Thursday, July 1, 2010

நாம் ஏன் வலிமையிழந்துள்ளோம்?



நாம் ஏன் வலிமையிழந்துள்ளோம்? நாம் ஏன் பின்னடைவுக்குட்பட்டுள்ளோம்? நாம் ஏன் பலவீனப்பட்டுள்ளோம்? நாம் ஏன் பிளவுற்று நிற்கிறோம்? நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? நாம் ஏன் செயற்படத் தயங்குகிறோம்?

என்னுள் எழும் இத்தகைய கேள்விகள் மிகுந்த வலியையும் கவலையையும் என்னுள் கிளர்த்தி விடுகின்றன.

வல்லரசுகள் தங்கள் பொருளாதாரத்தையும் ஆதிக்கத்தையும் பெருக்கவும் நிலைநிறுத்தவும் எதையும் செய்யத் துணிந்து விட்டன. பல்லாயிரம் படுகொலைகள், பல கோடி மோசடிகள், நம்பிக்கைத் துரோகங்கள் என்பவற்றினூடாக அவை தமது ஏகாதிபத்திய தாகத்தைத் தணித்துக் கொள்ள முனைகின்றன. 

இந்த ஆதிக்க சக்திகளின் கொடும்பிடி எம் சிந்தனையை எவ்வளவு தூரம் கெடுத்து வைத்திருக்கிறது!

நல்ல மனிதனாக இருந்தால் போதும். 


ஆளையாள் அடித்துக் கொள்ளும் குரூரம் எந்த மார்க்கத்திலும் போதிக்கப்படதல்ல.

பிறரைத் தூற்றிப் பேசித் தன் சட்டைப் பையை நிரப்பிக் கொள்ளும் இழிவு என்றும் வரவேற்புக்குரியதல்ல. 

நாம் சிந்திக்க மறுக்கிறோம். 

அல்லது இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைப் பொட்டலங்கள் எம்மைச் சுயமாகச் சிந்திக்க விடாது தடுக்கின்றன. 

வலிந்து திணிக்கப்படும் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எமது கையைக் கொண்டே எமது கண்ணைக் குத்துகின்றன. 

நாம் சாதித்து விட்டோம் எனப் புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றோம். 

நாம் ஏமாந்து விட்டதை உணர்ந்து அவர்கள் இறுமாப்புற்றுச் சிரிக்கின்றனர்.

எத்தனை நாட்களுக்கு ஒரே பல்லவியை நாம் பாடிக் கொண்டிருப்பது?

எமது ஒற்றுமையைக் குலைப்பதொன்றையே நோக்காகக் கொண்ட ஆதிக்கக் கும்பல்களின் சதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

எம்மை நாமே பலவீனப்படுத்தி பரவசமடைந்து கொள்ளும் அறியாமையின் கருநிழலிலிருந்து நாம் விடுதலையாவது எப்போது?

பெறுமதியற்ற அற்ப விடயங்களுக்காக உடன்பிறந்த சகோதரர்களையே உக்கிரமான பகைவனாக நோக்கும் எமது உண்மையான வழிகேட்டிலிருந்து நாம் நேர்வழி பெறுவது எப்போது?

சிந்தனைகளைத் தட்டி விடும் பெறுமதியான மூலாதாரங்களை வைத்துக் கொண்டே, வக்கிரச் சிந்தனைகளை இரவலாகப் பெற்றும் பயன்படுத்தும் எமது அடிமை நிலையிலிருந்து நாம் சுதந்திரம் பெறுவது எப்போது?

சிந்தியுங்கள் சகோதரர்களே!

No comments:

Twitter Bird Gadget