Saturday, June 25, 2011

உணர்வுகளை அறிக்கையிடல்


அவனைப் பற்றி நான் எழுதுவது இதுதான் முதல் தடவை. இயல்பாகச் செருகப்பட்டுள்ள மனிதாபிமானக் கழிவிரக்கம்தான் திடீரெனக் கிளர்ந்து, இது வரை காலமும் ஏற்படாத புதுவித தைரியத்தையும் உணர்ச்சிப் பிரவாகத்தையும் என்னில் ஏற்படுத்தி விட்டதென்பது, எனது எழுத்து பற்றி நான் கொண்டுள்ள கருத்து.

குழந்தைகளைப் போல் வாழ முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவன் மட்டும் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். தாயிடம் பாலருந்துவதில்லை; தரையிலே தவழ்ந்து விளையாடுவதில்லை; மழலை மொழி பேசுவதில்லை; பாற் பற்கள் விழச் சிரிப்பதில்லை. குழந்தையின் நிர்ப்பந்தமான இந்த இயல்புகளையெல்லாம் முற்றாகப் புறக்கணித்து விட்டு அவன் இன்னும் குழந்தையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது அதிசயம்தான். அந்த அதிசயமும் அவ்வூரைப் பொறுத்தவரை மிகச் சாதாரண நிகழ்வுகளிலொன்றாய் ஆகிப் போனமைக்கு, அவனது குழந்தைத்தனத்தின் தொடரிருப்பினூடாக அதிர்ந்து விழுந்த எரிச்சலும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

பூவிழுந்து காயம்பட்ட இராப்பொழுதின் இருளுக்குள்தான் அவனது பிரகாசம் ஒழிந்திருந்தது. வாழ்வின் எச்சங்கள் உதிர்த்து விட்டுச் சென்ற வரவேற்பின் போர்வைக்குள் அவனது எதிர்காலம் சுருங்குவது கண்டு யாருக்கும் பரிதாபம் தோன்றியதில்லை. அவனை ஒழித்துக் கட்டிவிட்டால்தான் வீதி மருங்குகளில் அழகான பூக்கள் மலரும் என்ற அவர்களது முடிவொன்றே அவனது வாழ்க்கையைக் கசக்கி நுகரப் போதுமாயிருந்தது.

அவன் கண் பார்வையற்றவனல்லன்; இருந்தாலும், காட்சிகளில் படியும் அச்சுறுத்தல்களை மறக்கக் கண்களை மூடிக் கொள்வது அவனுக்கு வாடிக்கையாயிற்று. புலர்ந்து ஒளிரும் பகலின் வெளிச்சங்கள், தேவையற்ற பீதியையும் திடுக்கத்தையும் அவனில் உதறும் போது, அவனால் காயங்களைப் போர்த்திக் கொள்ள முடிவதில்லை. வெகு அவதானமாக அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடி ஓசையும் பின்தொடரும் நெருப்பு ஜுவாலையை நினைவுறுத்தி அவனது மன ஓர்மங்களைக் கொன்று விடும்.

இதுவரை அவன் தனக்காகப் பரிதாபப்பட்டதில்லை. அது பற்றிய பூரண அறிவும் தெளிவும் அவனுக்கில்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். விடியலின் பூசி மெழுகப்பட்ட பாத்திரங்களாய் பளபளக்கும் மறைவான தன் இதயம் குறித்த பெருமிதம் மட்டும் அவனுக்கு நிறையவே உண்டு. அவனுக்கு மிகப் பிடித்தமான விடயங்கள் எல்லாம், அவன் விரும்பினாலும் வெறுத்தாலும் அவனுடனேயே நிலையாக இருப்புக் கொண்டு விடுவதால் எந்தப் பொருளையும் விரும்புவதற்கு அவன் மறுத்து விடுவான்.

தனது தனிமையின் கொதிப்பை நீக்க வந்த எல்லா வகையான ஆதரவுக் கரங்களையும் தட்டிவிட்டமை பற்றி, அவன் சிலவேளைகளில் வருந்தியதுண்டு. தனக்கென்று விதிக்கப்பட்ட வாழ்க்கையை எவரும் பறித்து விட முடியாது என்ற எண்ணத்தில் துளிர்விட்ட ஜீவன்கள்தான் அவனது உடலை நிமிர்த்தி வைத்துள்ளன.

பச்சைக் கண்ணாடி அணிந்து உலகத்தை வெறித்துப் பார்க்கும் பாவங்களெல்லாம் அவனுக்குப் பழக்கமில்லாதவை. அவனது இமை முடிச்சுகளின் ஓரத்தில் துளிர்விட்டுச் சிரிக்கும் எதிர்பார்ப்புகள், அவனது தனித்துவத்தை உறுதிப்படுத்தும் பகிரங்கமான அடையாளங்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் என்றால், அவனை ஆதரிப்போர், எள்ளி நகைப்போர், அன்பைப் புதைத்தோர், ஆன்மீகம் செழித்தோர், கொடுத்துதவுவோர், கொள்ளையடிப்போர் எல்லோரும்தான்.

கண், மூக்கு, வாய் என்பவற்றை விட சிரிப்பு என்பதுதான் அவனது முகத்தின் நிரந்தரமான உறுப்பாய் இறுகிப் போனமைக்கு அவனது இயலாமையைக் காரணமாகக் குறிப்பிட முடியாது. அந்தச் சிரிப்பு தொடர்பாக அவன் பெருமையையோ இழிவையோ உணர்ந்ததில்லை. சுற்றி நிகழும் மனிதக் குவியல்களின் பெருமூச்சு உஷ்ணங்கள், அவனது மனதின் குளிர்மையை எப்போதும் தடைசெய்து வந்துள்ளன. ஓர் எல்லை வரை அவன் பொறுத்துப் பார்த்து விட்டான். பொறுமை தவறிய போது, மூளையைக் கசக்கிப் பெருமூச்சுகளை மூட்டையாகக் கட்டித் தன் அமானுஷ்யக் குளிர்மையினால் அவற்றைக் கொல்லத் தீர்மானித்தான். ஆனால், அது அவ்வளவு இலகுவானதாக அவனுக்கிருக்கவில்லை. ஏளனங்கள், எதிர்ப்புகள், வன்முறைக் கட்டவிழ்ப்புகளையெல்லாம் சமாளித்து நெஞ்சுத் துணிவுடன் அவன் முகம் நிமிர்த்திய போது, வெற்றி அவன் பாதங்களை முத்தமிட்டுச் சரணடைந்தது.

அவன் முதன் முதலாகச் சந்தித்த சுகந்தமான தென்றலை நுகர மறுத்து முரண்டு பிடித்தமைக்கான காரணத்தை பல தசாப்தங்களாக மிக இரகசியமாகவே வைத்திருந்தான். ஆசையுற்ற எல்லாத் தேவைகளையும் அனுபவித்து விட்ட சலிப்பில் வாழ்வில் ஒரு பிடிப்பற்றுப் போய்விட்ட வெறுமை நிலையையுணர்ந்து, எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமலே, தன் முரண்பாடு தொடர்பான விளக்கத்தை அண்மையில் அறிக்கையாக வெளியிட்டான்.

அவனது அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில வரிகள் இவை: "இதழ் விரிந்தால் பூ மலரும். முகில் கறுத்தால் மழை கொட்டும். மனம் உயர்ந்தால் புவி செழிக்கும். முகம் சிரித்தால் கரு தளைக்கும். ஆதியும் அந்தமுமற்ற உயிரைத் தேடி ஓடுகின்றேன். தூரத்தே, தன் அலகினால் பறவை அறுத்து விழுத்திய அழகின் தளிர் என் பின் மண்டையை உரசுகின்றது. தென்றலுக்குக் காய்ச்சல் தொற்றி மணலெங்கும் உருண்டு புரளுகின்றது. உயிரணுக்களில் ஜீவகளை தோற்றுப்போன பல்லாண்டு காலப் பரிதாபமும், சொத்து மதிப்பை வரையறுத்துக் கொள்ள முடியாத சோகமும் விழிகளில் வழிகின்றன. கருமை மட்டும் மாறாமல் நிலைத்து நிற்கிறது. மர நிழல்களிலும் மனக்குகைகளிலும் படிந்துள்ளது வெறும் சந்தம் மட்டுமல்ல. உயிர் உசும்பும் தொட்டில்களில் மரணம் வாழ மறுப்பதில்லை என்பதை விட, மரணத்தைக் கண்டுதான் தன் உசும்பும் செயற்பாட்டை உயிர் மறைத்துக் கொள்கிறது என்பது பொருத்தமாயிருக்கும். சிந்தனை முட்டிய வார்த்தையின் கதறல்களில் விகசிப்பு எப்போதும் எஞ்சியிருக்காது. சாவிலும் பிரகாசம் ஒளிரும் அமாவாசைச் சூரியன் போல், மனதின் வதைக்குள் உயிர் நெளியத் துருத்திக் கொண்டிருக்கிறது என் கலையுணர்வு. அது எப்போதும் பிடிவாதத்தின் முரட்டுப் பிடிக்குள் கழுத்து நெரியத் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த உணர்வு உயிரோடிருக்கும் வரை என் சுய விருப்பு வெறுப்புகளை நான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இது கடமைக்காகச் செய்வதன்று. நொந்து போவதென முடிவெடுத்து விட்டால் நூலும் துணைக்குத் தேறிவிடும். அருகிலுள்ள பசுமை பயன்படுகிறது, என் பாதங்களை வலி அணுகாமல் பாதுகாத்து, தொலைவில் தெரியும் என் நிச்சயமற்ற ஆசைகளைத் தேடி ஓடுவதற்கு"

அவனது நீளமான அந்த அறிக்கையின் மத்திய பகுதி மிக ஆபாசமானது. அந்தரங்க உறுப்புகளினதும் அடையாள உறுப்புகளினதும் இயல்புகளை மாற்றிக் கொள்ளும் நிகழ்வும், புணர்ச்சி உள்ளீடு தொடர்பான நவீன கருத்துகளும் எவ்விதத் தயக்கமுமின்றிப் பச்சையாக விளக்கப்படும் அதன் பண்பு, 15 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பார்க்கக் கூடியதாகவுள்ளது. கடந்த காலத்தின் பாலியல் விவகாரங்களை விமர்சன ஆவேசம் தழுவிக் கொள்வது பழைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமானதல்ல என்ற அவனைத் தவிர்ந்தோரின் ஏகோபித்த கருத்தை அவன் இன்று வரையும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. இருந்தாலும் அந்த மத்திய பகுதி தணிக்கை செய்யப்பட்டு விட்டது. அது அவனை எரிச்சலில் ஆழ்த்தியிருக்கக் கூடும். இந்தக் கதையும், அந்தத் தணிக்கையை ஆதரிப்பது போல் அமைந்து விட்டமை, அவனது எரிச்சலை மேலும் அதிகப்படுத்தி விடலாம். ஆனால் நான் அதற்காக கொஞ்சமும் அஞ்சப் போவதில்லை. ஏனெனில், அவன்தான் இப்போது உயிரோடில்லையே.

அறிக்கையின் இறுதிப்பகுதி மிகவும் சோகமானது. வாசிப்போர் எல்லோருடைய இதய முடிச்சுகளையும் மிகத் துல்லியமாக அவிழ்த்துக் கண்ணீரைச் செருகிவிடும் வலிமையான கூர்மையை அது கொண்டிருந்தது. நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஓரளவுக்கேனும் அதனைத் தமிழாக்கம் செய்ய என்னால் மகிழ்ச்சியுடன் முடிந்தது. "அவனது வரிகளில் சோகத்தின் சுகந்தம் இருக்கிறது; அவற்றை மொழிபெயர்த்த உனது வரிகளிலோ குழப்பத்தின் எரிச்சல் இருக்கிறது" என்பதாக இரண்டையும் ஒப்பிட்டு வாசித்துப் பார்க்கக் கோரப்பட்ட என் பால்ய நண்பனொருவன் கூறிச் சென்றது என்னைத் திடுக்கத்தில் ஆழ்த்திற்று. மொழிபெயர்த்ததில் தவறா, அல்லது மொழிபெயர்ப்புப் புலமையில் பலவீனமா என்பதை இன்னும் அனுமானித்துக் கொள்ள முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

அவனது அறிக்கை, சொல்லாடலிலே கருத்துரைப்பிலோ அவ்வளவு கடினமானதல்ல. உணர்வுகளைப் பட்டியல்படுத்திப் பார்வைக்கு வைக்கும் போது, ஒவ்வோர் உணர்வின் நிழலும் இரத்தம் உறைந்த கருஞ்சிவப்புக் கட்டியாய் இருப்பதைக் காணும் போது சோகமும் அழுகையும் பீறிடுவது இயற்கையானதே. அனுபவித்து எழுதுவதில் ஒரு வீரியம் இருக்கத்தான் செய்கிறது.

புலி வேட்டையாடிய மான் கொம்புகளுக்குக் கொஞ்சமும் கவலை இல்லையாம். இரத்தம்தான் உலக நியதிகளையெல்லாம் வடிவமைக்கின்றது. கலையழகும் நுணுக்கமும் இல்லாவிட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பூமியை இறுக்கமாகச் சுற்றிப் படர்ந்துள்ளது. அஸ்தமனத்திற்குப் பின்னரான சூரியன்களின் கொடுமையை விட இது கடியது. அதனால்தான் இரவின் இருளுக்குப் பிடிக்காத ஒன்றாய் பகலின் சூரியன் அதன் உற்பத்திக் காலம் தொட்டு இருந்து வருகின்றது. இரண்டு முகம் காட்டுவது மிக வெறுப்பான பணி என்பதற்கு இது சிறந்த ஆதாரம். இது போன்ற ஆதாரங்களின் நுனிப்புற்களைப் பிடித்துக் கொண்டுதான் அவன் இதுவரை காலமும் மேலே மேலே சென்று கொண்டிருக்கிறான். தடை ஏற்படுவதில்லை என்பதும், தடுக்க யாருமில்லை என்பதும் மிகப் பெரும் கர்வமாக அவனது சிரிப்பிலும் ஏனைய செயல்களிலும் இறுகிப் போயுள்ளது. கடந்து வந்த பாதையின் கரடுமுரடான சந்துகள் அவனில் திடமான நகர்வுக்கான ஆளுமையை ஏற்படுத்தி விட்டிருந்தமை அவனது கர்வத்தை மேலும் அதிகப்படுத்திற்று.

சூழலை அளவிடும் பலமான கருவியைத் தலைக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஏனையோர் தலைகளிலிருந்து அவற்றைப் பிடுங்க முயற்சிக்கும் அவனது செயலின் கொடூரத்தை யாரும் பூரணமாக உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அபிமானம் குறைவதாகத் தோன்றும் காலங்களில், கலாசார அடையாளத்தை முன்னிறுத்திப் பல்லிளித்துப் பாசாங்கு செய்யும் அவனது வரண்ட முகத்தில் எவ்வாறேனும் பசுமையைக் கண்டுபிடித்து விடுவர் சுற்றியிருக்கும் மூக்குறுஞ்சிகள். அவனது அறிக்கையை - புத்தகப்பொதி சுமக்கும் கழுதைகள் போல் - தலையில் சுமந்து சென்று, ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச விநியோகம் செய்வர். சிரித்தால் சிரிக்க, அழுதால் அழ, தும்மினால் தும்ம என ஆதரவணி பெருகப்பெருக அவனது தலைக்கனம் மெருகேறி அழகு பொங்கிற்று. சுற்றியிருந்தோரைத் தவிர மற்றெவரும் ரசிக்க முடியாத அழகாய் அது ஆகிப் போனமை குறித்து அவன் கொஞ்சமும் கவலைப்பட்டதில்லை.

நன்மையை ஆதரிக்கும் உணர்வுதான் இயற்கையானது. அதைத் தலையெடுக்க விடாமல் தடுப்பதற்கு பலகோடி உணர்வுகள் உண்டு. ஆனாலும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த நல்லுணர்வு வெளிப்பட்டு உலகைத் தூக்கி நிறுத்தும். இந்தத் தத்துவம் அவன் அறியாததல்ல. இருந்தாலும், அந்த உணர்வு தலையெடுக்கையில், அதைத் தட்டி அடக்குவதற்கு ஏனைய உணர்வுகளை விட அவன் முந்திக் கொள்வான். அதற்கொரு காரணமும் இருந்தது. ஆனால் அவன் யாருக்கும் அதைச் சொன்னதில்லை. எனக்கும் கூடத்தான். அதனால் அது என்ன காரணமென்று எனக்கும் தெரியவில்லை.

தோட்டாக்களை உட்கொண்டிருந்த துப்பாக்கியன்று இருளின் மத்தியிலிருந்து இயங்கிற்று. அவனது நெற்றிப் பொட்டில் நெருப்புக் குருதியைச் சிதறச் செய்து உறுமிற்று. அவனது உணர்வு வேர்கள் பட்பட்டென்று ஒவ்வொன்றாய் அறுந்து விழ, வேரோடு பிடுங்கப்பட்டாற் போன்று உயிர் அந்தரத்தில் தளர்ந்து வாடிற்று. பரிதாபமுறுஞ்சும் அநாதை போன்று தன்னந்தனியே அவன் விடைபெற்றுக் கொண்டான்.

இப்படியரு அசம்பாவிதம் நடக்கும் என்பதற்காகத்தான் இதுவரை காலமும் ஏனைய உணர்வுகளைக் கொண்டு தன் ஓர் உணர்வை அவன் அடக்கி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது சோகம் என்னைக் கடித்துக் குதறிற்று.

இப்போது, அவனது அறிக்கையின் சோகமான இறுதிப்பகுதியை அதன் இயல்பு மாறாமலும், பெறுமானம் பிசகாமலும் என்னால் மொழிபெயர்க்க முடியுமெனத் தோன்றுகிறது. ஆனால் நான் அதற்குத் தயாராகயில்லை. ஏனெனில் எல்லோரும் போன்று இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ வேண்டுமென நானும் விரும்புவது நியாயம்தானே.

தன் நினைவுகளை எச்சமிட்டு விட்டு அவன் அழிந்து விட்டான். பூமிக்கும் வானுக்கும் இடையிலான தாழ்வையும் உயர்வையும் சந்தித்துப் புகழ்பெற்றவன் என்ற வகையில் அவனது வரலாறு ஊரின் ஒவ்வொரு சுவரின் வயிற்றிலும் மின்கம்பங்களின் தலையிலும் தொங்கிக் கொண்டிருக்கும் போது, அவனை எனது எழுத்துக்குள் கொண்டு வராது இருந்து விட்ட இதுவரை கால என் வாழ்க்கை குறித்து எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருக்கவே செய்கிறது. அடிமைத் தோற்றத்தில் புரட்சியின் வரைபடங்களைச் செதுக்கிய அவனது வரலாறு மிகவும் விமர்சனத்துக்குரியது. அதனால் அவனைப் பற்றி நான் எழுதுவது இதுவே முதல் தடவையாய் இருப்பது போல் இதுவே கடைசித் தடவையாயும் இருக்கலாம்.

1 comment:

ARIVU KADAL said...

அருமையான கருத்து பகிர்வுக்கு நன்றி

Twitter Bird Gadget