Wednesday, June 22, 2011

பசுமை மோகம்



நேற்றுப் போல் இருக்கிறது. நான் கடிதம் எழுதியது, அவள் பதில் அனுப்பியது, இருவரும் சந்திக்கத் துடித்தது, சந்திக்கும் போதில் பேச நாவெழாது தவித்தது எல்லாமே. முப்பது வருடங்கள் மின்னலாய் மறைந்து விட்டன. மூத்தவள் பட்டதாரியாகி தனியார் கம்பனியன்றில் முகாமையாளராகப் பணியாற்றுகிறாள். இரண்டாமவன் இலங்கை நிருவாக சேவைக்கான ஆறு மாதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறான். மூன்றாமவன் சாதாரண தரம் முடித்து விட்டு கம்ப்யூட்டர் பயின்று கொண்டிருக்கின்றான். 

இந்த முப்பது வருட நீண்ட இடைவெளிக்குப் பின் உள்ளத்தின் பசுமைக்குள் இன்னும் ரம்மியம் குன்றாதிருக்கும் இளமைக்கால நினைவுகளை அசைபோடுவது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது. இன்னும் அது இதமாக இருப்பதற்கு அவளுக்கும் எனக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வும், மெய்யான விட்டுக்கொடுப்பும், ஆழமான காதலுமன்றி வேறென்ன காரணமாக இருக்க முடியும்.

கல்லூரி வாழ்க்கையின் அழியாத நினைவுக்குள் அடிக்கடி முத்துக்குளிக்கும் உணர்வுகள், மகிழ்ச்சியையும் கூடவே இளமையின் இழப்பு வலியையும் உடனெடுத்துக் கிளர்வது வாடிக்கையாய்ப் போயிற்று. ஆயினும் அந்த இழப்பு வலியை மறக்கடித்து விடுவதில், இப்போது நிரந்த வாழ்க்கைத் துணையாய் என்னருகிருக்கும் என் முன்னை நாள் கனவுக்கன்னியின் இதமான அருகாமை பெரும் வெற்றி பெற்றுள்ளதை நான் மறுக்க முடியாது. 


எம் இருவருக்குமிடையிலான நெருக்கத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவை கடிதங்கள்தான். மனதுக்குள் முட்டி மோதும் ஆசைக்கனவுகள் மைசொட்டும் பேனை முனையூடு முத்து மணிகளாய் உதிர்ந்து வழிந்து கடிதத் தாள்களில் உப்பிப் பெருக்கும். 100 பக்கங்கள் வரை எழுதினாலும் ஏதோவொரு முக்கிய விடயத்தை எழுதத் தவறிவிட்டேனோ என்ற பதற்றம் எழுதியவருக்கும், இவ்வளவு துரிதமாக முடிந்து விட்டதே என்ற ஏக்கம் வாசிப்பவருக்கும் ஏற்படுவது வழக்கமாயிற்று. முதலில் வந்த பதில் மறு பதில் வரும் வரைக்குமான காலப்பகுதியில் வாழ்வின் உயிர்ப்பில் சுறுசுறுப்பையும் கிளுகிளுப்பையும் தடவிக் கொண்டிருக்கும். 

சுற்றி நிகழும் கடுமையான கஷ்டங்கள், கலவரங்கள், இழப்புகள், எதிர்ப்புகள் என எல்லாவற்றையும் புறக்கணித்து மகிழ்ச்சியையும் மனநிறைவையும் மட்டும் உள்ளத்துக்கு வழங்கும் மிகப்பெரும் சேவையை ஆற்றுவதில் எம்மிடையிலான அன்பிறுக்கம் தன் முழு பலத்தையும் பிரயோகித்துப் பிரமிக்க வைத்த காலமது. 

இருவருக்கும் இடையிலான நீண்ட இடைவெளிதான் அன்பையும் ஆசையையும் வலுப்படுத்தியதோ என இப்போது எண்ணத் தோன்றுகின்றது. இது எல்லோரும் சொல்வதுதான் எனினும், நாளுக்கு நாள் அதிகரித்துச் செழித்த எமது பரஸ்பர அன்பு, இணைவுக்குப் பின்னும் அதிகரிப்பில் மாற்றமின்றித் தொடர்ந்த நிலையை உணர்ந்த போது, எமது அன்பு சராசரி மானிடப் பண்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கக் கூடுமோ என நாம் பேசத் தலைப்பட்டோம். அவ்வாறு பேசிக் கொள்வதிலும் ஒரு சுகம் இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை அதிகரித்த போது, அது எமது அன்பின் அனுமானிக்க முடியாத ஆழத்தை எமது கண்களுக்குக் காண்பித்து எம்மைச் சுவாரசியமானதொரு வியப்பிலாழ்த்திற்று. 

எம்மிடையில் இருப்பது வெறும் அன்பு மட்டும்தானா? இந்தக் கேள்வியை எமது அன்பு முதன் முதலாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாளிலிருந்து நாம் எழுப்பி வருகின்றோம். அதற்கான விடை சந்தர்ப்பங்களுக்கும் காலச் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறிக் கொண்டே வந்துள்ளது. அதுவும் ஒருவகையில் நல்லதாயிற்று. ஏனெனில், முடிவாக ஒரு விடை தோன்றாதிருக்கும் வரை கேள்வி எப்போதும் இளமையாக இருக்கும். அந்த இளமைதான் அதன் கருத்தியலின் இறப்பைத் தடுத்து நிறுத்தும் ஒரே ஆயுதம். 

எமக்கு இப்போதும் நினைவிருக்கிறது. உணர்வுகள் பெருக்கெடுத்த எமது முதலாவது சந்திப்பின் போது, வாழ்க்கை தன் முழு ஆடைகளையும் அவிழ்த்து விட்டு பிரகாசிக்கும் தன் அழகின் நிர்வாணத்தை எம் கண்களுக்கு முழுமையான விருந்தாக்கிற்று. இது கனவாய் இருக்கக் கூடும் என்று கற்பனையும் பண்ண முடியாத நிலை எம்மைத் தழுவி அணைத்துச் சுகத்துள் புதைத்திற்று. 

முதல் பார்வை, முதல் புன்னகை, முதல் பேச்சு, முதல் ஸ்பரிசம், முதல் அணைப்பு, முதல் முத்தம் என முன்னேறிய வாழ்க்கையின் மகிழ்ச்சி பொங்கி வழியும் ஆகர்சிப்பு, பிரமிப்புக்கு மத்தியிலும் எமது தலைகள் மீது திணிக்கப்பட்டது. இதையன்றி வேறெந்தத் திணிப்பும் எம்மை இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்தியிருக்க மாட்டாது. 

உச்சி வானில் நிலவு விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்த இளம் மாலைப் பொழுதொன்றின் தென்றல்தான் எமது முதல் ஸ்பரிசத்திற்குக் காரணமானது. முகத்தில் படர்ந்து நெஞ்சைத் தழுவி, உள்ளக் குறுகுறுப்பை ஏற்படுத்துவதில் இந்தத் தென்றலுக்குத்தான் எத்தனை பலம்! கைகளில்லாமலும் கண்களுக்குப் புலப்படாமலும் மனித உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது சாதாரணமானதா? என் உள்ளங்கைகளில் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் மீறிய பதற்றத்தின் நடுக்கம் எவ்வாறு தொற்றிக் கொண்டதோ! பஞ்சுக்குவியலொன்று அவளது கைகளில் தளிர்விட்டுச் செழித்திருந்தது. என் இருபத்தைந்து வருட காலத் தாகம், ஒரு சொட்டு நீரிலேயே தீர்ந்து விடும் போன்றதொரு இலயிப்பு. அவளது மென்கையை அவளது எதிர்ப்புப் புன்முறுவலையும் மீறி வருடிப் பார்த்து விட்ட மகிழ்ச்சி, உள்ளத்தைப் பிரித்தெடுத்து, நிலவின் குளிர்மையில் செழிப்பாய்க் குடியமர்த்திற்று. பிறவிப் பயனை அடைந்து விட்டதான புளகாங்கிதம் சிலிர்ப்புடன் உடலைத் தழுவிக் கொள்ள, பிரிய மனமின்றி நான் அவளிடமிருந்து விடைபெற்றேன். 

அதற்குப் பிந்திய காலப்பகுதியில் எனது எழுத்தில் ஒரு வீரியம் உயிர்ப்பெடுத்தது. தோன்றிய வீரியத்தை இருவருக்குமிடையிலான கடிதங்களின் உடல்களில் மட்டும் இரகசியமாகப் பத்திரப்படுத்துவதில் நான் வெகு அவதானமாக இருந்ததால், வெளியிடப்பட்ட என் எழுத்துகள் எவற்றிலும் விரசம் இல்லையென்ற ஆய்வாளர்களின் புகழுரைகளுக்கு நான் தகுதியுடையவனானேன். எம் இருவருக்கு மட்டுமே உரியவையென்பதால், எமது கடிதங்கள் எத்தகைய விரசத்தையும் ஆழமான அன்பின் வெளிப்பாட்டுப் போர்வையாக மாற்றிக் கொள்ளும் திறனைக் கொண்டிருந்தமை எமது நெருக்கம் மேலும் இறுக்கமாகக் காரணமாயிற்று. 

கழுத்தை நெரிக்கும் இரவின் தனிமைக்குள் கைகொடுத்துக் காப்பாற்றும் அற்புதமாய் அவளைப் பற்றிய உணர்வுகள் தாழை மடல் விரிக்கும் போது, உள்ளத்தின் அடியாழத்திலிருந்து புதுவித உணர்ச்சி தலை உசுப்பிக் கிளம்பும். அந்த உணர்ச்சியின் காலடியில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் அடிமைத்தனம் எவ்வளவு மகிழ்ச்சியானது. உண்மையில், வரைவிலக்கணமோ வரையறையோ கூற முடியாத மகிழ்ச்சிக் கொதிப்பினதும் நிம்மதிச் சுவாசத்தினதும் சுகமான அரிப்புதான் இந்தக் காதல். 

என்றும் போலவே அன்றும் புத்தம் புது அழகு மலராய் பிரகாசித்தாள் அவள். வழமையை விடச் சற்று அதிகமாக நாணப்பூரிப்பு மேலோங்கிய அவளது முகம், அன்றைய நாளின் எனக்கும் அவளுக்குமான திருமணத்தின் அடையாள விளக்காக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நாட்களின் நகர்வுக்கேற்ப மென்மைத் தன்மையும் அதிகரித்துச் செல்லுமோ என, உரிமையுடன் அவளது கைகளைப் பற்றிக் கொண்ட போது நான் எண்ணிப் பார்த்தேன். அது முதல் ஸ்பரிசமில்லைதான் என்றாலும், முதல் ஸ்பரிசத்தின் போதுண்டான மகிழ்ச்சிக் களியாட்டத்தை விடவும் அதிக உணர்ச்சி அதில் ஏன் உண்டாயிற்று! நான்கு வருடங்களாகக் கனவில் மட்டும் கண்டு களித்த பசுஞ்சோலையன்றின் திறவுகோல் இப்போதென் கைகளில். உலகின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிச் செழுமையும் பெரும் பொதியாகக் கட்டப்பட்டு என் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டன. நான் மகிழ்ந்தேன். இதுவரையும் ஓர் எல்லை வரை நின்று விடும் என் கைகள், விலங்ககற்றப்பட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்ட ஆனந்தக் குதிப்பாய்த் தாவித் தாவித் தம் சுதந்திரத்தைப் பரீட்சிக்கத் தலைப்பட்டன. 

வழமையான எதிர்ப்புகளைத் தாண்டி இலக்கை அடைந்து விட்ட புளகாங்கிதத்தில் அந்தரித்துக் கொண்டிருந்தது எம் அன்பு. அதன் முறுக்கேறிய இளமைத் துடிப்பைக் கட்டுப்படுத்தி அடக்கி வைப்பதற்கு நாம் கொஞ்சம் பிரயத்தனம் எடுக்க வேண்டியதாயிற்று. அன்று - உச்சி வெயிலின் உஷ்ணத்திலிருந்து அழகான பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. நீண்ட காலமாய் இருந்து வந்த சம்பிரதாய இடைவெளிகள் அகன்று கொள்ள, அவளைப் பார்வையால் விழுங்கினேன். அவளது விழிகளில் வழிந்த திரட்சியுற்ற அன்பை அள்ளிப் பருகினேன். நண்பகலின் துவக்கத்திலிருந்து நள்ளிரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதென்பது எவ்வளவு சிரமமான பொறுமை. உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் போராடி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். பகலின் வெளிச்சமும் உறவுகளின் அருகாமையும் விலகிக் கொள்ள, வாழ்வில் இதுவரை வாசித்தறியாத புத்தம் புதிய பக்கம் எம் முன்னால் விரிக்கப்பட்டது. உலகை மறுபடி சிருஷ்டிக்க முனையும் படைப்புத் திறனின் விஷம் நரம்புகளெங்கும் ஆக்ரோஷமாய் ஊடுருவிப் பாய்ந்தது. இருளின் போர்வைக்குள் உடல்கள் உரசிக் கொள்ளும் மௌனச் சலசலப்பு அறையெங்கும் இரகசியமாய் ஒலிக்கலாயிற்று. 

என் முதல் கவிதையை நான் எழுதி முடித்த போது நள்ளிரவு தாண்டியிருந்ததை நான் மட்டுமே அவதானித்தேன். அவளோ, உடலைக் கட்டியிறுக்கும் சோர்வும், அதனைப் புறந்தள்ளி முன்னேறும் முகமலர்வுமாய் விழிகளை மூடி நாணிக் கவிழ்ந்து படுத்திருந்தாள். சாதித்து விட்ட பெருமிதத்துடன், நான் கண்களை மூடி உறங்க முயற்சித்த போது, தாலாட்டாய்க் காதுகளை வருடிக் கொடுத்தன எதிர்காலம் பற்றிய சுகமான எதிர்பார்ப்புகள். நேற்றுவரை என்னுடன் இணைந்திருந்த இரவின் தனிமை, தூரத்தில் நின்று என்னை முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்ற போது, எனக்கு அச்சமன்றிப் பெருமிதமே தோன்றிற்று. அந்தப் பெருமிதத்திற்குக் காரணமான அவளை ஆதுரமாய் அணைத்துக் கொண்டு நான் கண்களை மூடிக் கொண்டேன். 

இப்போது எண்ணிப் பார்க்கையில் குழப்பமாக இருக்கிறது. பாலுறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பிந்திய காலச் சிலிர்ப்புச் சுகத்தை விட, கண்கள் பதிக்கப்பட்ட அடையாள உறுப்புகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதிலே இருந்த முந்திய கால மலர்ச்சிச் சுகம் பெறுமானம் கூடியதாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது. அதற்கொரு காரணமும் இருக்கிறது. எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கையில் சுவையையும் சுகத்தையும் அள்ளிப் பூசுகின்றன. எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிடும் போது சூழ்நிலைகளில் அள்ளுண்டு, மாற்றங்களுக்கடிமையாகி வாழ்க்கை திசைமாறிப் போகிறது. புயல் வீசும் ஓசைகளும், சுமை தாங்கும் ஓலங்களும் எதிரொலிக்கும் வாழ்க்கைக்குள் சுகத்தைத் தேடி ஓடும் அவசியமும் அவகாசமும் அற்றுப் போய்விடுவதால் தவிர்க்க முடியாமல் மனதுக்குள் மதுசாரம் திமிறுகிறது. எல்லா மனிதருடைய வாழ்க்கை இயல்பும் இதுதான் என்பதை ஆரம்பத்திலேயே நாம் கணித்துவிட்டோம். 

அதனால், எதிர்நோக்கும் வாழ்க்கைச் சவால்களுக்கு மத்தியில் காதலைத் தொலைத்துவிட்டலறும் அசம்பாவிதத்தைத் தடுத்துக் கொள்வது எமக்குச் சாத்தியமாயிற்று. இந்தச் சாத்தியம்தான் சுவைகள் மாறினாலும் பண்புகள் மாறாதிருக்கும் எம் அன்பின் இறுக்கத்தையும் இதுவரை காலமும் காப்பாற்றி வந்துள்ளதென்பதை சில வருடங்களுக்கு முன் நாம் பேசி உணர்ந்திருந்தோம். 

அவளைக் கரம் பற்றியதிலிருந்து, வாழ்க்கை, வசந்த காலத் தென்றல் வீசும் பசுஞ்சோலைகளிடையிலான சுகமான பயணம் போலானது. வசீகரமான தோற்றப் பொலிவு மனதிலிருந்து உற்பத்தியாகி, உடல் முழுவதும் செறிந்து பரவிற்று. மகிழ்ச்சி ததும்பும் மென்மையான செழிப்புருவங்கள் என் காலடியில் தஞ்சமாயின. கஷ்டங்களும் கவலைகளும் மகிழ்ச்சியின் நறுமணத்தை ஜீரணிக்க முடியாமல் உதிர்ந்து விழுந்து தொலைதூரம் விரண்டோடின. அவளது மென்கையைப் பற்றி, அழகுடலைத் தழுவிக் கிறங்கி வழிந்த ஆன்ம சுகத்தில் முப்பது வருடங்கள் வெறும் மூன்றே நாட்களாய்க் கழிந்து போன மாயத்தை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. 

கழிந்து போன அந்தச் சுகமான காலங்கள் மீளவும் வரமாட்டாதே என்பதையன்றி வேறென்ன கவலைதான் எனக்கிருக்கிறது. இப்படி ஒரு கவலை எனக்கிருக்கின்றது என்பது தெரிந்தால், அந்தக் கவலையையும் போக்குவதற்கு அவள் சக்திக்கு மீறிப் பாடுபட்டுப் பரிதாபமாகத் தோல்வியுறுவாள் என்ற பயத்தில்தான், என் கவலையை நான் அவளிடம் வெளிப்படுத்துவதேயில்லை. எந்த விடயத்திலும் அவள் தோல்வியோ, சிரமமோ அடைந்து விடக் கூடாதென்பதே எனது நீண்ட நாளைய இலட்சியமாய் இருந்து வருகிறது. அந்த இலட்சியத்துக்காக நான் எப்போதும் போராடிக் கொண்டிருப்பேன் என்பது அவள் நன்கறிந்ததுதான். 

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. மூத்தவள் வேலை முடிந்து வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் முதலில் என்னைத்தான் பார்க்க வேண்டும் என்பது அவளது முக்கியமான எதிர்பார்ப்பும், கட்டளையும். முகத்தோற்றத்தில் தந்தையை உரித்து வைத்திருக்கிறாள் என மகளைப் பற்றிப் பிறர் கருத்துரைக்கும் போது, என்னுள் பெருமிதம் கலந்த மகிழ்ச்சி நெஞ்சுயர்த்தி அகம்பாவம் காட்டும். அந்த அகம்பாவத்தை, என் நெஞ்சில் செல்லமாகக் குத்தி அடக்கும் தைரியம் வீட்டில் அவளுக்கு மட்டுமேயுண்டு. எவ்வளவுதான் படித்து வளர்ந்து பெரியவளானாலும் எப்போதும் எனக்கவள் செல்லப் பிள்ளைதான். அவளுடன் கொஞ்சி விளையாடுவதென்பது எனது முதன்மையான பொழுதுபோக்கு. இப்போது ஒரு கடமை போலவே அது ஆகிவிட்டது. நான் இலக்கியம் பற்றிப் பேசுவதும், அவள் முரண்டுபிடித்து முகாமைத்துவம் பற்றிப் பேசுவதுமாக இருவருக்குமிடையில் தோன்றும் சண்டையின் உச்சியில் தீர்ப்புக் கூறுவதற்குத் தாயை அழைப்பாள். அவள் வந்து, இலக்கியத்தையும் முகாமைத்துவத்தையும் ஒதுக்கிவிட்டு, ஓவியம் பற்றிப் பேசித் தீர்ப்பளிக்கும் போது, தந்தையும் மகளுமாய் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து பரிதாபம் பரிமாறிக் கொள்வோம். தோல்வியின் முடிவில் வேறுவழியின்றி மீண்டும் எங்களது கூட்டணி ஒன்றிணையும். தாயை அவள் கிள்ளித் தொந்தரவு செய்ய, நான் அதனைத் தூண்டி விட்டு ரசிக்க வீடு அல்லோலகல்லோலப்படும். தாய்க்கு உதவி செய்வதா, தந்தையைப் பகைத்துக் கொள்வதா எனத் தடுமாறிக் கொண்டு தத்தளிப்பார்கள் இளையவர்கள் இருவரும். மூத்தவளிலிருந்து முழுக்கவும் வித்தியாசமானவர்கள் அவர்கள். என்னில் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை. அவளைப் போலவே இருப்பதால் எப்போதும் அவளுடன்தான் ஒட்டிக் கொள்வார்கள். அந்த வகையில் எனக்குக் கொஞ்சம் பொறாமைதான். பெரும்பான்மை அவள் பக்கமல்லவா! எந்தச் சந்தர்ப்பத்திலும் என் ஆட்சி கவிழ்ந்து விடலாம். 

இந்தப் பெரும்பான்மையை சமப்படுத்திக் கொள்வதற்கான திட்டம் ஒன்றும் என்னிடம் இருக்கிறது. அதற்காக ஒரு பெண் குழந்தையை வரவழைக்க நானெடுக்கும் முயற்சிகளையெல்லாம் நாசூக்காகவும், சில சமயம் காரசாரமாகவும் நிராகரித்து விடுவாள் அவள். பெரும்பான்மையை இழக்க நேரிடும் எனப் பயப்படுகிறாளா? அல்லது பிரசவத்தின் வலிக்காக அஞ்சுகிறாளா?

அந்த நாட்கள் பற்றிய நினைவு இப்போதும் என் கண்களைப் பனிக்கச் செய்து விடும். நாம் இணைந்து உருவாக்கிய முதல் உயிரை கண்களால் பார்க்க வேண்டுமென்ற ஏக்கம், பிரசவத்தின் கடிய வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்வாளோ என்ற தவிப்பு என எமது வானம் கறுத்துக் கிடந்தது. வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதது அவள்தானெனினும், கண்ணீர் வந்ததென்னவோ என் கண்களில்தான். 

அதே நண்பகற் பொழுதொன்றில், தன் மலர் போன்ற பிஞ்சுக் கால்களை உதைத்துச் சிணுங்கி, சின்னஞ்சிறு கண்களால் உலகைத் துழாவியவாறு அவள் பிறந்தாள். பாசமும் பரிதாபமும் இணைந்துருகிய கண்களில் நீர் கட்டிக் கொள்ள நான் மனைவியைப் பார்த்தேன். எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆனந்த முழக்கத்தில் உள்ளம் உடைந்து குழறிற்று. ஆனந்தக் கண்ணீரில் பளபளத்த கண்களால் அவளுக்கு நன்றி கூறினேன். 

அடுத்து, அவளது கைகளில் மல்லாந்து மலர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்தேன். நான் என் தாயின் கைகளில் குழந்தையாக இருந்த போது இப்படித்தான் இருந்திருப்பேனோ. என்னின் மறுபிரதியாய் ஒரு சின்னஞ்சிறு சிசு. அன்பு பொங்கி வழிய வாரியெடுத்து அதன் பிஞ்சு நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். 

என் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக நடப்பவை அனைத்தும் மனநிறைவையும் திருப்தியையும் மட்டுமே வாரிக் கொட்டிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒருவனாய் நான் ஆகிவிட்டேனா? அழகான, ஆரோக்கியமான, ஒழுக்கமுள்ள, அறிவுத் திறனுடன் கூடிய மூன்று பிள்ளைகள். என்னையன்றி உலகின் மற்றெதையும் முக்கியத்துவப்படுத்தாத அன்பான மனைவி. போதுமான பொருள் வளம். ஒரு மனிதனின் மகிழ்ச்சிக்கு இதற்கு மேல் வேறென்ன வேண்டும்!

ஓய்வு பெற்று மூன்று மாதமாகிறது. எவ்வளவு நாளைக்குத்தான் இந்தச் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து நாவல் வாசித்துக் கொண்டிருப்பது. இன்று அவளைக் கூட்டிக் கொண்டு எங்காவது வெளியில் சென்று வர வேண்டும். மனதுக்குள் உசும்பும் பசுமைத் தடங்களை மோகம் வழிய அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளையும் வீட்டு நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டியுள்ள சம்பிரதாயக் கடமை, அவளுக்கும் எனக்குமிடையிலான நெருக்கத்தில் சிறு விரிசலை உண்டாக்கி விட்டதோ என்ற கவலை இருவர் மனதையும் சங்கடமாய் அரித்துக் கொண்டிருக்கிறது. அந்த அரிப்பைத் தடுத்து நிறுத்துவதில் இருவரும் காண்பித்து வரும் அலட்சியத்திற்கு என்ன காரணம்! எனக்குத் தெரியவில்லை. அவளிடம்தான் அது பற்றிக் கேட்க வேண்டும். எனக்குத் தெரியாமற் போய்விடும் பல விடயங்கள் பற்றி நான் அவளுடன்தான் கலந்துரையாடுவேன். ஆலோசனை கூறுவதில் அவள் கில்லாடி. அதனால், எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அவளது ஆலோசனை என்பதற்காக அதனை நான் விரும்பி அங்கீகரிப்பேன். 

மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. 

கதிரையிலிருந்து எழுந்து, மகளை வரவேற்க முன்னறை நோக்கி நடக்கிறேன். 

No comments:

Twitter Bird Gadget