Sunday, June 19, 2011

அழகுதிரும் அவளெழில்



பசுமை வழியும் செழிப்பான மலர்க்காடாயின என் கண்கள். அவள் இவ்வளவு அழகானவளா? அழகின் களஞ்சியங்கள் அவளது உறுப்புகளின் நரம்பு முடிச்சுகளிலிருந்துதான் ஊற்றெடுக்கின்றனவோ? அவளை, அவள் எனலாமா? அது எனலாமா? ஏனெனில், மனித ஜீவிதத்தின் எந்தவொரு சூட்சுமும் இப்படியரு அழகைப் பொதிந்திருந்ததாக நான் கண்டதில்லை. ஒருவேளை என் கண்ணில்தான் ஏதும் குறைபாடோ? அல்லது இரத்த பந்தத்தின் உறவில் விளைந்த பாசக்கயிறுகள் என் கண்களில் புகுந்து என் உணர்வுகளைக் குடைகின்றனவோ? ஆனாலும் புலன்களை விட உணர்வுகள் வலிமை பெறுவது சாத்தியமாகுமா? ஆகாதெனில், அவள் உண்மையில் அழகானவள்தான் என்ற முடிவுக்கு வரலாம். 

சுற்றுச் சூழலில் ஏற்படும் மனோவமைதியை, அருகாமையில் விழுந்துசும்பும் சிறு சருகுகளும் கூடப் பாதித்து விடுகின்றனவே. அந்த சருகுகள் காற்றில் மிதந்து, அந்தரத்தைத் தழுவி, என் கண்களுள் தூசாய் விழுந்து உறுத்தும் போது, என் பார்வையில் வழிவது என்ன பாவனை? என்னால் அதைச் சரியாக வரைவிலக்கணப்படுத்த முடிவதில்லை.

நான் ஒரு கோழைதான். இல்லையெனில் நாளாந்த உடற்பயிற்சிகளில் முறுக்கேறிய என் உடல் உறுப்புகளின் பலத்தை, வாய் பேசாத அழகின் உக்கிரம் சோதித்துப் பார்ப்பதற்கு இடங்கொடுத்திருப்பேனா? எனக்கு அவளைப் பற்றிய பூரண அறிவில்லை. அவளை முதன் முதலாக நான் கண்ட போது என் உணர்வுகள் மொத்தத்தையும் யாரோ கொத்தாக அள்ளி இழுத்துச் சோலை மணலுள் புகுத்துவதற்கு முனைவதை நான் உணர்ந்தேன். அது சங்கடமா, சந்தோஷமா என்பது பற்றித் தெரியாமலே அதற்கு இடங்கொடுத்தேன்.


அன்று வானம் சிரித்துக் கிடந்தது. நேற்று முன்தினம் தொடக்கம் மலைகள் அழுகையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நிறுத்திக் கொண்டதன் பயனாய், பூமியில் உயிர்ச்செழுமை தலைதூக்கிற்று. காலையில் இரை தேடிச் செல்லும் பறவைகளுக்குத்தான் எத்தனை சந்தோஷம்! உழைப்புக்கு அவை சிறந்த முன்னுதாரணம். வெயிலின் கொடுமைக்குள் மணலின் புழுக்கள் நெளியும் போது எழும் வாய்ச்சவடால்களில் அவை அக்கறை கொள்வதில்லை. சுயவேலையில் கழிப்பதற்கே நேரம் போதவில்லை எனும் நிலையில், இவையெல்லாம் சாத்தியமற்றவை என்பது நியாயம்தான்.

நான், அவளுக்கு முன் அடிமையாகி விடுகிறேன். கிணற்றுக் கற்களினடியில் ஊர்ந்து ஊர்ந்து செல்லும் மண் புழுவுக்கு பாம்பின் மீது எதிர்பார்ப்பும் ஏக்கமும் இல்லாதிருக்க முடியுமா? வாழ்க்கையின் சக்கரம், வட்டமாக மட்டுமன்றி, சதுரமாக, செவ்வகமாக, முக்கோணமாகவெல்லாம் உருளும் போது, அதன் சடங்குப் பிடியில் எம் கைகள் எப்படித் தப்பிப் பிழைக்க முடியும்.

நான் மாட்டிக் கொண்டேன். குளிர்மை கொட்டும் அவளது அழகுக் கண்களின் பிரகாச வீச்சம் என் உடலைத் தழுவிற்று. என் உணர்வுகள் நடக்கும் சக்தியிழந்து நொண்டும் தன் பாதங்களைச் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டே, அவளது பார்வையின் குளிர்மைக்குப் பயந்து விலகியோடப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அது முடியவில்லை. 

அமானுஷ்யம் மட்டும் இல்லையெனில், அழகு கதறும் வாழ்க்கை அவலம், எத்துணை மலைகளைத் தூள்தூளாக்கியிருக்கும். தென்றலும், இரவின் சுமையை எப்போதும் இறக்கி வைப்பதில்லை. விடிவு தேடும் மௌனத்தின் ஏகாந்தம் எங்கும் பரவிச் செறிய வாழ்க்கை கேள்விக் குறியாய் வளைகிறது. நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா?

என் உள்ளத்தில் பசுந்தளிரொன்று தோன்றிற்று. நாசியில் முக்கனியேற்றும் செழுமைப்படிவு அதன் அங்கங்களில் தவழ்ந்து மெழுகாய் ஒழுகிற்று. அவளின் மிக மென்மையான கரங்களின் ஸ்பரிசம் என் உணர்வுகளெங்கும் ஊடுருவிப் பாய்ந்து, உயிரின் விதைக்குள் மகிழ்ச்சிப்பூவாய் மண்டிற்று. அதற்கு முன், அவளது தாயைத் தவிர வேறு யாரும் அவளைத் தொட்டதில்லையாம் என என் மனைவி கூறிய போது, என் மனக்கிடங்குகளில் அழகின் உருவம் உசும்பிற்று.

நான், உண்மையில் ஓர் அதிர்ஷ்டசாலிதான். இல்லையெனில் இந்த இளம் வயதில் அவளின் அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே, அவளது மென்கரங்களை என் கன்னங்களில் உராய்ந்து கொண்டே என் மனைவியின் மடியில் தலை சாய்த்து உறங்கிக் களிக்க முடியுமா?

என் அக-புறக் கண்களில் என்றும் நிறைந்திருப்பவள் என் மனைவி. தாயின் அன்பொழுகும் தாலாட்டையும், காதலியின் நேசமுருகும் பார்வையையும் மூலப் பொருள்களாய்க் கொண்டு இழைக்கப்பட்ட வாழ்வின் வசீகரம் அவள். காற்றின் அழுத்தம் நெஞ்சை முட்டும் போது, கண்களில் பனித்துளி படரும் வெயிலின் குளிர்மையை அனுபவித்துக் களிக்கப் பழக்கியவள் அவள்.

என் மனைவியின் அழகினாலும், மூச்சினாலும் இழை பின்னப்பட்டு உதிர்ந்து விழும் ஜீவனை, என் நெஞ்சின் ரம்மியமான பகுதிகள் ஆயுட்காலத் தீனியாக்கிக் கொள்வதில் ஆச்சரியமொன்றுமில்லைதான். அதனால்தான் அவளை நான் நேசிக்கிறேன். என் மனதின் ஒவ்வொரு உறுப்புகளிலிருந்தும் கசியும் பாசத்தின் மொத்தச் செறிவையும் அவள் மீது கொட்டுகிறேன். 

என் கண்களில் அவளின் சிரிப்பு மலராகிக் கவிழ்கிறது. அழகுதிர்க்கும் கருமேகக் கூட்டங்களின் பளபளப்பில் வானுலகின் ஆத்மார்த்தச் சிம்மாசனம் வெளிச்சம் துப்புமே. உமிழ் நீரில் உலகின் கழிவுகளைக் கழுவியகற்ற முடியுமா? முடியும்; எப்போதெனில், அந்த உமிழ் நீரின் உற்பத்தி சுவர்க்கத்து மதுரநீரின் ஊற்றாய்ப் பொங்கிப் பிரவகிக்கும் இயல்பு நிலை தோன்றும் போது.

எனது நிலையும் அவ்வாறுதான். அவளது ஒவ்வொரு உறுப்பிலும் சொட்டுச் சொட்டாகக் கசிந்து கொண்டிருக்கும் அழகின் மூர்க்கம் என் கண்களைத் தாக்கும் போது, காக்கையின் இனிய குரலுக்குள் என் ஆன்மா கழன்று விழுகின்றதே. இந்த அபரிமிதமான சுகத்தை என்னென்று வர்ணிப்பது!

சுவர் முழுக்க இரத்தம் பூசிக் கொண்டு இல்லத்தின் அழகை இதயத்தில் கொழுவி வைக்க முடியுமா? முடியாதென்றால் உலகின் நியதிகளும், அந்த நியதிகளுள் வாழ்வைக் கட்டிப் போட்டு விழித்துழலும் அறியாமைகளும் எதற்காக?

அவளுக்கும் எனக்கும் இடையிலான உறவைப் போலவே, பறைவைகளும் மிருகங்களும் பாசத்தின் கயிறுகளில் மூக்கறுந்து விழுந்துள்ளன. எதிர்காலம் பற்றிய சிந்தனையோ, கடந்த காலம் குறித்த படிப்பினையோ அவை பெறுவதில்லை. பெறுவதில்லை என்பதை விட முடிவதில்லை என்பதே பொருத்தம். நானும் அவ்வாறிருக்க முடியுமா? எனது பணிகள் என்ன? எனக்கென்று உலகின் சம்பிரதாயங்கள் சுமத்தியுள்ள பொறுப்புகள் என்ன? அவற்றைக் கடந்து, என் சுயத்தின் பிதற்றல்களில் நான் விலாவை முறித்துக் கொண்டு முதுகை நிமிர்த்தலாமா? நான் பகுத்தறிவுள்ளவன். இந்தப் பகுத்தறிவு யார் தந்தது என்பது எனக்குத் தெரியாது. எனக்கது இருப்பதாக எல்லோரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேனேயன்றி, அது எங்கிருக்கிறது? எப்படி இயங்குகிறது? என்பது பற்றியெல்லாம் எனக்கு எந்த அறிவுமில்லை. அது இல்லையெனில் எனது நடத்தைகளில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது பற்றிய தெளிவின்மையே அதன் இருப்பு தொடர்பில் ஐயத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டுள்ளது.

ஆனாலும், நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அந்த நேசிப்பில் குமுறும் சகஜபாவத்தின் உயிர்ப்பு முனையை நான் எப்போதும் தவறவிட்டதில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? என் ஜீவித உடலின் ஒரு துண்டென அவளை வர்ணிக்கலாமா? கருத்து இன்னதெனச் சரியாகத் தீர்மானித்துக் கொள்ள முடியாத அவளது குரலினிமை என் செவிப்புலனூடு புகுந்து என் உடல் முழுவதையும் ஆட்டிப் படைக்கிறதா?

ஒவ்வொரு முறையும், அவளது செவ்விதழ்களைப் பிளந்து துள்ளும் ஒலியமைப்புகளுக்கு, நானாக ஒரு கருத்தை யூகித்துக் கொண்டு செயலாற்றும் சுதந்திரத் தத்துவத்தை அவளையன்றி வேறு யாரும் எனக்குத் தந்ததில்லை. நான் யூகித்தது சரியென்றோ பிழையென்றோ ஒருபோதும் கருத்துரைக்காத அவளது பெருந்தன்மையை எண்ணி நான் மெய்சிலிர்ப்பேன். 

அவளின் வார்த்தைகள் மொழியின் நிர்ப்பந்தங்களையெல்லாம் முற்றாகப் புறந்தள்ளி, சுயத்தை இழக்காத சுதந்திரப் பிடிவாதத்துடன் தழுவிக் கொள்வதால்தான், அந்த வார்த்தைகள் தொடர்பான என் யூகங்களிலும் என் சுதந்திரத்தைப் பாதிக்க அவள் விரும்புவதில்லையோ.

என் கற்பனைகளுக்கு களம் அமைக்கும் சாத்வீகமா? அல்லது என் மூளை வலிமையைப் பரீட்சிக்கும் சோதனையா? அல்லது என் சிந்தனைகளைத் தட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியா? எதற்காக, நான் அறியாத மொழியில் கருத்துரைக்கும் இயல்பை அவள் கொண்டிருக்கிறாள்?

அவள் மீதான என் பாசம் நிரந்தரமானது. மழைத்துளி செறிந்த பாறையில் வழுக்கி நழுவும் பூவிதழின் வாழ்க்கை குறித்த மகிழ்ச்சி போன்றது அது. அந்தப் பாசத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம் இல்லையென்றாலும் நான் பாசம் காட்டாதிருப்பேனா? இல்லைதான். என்னின் மறுபிரதியாய் அவள் தெரிவதை, பொறாமையுடன்தான் நினைவுகூர்வாள், என் மனைவி. முதன் முதலாக என் மனைவிக்கருகாமையில்தான் அவளைக் கண்டேன். காலையில் மலர்ந்த அழகுதிரும் பூவிதழாய் கண் திறந்து சிரித்தாள். அன்றிலிருந்து இன்று வரை அதே பொறாமையுடன்தான் என் மனைவியின் பார்வை அவள் மீது பதிந்துள்ளது.

ஆனால், என் மனைவியை விட அவள் மீது இரக்கம் காட்டுவோர் உலகில் வேறெவரும் இருக்க முடியாது. எனது பாசமாயினும் அடுத்த இடத்தில்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி எனக்கு இருக்கத்தான் செய்கிறது. 

எதிர்காலம் குறித்த ஆழ்ந்த சிந்தனை என்னை இறுகப் பிணைத்துள்ளது. என்னைத் தவிர்ந்த விலங்கினங்களைப் போன்று நான் வாழ முடியுமா? என் படைப்பின் உள்நோக்கக் குறிகளில் என் வாழ்க்கையின் அறியாமை முறுக்கேறியுள்ளது. நான் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைச் சுமைகள் என் முன் பட்டியல்படுத்தப்படும் போது, தன் பங்குக்கு அவளும் சத்தமிடுவாள். அந்தச் சத்தத்தின் உயிரில், அழகின் நிழலுருவம் உயர்ந்து பிரகாசித்து என் அகக் கண்களைக் கூசச் செய்யும். என்னின் எல்லாமே உனக்காகத்தானே என அவளைப் பார்த்துக் கத்துவேன். ஏன் இவ்வளவு மென்மையான பேச்சு என என் மனைவி முகஞ்சுளிப்பாள். ஆண்மைக்கென்றொரு அடையாளம் வேண்டாமா என என் தொண்டையைச் சீண்டுவாள்.

என்னை மென்மையாக மாற்றிவிட்டாளோ அவள் என, எனக்குள் ஐயம் முகிழும். மாற்றிவிட்டாலும் அதில் என்ன தவறு இருக்கிறது. அவள் மென்மையானவளாய் இருக்கையில், அவளை அணைத்து ஸ்பரிசித்து மகிழும் நானும் மென்மையானவனாக இருக்கக் கூடாதா?

எவ்வளவு மென்மையானது அவளுடல்! அவளை அணைத்து பளபளப்பு வழுக்கும் அவளது அழகுக் கன்னங்களில், என் குவிந்த இதழ்களைப் பதித்து என்னிரு கைகளிலும் அவளைத் தாங்கிக் கொள்ளும் போது, உலகின் ஒட்டுமொத்தக் கவர்ச்சியும் நேர்பட்டு நிரலாகி என் கண்களின் அணுவுக்குள் அழகுதிரச் சிலிர்த்துக் கொள்வதை நான் உணர்வேன். விவரிக்க முடியாத ஆன்ம சுகத்தின் அதிகபட்ச மோட்சநிலை அது. இதேநிலை தனக்கும் ஏற்படுவதாக என் மனைவி கூறும் போது அதிலுள்ள நியாயங்களைப் பகுத்தாயத் தேவையின்றியே நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், நெஞ்சுக்குள் ஒடுங்கி, மார்புக்குள் புதைந்து, முலைகளைச் சப்பியிழுக்கும் அவளது பிஞ்சு வாயின் ஸ்பரிசத்தினாலான சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு என் மனைவிக்கு மட்டுமே கிடைக்கும் அரிய பாக்கியம். அந்த வகையில் என் மனைவி என்னை விட அதிர்ஷ்டசாலிதான். 

என்னாலும் இந்த சுகத்தை அனுபவிக்க முடியாது போன வாழ்க்கையின் இயல்பூக்கக் குழுநிலை முரண்பாடுகள் தொடர்பான அதிருப்தி அந்தக் கணங்களில் எனக்கு அதிகமாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

நான் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டே அவளைப் பார்த்தேன். மொத்தமும் மூன்றே கிலோ கிராம் எடையுள்ள தன் சிறிய உடலை வில்லாக வளைத்து, என் மனைவியின் நெஞ்சுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்த அவளது பார்வை, தூக்கம் தழுவும் நாளாந்தக் கொடுங்கரத்தின் சில்மிஷத்தைத் தட்டிவிட்டுக் கொண்டே அன்பொழுகும் பாவனை திமிற என் மீது மொய்த்திருந்தது. 

என்னை அருகிருத்தி, என் முகத்தைத் தன் பார்வையால் தழுவிக் கொண்டே உறக்கம் கொள்வதில் அவளுக்கு மிகவும் ஆர்வம். எங்கோ அமானுஷ்யத்திலிருந்து ஊற்றெடுத்துக் கிளம்பி வரும் உறக்கத்தின் உயிர்க்குறிகள், அவளது சிறிய கண்களில் பதிவிறங்கும் போது, அவளது பளிங்கு முகத்தில் பரவிச் செறியும் ஆன்ம நிறைவின் பிரதியீடான அமைதிச் சொரூபம், அவளது அழகின் செறிவை என் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து திமிறிப் புடைக்கச் செய்யும். நாள் முழுக்க அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தாலும், மனதுக்குச் சலிக்காது; கண்களுக்கும்தான்.

அவளது மூடிய விழிகளின் மையத்திலிருந்து கசிந்து பரவும் மோனச் செழுமையை, விழிகளின் சுவைப்புலன் அதிரப் பார்த்துக் கொண்டே நான் மகிழ்ந்திருக்கிறேன். 

உண்மையில் நான் அதிர்ஷ்டசாலிதான்.

No comments:

Twitter Bird Gadget