Tuesday, June 21, 2011

முதுகில் விழுந்த முகம்என் பார்வை இவ்வளவு கனதியானது என்பதை அவன் அறிந்திருக்க மாட்டான். நாள் முழுக்க உழைத்துக் களைத்த தொழிலாளியின் அக்குள் வாடையின் எதிர்க்குறியாய் அவனது முகத்தில் வழிந்தொழுகிய பாவனை, பயமா? கோபமா? சங்கடமா?

வானம் அழுது கொண்டுதானிருக்கும். அதற்காக நட்சத்திரங்களும் சந்திரனும் கவலையைப் போர்த்திக் கொண்டு சோம்பிக் கிடக்க வேண்டிய கட்டாயம் என்ன? அவனது உச்சந்தலையில் அடர் மயிர்களிடை சிலுப்பிக் கொண்டிருக்கும் ஓரிரு முடிகளையத்தவனாகவே அவனையும் நான் நோக்க வேண்டியுள்ளது. நட்சத்திரங்கள் அழுவதில்லையென்பதும், சந்திரன் சத்தமிடுவதில்லையென்பதும் தனக்குப் புதிராக இருப்பதாக அவன் கூறியது என்னைக் கவலையில் ஆழ்த்திற்று.

ஓர் எறும்பின் மூளையை விடக் கடினமான பலம் அவனுள் எப்படித் தோன்றிற்று. உண்மையில் அவன் நல்லவனாக இருக்க வேண்டும். இல்லையெனில், என்னை வானத்தின் விரிந்த மரணச் சிறகுகளிடை புகுத்தி விட்டு மேகங்களில் தன் பிருஷ்டபாகத்தை அழுத்திப் பறந்து போயிருப்பான். ஆனாலும் அவன் மீது எனக்குத் துளியும் பாசம் இருக்கவில்லை. எதற்காகப் பாசம் காட்ட வேண்டும்!


மிக நீண்ட காலங்களுக்கு முன்பிருந்தே என் மீது அவன் திணித்து வரும் பாசத்தில், ஒரு பகுதியையேனும் நான் புளகாங்கிதத்துடன் அனுபவித்துக் களித்ததில்லை. சுமையாக இருக்கும் போது, அதனை சுகம் என்று கொண்டாட நான் என்ன முட்டாளா?

என் வாழ்க்கையின் பெரும் பகுதிப் பொறுமையைச் சோதித்த பெருமை அவனுக்குண்டு. அதற்காக அவன் தன்னைத் தானே மெச்சிக் கொள்ளலாம். நான்...? சூரியக் கதிர்களில் இருள் தெறிக்குமென்பதை தனக்கு மட்டும் தெரிந்த இரகசியமாக அவன் கருதிக் கொள்வதை நான் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்!

அவனது கண்களுக்கும் எனது கண்களுக்கும் இடையிலான ஒற்றுமை என்பது, அவன் என்னை விட்டு ஓரடி தள்ளி நிற்கும் போது விழும் இடைவெளியின் ஆழத்தை விட இறுக்கமானதுதான். இருந்தாலும் அந்த ஒற்றுமைக்குள் துருத்திக் கொண்டு வெளியேறத் துடிக்கும் வேற்றுமையின் மூச்சுக் காற்றை நான் கொல்ல நினைப்பது எனது மிகப்பெரிய அறிவீனமல்லவா?

எப்பொழுதேனும் என்னைப் பார்க்கும் போது அவனது புலன்களில் ஓடியோடிக் களைத்து, பின் உதடுகளைக் கிழித்துக் கொண்டு வந்து என் முகத்தில் விழும் அவனது முதுகின் பாரம் அவனைக் காணாத போதுகளில் நானும், என்னைக் காணாத போதுகளில் அவனும் எதிர்கொள்ளும் முகச்சுளிப்பின் வடுக்களை விட இனிமையானதுதான் என்பது எனது அனுபவத் திரட்சியின் தீர்மானம். ஆனால், அவனும் என்னைப் போலவே இருக்க வேண்டாமா? பின், ஏன் அவ்வாறு நடந்து கொண்டான்?

தென்றல் கோதிச் செல்லும் மர உச்சிகளின் அழகிலும், வெண்பஞ்சு மேகங்களில் புழுதி படர்த்தும் அதிகாலைப் பறவைகளின் இனிமையிலும் அவனை இருத்தி வைத்து ரசித்துக் கிடந்த என் செயல் தவறானதா? இத்தகைய இன்ப உணர்ச்சிகளுள் அகப்படாத, அல்லது அவற்றுக்குத் தகுதியற்ற இழிந்த செயலுடையவனா அவன்?

நான் என்ன தவறு செய்து விட்டேன். என் மன உணர்ச்சிகளில் வடியும் அழகு மதுசாரத்தின் விதைக்குள் பல்லி அறுத்து விட்டுச் சென்ற வாலின் நுனியை நான் எப்படி ஜீரணிப்பேன். எல்லா வகையான நியாயங்களையும் புறந்தள்ளும் இந்தக் கேடுகெட்ட செயல், என்னுடைய எத்தனை இரவுகளில் தீ விழுத்தப் போகிறது என்பதை அவன் ஏன் அறிந்து கொள்ள விரும்பாது அடம்பிடிக்கிறான்?

என்னைச் சூழ உள்ளவர்களும், சுகம் விசாரித்துச் செல்பவர்களும் தெளிவாக இல்லாத நிலையில், நான் மட்டும் தெளிவாக இருக்க முயற்சிப்பதென்பது உண்மையில் வீண் வேலை.

இப்போதும், அவன் மீதுதான் எனக்குக் கோபம். என் இரவுகளில் சகிக்க முடியாத படுக்கைத் துர்நாற்றத்தை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றவன் அவன்தானே. இப்போது பெரிய உத்தமன் போல், என் கண்களைப் பிளந்து ஓர் ஒளிச்சரடாய் முன்தோன்றிப் பல் முட்டினால் எல்லாவற்றையும் நான் மறந்து விடுவேனா?

ஒவ்வொன்றுக்கும் ஒரு நம்பிக்கையும் கோட்பாடும் அவற்றை வரையறுத்துக் கொள்ளும் பக்குவப்பட்ட அறிவும் இருக்க வேண்டாமா? எதுவுமில்லாமல், எதைத்தான் இவன் சாதித்துவிடப் போகிறான்?

பரிதாபம் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. காற்றில் மிதந்து வரும் இசையின் சிறைக்குள் உணர்வுகள் பிடுங்கப்பட்டுத் தொங்கும் வலியை இவன் அனுபவித்திருந்தால் என் மீது அவனுக்கும் அனுதாபம் தோன்றியிருக்கக் கூடும். அதற்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேண்டுமே.

எனக்குக் கொஞ்சமும் பயமில்லை. கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதுமான பண்பை சூரியன் இழக்கும் அந்தக் காலத்தில் மட்டும்தான் நான் பயப்படுவேன் என்று அவனிடம் பல தடவைகள் கூறியிருக்கிறேன். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. என்னுடைய இலட்சியங்களை, என்னுடைய கொள்கைகளை அவனிடமன்றி வேறு யாரிடம் பகிர்வதென்ற ஆதங்கத்தில்தான் சொன்னேன். அதைக் கொஞ்சமும் லட்சியம் பண்ணாமல், மீண்டும் மீண்டும் என்னைப் பயமுறுத்துவதிலேயே குறியாய் இருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. ஏனெனில், எனக்குக் கோபம் வருவதற்கு எதையும் கண்டிப்பான நிபந்தனையாக நான் அவனுக்குக் கூறியிருக்கவில்லை.

சூரியனின் செங்கதிர்களில் தெறிக்கும் அச்சுறுத்தலை, என் கோபத்தில் கண்டுழல்வதாக அவன் கூறுவான். அப்போது நான் சிரித்துக் கொள்வேன். நன்கு செழித்த செடிகளின் பசுமையை ஒப்பிடுவான். நான் மீண்டும் சிரிப்பேன். மொட்டவிழ்த்து வெளிப்படும் மலரின் செம்மையைப் பிரஸ்தாபிப்பான்.

நான் விரும்பாதவற்றை ரசித்துக் கொண்டிருப்பதற்கு எனக்கென்ன தலையெழுத்து. மலரின் மணம், சுவாசத்தை நிறைத்து உள்ளத்தை நெகிழ்ச்சிப்படுத்தி செயலில் பீறிட்டுப் பாய்ந்தால் வாழ்வின் அறியாமை தீப்பற்றிக் கருகிச் சாகாதா? இவ்வளவு காலத்திற்கு இன்னும் ஏன் அது நிகழவில்லை? இந்த உலகம் தோன்றி 10000 கோடி ஆண்டுகள் இருக்குமா?

சிரிப்பை விடக் கொடியது மௌனம். அதனால்தான் அவனது மௌனத்தை நான் எப்போதுமே ரசித்ததில்லை. அவனது முகத்தின் சிறுமைக்குள் பத்திரப்பட்டு நசுங்கிக் கொண்டிருக்கும் எல்லாப் பண்புகளிலும் நான் மிகவும் வெறுப்பது அதனைத்தான்.

நாவு இருக்கிறது; அதனைச் சீராக இயக்கிக் களிக்கப் பற்கள் இருக்கின்றன; அவற்றைப் பாதுகாத்து மூடிக் கொள்ள உதடுகளும் உள்ளன. வார்த்தைகளைப் புதைத்து விட்டு, கண்களில் ஒளி கக்குவது எவ்வளவு மடமை. கண்களுக்கு வேறு பணியிருக்கிறது. 

அவனது பணிகளில் நான் தலையிடும் போது அவனது மூக்கில் சிவந்து பெருகுமே கோபம், அது இதன் போது ஏன் அவனுக்கு ஏற்படுவதில்லை? அது பற்றிக் கேட்டால், பதிலையே கேள்வியாக்கி முகத்தில் தூக்கி வீசியடித்து விட்டுப் போகும் அவனது செயலில் பலமுறை அடிபட்டுப் பற்கள் நறநறத்திருக்கிறேன். 

எப்போதும் அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருப்பதென்பது எனக்குச் சாத்தியமாகுமா? சாத்தியமில்லாதவை பற்றிப் பேசுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை என்பதை, அவனது அறிவு அடிக்கடி மறந்து விடுகிறது. பிறகு, வீணான சண்டைகளும் சங்கடங்களும் தோன்றி விடுகின்றன.

எனக்கு என் கொள்கை முக்கியம் என்று நான் கருதுவதுண்டு. ஆனால், அதில் எப்போதும் பிடிவாதமாக இருக்குமளவுக்கு என் கொள்கைகள் ஒன்றும் அவ்வளவு வலுவானவையல்ல. அதனால், என் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது; சில நேரங்களில் தளர்வு ஏற்படுகிறது. அதற்காக என்னை பலவீனமானவன் என்றோ, என் கொள்கைகளை பலவீனமானவை என்றோ அனுமானித்து விடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் ஒரு வரைமுறை வேண்டும். கூறுபோடப்பட்ட மனிதத் துண்டுகளில் ஒழுக்கச் செயன்முறைகளை விதைக்க முயற்சிக்கும் செயலையத்ததல்லவே என்னுடைய பணிகள். அலட்சியப்படுத்தலுக்கும் ஒரு காரணம் இருக்கும். காரணமேயற்ற பல விடயங்களில் உலகம் குப்புற விழுந்து கிடக்கிறதென்ற உண்மை நான் அறிந்ததுதான். என்றாலும் மரபுக்கு அடிபணிந்து உசும்பிக் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் உணர்வுகள் எவ்வளவு வலிமையானவையாக இருக்கின்றன!

நான் மிகவும் ரசித்துச் செய்த பல விடயங்களை, ஏளனமாக நோக்கிய போதெல்லாம் அவன் மீது எனக்கு கோபம் வரவில்லை. அவனது ஏளனத்தில் ஓர் அணுப்பரிமாணத்திற்கேனும் காரணம் இருந்ததை நான் அறிந்திருந்தேன். ஆனால் இப்போது என் வயல் நிலங்களிலும் வான் பரப்புகளிலும் கறுப்புச் சாயம் பூசிக் கேலி பண்ணத் துடிக்கும் அவனது ஏளனத்தில் என்ன காரணமிருக்க முடியும். அப்படியே காரணமிருந்தாலும் அதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

எனது கண்கள் பளிங்கினால் செய்யப்பட்டவை அல்லதான். அதற்காக அதில் பளபளப்புத் தெரிவதாகச் சிலர் கூறுவதை நான் மறுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் என்ன? எனக்கு வாழ்க்கையில் மிகவும் கஷ்டமானது இதுதான். நிகழ்வுகள் பிறழ்ந்து கொட்டும் போது அவற்றின் துளிகளைப் பற்றிச் சென்று ஆழத்தை அளக்க முடிவதில்லை. என்னை விடவும் ஆழமான குழியன்று உலகில் இருக்க முடியுமென்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. முடியவில்லை என்பதிலே தோன்றும் முதிர்ச்சி, மிகப் பலம் வாய்ந்த முயற்சியின் விசையென்று, என்னைப் பார்த்து அவன் கூறுவான். அவனது கூற்றில் சொட்டிக் கொண்டிருப்பது அக்கறையா? ஏளனமா? எனத் தீர்மானித்துக் கொள்ள முடியாமல் தொடையைக் கிழித்துக் கொள்வதே எனக்கு வாடிக்கையாயிற்று.

என் மனதின் செடிமறைவில் அழுக்குகள் சேமிக்கப்பட்டுள்ளன. சிறுகச் சிறுகச் சேர்ந்து பின் குவியலாய் வெளிப்படும் போது அழுக்கிலும் அழகு இருக்கின்றதென்ற உண்மை தெரிகின்றது. எவ்வளவுதான் அழுக்கைச் சுத்தப்படுத்தினாலும் காற்றின் அதிர்ச்சியை பறவைகளின் சொண்டில் இறுக்கி விட முடியுமா? 

அழுக்கின் வசீகரம் தன்னுடைய பிரத்தியேக அடையாளம் என அவன் மார்தட்டிக் கொள்ளும் போது நான் அவனை பிரமிப்புடன் பார்ப்பேன். இந்த ஒரு விடயத்திலாவது தூரதிருஷ்டியுடன் சிந்திக்கின்றானே என்பது போன்ற பிரமிப்பு!

முதுகு வளைந்திருந்தால் முகம் சிரிக்க முடியாது. முதுகுக்கும் முகத்துக்கும் இடையிலான தொடர்பு எவ்வளவு விபரீதமானது என்பதை அவன் என்னுடன் பேசும் ஒவ்வொரு பேச்சின் இறுதி வார்த்தையும் எனக்குத் தெளிவாக உணர்த்தும். அழுக்குகளைச் சுமக்கும் போதுதான், முதுகின் பொறிமுறை திணறுகிறது. நரம்புகளைச் சுண்டியிழுத்து, நாவின் விரல்களில் உஷ்ணமாய்ப் படிகிறது. மூச்சுக்குழாய்களில் முதுகை நிமிர்த்தி வைக்கும் பிரயத்தனத்தை நான் எப்போதுமே செய்ததில்லை. அதை என்னுடைய பெரும் குறைபாடாகவே அவன் கணித்து வந்துள்ளான்.

மனிதாயக் கனிகளில் சுயநலத்தின் பார்வையை இடுங்கிக் கொள்ள முனையும் செயலின் பிரதிபலிப்புகளை என் நடத்தைகளில் கண்டுபிடித்துள்ளதாக அவன் கூறும் போதெல்லாம் எனக்கு கொதிப்புடன் கோபம் எகிறும். உயிரைப் பிடுங்கி பிடரி வழியே தொங்கவிடும் வன்மையின் கைக்குள் சந்தோஷம் காண முனையும் வக்கிரக்காரனா நான்!

ஒரு காலத்தில் இப்படியான சிந்தனைகளின் இழுப்பில் என் கால்கள் பறந்துதான் வந்தன. அப்போது முதுகுக்கும் கால்களுக்குமிடையில் அதிக நெருக்கம் இருந்தது. அந்த நெருக்கத்தினாலேயே ஏனைய எல்லா உறுப்புகளிலிருந்தும் வேறுபட்டதாகவும் அழகு மிக்கதாகவும் முதுகு பளிச்சிட்டு வந்தது. வெளிரிடும் தூயபற்கள், அவற்றின் மெய்ப்பாதுகாவலர்களாய் இருந்தன. ஆன்மாவின் கழிவறைகளில் அழகைப் புதைத்து வைக்கும் மௌட்டீகச் செயலின் இரண்டாம் அத்தியாயம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலமது. 

என் முகவிசாலத்தின் பொதுமைக்குள் அமுங்கிப் போகும் பல சிற்பங்களுடன் அவன் இறுக்கமான பரிச்சயம் கொண்டிருந்தான். என் நாளாந்த பிரசன்னத்தின் போது, அவனது முதுகில் நான் அழுத்தும் கைரேகைகள் ஒரு தொகுப்பாகப் படிந்து புதிய வாழ்க்கை நிலைக்களனை அவனுக்கு அறிமுகப்படுத்தியிருந்தன. அதில் ஒருவகைச் செழிப்பும் இருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கண்களில் இரத்தச் சிவப்பாகக் கன்றிப் போயுள்ள மயிலிறகுகளாய் ஆன்மாவைச் சுகப்படுத்தும் பண்பு கொண்டது அது. அழுக்கு மூட்டைகளுக்கும் முதுகுக்கும் இருந்து வரும் பன்னெடுங்காலத் தொடர்பை உறுதிப்படுத்தும் அழுத்தமான பண்பும் அதிலிருந்தது.

ஆனாலும் அவை பற்றியெல்லாம் அவனுக்கு எப்போதும் அக்கறை இருந்ததில்லை. மலரின் வடுக்களில் கசிந்துருகும் அழகை பிரதிபிம்பமாய்ச் செதுக்கிப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதில் தனக்குள்ள ஆர்வத்தை எவ்வாறேனும் செயற்படுத்திவிடுவது என்பதிலேதான் அவனது கவனமெல்லாம் குவிந்திருந்தது. முகத்தின் ஜீவகளையில் வெயிலைக் கூர்வாளாய் இறக்கும் கைங்கரியம் தலைமுறை இடைவெளிகள் தாண்டியும் அவனுக்குக் கைகூடுகின்றது. முரட்டுச் சுயப்பிடிவாதமா? பரம்பரைத் திமிர்த்தெறிப்பா? என்னென்று இதைச் சொல்வது!

முகத்தைப் பொத்திக் கொண்டு அப்பால் செல்லும் ஒருவனின் ஆழ்மனத் தூறல்களில் பரிதாபத்தைத் திணிப்பவை மட்டுமே மண்டிக் கிடக்க வேண்டுமென்ற நியதியில்லை? இதை ஒரு நியதியாக வரித்துக் கொண்டு, என் கண்களின் ஈரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதற்கு எனக்கென்ன கேடு வந்தது!

அன்று போனவன்தான். நாட்கள், மாதங்கள், வருடங்கள் பல கடந்து விட்டன. அவனது அசைவும், அசையாமையும், அவற்றில் மந்தமாயும் மார்க்கமாயும் ஒளிரும் காற்தடங்களும் என் மனவிதையின் பசுமைக்குள் இன்னும் பதுங்கிக் கொண்டுதானிருக்கின்றன. 

அவனது முகத்தின் நிறம், என் உச்சந்தலையின் வெண்மையற்ற பகுதிகளைப் போல் பயமுறுத்திக் கொண்டிருந்த காலத்திலிருந்து, அவனுடனான நட்பின் ஆழத்தில் நான் விழுந்து கிடந்தேன். முரண்பாடுகளும் எதிர்க்குரல்களின் பிரிவாற்றாமையும் தழைத்தோங்கும் போது, அவற்றின் இருண்ட இழைகளில் நட்பின் முகம் தொலைந்து போகின்றது. அவனது முதுகின் குறியில் நான் விழுத்தியிருந்த என் முகம் அவனுக்கு மறந்திருக்கமாட்டாது. மறக்கக் கூடியதல்ல அது. அதனால்தான், எனது பார்வையின் கனதி அவனுக்குப் புதிதாகவும் வியப்பாகவும் ஆகிவிட்டிருந்தது.

அதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியுமா? மாற்றங்களில் விழுந்து புரண்டு, ஆகாய நீலத்துகள்களில் பயணித்துக் கழியும் வாழ்க்கையின் பரிமாணங்களில் சுவையும் சுகமுமன்றி, இழிவும் இறுக்கமுமே மிஞ்சும் என்பது நான் அறியாததல்ல. அறிந்தது அழகாயிருக்க, அறியாத அழுக்கை நோக்கிப் பயணிப்பது புத்தியின் பாதச்சுவடாகுமா? புயலை வலிந்து இருத்திக் கொண்டு மகிழ்ச்சியைக் குறிவைப்பதா?

அப்போது எனக்குக் கொஞ்சம் கவலை இருந்ததென்பது உண்மைதான். ஆனால் இப்போது அதெல்லாம் கொஞ்சமும் மனதைக் கடிக்காதவாறு நன்கு பழக்கமாகிவிட்டன. நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என்னை என்பது, என் கொள்கைகள், என் செயற்பாடுகள், என் பேச்சு, என் மூச்சு, குறிப்பாக என் முகம் எல்லாமும்தான்.

ஈயின் சிறகுகளிலும் நுளம்புகளின் ஊசிகளிலும் பனிவிழுத்தும் ஓர்மையை என் எதிர்பார்ப்புகளிலிருந்து அகற்றி விட்டேன். இனி நான் அவனுக்காகக் காத்திருக்கப் போவதில்லை. என் பாதச்சுவடுகளின் வழியே மினுங்கிக் கொண்டிருக்கும் இருளின் அசைவில் என் முகத்தைத் தொலைத்து விடப் போகிறேன். எனக்கென்று நான் உருவாக்கிக் கொண்ட கொள்கைகளை மீளவும் தூசுதட்டியெடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு என் உணர்வுகளையும் ஆன்மாவையும் தாண்டி மாயலோகத்தின் கதகதப்புக்குள் தரையிறங்கிற்று. 

நான் கண்களை மூடிக் கொண்டேன். என் முகம், அவனது முதுகிலிருந்து விலகி மீண்டும் என்னிடமே வந்து ஒட்டிக் கொண்டது. 

No comments:

Twitter Bird Gadget