்தது. நேற்றுவரை மனதைக் கவ்விக் கடித்துக் கொண்டிருந்த வலி இப்போது இல்லை. ஆசுவாசமாக உணர்ந்தான். வேதனை களைந்து வெறுமையாயிற்று உள்ளம்.

இப்போது அவன் நடந்து கொண்டிருக்கிறான். அவன் சென்று கொண்டிருப்பது பொலிஸ் நிலையத்தை நோக்கி.

முற்றுப் புள்ளி வைத்துவிட்டு நிமிர்ந்த போது, தேனீர் கோப்பையுடன் நின்றிருந்த மனைவியின் மலர் முகம் என் கண்களுக்கு விருந்தாகியது.

"நீண்ட நேரமாக நிற்கிறேன். இப்போதுதான் நிமிர்ந்த பார்க்க முடிந்ததாக்கும்?"

அன்பு முறுகித் திரண்ட தொனியுடன் கேட்டுக் கொண்டே தேனீரை நீட்டினாள். நான் எதுவும் பேசாது வாங்கிக் குடித்து விட்டு, சௌகரியமாக கதிரையில் சரிந்து கண்களை மூடிக் கொண்டேன். போட்டியில் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை, கை விரல்களுக்கும் மனதுக்கும் சுவையாக இருந்தது.

No comments:

Twitter Bird Gadget