Monday, June 20, 2011

எலிகளும் பூனைகளும் வாழ்தல்



இருட்டில் பளபளக்கும் தன் கண்களை ஒரு தடவை இறுக மூடித் திறந்து பார்த்தது பூனை. மூக்கை அறுக்கும் வாசனைதான். அதற்காகக் கழிவை அகற்றாதிருக்க முடியுமா? அதன் சிறிய முன்னங்கால்களால் விறாண்டித் தோண்டப்பட்டிருந்த மண் குவியல்களிடையிலான பள்ளத்தில் கிடந்தன அதன் கழிவுகள். அதைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியையோ உடலுக்குப் புத்துணர்ச்சியையோ தரக்கூடியதல்ல. இருந்தாலும் அது பார்த்தது; முகஞ்சுளிக்கும் குறிகளை உடலில் குலுக்கி ஆசுவாசமாய் சடைத்து நிமிர்ந்தது.

வரண்ட பூமியில் விழுந்த மழைத்துளிகள், துளிர்க்கும் செடிகளின் பசுமையில் குலுங்கிச் சிரிப்பதான இயற்கை அழகுடன் இணைந்து உலக நியதியாய் உறுதியுற்றுத் தெரிகின்றன. மரபுகளுக்கு இப்போது மதிப்பில்லை. பழமையின் சடைவுக்குள் கண்கள் களைத்து விடத் தோன்றும் ஐக்கியம் உருவாகிய போது, எங்கும் மாற்றம் தோன்றலாயிற்று. தோன்றிய மாற்றம், வாழ்க்கைச் சுகங்களைக் கழிவறைகளில் எடுத்து வைத்து அழகு பார்க்கும் சாதனையையும் நிகழ்த்திற்று. 

பூனைகளுக்கு இந்த மாற்றத்தில் ஆர்வமிருக்கவில்லை. ஜீவனோபாயத்தின் இலகு வழிமுறைகளில் சமரசம் பண்ணிக் கொள்ள அவையன்றும் பகுத்தறிவுடன் நலிந்து கொண்டிருப்பவை அல்லவே. அதனால், எலிகளை அவை விரும்பின. அவற்றைத் தம்முடனேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற தம் இலட்சியத்தைப் பாதுகாக்க, அவற்றைப் பிடித்து விழுங்கி விடுவதொன்றுதான் வழியென்று பூனைகளின் சிறிய மூளைகள் முடிவெடுத்திருந்தன. 


இன வரையறைகளின் கட்டுப்பாடுகளை மீறித் தம் காதலில் வெற்றி பெறுவதில், பூனைகள் கொண்டிருந்த சுதந்திரம் மிகச் சுவாரஸ்யமானது. தென்றலின் மகிழ்ச்சியை உள்வாங்கும் மலரின் கலகப்புடனான வாழ்க்கைக்குள் அவை அமிழ்ந்திருந்தன. பாவம் என்று பரிதாபம் கொட்ட முடியாது. ஆஹா என்று வாய் பிளக்கவும் முடியாது. 

பூனை, கால்களைத் தூக்கி உடலைச் சோம்பல் முறித்தது. ஆண்டாண்டு காலமாகப் பேசி வரும் தன் பாஷையில் தன் பசியை உணர்த்த முயன்றது. இப்போது அதற்குத் தேவையானது வயிற்றை நிரப்பிக் கொள்ள உணவு. வயிற்றுக் குழிக்குள் சுழியும் வலியை நீக்குவதற்கான மருந்தே உணவுண்ணல் என்பது அதன் புலன்கள் தீர்மானித்துள்ள தத்துவம். இப்போது வலி தொடங்குகிறது. எங்கெங்கோ இருந்தெல்லாம் வாழ்க்கை பொறுக்கிக் கொண்டு வந்து கொட்டும் அந்த மோசமான வலிக்கான மருந்தை பிரதான பணியாகக் கொண்டு உடனடியாகத் தேடிப்பெற வேண்டும். 

பூனை இயல்பில் மென்மையானது. வாழ்வின் சகல இழைகளிலும் படிந்துள்ள உரிமைப் பற்களில் பாதங்கள் அழுந்தக் களித்திருக்கும் தத்தளிப்பு அதனைப் பீடித்ததுண்டு. வெறுமையான கனவுகளை விலைக்குப் போடலாமா? காற்று புதிர் அவிழ்க்கையில், அழுக்குகள் அவமானப்படாதிருக்க முடியுமா?

ஓர் உயிரை, அதன் துடிப்பும் உதைப்பும் தெறிக்க வாய் பிளந்து விழுங்குவதென்பது எவ்வளவு சிரமமான முயற்சி. வெறுமனே பசியின் கொடூரம் மட்டும் இந்த அபார முயற்சிக்கான தூண்டலாய் இருக்க முடியாது. அதற்கப்பால், உலகின் நியதிகளும், வாழ்க்கைக் கலைகளும் இணைந்த கலவையன்றின் ஊக்குவிப்பும் நிச்சயம் வேண்டும். உணவு தொடர்பான எந்தவித கற்பனையோ, கட்டுப்பாடோ இல்லாதிருப்பது பூனைக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இந்த சுதந்திரம்தான், அதன் உணவு வகைகளில் ஒன்றாக எலிகளையும் இணைத்துக் கொண்டுள்ளது. 

பூனைகளுக்கு எலிகளைப் பிடிக்கும். அதனால் பூனைகள் எலிகளைப் பிடித்துண்ணும். அகப்படும் எலிகளின் உடற்பகுதியில் தம் கூரிய பற்களை அழுத்திப் பதித்துக் கௌவி இழுக்கும் போது, பிய்ந்து வரும் எலியின் உடற்சதைகளைத் தம் பற்களிடையே செலுத்தி கடைவாய் வழியே இரத்தம் ஒழுகக் கடித்துப் புசிக்கும் ருசியை பூனைகள் எப்போது முதன் முதலாக அனுபவித்தன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அதனை மிகவும் ரகசியமான ஒன்றாகவே பூனைகள் பாதுகாத்து வருகின்றன. 

போராடி வென்ற போர் வீரனின் இறுமாப்புப் பார்வையன்று பூனைகளின் முகத்தில் வழிவது, அவை, எலிகளின் கடைசி உறுப்பையும் கடித்துத் தலைகளை அங்குமிங்கும் உருட்டிப் பிரட்டி உண்டு முடிக்கும் போதுதான். அந்த இறுமாப்பிலும் ஒரு நியாயம் இருக்கிறது. மனதைப் பிசையும் மலைகளின் அடிவாரத்தினுள்ளும் பூ மலரும் இதழ்ச் செழுமையில் இறுமாப்பு எப்படித் தோன்றாதிருக்க முடியும்! 

வான் நிற வண்ணத்துப்பூச்சியன்று செம்பருத்தி மலரின் உதிர நிற உவர்ப்புக்குள் மண்டியிட்டுக் கொள்கிறது. காற்றைக் கட்டித் தழுவும் அந்த அழகுயிர் மலர் மீது பூனைக்கு எப்போதுமே ஒரு கண். அது, தன் கழிவின் துர்வாடையிலிருந்து விலகிச் சென்று கொண்டிருந்த வேளையில்தான், அதன் பார்வையைக் கொத்தி முறித்தது அந்த உயிர் மலர். 

அறியாமை முயற்சியென்பதால், அதைப் பிடித்துக் கடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை பூனை. தன் வேட்டைப் பற்களினால் கடித்திழுத்து மூர்க்கத்தனமாய்ச் சப்பிச் சாப்பிடக் கடினமான முரட்டுணவொன்று அதற்கு இப்போது தேவை. பசியின் விளையாட்டுலகம், அதன் வயிற்றின் மைதானத்தில் முகாமிட்டிருந்தது. 

நாவை நீட்டிச் சுவை தட்டிற்று பூனை. கொழுத்த கருநிற எலியன்றின் நினைவு அதற்கு வந்து விட்டது என்பதற்கு இதுதான் அடையாளம். பசியின் வரவுதான், எலிகள் மீதான அதன் நேசத்தையும் நினைவுறுத்தி விடுகின்றது. மிக வீரியம் கொண்ட நேசமது. பூமிப் புதையலில் குளிக்கின்ற பளபளப்பான வண்டின் கடூரம் போன்றது. மழைத்துளிகளிலிருந்து வெயில் முறுகிச் சவுங்கும் இனிமையான அனுபவத்தை யார் அலட்சியப்படுத்துவர்? அலட்சியம் என்பது வெறும் பாசாங்குதான் என்றிருக்கையில், புற்தரைப் பசுமையில் பூமி குலுங்காதிருக்குமா? 

மின் விளக்கின் பிரகாசம் வழிகிறது. சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கும் நீர் முத்துகளின் உடலைத் தழுவும் முயற்சியின் வெற்றிதான் இந்தப் பிரகாசத்திற்குக் காரணமோ! உதிர்ந்து, கீழ்ப்பரப்பில் சிறு தேக்கமாய்க் கன்றியுள்ள நீர்த்துளிகளைத் தாகமாய்ப் பார்த்தது பூனை. அந்தத் தேக்கத்தின் மையத்திலிருந்து அற்புதமாய் ஓர் எலி வெளிப்பட்டு வராதா? வாய் பிளந்து காத்திருக்கும் உயிர் விழுங்கிக் காதலனைக் கண்டு, வெட்கப்பட்டுத் தலைதெறிக்க ஓடி ஒழியாதா? பின்னாலே துரத்திச் சென்று, அதனைத் தன் முன்னங்கால் நகங்களால் பற்றியிழுத்துத் தின்னும் சுவாரஸ்யச் சந்தர்ப்பம் தனக்கு வாய்க்காதா?

எவ்வளவு இனிமையது. மர இடுக்குகளின் மத்தியில் தோன்றும் ஒளிக்குன்றுகளாய் மனது குமுறும் போது, வானம் கைக்குள் அகப்பட்டுக் கண்சிமிட்டும் சந்தர்ப்பம். இயற்கையளியை வாய்க்குள் திணித்து முதுகதிரச் சிரித்துக் கிடக்கலாம். பாலில் தலை முழுகிக் குளித்து பளிங்குத் தரையில் நீச்சலடிக்கலாம். கடலைக் கிழித்துண்டு வயிற்றுலகில் கப்பலோட்டலாம். பூமி குளிக்கும் போது நாணம் வழியச் சிலிர்த்துக் கொள்ளும் பூக்களின் அழகில்தான் உலகின் பயணம் தொடர்கிறது. துர்நாற்றமும், சோகமும் இணைந்து உலகைப் பிளந்து விடத் துடிக்கும் உக்கிரமான போராட்டத்தின் முடிவு தோல்வியாய் அமையலாம் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுதான். எலி மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா?

அழுக்கை உண்டு, அவமானத்தை உடுத்து, கழிவுகளில் காலங்கடத்தும் தன் சுகமான வாழ்க்கை குறித்த பெருமை எப்போதும் எலிகளை விட்டும் அகல்வதில்லை. தனித்துவத்தின் பெருமையில் அது நியாயம் கண்டுள்ளது. 

அருகாமையிலிருந்து கிளர்ந்து வரும் வாசனை எலியை அசௌகரியப்படுத்திற்று. அது பூனையின் பட்டுமேனி வாசனையென்பதை எலி நன்கறியும். ஒவ்வொரு சூரியப் புலர்வின் போதும், தன்னை அணுகாதிருக்கும் படியாக அது தனக்குத் தெரிந்த இறைவனை வேண்டிக் கொள்வதும் இந்த வாசனைதான். குரூரமான நேசத்தின் விளைவாக பூனையிடமிருந்து தான் எதிர்கொள்ளும் நாளாந்தச் சவால்கள் குறித்த சலிப்பு அதற்கு காலங்காலமாக இருந்து வருகின்றது. தலைமுறைத் தன்மை மாறுதல்களின் ஆதிக்கத்தை முற்றாகப் புறந்தள்ளும் மௌனக்குவியலது. அதிலும், பூனைகளின் நேசப்பார்வையில் வழிகின்ற வக்கிரத்தனத்தைத் தாங்கிக் கொள்ளும் வலுவிழந்து, நாணம் குத்திக் கிழிக்க, நிர்வாணத்தை மறைக்கும் பதட்டமாய் ஓடி ஒழிந்து கொள்ள முற்படுவது எவ்வளவு அவமானம்!. எத்தனை காலத்திற்கு இப்படியே வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது. 

வாய்கள் வீசும் வாள் வீச்சை விட, முன்னங்கால்களை ஒன்றாகவும், பின்னங்கால்களை ஒன்றாகவும் இணைத்துக் கொண்டு இரை நோக்கிப் பாயும் பூனையின் மூச்சுக் காற்றின் உஷ்ணம் படு ஆக்ரோஷமானது. திரும்பி ஒருமுறை அதன் கண்களைப் பார்த்து விட்டால் மேற்கொண்டு ஓடமுடியாதவாறு, கால்கள் அதன் கண்களின் அச்சுறுத்தலுக்குக் கட்டப்பட்டு விடும். வலுவிழந்த முதுமைக்கு வாலிபத்தின் மீதுள்ளது ஈர்ப்பா? பொறாமையா? கைசேதமா? 

தூக்கி நிறுத்தப்பட்டிருந்த மரத்தளபாடத்திற்கும், உயர்ந்து நிற்கும் தடிப்பான சுவருக்குமிடையிலான குறுகிய இருட்டிடைவெளியில் பதுங்கி நின்றது எலி. வெளிச்சம் விழும் அகலப் பரப்பைத் தாண்டி, அடுத்துள்ள குசினிக் கழிவுகளுள் தன்னைப் புதைத்துக் கொள்ள வேண்டிய தேவை அதற்கு. அதன் வயிற்றுக்குள் நீண்ட நேரமாகத் துருத்திக் கொண்டிருக்கும் அமானுஷ்ய வலிக்கான மருந்தை, அதற்குள்தான் தேடிப்பெற வேண்டும். அந்த வலி மட்டும் நீங்கி விட்டால், மீண்டும் தன் இருட்டுக் குகைக்குத் திரும்பிச் சென்று இடைநிறுத்தி விட்டு வந்த அந்தப் பணியைத் தொடரலாம். எவ்வளவு சுகமான பணி. தன் வயதையத்த, தான் பிறந்த வழியால் தோன்றிய அதனுடன், கீச்சொலி எழுப்பிச் செல்லமாக விளையாடி, கன்னங்களைக் கடித்துக் காயமுதிர்த்து, உருண்டு பிரண்டு, மேலேறி, அதன் வால்களை உயர்த்தி மருவி .....

மேகத்தில் விழுந்த சமுத்திரச் சாக்கடையாய் விழிபிதுங்க மனமுறுத்திற்று. அழகான தென்றல், ஆழ்மனத் தூறல்களை ஆக்ரோஷமாய்க் கடித்துத் துப்பிற்று. குப்புறக் கிடக்கும் நிலச்சுவர்களிடையே குழிகள் முளைத்தால் கால்களைக் கௌவாதிருக்குமா? வெளிச்சமும் காற்றும் ஒன்றாக முடியாது. வெளிச்சம் புகாத சவால்களையும் சமாளிக்கும் திறன் கொண்டது காற்றையன்றி வேறென்ன?

அனுமானங்களைக் கடித்துக் குதறும் வான் பரப்பில் நெளிந்தது எலி. சுவாசத்திலும் சங்கடப்படுத்தும் பூனையைத் தாண்டிச் சென்று புதிர் அவிழ்ப்பதெங்கனம்? மின்வெட்டி மறையலாம். சுற்று வேலியைச் சரித்து விழுத்தலாம். இருட்டையும் அச்சுறுத்தும் அந்த இறுமாப்புக் கண்கள் என்ன வேகமாயினும் சுதாகரித்துக் கொள்ளும். துடிதுடித்துச் சாவதொன்றுதான் வழியா?

அவர்களின் செயல் கண்டு அதற்கு எப்போதும் கோபம்தான். பாந்தமாய்த் தடவிவிடுவதும், பாசத்துடன் சாப்பிடக் கொடுப்பதுமாய் எந்தனை மரியாதை இந்தப் பூனைகளுக்கு. வழங்கப்படும் உணவைப் பிறர்க்கு மிச்சமின்றித் துடைத்துச் சாப்பிடுவது போதாதென்றா இப்படியரு குரூரம்! பயப்பட வேண்டியது பூனைகளுக்கு மட்டுமல்லவே? அவற்றைப் போஷித்து வளர்க்கும் அவர்களுக்கும்தானே! ஒருவேளை, அவர்கள் அவற்றைப் போஷித்து வளர்ப்பதே இதற்காகத்தானோ!

அப்படியானால் எம் இனத்தை அழிக்கப் பெரிய கூட்டமொன்றே இருக்கிறதா? பெரிய திட்டமொன்றே நடக்கிறதா? ஏன் இப்படியரு ஆதிக்க வெறியாட்டம்? பூனைகளுக்குக் கொடுத்து விட்டு எமக்குத் தர மறுப்பவற்றை நாம் உயிரைப் பணயம் வைத்து உழைத்துப் பெறுகிறோம். இதன்றி, நாம் செய்தது வேறென்ன? இதில் ஏதாவது தவறிருக்க முடியுமா? மறுக்கப்பட்ட உரிமையை மீளப் பெறப் பாடுபடுவது உயிர்த்துவக் கடமை; அதுவொரு போராட்டம். உருப்பெருத்தவை என்பதற்காகப் பூனைகளுக்கு மரியாதை, சுதந்திரம், சலுகை எல்லாம். உருச்சிறுத்தவை என்பதற்காக எமக்கு அடி, உதை, கொலையா? மெத்தென்ற அதன் பட்டு உடலைப் போர்த்தி மறைத்திருக்கும் விஷப்பாம்புகளைக் கண்டு கொள்வதற்கு யாருமில்லையே! எவ்வளவு பெரிய அவலம்!

இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எண்ணி விடத் தோதான மீசை முடிகளில் தைரியம் முறுகியது எலிக்கு. மூக்கை உறிஞ்சிக் கொண்டே மெல்லத் தலை நீட்டிற்று. எதற்கும் கொஞ்சம் அவதானம் வேண்டுமல்லவா? தந்திரம் வழியக் கண்களை உருட்டி உருட்டிச் சுற்று முற்றும் பார்த்தது. ஒரு மின்வெட்டுதான். அடுத்திருந்த இருட்டுப் பகுதிக்குள் ஒடுங்கியது எலி. வெளிச்சம் விழுந்த பகுதி வெறுமையில் பிதுங்கியது. என்னவொரு வேகம் இந்தச் சின்னக் கால்களில்! ஆனாலும் இடைவெளி போதவில்லை. இரண்டு மரக்கட்டைகள் ஏன் இவ்வளவு நெருக்கமாகப் போடப்பட்டுள்ளன. என் போன்றோர் சமாளித்துக் கடக்குமளவுக்கேனும் இடைவெளி பேணப்பட்டிருக்க வேண்டாமா?

நேற்றுமுன் தினம் சிறிய பூனைக்குட்டியின் அளவுக்குத் தன்னுடல் ஒப்பிட்டுப் பேசப்பட்ட மனித நிகழ்வை நினைவில் கொணர்ந்தது எலி. கொஞ்சம் உப்பிவிட்டேன்தானோ. இன்னும் உப்பினால் பெரிய பூனையின் அளவுக்கு ஆகிவிட முடியுமா? ஆனாலும், இயல்புகளைக் கீறிக்கிழித்து மௌனச் சாயம் பூச முனைவதில் நன்மையை எதிர்பார்க்க முடியாது. அடர் செடி மறைவில் ஒளிந்து கொள்ளும் ஏகாந்தத்தின் வன்கரங்கள் முஷ்டி கனத்துக் குறி வைக்கையில் கவலைகள் கழன்று விழும். எதேச்சையான நம்பிக்கைகள் சிறகடித்துப் பறக்கும். மெல்ல நடந்து வரும் பாதங்களைத் தழுவியிருக்கின்ற புன்னகை போன்றது அது.

மூக்கைச் சிலுப்பிக் கொண்டே மீண்டும் தயாராயிற்று எலி. போர்க்குத் துணிந்து விட்ட கம்பீரம் அதன் சிறு கண்களைக் கௌவிற்று. பூனை விரித்துள்ள காதல் வலையின் இடுக்குகளில் கால்களைச் சிக்க வைத்துக் கொள்ளாமல், தப்பிச் சென்று தேவையை முடித்து வர அவசியமானது வேகம்தான். கொழுத்த உடல், தேவையான அந்த வேகத்திற்குத் தடையை ஏற்படுத்துமா? தோற்றங்கள் மாறினாலும் தோற்றப் பண்புகள் மாறுவதில்லையல்லவா? பின், அது குறித்துக் கவலையுறத் தேவையில்லை.

தன் பயணப் பாதையில் ஆபத்துகள் இல்லையென்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு, எலி கால்களைச் சுழற்றத் தொடங்கிய போதுதான், திடும்மென அதன் முன்னால் வந்து நின்றது பூனை. 

அடர் ரோமங்களில் மென்மை வழிய, கண்களில் காம வக்கிரம் குமுற, முகமத்தியிலிருந்து ஊற்றெடுத்துக் கிளம்பித் தன்னைச் சுற்றிப் பிணைத்த அதன் பார்வையின் கொடூரத்தில் கால்கள் செயலிழந்து, சர்வமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றது எலி. சர்வாதிகாரமும் போராட்டமும் மோதிக் கொள்கின்ற தீக்கங்குகளின் உஷ்ணத்தையேற்கும் பரபரப்பில் நிலம் குலுங்கிற்று. சூரியன் தென்றலை ஸ்பரிசிப்பதும், முழுநிலவு எரிமலைக் குழம்புகளை அருந்துவதுமான மௌனக் கருமை இருளெங்கும் செறியத் தொடங்கிற்று.

திசையை மாற்றிக் கொண்டு ஓட எத்தனித்த எலியின் கண்கள் அதை அவதானித்தன. நேற்றுமுன் தினம் பேசப்பட்ட குட்டிப்பூனையென்பது இதுதானோ! உடற்பருமனில் ஒற்றுமை வழிகிறதே. தன்னைக் கண்டதும் வாய் பிளந்து கௌவாது, மயிர்களைச் சிலிர்த்துக் கொண்டு, முன்னோக்கவும் முடியாமல் பின்வாங்கவும் முடியாமல் அது தயங்கித் தடுமாறி நிற்பது அதனால்தானோ.

இவ்வளவு பெரிய சதைத் தொகுதியுடன் எலியன்று உள்ளதா? பல நாட்களுக்குப் போதுமான தாராள விருந்துதான். இருந்தாலும் எப்படி இதைக் கௌவிப் பிடிப்பது. பருமனுக்கேற்ற பலம் இல்லாதிருக்குமா? திரும்பி என் கழுத்தைக் கௌவினால், அது பற்றிய எவ்வித அனுபவமுமற்ற என் புலன்களினதும் வலிமையினதும் திடுக்கம், உயிரிழைகளில் வெறுமையை அள்ளிப் பூசி விடாதா? பசியின் கொடுங்கரங்களைப் பயத்தின் கொடுங்கரங்கள் பறித்துண்ணத் தடுமாறி நின்றது பூனை. 

உடலெங்கும் தைரியம் வழிய, நிமிர்ந்து நிலைத்த முக கர்வத்துடன், திடமான நகர்வுகளில் தன் உணவின் இருப்பிடம் நோக்கி நிதானமாக எட்டு வைத்து நடக்கத் தொடங்கிற்று எலி. அதற்கு இப்போது பயமில்லை.

No comments:

Twitter Bird Gadget