Tuesday, June 15, 2010

தூற்றிப் பேசலும் துதி பாடலும் பற்றிய கதை

(01)

தொந்தி வயிறு, தொங்கும் கழுத்து, கறுத்த விகாரமான முகம், காவி படிந்த கோரப் பற்கள், பழுப்பேறிச் சிவந்த கண்கள். இப்படியான ஒருவரிடம், அவரது எருமை மாட்டுப் பாரத்தைத் தாங்கும் கட்டில் மெத்தையின் கீழ் நசிபட்டுக் காலந்தள்ளுவதென்றால் யாருக்குத்தான் வெறுப்பேற்படாது. நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா? இரண்டு வாரங்களாக வெறுப்புடன் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன். என்னை மீட்டுச் செல்ல யாரும் வரவில்லை. பக்கத்திலிருப்பவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். என்னை விடப் பத்து மடங்கு பெரியவன் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் தலைக்கனம் அதிகம்தான். அடிக்கடிக் கைமாற்றப்பட்டு அலைக்கழியும் எரிச்சல் மிகு வாழ்க்கை அவனுக்கில்லாதிருந்ததற்கு, அவனது இந்தப் பெரியதனமும் ஒரு காரணம். மானுடத்தின் ஏற்றத்தாழ்வுகளெவையும் அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், கொழுத்த வயிறுடையவர்களும், அவர்களது குளுகுளு வாழ்க்கையும்தான்.

என் நிலைதான் பரிதாபமானது. ஒரு நாளில், கணக்கின்றிக் கைமாறித் திரிகிறேன். வியர்வை வாடையையும், கண்ணீர் உவர்ப்பையும் அடிக்கடி அனுபவிக்கிறேன். வெயிலின் அகோரத்திற்கும், மழையின் ஈரத்திற்கும் பலியாகிப் பலவீனனாகிறேன். அழுக்குக் கைகளில் கசக்கப்பட்டு, துர்வாடைப் பைகளுள் திணிக்கப்பட்டு சுருக்கமும் கிழிவுமாய்ச் சோபையிழக்கிறேன்.


ஆனாலும், எனக்கென்றொரு மதிப்புண்டு என்பதையிட்டு என்னுள் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கத்தான் செய்கின்றன. இல்லையென்றால், எவ்வளவுதான் அழுக்காயிருந்த போதும், என்னை மடித்துச் சட்டைப்பையில் பத்திரப்படுத்துவார்களா? எவ்வளவுதான் கசங்கியிருந்த போதும் கட்டுக்குலையாமல் அலமாரியில் அடுக்கி வைப்பார்களா?

நேற்றுக்கூட, பெயின்ட் வாசனை மாறாத புது அலமாரியன்றில்தான் என்னையத்தவர்களுடன் அடுக்காயிருந்தேன். பக்கத்திலிருந்த தங்க நகைகளெல்லாம் என்னைப் பார்த்துச் சினேகமாய்ப் புன்னகைத்தன. வெளிச்சம் புகாத அந்த இருட்டிலும் தம் பளபளப்புக் காட்டிப் பிரகாசித்தன. “என்ன நூறு! சௌக்கியம்தானே?” என அவை கேட்ட போது, நான் சோகமாகச் சிரித்து வைத்தேன். என் போன்ற பலரை இழந்தால்தான், அவை போன்ற ஒன்றை வாங்க முடியும் என்பது அவற்றுக்கும் தெரிந்திருந்தன. அருகில் ஆயிரங்கள் பல அடுக்கப்பட்டிருந்த போதும், அவற்றை விடுத்து என்னுடன் அவை பேசியது எனக்குக் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. அந்தப் பெருமையில் நான் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அலமாரியின் கதவு திறக்கப்பட்டு, மேலிருந்த நான் உருவி வெளியே எடுக்கப்பட்டேன். இரண்டு நாட்களாகப் பழகியவர்களுடன் விடை பெற்றுக் கொள்ளவும் அவகாசமின்றி வெளியே வந்து விழுந்தேன். அலமாரிக் கதவைச் சாத்தித் தாளிட்டு, அது சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, தன் முரட்டு விரல்களிடை என்னை நசித்துப் பிடித்துக் கொண்டு செல்லும் அந்த மானுடன் மீது என் பார்வை விழுந்தது.

அரும்பு மீசை துளிர்த்திருந்த அவனது முகத்தில் மகிழ்ச்சி நிரம்பிச் சிதறிற்று. எதையோ சாதிக்கப் போகும் ஆர்வத் துடிப்பும், அதற்கான துணிவை முன்னிறுத்திய நெஞ்சுயர்வுமாக அவனைப் பார்த்த போது நான் மகிழ்ந்து சிலிர்த்தேன். மூப்புமின்றி முதிர்வுமின்றிப் பல தலைமுறைகளைக் கண்டவன் நான். முற்காலத்தை விட இக்காலத்தில் இளைஞர்கள் சுறுசுறுப்பாய்த்தான் இருக்கிறார்கள். திறமைகளைக் குவித்துச் சாதிக்கத் துடிக்கிறார்கள். களமும் வளமும் வாய்க்கப் பெற்றால், பாலைவனத்தில் கூடப் பயிர் செய்து நாட்டைச் செழிப்பாக்குவார்கள்.

சுவரில் கொழுவியிருந்த சட்டையன்றின் உட்புறப் பையில் அலமாரிச் சாவிக்கொத்தை மிகக் கவனமாக வைத்து விட்டுத் திரும்பினான் இளைஞன். இப்போது அவனது பார்வை என் மீது விழுந்தது. நன்றி கூறும் பாவனையோடு பார்வையால் என்னைத் தழுவினான். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஓர் இளைஞனின் சாதனைக்கு, அல்லது உழைப்புக்கு என்னாலும் ஒரு பங்களிப்பைக் கொடுக்க முடிகின்றதே. அதேவேளை, குறைந்த பெறுமதியுடைய என்னைப் பயன்படுத்தி அப்படி என்னதான் பெரிதாகச் சாதித்துவிட முடியும் என மனதின் ஒரு புறம் குத்திக்காட்டிய போது, மறுபுறமோ ஏன் முடியாது என வரிந்து கட்டிக் கொண்டு வாதிட எழுந்தது. பசியால் வாடும் ஏழைக்கு வயிறு நிறைய ஒரு வேளைச் சோறு போடலாம்; உடையளித்து அவனது குளிர்க்கொடுமையைப் போக்கலாம்; அவனது பிள்ளைக்கு கொப்பி, பேனா வாங்கிக் கொடுத்துக் கல்விக்குதவலாம்; பயன் தரும் மரச்செடியன்றை வாங்கி நட்டு வைக்கலாம்; ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அவசியமான உதிரித் தேவைகளை நிவர்த்தி செய்யலாம்; அறிவுக்கு உரமூட்டும் சிறந்த நூல்களை வாங்கிப் படிக்கலாம். இப்படி எவ்வளவோ பயன்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்யும் ஆளுமை எனக்குள்ளதை யார் மறுக்க முடியும்? ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப என்னைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறிருக்க பெறுமதி குறைந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மை எதற்கு? சிறு துளிதானே பெருவெள்ளமாய்ப் பெருக்கெடுக்கிறது.

இளைஞன், மற்றோர் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அது அவனது படுக்கையறையாக இருக்க வேண்டும். உள்ளே தொலைக்காட்சிப்பெட்டி, வானொலிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி என - இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் அத்தியாவசியத் தேவையாய்ப் போன - எல்லாத் தளபாடங்களும் இருந்தன. அவை எனக்கு வியப்பைத் தரவில்லை. மிகச் சௌகரியமாகக் கைகளை விரித்து மல்லாந்து படுத்துக் கொள்ள வசதியான அழகான இரட்டைக் கட்டிலொன்று அங்கிருந்ததும் எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆனால் அந்தக் கட்டிலின் மீது வாய் நிறையப் புன்னகையோடு அமர்ந்திருந்த யுவதியருத்தியைக் கண்ட போதுதான் எனக்கு வியப்புத் தோன்றிற்று.

அளவான உறுப்புகளுடன் எடுப்பாக இருந்த அவளது முகத்தில் சோகத்தின் தழும்புகள் ஆழப்பதிந்திருந்த போதும், அதனை மறைக்கும் பிரயத்தனமாகப் போர்த்தியிருந்த முகமலர்ச்சி அவளில் செயற்கைத்தனமான அழகை சிந்திக் கொண்டிருந்தது. இளவயதுத் திரட்சியையும் மீறிய தாய்மையின் நெகிழ்ச்சி அவளது நெஞ்சில் சோர்வுற்று வடிந்திருந்தது. அவன், கடுமையான மோகக் குறியுடன் அவளை நெருங்கித் தன் கையில் வைத்திருந்த என்னை அவளிடம் கொடுத்தான். அவள் ஆர்வமாக என்னைப் பெற்றுத் தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டாள். அவன், அவளது காதில் கிசுகிசுத்தான். அவள் கூச்சப்படுவதாய்ச் சிரித்து முகத்தை மூடினாள். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு கட்டிலில் புரளத் தொடங்கியதும்தான் எனக்கு எல்லாம் புரிந்தது. ச்சீ... என மனம் அருவருத்துக் காறித்துப்பிற்று. என்னைப் பயன்படுத்தித் தன்னைச் சீரழித்துக் கொள்ளும் அவனையும், எனக்காகத் தன் பெண்மையைக் கெடுத்துக் கொள்ளும் அவளையும் பற்றி மனதுக்குள் குமுறிய வெறுப்பை விட, இந்தக் கேடுகெட்ட செயலுக்கு நான் துணையாகிப் போனேனே என்ற விரக்திதான் என்னை அதிகமாகத் தாக்கிற்று.

இப்படியான துரதிர்ஷ்ட நிலை தமக்கு அதிகம் நிகழ்வதாக ஐநூறுகளும், ஆயிரங்களும் என்னிடம் சொல்லும் போது, அவற்றின் பாவனையில் தெரியும் முகச்சுளிப்பைக் கண்டு, இது அதிகப்படியான உணர்ச்சியென நான் அப்போது அலட்சியப்படுத்தியிருக்கிறேன். ஆனால், அவற்றின் அதீத முகச்சுளிப்பிலிருந்த நியாயம் இப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.

இதற்கு முன்னர், சீரழிந்த சில இளைஞர்கள் என்னைப் பயன்படுத்தித் தம் போதைவஸ்துத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். சினிமாவிலும், விளையாட்டுத் திடல்களிலும் தம் பெறுமதிமிக்க நேரத்தை விரயமாக்கியுள்ளனர். அப்போதெல்லாம் கூட நான் இவ்வளவு அதிகமாக வேதனையை உணர்ந்து நெளிந்ததில்லை. வேதனையும் அருவருப்புமாகச் சங்கடத்தில் உழலும் இப்போதைய இவ்வனுபவம் தீர்க்க முடியா கோர நோயாக உடலுள் புகுந்து உயிரை வாட்டிற்று.

உதிர்ந்து கிடந்த தன் உடைகளை அள்ளியெடுத்து உடலில் பொருத்திக் கொண்டு, என்னை ஒரு தடவை தடவிப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு, மல்லாந்து கிடக்கும் அவனிடம் விடைபெற்று வெளிப்பட்டாள் யுவதி. அவளது உடலில் ஒருவிதப் பதற்றம் தொற்றியிருந்தது. வேகமாக நடந்தாள். வாகன இரைச்சல்களுக்கு மத்தியில் வீதிகள் பலவற்றைக் கடந்து சந்தொன்றிலிருந்த குடிசைக்குள் கால்பதித்தாள். உதிர்ந்த சருகுகள் ஒட்டி நிமிர்த்தப்பட்டாற் போலிருக்கும் அந்தக் குடிசைக்குள், அவளது இளவயதுத் தோற்றத்தினளாக சிறுகுழந்தையன்று படுக்கையில் மல்லாந்து பலவீனமாய்ப் போர்வைக்குள் சிணுங்கிக் கொண்டிருந்தது. அது அவளது மகளாக இருக்க வேண்டும். உள்ளே நுழைந்த வேகத்தில் வாரியணைத்துக் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு விம்மினாள் அவள். ஒரு வயதும் பூர்த்தியடைந்திராத அக்குழந்தை, தாயின் அரவணைப்பை உணர்ந்து பரிதாபமாய்ச் சிணுங்கி, தலையை அவள் மார்புக்குள் புதைத்துக் கால்களைச் சோர்வுடன் உதைத்துக் கொண்டு உசும்பியது. கொதிநீரைக் கவிழ்த்து விட்டாற் போல் குழந்தையின் உடலுஷ்ணம் அவளைத் தாக்கிற்று. அழுதழுது சோர்ந்திருந்த அதன் கண்களின் நிறமும், அதன் கால் புண்ணிலிருந்து வழியும் இரத்தத்தின் நிறமும் அபாயச் சிவப்பாய் அவளது உள்ளத்தை மிரட்டின.

அவளது கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்த்துளி குழந்தையின் கன்னங்களில் வழிந்து சிதறிற்று. அநாதையாய்த் திரிந்தவளை ஆதரிக்க முன்வைந்து, முப்பது நாட்களில் மோகம் தீர்ந்து காணாமல் போன தனது உத்தியோகப்பற்றற்ற கணவனைப் பற்றியும், அவன் தோற்றுவித்துச் சென்ற தனிமையின் கொடுங்கரங்களில் சிக்கித்திணறும் தன் வாழ்க்கை அவலத்தைப் பற்றியும், சிணுங்கிக் குழையும் தன் குழந்தைக்கு எடுத்துக் கூறிக் கண்ணீர் வடித்தாள் அவள். தனதும் குழந்தையினதும் பசியைப் போக்க, பிறன் பசியைத் தீர்க்கும் அருவருப்புச் செயலைத் தன் தொழிலாகக் கைக்கொண்ட காலம் முதல், வயிற்றுப் பசிக்குத் தற்காலிக ஓய்வு கொடுத்தனுப்பி விட்டுள்ளதையும் நினைவு கூர்ந்தாள். அவளது கண்களிலிருந்து துயரத்தின் வடுக்கள் நீராகக் கொட்டிக் கொண்டிருந்தன. அவை அவளது நெஞ்சில் வடிந்து, துயரின் உஷ்ணக் கொதிப்பில் பொசுங்கிக் கருகின.

பார்த்துக் கொண்டிருந்த எனக்குக் கண்ணீர் முட்டிற்று. சற்று முன் அவளது துர்ச்செயல் குறித்து, அவளைக் கரித்துக் கொட்டிய என் மனம், இப்போது அவளது நிலை குறித்துப் பரிதாபத்தில் விம்மியது; அவளுக்கு உதவி செய்யக் கிடைத்துள்ள வாய்ப்பையிட்டுத் திருப்தியுமடைந்தது. அதேவேளை, ஒரு பெண்ணை இத்தகைய கொடுந்தனிமைக்குப் பலியாக்கிவிட்டுச் சென்ற அந்த ஆண் மகன் குறித்துக் குரோதமும் வஞ்சமும் என்னுள் கிளர்ந்தெழுந்தன. சித்திரவதை செய்து கொல்வதை விடக் கொடிய செயலொன்றைப் புரிந்த அவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போலவும், நெருப்பிலிட்டுக் கருக்க வேண்டும் போலவும் கோபத்தில் ஆன்மா அலறிற்று.

அவள், குழந்தையை அணைத்துக் கொண்டு குடிசையிலிருந்து வெளிப்பட்டாள். பரபரப்பாக இருந்த தார்ச்சாலைகளை மிக அவதானமாகக் கடந்து சென்றாள். சற்று தூரம் சென்றவள், திடீரென ஸ்தம்பித்து நின்று, முன்னால் சென்று கொண்டிருக்கும் காரை, புருவங்களை நெறித்துக் கூர்ந்து நோக்கினாள். அவளது உடலில் ஒருவிதப் பதற்றம் தொற்றிக் கொண்டது. எதிர்பார்ப்பின் ஆளுகைக்குள் உதறிக் கிளறும் உணர்வா, பலநாட் பொறுமையைத் தளர்த்தி வெடிக்கும் சீற்றமா எனச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத தவிப்புடனான பாவனை அவளது முகத்தவிப்பைப் போர்த்திற்று. என்ன நினைத்தாளோ, ஏதோ உத்வேகம் வரப்பெற்றவளாய், அந்தக் காரைப் பின்தொடர்ந்து ஓடத்தொடங்கினாள் அவள். மூச்சு வாங்கிக் கொண்டே நீண்ட தூரம் ஓடினாள். ஒரு கையில் குழந்தையைத் தாங்கியவாறும், மறுகையில் சட்டைப் பையிலிருக்கும் நான் கீழே விழுந்து விடாதவாறு அழுத்திப்பிடித்தவாறும் ஓடினாள். அந்தக் கரைச் செலுத்திக் கொண்டு செல்பவன் மீது அவளது பார்வை வெறித்திருந்தது. அவன், அவளை ஏமாற்றிச் சென்ற கிராதகனாக இருக்க வேண்டுமென எனக்குத் தோன்றிற்று. அவள் மூச்சு வாங்க ஓடுவது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனை, அவள் பிடித்து விட வேண்டுமென்றும், அவளுக்கு நியாயமோ வாழ்வாதாரமோ கிடைக்க வேண்டுமென்றும் என் மனம் நெகிழ்ந்துருகிப் பிரார்த்தித்தது.

ஆனாலும் என் பிரார்த்தனை பலிக்கவில்லை. அவன், அவளைக் காணாமலேயே வேகமாகச் சென்று தொலைவில் மறைந்து போனான். நவீன இயந்திரம் பொருத்திய காருடன் போட்டியிட முடியாதென்ற உண்மையை உணர்ந்து, அவள் மூச்சு வாங்கிக் கொண்டே ஓட்டத்தைத் தளர்த்தி நிறுத்தினாள். கண்களில் நீர் உடைப்பெடுத்து வழிய வீதியையே வெறித்துப் பார்த்தாள். நொடிப்பொழுதில் அவளது கண்களில் தோன்றியிருந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் முற்றிய வெளிச்சம், அதே நொடிப்பொழுதிலேயே மறைந்து இருட் காடாயிற்று. பரிதாபம் அவளது முகத்தில் பற்றியெரிந்தது.

நெஞ்சைத் தடவித் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு வந்த வழியே செல்லத் திரும்பியவள், திடீரெனத் தன் முன்னால் தோன்றிய லொறியன்றைக் கண்டு மிரண்டு பின்வாங்கினாள். அதற்கும் தனக்கும் இடையிலிருந்த மிகச் சொற்ப இடைவெளியைப் பயன்படுத்தித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சுதாகரித்து நிமிர்வதற்குள், அந்த லொறி அவளை முட்டித் தள்ளிற்று. குழந்தையை அணைத்திருந்த நிலையிலேயே மிகத் தொலைவுக்குத் தூக்கியெறியப்பட்டுச் சுவருடன் மோதிக் கீழே விழுந்தாள் அவள். சற்று நேரத் துடிப்பின் பின், உடலை வருத்திய கொடிய வலி நீங்கிப் பிணமானாள். உச்சந்தலையிலிருந்து வழிந்தோடி வந்த இரத்தத் துளிகளில் சில முகத்தில் படர்ந்து மூச்சடங்கிய அவளது நாசித்துவாரங்களில் அடர்த்தியாய்க் குவிந்து இளைப்பாறின. மீதித் துளிகள், அவளது கைகளுள் சிறைப்பட்டுச் சுருண்டு கிடந்த அவளது குழந்தையின் கன்னங்களில் சிவப்புக் கோடுகளாய் விழுந்து வழிந்தன.

என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பதெற்கென்று ஒரு கூட்டம் கூடுமே, அந்தக் கூட்டம் அப்போதும் கூடியது. இறந்து கிடப்பவளின் வாழ்க்கை குறித்த விமர்சனங்களைக் காரசாரமாகத் தம்முள் பரிமாறிக் கொண்டது. அவளைத் தூக்கி அப்புறப்படுத்தவும் தயங்கிப் பின்வாங்கி நின்றவர்கள் மத்தியில், மூவர் முன்வந்தனர். இருவர் அவளையும், மற்றொருவன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு சென்று முச்சக்கர வண்டியன்றில் கிடத்தினர். அவர்களது சேவை உணர்வையிட்டு நான் கொஞ்சம் மகிழ்ந்தாலும், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவர்களில் ஒருவன், அவளது மேற்சட்டைப் பைக்குள் கையை நுழைத்துத் துழாவி, அழுத்தி, அதனுள்ளிருந்த என்னை உருவியெடுத்துச் சுருட்டித் தன் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு அப்பால் நடக்கத் தொடங்கினான்.

அவனது வியர்வை வாடை என்னைக் கடுமையாகத் துன்புறுத்திற்று. இறந்த பிணமாயினும், கறந்து வயிற்றை நிரப்பிக் கொள்வதிலேயே கண்ணாயிருக்கும் இந்த மானுட வர்க்கத்தின் மீது எனக்கு வெறுப்புத் தோன்றிச் சுடர்விட்டது. பிறர் துன்பத்தில் தாம் இன்பம் பெற முனையும் முரட்டுச் சுயநலனும், மற்றவர் சிரமங்களைச் சற்றும் இலட்சியம் பண்ணாத வரட்டுப் பிடிவாதமுமாக எக்காளமிட்டுச் சிரிக்கும் இக்கொடுங்கோல் வர்க்கத்திடை காலந்தள்ள வேண்டியுள்ள என் வாழ்க்கை குறித்து அன்றுதான் எனக்கு அதிருப்தியும் விரக்தியும் உண்டாயின.

காலில் அடி விழுந்தால் கண்கள் கலங்கி விடுகின்றன. மனதின் கவலையென்றால் உடலும் சோர்ந்து விடுகின்றன. இந்த உயிரியல் ஒற்றுமையைத் தம் நாளாந்த வாழ்க்கை முறையிலிருந்து எவ்வாறு ஒரு சமூகம் அப்புறப்படுத்திவிட முடியும்! வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றில்லாது, முழு வாழ்க்கையுமே அதுதான் எனத் தெரிந்தும் அது தொடர்பில் அலட்சியமாய் இருப்பது எவ்வளவு அநீதியானது! இத்தகைய கறைகளும், வேர்விட்டுள்ள களைகளும் முழுவர்க்கத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுக் குரூரமாய்ச் சிரிக்க இருக்கும் எதிர்காலப் பயங்கரம் என் மனக்கண்களை மௌனமாக மிரட்டிற்று.

அவன் கொஞ்ச தூரம் நடந்து சென்றான். வெறுப்புமிழும் கடினப் பார்வையால் நான் அவனை அளந்தேன். அவன், பார்ப்பதற்கு முரடனாய் இருந்தான். முகத்தில் வெட்டுக் காயத் தழும்புகள் அவனைப் பயங்கரமானவனாய் அறிமுகப்படுத்தின. இதற்குமேல், ஒரு சட்டை எவ்வாறு அழுக்கடைய முடியும்! இதைவிடவும் மோசமான உடல் வாடை உலகில் வேறெங்கு இருக்க முடியும்! தற்போது வெறுமையாயிருந்தாலும், ஏற்கனவே என்னென்னவோ பொருட்கள் திணிக்கப்பட்டு, அவற்றின் அழுக்குப் படிமங்களாய்க் கறையேறிக் கறுத்துள்ள அவனது சட்டைப் பைக்குள் நான் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தேன்.

நடந்து சென்றவன் ஒரு கடையின் முன்னால் நின்றான். அது ஒரு மதுபானக்கடை. உழைத்து வியர்த்தவர்களும், கறுத்துக் கண்கலங்கியவர்களும், முகத்தில் படரும் தாடி ரோமங்களையும் தாண்டித் துள்ளும் சோகத்தை மூசிக்கொண்டவர்களும், கைகளின் நடுக்கத்தை பிடித்திருந்த போத்தல்களின் உபயத்தில் மறைத்து உறுதியாக நிற்பதாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முனைபவர்களும் என சமூகச் சாக்கடைகள் நிரம்பி வழிந்த அந்தக் கடையின் முன்பகுதியில் தளர்ந்து உளறும் இருமற் குரல்களும், உயர்ந்து பணிந்து ஏற்றத்தாழ்வுகள் பேணிக் குளறும் அபயச் சத்தங்களும், அடுத்தவனுடன் சண்டையிட்டுக் கைகளை அசைத்து உறுமும் போட்டிச் சீறல்களும், கடனாகச் சில போத்தல்களை அல்லது அதன் பெறுமதியான தொகையைக் கேட்டு நச்சரிக்கும் அன்புக் கெஞ்சல்களுமாய் கடை மிரண்டு கொண்டிருந்தது. ஒவ்வொருவரது முகத்திலும் திருப்தியும், ஏளனப்புன்னகையும், எதையோ சாதித்துவிட்ட பெருமிதமும், எதற்குமே அஞ்சாத திமிர்ப்பார்வையும் போத்தல்களிலிருந்து அவற்றின் வாய்வழியே ஓடிவந்து அவர்களது தொண்டைக்குழி தாண்டிச் செல்லும் திரவங்களின் வாந்தியாய் மாறி மாறித் தோன்றி, அழுக்காயும் அவலட்சணமாயும் நெளிந்து பின் மறைந்து கொண்டிருந்தன. கண்களில் பெருகி வழியும் போதைச் செருக்கின் மத்தியிலும், சற்று முன்னால் உடைந்து கிடக்கும் போத்தல் துகள்களில் மிதித்துக் கால்களைப் புண்ணாக்கி விடாத அவதானத்துடன் எல்லோரும் மிகக் கவனமாக விலகி நடந்து சென்று கொண்டிருந்தமை உண்மையில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவன் முன்னால் வந்து, உழைத்துப் பெற்றவன் போன்ற மதர்ப்புடன் பையிலிருந்த என்னைத் தூக்கிக் கௌண்டரில் கொடுத்து விட்டு, நிறத்திரவங்களுடனான இரண்டு போத்தல்களை வாங்கினான். இரண்டினதும் மூடிகளைப் பற்களால் கடித்துத் திறந்து, அதிலொன்றும் இதிலொன்றுமாய் மிடறுகளைச் சரிசமனாய்த் தொண்டைக்குள் இறக்கினான். ஒவ்வொரு மிடறையும் விழுங்கும் போதும், அவன் கோணலாய் முகஞ்சுளித்தது, அவனது முகத்தை மேலும் விகாரமாக்கிற்று. கடைவாய் வழியாக கசிந்து சிந்தும் திரவச்சாறுகளைப் புறங்கையால் துடைத்து விட்டவாறு அவன் கலகலவென்று அடித்தொண்டையால் சத்தமிட்டுச் சிரித்தான். அருகிலிருந்தவர்கள் யாரும் அவனது சிரிப்பைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அங்கிருந்தவர்களில் அவன்தான் மிகக் குறைந்த சத்தத்தில் சிரித்திருக்கக் கூடும்.

திரவ போத்தல்களைக் கொடுப்பதற்கு முன்னரே அவனிடமிருந்து என்னைப் பெற்றுக் கொண்ட கடைக் கெஷியர், திறந்தபடியேயிருந்த மேசை டிராயரில் என்னைக் குப்புறப் போட்டுவிட்டுத் தன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். டிராயர், அந்தரத்திலிருந்து அருள்மாரி பொழிந்து நிரம்பும் தெய்வீகப் பாத்திரமாய், வாடிக்கையாளர்கள் கொட்டும் நோட்டுகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆயிரம் தந்து போத்தல்கள் சில பெற்றுக் கொண்ட வாடிக்கையாளன் ஒருவனுக்குரிய மீதியாக, கெஷியர் என்னைத் தூக்கி அவனிடம் கொடுத்தான். ஒரு குடிகாரனிடமிருந்து இன்னொரு குடிகாரனிடம் நான் கைமாறினேன்.

புதிதாக என்னைக் கைப்பற்றிக் கொண்டவனை நான் எவ்வித நோக்குமற்றுப் பார்த்தேன். அவன், நெற்றியிலும் கன்னங்களிலும் கோடிழுத்த தோற்சுருக்கங்களுடனான முதிர் தோற்றத்திலிருந்தான். பல நாட்களாக சவரம் செய்யப்படாது சடைத்திருந்த அவனது முகரோமங்கள், அவனது பாதுகாப்புக் கவசங்கள் போலவும், சிலிர்த்த உடலின் சில்மிஷம் போலவும் நிமிர்ந்து நின்று எதிர்ப்படுவோரை முறைத்துக் கொண்டிருந்தன. அவன் என்னைத் தூக்கிச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு, முன்னெச்சரிக்கையாகச் சுவரில் சாய்ந்து நின்றவாறே, போத்தல்களை உடைத்து உதடுகளைப் பிரித்து உள்ளிருந்தவற்றை வாய்க்குள் கொட்டினான். மிகவும் அனுபவப்பட்டவன் போல் இலாவகமாக அவற்றைக் கையாண்டு போத்தல்களைக் காலி செய்தான். அருகில், ஒரு போத்தலையும் முழுமையாக் குடித்து முடிக்காது, தடுமாறித் தள்ளாடிக் கொண்டிருப்பவர்களைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தான். என்னைப் போல பலசாலிகளாக யாரும் இங்கில்லை என்று மந்தமான சாரீரத்தில் உளறிக் கொண்டே சுவரில் உந்தித் தள்ளி நிமிர்ந்து நின்று தலையைச் சிலுப்பிப் பார்வையைச் சுழல விட்டான். எந்தக் காரணமுமில்லாமல் சத்தமிட்டு எக்களித்தவாறு, வலது கையுயர்த்திக் கடைக்கு குட்பை சொல்லிக் கொண்டு, வாய்க்குள் சிக்கித் துவம்சமாகும் ஏதோ ஒரு பாட்டுடன் தள்ளாடித் தள்ளாடி நடக்கலானான். உலகின் அழுக்குப் பெட்டிகளெல்லாம் அவனது வாய்வழியாகத் திறந்து கொட்டிக் கொண்டிருந்தன. எதிர்ப்பட்ட மின்கம்பமொன்றில் மோத இருந்தவன், சட்டெனச் சுதாகரித்துக் கொண்டு, மின்கம்பத்தை அவ்விடத்தில் நட்டவனை யாருக்கும் விளங்காத பாஷையில் சபித்துக் கொட்டியவனாக விலகி நடந்தான்.

பாதை, அவனுக்கு வளைந்து நெளிந்து சென்றது. கண்களில் கறுப்புத் திரை விழுந்து பார்வையை மறைத்தது. முன்னும் பின்னுமாக யாரோ உடலைக் கட்டியிழுத்தனர். உலகம் பலமாகத் தன்னை உதறிச் சிலிர்த்துக் கொண்டு ருத்ரத் தாண்டவமாடிற்று. அவன் உலகத்துடன் போராடத் திராணியற்று பெரும் சத்தத்துடன் மண்ணில் சரிந்தான். சேற்று மண்ணில் முகம் அழுந்திற்று. சற்று முன்னர் வாய் வழியாகத் தொண்டைக்குழி தாண்டியிருந்தவை, கரைந்த திண்மங்களாயும் திரவக் கழிவுகளாயும் சென்ற வழியாகத் திரும்பி வந்து மண்ணையும் அவனது முகத்தையும் ஈரலிப்பாக்கிப் படர்ந்தன. அவனது உதடுகள், சத்தமின்றிப் பேசிப் பேசித் தளர்ந்து நின்றது, ரயில் வண்டியின் நிறுத்தற் சத்தமாய் சுருதி உமிழ்ந்தது.

எனக்கும் தலை சுற்றிச் சுழல்வது போல் தோன்றிற்று. புலனுணர்வுகளையும், மூளை நரம்புகளையும் அறுத்தெறியும் இந்தக் கொடிய திராவகத்தை, அதன் சதிலீலைகள் பற்றித் தெளிவாக விளங்கிக் கொண்டே சிரமப்பட்டு அருந்திச் சோர்ந்து உடலை வருத்திக் கொள்வதில் என்னதான் இன்பத்தையும் களிப்பையும் கண்டு கொள்கிறார்களோ! விஷமெனத் தெரிந்து கொண்டே அதை அருந்திக் களிப்புற நினைப்பவனை என்னவென்று சொல்வது! அவனது மூளையின் வலிமையையும் அறிவு முதிர்ச்சியையும் எந்த ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்வது! எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.

அவன், நெடுஞ்சாண் கிடையாகப் பூமியில் விழுந்து கிடந்தான். சற்று முன் அவன் கக்கியவையும், ஏற்கனவே சேற்றில் படிந்திருந்தவையுமாகச் சேர்ந்து, காணச் சகிக்காத அவனது எழிலை அவை மேலும் மெருகேற்றின. எல்லாவற்றையும் தள்ளி நின்று மிக நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருந்த சொறி நாயன்று, மெதுவாக அவனை நெருங்கி வந்தது. தனக்குரிய உணவை, வாய்வழியாக உற்பத்தியாக்கித் தரும் அற்புதன் என அது அவனை எண்ணியிருக்க வேண்டும். அவன் எழுந்திருக்க மாட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவனது முகத்தருகே வந்து நின்ற நாய், தன் தடிப்பான நீண்ட நாவை நீட்டி, அவன் மண்ணில் சிந்தியவற்றைச் சுவைத்து விழுங்கி முகத்தில் பரவசம் காட்டிற்று. போட்டிக்கு யாரும் வந்து விடுவார்களோவென அடிக்கடி தலையுயர்த்தி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டது. அவனது உதட்டுச் சுவையில் முகஞ்சுளித்து, வயிறு நிறைந்த திருப்தியில் வாலை ஆட்டிக் கொண்டே அப்பால் விலகி ஓடிற்று.

அவனோ, பெரும் சுகத்தை அனுபவித்தவன் போல், கண்கள் கிறங்க வாய் திறந்து, மிகத் தாமதமாக மூச்சு விட்டவாறு உதிர்ந்து கிடந்தான். சேற்று மணலின் கற்கள், அவனது சட்டைப் பையின் மேற்புறத்தையும் தாண்டி என்னைத் தீண்டின. அவனது உடற்பருமன், பெரும் அழுக்குச் சுமையாய் என்னை நசித்துத் துவைத்தன. விடுதலை மேவிய பரிதாப ஏக்கம் என்னை முறுக்கிற்று.

நல்ல வேளையாக, எங்கிருந்தோ வந்த இருவர், விழுந்து கிடந்த முதியவனைத் தூக்கி நிறுத்தினர். அவர்களது முகங்களில் எரிச்சலும் கோபமும் குமுறிக் கொண்டிருந்தன. ஆனால் அதை வெளிப்படுத்த முடியாதவாறு ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்து நிறுத்தியிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அது, தந்தையென்ற மரியாதையின் கட்டுப்பாட்டுக் கயிறாக இருக்கலாம். அல்லது வேறு உறவு முறைகளுடனான, தொழில் சார் தொடர்புகளுடனான பாதையின் வழிதோன்றிய கட்டுப்பாடாகவும் இருக்கலாம். தமது நீண்ட பிரயத்தனத்தின் மூலம் அவனை எழுந்து நிற்கச் செய்ய அவர்கள் பாடுபட்டனர். அவனால் நிற்க முடிந்ததோ இல்லையோ, அவனது சட்டைப் பையிலிருந்து என்னால் கீழே விழ முடிந்து விட்டது. அவர்கள் என்னைக் கண்டுவிடவில்லை என்பது எனக்குப் பெரிய சந்தோஷமாயிற்று. மெல்ல மெல்ல ஊர்ந்து என்னை விட்டுத் தூரமாகிச் செல்லும் அவர்களை ஆறுதற் பெருமூச்சுடன் பார்த்தவாறு மண்ணில் கிடந்தேன்.

யாராவது நல்லவன் ஒருவன் வரமாட்டானா? அழுக்குச் செயல்களின் கொடிய தாக்குதல்களிலிருந்து எனக்கு விடுதலையும் நிம்மதியும் அளிக்க மாட்டானா? என என் மனம் ஏங்கித் தவித்தது. சிந்தனைகளோ கட்டுகளை அறுத்துக் கொண்டு கால் போன போக்கில் ஓடிக் கொண்டிருந்தன. மானுடத்தின் ஏற்றத்தாழ்வுகள், நெறிபிறழ்வுகள் பற்றிய சிந்தனை வியப்பாய் என் மேற் கவிழ்ந்து வழிந்தது. மனம் லயித்து மகிழும்படியாக இங்கு யாருமில்லையா? என் போன்றோரைச் சேமிப்பதொன்றுதான் வாழ்வின் இலட்சியமென வரித்துக் கொண்டார்களா? இத்தகைய இலட்சியம், பொருளாதார அபிவிருத்திக்குக் காரணமாயமையலாம். மனிதாபிமான விருத்திக்கு? ஒழுக்கவியல் விருத்திக்கு? எல்லாம் இணைந்ததுதானே வாழ்க்கை. ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, ஏனையவற்றை நிராகரித்தால் வாழ்க்கை எப்படி முழுமை பெறும்? நிம்மதி எவ்வாறு நீடித்து நிற்கும்? என்னுள் பல கேள்விகள் இருந்தன. பதிலிறுக்கத்தான் யாருமிருக்கவில்லை.

வானத்தில் மேகம் கறுத்துக் குவிந்தது. மழைத்துளிகள் சொட்டுச் சொட்டாய் பூமியில் விழுந்து புதையத் தொடங்கின. மேகத்தின் அடர்த்தியான கருமை, அடைமழையன்றைக் கட்டியம் கூறிற்று.

மழைக்குள் அகப்பட்டுவிடக் கூடாதெனத் தலையை மூடிக் கொண்டு ஓடியவர்களின் பதற்றம், அவர்களது கண்களிலிருந்து என்னை மறைத்து விட்டன போலும். எனினும், மழையிலும் வெயிலிலும் நனைந்து உலர்ந்து கருகும் நாளாந்த வாழ்க்கையுடைய பிச்சைக்காரர்களுக்கு இந்தப் பதற்றம் எவ்வாறு தோன்ற முடியும்! கழுத்தை மறைத்த அடர்தாடியும், பரட்டைத் தலையுமான ஒரு பிச்சைக்காரன், சற்றுத் தூரத்திலிருந்த போதே என்னைக் கண்டு கொண்டான். எச்சிலுருண்டையன்று அவனது நாக்கினடியில் உற்பத்தியாகித் தொண்டை வழியே கீழிறங்கிற்று. வேறு யாரும் கண்டுவிடக்கூடாதே என்ற அவனது தவிப்பு, ஓடி வந்து என்னைக் கையிலெடுத்து நிம்மதிப் பெருமூச்சுச் சுழல இறுக்கிப் பிடித்துக் கொண்ட போதுதான், அவனது முகத்திலிருந்து விலகிற்று.

நான் மீண்டும் பரிதாபத்துடன் சிரித்து வைத்தேன். கொஞ்சம் நறுமணத்தோடும் நல்லொழுக்கத்தோடும் அழகோடும் ஓர் எஜமானனை எதிர்பார்த்திருந்த என் ஆசை மண் கௌவிற்று. உடல் அழுக்காயிருந்தாலும், செயலாவது சுத்தமாயிருக்க வேண்டுமே. இவன் எப்படிப்பட்டவனோ. தொடர்ந்து நடந்து வரும் கசப்பான நிகழ்வுகளில் மனம் சோர்ந்து விழுந்திருக்கும் எனக்கு இவனாவது சிறு ஒத்தடமாய் அமைவானா?

அவன், என்னையெடுத்துத் தன் கண்குளிரப் பார்த்து ரசித்தான். மகிழ்ச்சியின் அதிர்வு தாடி படர்ந்த அவனது முகத்தில் முரட்டுக் காளையாய்த் திமிறிற்று. காவி படிந்த தன் பற்கள் தெரியச் சிரித்துச் சுழன்று கூத்தாடினான். இதற்கு முதல் அவன் என்னைப் பார்த்திருக்கமாட்டான்; அல்லது வெகுநாட்களுக்குப் பின் இப்போதுதான் பார்க்கிறான் என நான் எண்ணிக் கொண்டேன். அவனது மகிழ்ச்சி, என்னுள்ளும் மகிழ்ச்சியைக் கிளர்த்திற்று. வயிற்றுப் பசியிலும், சூழல் கொடுமையிலும் சிக்கித் தவித்துழலும் வறிய பிச்சைக்காரன் ஒருவனின் மனம் நிறைந்த ஆனந்தத்திற்கு நான் காரணமாகியுள்ளேனே. எனக்குத் திருப்தியாகவும் இருந்தது.

தன் அழுக்குக் கைக்குள், என்னை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக அவன் நகரத்தொடங்கினான். அவன் எங்கு செல்கிறான் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. வேறு எங்கு சென்று விடப்போகிறான். உணவுப் பொட்டலமொன்றை வாங்கி வயிறு நிறையத் தின்று ஏப்பமிடும் ஆசைதான், அல்லது தன்னையத்த இன்னொரு ஏழையின் பசிக்கு உணவளிக்கும் நல்லெண்ணம்தான் சாப்பாட்டுக் கடையன்றுக்கு அவனை விரட்டிக் கொண்டிருக்கிறது என நான் எண்ணிக் கொண்டேன்.

விரைந்து நடந்து கொண்டிருந்த அவன், சனநடமாற்றமற்ற ஒழுங்கையன்றில் பாதை முறித்தான். உதிர்ந்து கிடந்த இலைச்சருகுகளைக் கால்களால் மிதித்துச் சற்றுத் தூரம் நடந்து, விசாலமான வளவொன்றினுள் - ஒதுங்கி வாழும் தாழ் இனக்குடியேற்றம் போல் - வடமூலையில் குவிந்து கிடந்த ஓலைக் கொட்டிலுக்குள், பார்வையால் அதனைத் துழாவிக் கொண்டே கால்பதித்தான்.

மையத்தில் பூவரசை மரக்கிளையன்றை நட்டு, அதன் முனையில் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த, கொட்டிலின் ஒரேயரு அறையான அக்குறுகிய சதுரப்பரப்புக்குள், கீழே பரவி இறுக்கப்பட்டிருந்த களிமண் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தவாறு, அவனையத்த பிச்சைக்காரனொருவன் தன் முன்னால் பரவிக்கிடக்கும் நாணயக்குற்றிகளை, கண்களின் ஆர்வம் சிவக்கச் சிவக்க எண்ணிக் கொண்டிருப்பதை இவன் கண்டான். அரவம் கேட்டு, தவம் கலைந்த முனிவரின் சீற்றமாய் தலைநிமிர்ந்து கண்களைக் குறுக்கிப் பார்த்தவன், இவனைக் கண்டதும், இவனது பிரசன்னத்தை வரவேற்பவன் போல், இரு கைகளாலும் சைகை செய்து விட்டு மீண்டும் தன் பணியில் இறங்கினான். இவன், கையிலிருந்த என்னை நீட்டி நிமிர்த்தியவாறு அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டே, அவனுக்கு முன்னால் அமர்ந்து, அவனது முகம் பார்த்துச் சந்தோஷமாய்ச் சிரித்தான். இவனது கையிலிருந்த என்னைக் கண்டதும், அவன் சற்று நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டான். அவனது கை ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டாற் போல் எடுத்த நாணயக்குற்றியை மறுபக்கம் போடவும் நினைவிழந்து அப்படியே மூச்சடைத்து நின்றது. வாய் பிளந்த அதிர்ச்சியுடன் என்னையும் இவனையும் மாறி மாறிப் பார்த்தான். அவனது கண்களில் பிரகாசக் கீறலொன்று உதித்துத் துள்ளிற்று. என்னை வாங்கித் தன் கண்ணருகே கொண்டு சென்று உற்று உற்றுப் பார்த்தான். மறுபக்கமாகப் பிரட்டியும் சாய்த்தும் ஆசை தீரப் பார்த்தான். அவனது ஆசை குமிழும் பார்வையில் எனக்குள் முறுகித் திரண்டது கூச்சம். அரை நிர்வாணமாகச் செல்லும் ஓர் அழகிய யுவதியின் மறைக்கப்பட்டுத் திமிறும் பாகங்களை இளைஞர்கள் பலர் கூடிநின்று ரசித்துப் பார்ப்பதை உணர்ந்தால் அந்த யுவதிக்கு ஏற்படுமே, அப்படியானதொரு கூச்சம்.

அவர்கள் இருவரும் விஷமத்தனமாகச் சிரித்தனர். கட்டிப்பிடித்துக் கொண்டு கூத்தாடினர். இந்தப் பிச்சைத் தொழிலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று எனக் கூறிக் களிப்பில் உருண்டனர். எனக்குக் குழப்பமாயிற்று. சிறிய பெறுமதியுடைய என்னைக் கொண்டு அவர்களது அன்றாடப் பிழைப்பாகிய பிச்சைத்தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது எங்ஙனம்? ஒருவேளை, ஏதேனும் சிறிய தொழில் முயற்சிக்கு என்னை மூலதனமாகப் பயன்படுத்தப் போகிறார்களோ. அப்படியானால், அது எவ்வளவு நல்ல முயற்சியாக இருக்கும். அந்த நல்ல முயற்சிக்குக் களமமைத்த பெருமையையே என் பிறவிப்பயனாய்க் கொண்டு எதிர்காலத்தின் கஷ்டங்களையும், சிரமங்களையும் பொறுமையுடன் ஏற்றுச் சந்தோஷமாக நான் காலங்கடத்தி விடுவேனே.

அவர்களது வாழ்க்கை குறித்து சாதகமான கோணத்தில் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்களது திட்டம் - நான் எதிர்பார்த்தது போன்று - சாதகமானதல்ல என்பதை, அவர்கள் தொடர்ந்து பேசப்பேச நான் விளங்கிக் கொண்ட போது, கோபத்தில் என் உடல் கொதிப்பேறிற்று. கைகள், வெறுப்பில் முஷ்டியாய்ப் பொங்கின.

பிச்சையெடுப்பதில் போதிய வருமானமில்லையென்பதால், இரவு நேர வழிப்பறியில் ஈடுபடுவதென அவர்கள் திட்டமிட்டிருந்தனர். வழிப்பறிக்கான ஆயுதமாகக் கத்தியையும் வாளையும் நிர்ணயித்திருந்தனர். எனினும், அவற்றை வாங்கப் போதிய பணமின்றித் தவித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிச்சையெடுத்துப் பணத்தைச் சேர்த்துள்ளனர். மேலும் போதாதிருந்ததை என் மூலம் ஈடுசெய்ய முடியும் எனக் கண்டே அவர்கள் என் பிரசன்னம் குறித்து ஆனந்தக் கூத்தாடி மகிழுகின்றனர் என்பதை உணர்ந்த போது, நான் வெறுப்பு முறுகக் கடுமையான பாவனையுடன் அவர்களை முறைத்தேன். அவர்களை அடித்துக் குற்றுயிராய்க் கிடத்த வேண்டுமெனக் கைகள் புறுபுறுத்தன. ஆனால் எதுவும் என்னால் முடியப் போவதில்லையென்ற யதார்த்தம் என்னைத் துயர் செறிந்த மௌனத்துள் தள்ளிற்று.

பிச்சையெடுப்பது பேரிழுக்கு; பிடுங்கித் தின்பது அதை விடவும் படுமோசமான இழுக்கு. கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்துவதன்றி, மேலும் மேலும் கெட்டுச் சீரழிய முனையும் இவர்களது இந்தக் குரூர வாழ்க்கை முறையையெண்ணிப் பார்க்கையில் பெருங்குரலெடுத்துக் கதறித் துடிக்க வேண்டும் போல் மனம் வதைந்தது. புரிந்துணர்வும் அன்புப் பரிமாற்றமுமற்று, வெறும் குப்பையாய்ச் செறிந்துள்ள இந்த உயிர் வர்க்கத்தை வேரோடு பிடுங்கியெறிந்து உலகைச் சுத்தப்படுத்த வேண்டுமென என் மனம் கடுமையாக அவாவுற்றது.

இவனிடமிருந்த என்னையும், தன்னிடமிருந்த நாணயக் குற்றிகளையும் சேர்த்தெடுத்துக் கொண்டு, அவன் ஆயுதம் வாங்கப் புறப்பட்டான். நடுத்தர வயதினனாக இருந்த அவன், பார்க்கப் பலசாலியாய்த்தான் தோன்றினான். அணிந்திருந்த அழுக்குச் சட்டையையும் தாண்டி அவனது உடலிறுக்கம் திமிறிற்று. இந்த உறுதியான உடலால் உழைத்துப் பிழைக்க முனையாது, கொள்ளையடித்துப் பணம் சேர்க்க விரும்பும் அவனது சிந்தனை, முழுக்க நிரம்பிய குப்பை மூட்டையாய் என் மூக்கைத் துளைத்து நாறிற்று. வியர்வை சிந்தி உழைத்துப் பெறும் ஒரு துளி, பிச்சையெடுத்தும் பிறரை ஏமாற்றித் துன்புறுத்தியும் பெறும் பல்லாயிரம் துளிகளை விடத் திருப்தியானது என்பது இவனால் எப்போது புரிந்து கொள்ளப்படுமோ!

சற்றுத்தூரம் நடந்து, இரும்புக் கடையன்றை அடைந்து, கூரான ஆயுதங்கள் சிலவற்றைப் பரீட்சித்துப் பார்த்துப் பெற்றுக் கொண்டு, கையிலிருந்த என்னையும் ஏனையோரையும் கணக்கிட்டுக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அவன் மறைந்து போனான்.

கடை முதலாளி திறந்து வைத்திருந்த மேசை டிராயருக்குள் நான் விழுந்து கிடந்தேன். எதிர்கொண்ட எரிச்சல் மிகு அனுபவங்களிலிருந்து ஆறுதல் பெறச் சற்று ஓய்வெடுக்க வேண்டும் போல் தோன்றிய ஆதங்கத்துக்கு இப்போதைய நிலை சாதகமாய் அமைந்தமை கொஞ்சம் மனநிறைவைத் தந்தது. எனினும் சுற்றிச்சுற்றி நடக்கும் நன்மைக்குப் புறம்பான செயல்களை நினைக்கையில் மனதுக்குள் குமுறும் எதிர்ப்புணர்வையும், இயலாமையின் அழுகைக் குரலையும்தான் கொஞ்சமும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மழை ஓய்வெடுத்துக் கொண்டது. அது கண்டு சூரியனும் ஓய்வெடுக்க மேற்கு வானில் சரியத் தொடங்கினான். மாலை இருள் பாய் விரிக்கத் தொடங்கிற்று.

முதலாளி மிகவும் கண்டிப்பானவர் போல் தோன்றியது. அவரது முகத்துக்கும் சிரிப்புக்கும் இடையிலான ஒற்றுமை முறிந்து பல வருடங்களாகி விட்டன போலும். கடைக்கு வருவோர்களை, தன் காலடிக்கு வந்து இரந்து நிற்பவர்கள் என்றெண்ணும் தோரணையில் இறுமாப்புடன் அவர் பார்த்தார். அவர்களது சிரிப்பையும் அறிமுகப் பேச்சுகளையும் அலட்சியமாக நிராகரித்தார். பணியாளர்கள் மீது அவரது இரும்புப் பார்வை வன்மையாகப் பதிந்திருந்தது. அவர்கள் அவரது பார்வையின் தகிப்பை தாங்கிக் கொள்ளச் சக்தியற்றுப் பெரிதும் பயந்து நடுங்கினர். அவரது இயல்பும் போக்கும் அவர்கள் நன்கறிந்ததுதான்.

அவர் யாரையும் மதித்ததாகத் தெரியவில்லை. மதிக்க வேண்டுமென்ற எண்ணம் சற்றும் அவருக்கு இருக்கவில்லை. எதற்காக மதிக்க வேண்டும். அவரிடம்தான் போதிய பணம் இருக்கிறது. வருமானம் செழித்துக் குலுங்கும் தொழில் இருக்கிறது. யாரையும் நம்பியோ, யாரிடமும் வால்பிடித்தோ வாழ வேண்டிய தேவை அவருக்கில்லை. எவருக்கும் பயப்படவோ, எவரையும் கண்டு குற்றவுணர்ச்சியில் அஞ்சியடுங்கவோ வேண்டியதில்லை. பின் எதற்காக அவர் பிறரைச் சங்கைப்படுத்திச் சீரழிய வேண்டும்.

நேரமானதும் பணியாளர்களை அனுப்பி விட்டுக் கடையை இழுத்து மூடினார் முதலாளி. டிராயரில் கிடந்த - அன்றைய வருவாயான - என்னையும் என் போன்றோரையும் தன் பணப்பைக்குள் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டு, காரில் ஏறினார். அதற்காகவே காத்திருந்தவர்கள் போல் சில பிச்சைக்காரர்கள், அவரது காரை மொய்த்துக் கொண்டு, தம் உடலை வருத்தும் கொடிய வறுமையைப் பூமாலையாய் அவர் மீது சூட்டிக் கெஞ்சினர். தம் உயிரை உறுஞ்சும் பசிக்கொடுமைக்குத் தற்காலிக ஓய்வளிக்குமாறு கையேந்திப் பரிதவித்தனர்.

முதலாளி முகஞ்சுளித்தார். அவருக்கு ஏழைகளைப் பிடிப்பதில்லை; அதிலும் பிச்சைக்கார ஏழைகளை அறவே பிடிப்பதில்லை. இரண்டு மூன்று நாட்களாகப் பசியில் வாடும் தம் ஏழை வயிற்றுக்கு ஒருவேளைச் சோற்றுக்காவது உதவுமாறு அவர்கள் கண்கலங்கிக் கெஞ்சிய போது, அவர்கள் மீது பரிதாபத்திற்குப் பதிலாக எரிச்சலே தோன்றிற்று முதலாளிக்கு. அவர் நினைத்தால் அவர்களுக்குத் தாராளமாக உதவ முடியும். அதற்குரிய பொருள் வளம் அவரிடம் நிறைந்து கிடக்கிறது. ஆனால் மனவளம்...? தனது அன்றைய வருமானத்திலிருந்து மிகச்சிறிய ஒரு தொகையை எடுத்துப் போட்டாலும், அவர்கள் மூன்று நாளைக்குத் திருப்தியாக உண்டு களிப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால், இவர்களுக்குக் கொடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? பத்திரிகையில் எனது புகைப்படம் பிரசுரமாகுமா? வானொலியில் என் பெயர் அறிவிக்கப்படுமா? தொலைக்காட்சியில் என் முகம் காட்டப்படுமா? ஒரு அமைச்சரிடமிருந்து, ஒரு எம்பியிடமிருந்து எனக்குப் பாராட்டுக் கிடைக்குமா? எதுவுமில்லை. அவரைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உதவுவதென்பது வீண்சிரமம். ஒரு பணக்காரனுக்கு உதவினால் அதில் பயன் கிட்டும். இந்தப் பரதேசிகளுக்கு உதவினால் என்ன கிட்டப்போகிறது! சுற்றி நின்றிருந்தவர்களைச் சத்தமிட்டு விலக்கிக் கலைத்து விட்டு வேகமாகக் காரையெடுத்துக் கொண்டு கிளம்பினார் முதலாளி.

சற்று நேரம் அனுபவித்து வந்த ஆறுதல் கலைய, பசிக்குதவாத அவரது பகட்டான வஞ்சகச் செயல் குறித்த விசனத்துடன் அவரை நான் முறைத்துக் கிடந்தேன். ஏழையாக இருக்கும் போது பணத்திற்காக உழைப்பதும், பணம் நிறைந்த பின் பிரபலத்திற்காக உழைப்பதுமாக மானுட வாழ்க்கை குறிக்கோளிழந்து சீரழிந்து போகும் நிலை இன்னும் அறுந்து விடாது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை; ஆனால், தான் கண்டுழன்ற கஷ்டங்களையும், கடந்து பாதைகளையும் கூட மறந்து விட்டுப் பெருமிதத்தில் மிதக்கும் சில புதுப் பணக்காரர்களின் கௌரவ நிலைதான் மிகவும் எரிச்சல் மிக்கது. தம் கஷ்டத்தில் பிறர் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவோர், பின் பிறர் கஷ்டத்தில் தாம் பங்கெடுக்க விரும்பாது போவது எவ்வளவு கசப்பான முரணுண்மை.

அவரது கார், மிக உயர்ந்த பளபளப்பான ஒரு கட்டடத்தின் முன் மூச்சுத் தணிந்து இளைப்பாறிற்று. அது ஒரு பெரிய ஹோட்டல். அதன் கட்டட அமைப்பின் கவர்ச்சியை, அதில் பொருத்தப்பட்டிருந்த விதம் விதமான மின்விளக்குகள் மேலும் அதிகப்படுத்திக் காட்டின. அவர் காரிலிருந்து கீழே இறங்கினார். நீளமான புற்தரையில், இரு புறமும் மலர்ச் செடிகளடர்ந்த பாதையில் கம்பீரமாக நடந்து சென்றார். வெறுமையாக இருந்த இடமொன்றைக் கண்டுபிடித்துச் சௌகரியமாய் அதில் தன்னை இருத்திக் கொண்டு பணியாளரை அழைத்தார். தனக்குத் தேவையான உணவுப் பண்டங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவனை அனுப்பி விட்டு, அவன் உணவுப்பண்டங்களைக் கொண்டு வரும் வரையிலான இடைவெளியில் கண்களை மூடிக் கொண்டு, அங்கு ஒலித்துக் கொண்டிருந்த மனதுக்கு இதம் தரும் மெல்லிய இசையில் உணர்வுகளை முகிழ்த்துத் தன்னை மறந்து கிடந்தார்.

பணியாளன் வைத்து விட்டுச் சென்ற உணவுப்பண்டங்கள் மேசையை மூடியிருந்தன. ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சுவைத்து விட்டுப் பாதியில் திருப்தி கண்டு கைகழுவினார் அவர். காற்றெங்கும் மிதக்கும் இசையின் சுவை ஆன்மாவையும், உண்டு முடித்த உணவின் சுவை உடலையும் வருடிக் கொடுக்க, அந்தச் சுகத்தைக் கண்மூடி அனுபவித்தார். அவரது உள்ளமெங்கும் மகிழ்ச்சிப் பூக்கள் தோன்றி மலர்ந்து செழிப்பாகிச் சிரித்தன.

ஒவ்வொரு பாத்திரத்திலும் பாதிக்கு மேல் எஞ்சிக் கிடந்த உணவுப்பண்டங்களுக்கு மத்தியில், பணியாளன் கொண்டு வந்து வைத்த கட்டணச் சீட்டை, வயிற்றில் கைவைத்து புளித்த ஏப்பமிட்டவாறு நோக்கினார் அவர். குறிப்பிட்ட தொகையை அவனிடம் கொடுத்து விட்டு, மேலதிக அன்பளிப்பாக, என்னையெடுத்து, அவனது கைகளில் திணித்து விட்டு வெளியேறினார்.

அவர் போகும் திசையையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதை வீண் சிரமமென்று கருதிய ஒரு பண முதலையின் ஆடம்பர உணவுச் செலவு என்னை எரிச்சல் படுத்திற்று. அவரது ஒரு நேர உணவுக்காகும் செலவு, அந்த ஏழைகளின் ஒரு மாத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. ஏன் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு! உலகில் எவனும் வறியவன் இல்லையென்பது நான் அறிந்ததே. ஒவ்வொருவருக்கும் உரிய உணவு உலகில்தான் இருக்கிறது. சில மனிதர்கள் தமது அறிவினதும் செல்வாக்கினதும் பலத்தால் பிற மனிதர்களுடைய உணவையும் சொத்தையும் தம்முள் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படாமலும், முன்னெடுக்கப்பட்டால் வெற்றியளிக்காமலும் இருப்பதற்குரிய காரணம் பற்றி இச்சமூகம் சிந்திக்காதிருப்பது ஏன்?

புதிய எஜமானனான அந்த ஹோட்டல் பணியாளனை நான் ஏறிட்டும் பார்க்கவில்லை. இவனும் ஏதோ ஒரு தீங்கிழைத்து என்னைச் சிரமப்படுத்தப் போகிறான் என்றெண்ணி, எரிச்சலைத் தாங்கிக் கொள்ள ஏற்கனவே என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். நிகழ்வுகளின் தொடர் தாக்குதலில் என் மனம் மிகவும் சோர்ந்து போய்க் கிடந்தது. ஒவ்வொரு நிகழ்வின் போதும், நல்லவற்றை எதிர்பார்ப்பதும், பின் கொடுமை கண்டு ஏமாந்து சடைவதுமான நிலையை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நான் சிந்தனைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு, வெட்டி முறிக்கப்பட்ட மரக்கிளையாய், வெறுமைக்குள் அமுங்கினேன்.

அவனது வேலை நேரம் முடிந்து விட்டது போலும். உடைகளை மாற்றிக் கொண்டு கிளம்பத் தயாரானான். மாலை, கறுப்புச் சேலை விரிக்கத் தொடங்கியிருந்தது. அதன் செறிவு அதிகமாவதற்கிடையில், அங்கிருந்து வெளிப்பட்டு, பஸ் தரிப்பிடத்துக்கு வந்து, காத்திருந்து பஸ்ஸிலேறி, ஒரு மணி நேரம் பயணத்திற்கெனச் செலவிட்டு வீட்டையடைய வேண்டும். நினைக்கும் போது அவனுக்கு அலுப்புத் தோன்றிற்று.

உள்ளறையிலிருந்து வெளிப்பட்டு, முன்பக்கமாக நடந்து வந்தான். வரும் போது கவனித்தான். கௌண்டரில் கெஷியர் மேசை வெறுமையாய்க் கிடந்தது. மேசை டிராயரும் திறந்து முழுமையாக மூடப்படாது விடப்பட்டிருந்தது. அதனுள்ளிருந்த என் போன்றவர்களும், என்னை விடச் சிறிய, பெரியவர்களும் அவனது கண்களில் காவியாய்ப் படிந்தனர். அவனது நெஞ்சுக்குள் பொறி தட்டிற்று. நல்ல சந்தர்ப்பம் எனத் தன்னுள் முணுமுணுத்தான். ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால், அலட்சியமாக எங்கோ சென்று விட்ட கெஷியரை, தடியன் என மனதுக்குள் செல்லமாகக் கடிந்து கொண்டு, சுற்று முற்றும் பார்த்தான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பது உறுதியானது.

டிராயருக்குள் இவ்வளவு பணம் இருக்கும் போது, அதைக் கண்டும் காணாமல் போவதற்கு யாரால் முடியும்! நான் என்ன பிழைக்கத் தெரியாத முட்டாளா? சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தெரியாத அறிவீனனா?

அவன், மேசையை நெருங்கினான். உள்ளம் வேகமாக அடித்துக் கொண்டது. மனதைக் கௌவிய அச்சத்தைத் துணிந்து விரட்டிவிட்டு, மீண்டுமொரு முறை சுற்றுமுற்றும் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டு, டிராயருக்குள் கையை நுழைத்தான். கைக்குள் சிக்கிய நோட்டுகளைக் கொத்தாக அள்ளிக் காற்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு, படபடக்கும் இதயத்துடன், அங்கிருந்து விரைவாக வெளியேறிவிட வேண்டுமெனத் திரும்பியவன், திடும்மென விறைத்து நின்று விட்டான். ஹோட்டல் முதலாளியும், கெஷியரும், மற்றும் சிலரும் பற்களைக் கடித்துக் கொண்டு கைகளில் உருட்டைக் கட்டையுடன் தன்னை நோக்கி ஓடிவருவதைக் கண்டதும் அதிர்ந்து நடுங்கிப் பின்வாங்கி மிரண்டான் அவன். அவனது உடல் பயத்தில் வெடவெடத்தது. எச்சில் தொண்டைக்குழி தாண்டிச் செல்ல மறுத்தது. தனது பலநாட் திருட்டைக் கண்டுபிடிக்க, இப்படியரு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பது அப்போதுதான் அவனுக்குத் தட்டுப்பட்டது. பொறிக்குள் அகப்பட்டுவிட்டதை நொடியில் புரிந்து கொண்டதும், அவனது கால்கள் மூளையின் கட்டளைக்குக் காத்திராமலேயே, அங்கிருந்து எம்பிக் குதித்து, மேசைகளையும் கதிரைகளையும் தாவித் தாவிச் சிட்டாகப் பறந்து விரைந்தன. அவன் பதறிக் கொண்டு ஓடினான். யாரையும் எதையும் கவனிக்காமல், பின்னால் துரத்தி வருகிறார்கள் என்பதை மட்டும் மூளையில் இருத்திக் கொண்டு வெறிபிடித்தவன் போல் ஓடினான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதென்பார்களே, அப்படியரு ஓட்டம்.

பஸ் தரிப்பிடத்துக்கு வந்து நின்று, படபடக்கும் இதயத்தைச் சாந்தப்படுத்திக் கொண்டே சோர்வை விழுங்கினான் அவன். நாடித் துடிப்பின் வேகம், கண்களை வெளியே தள்ளிவிடுமோ எனப் பயந்து, இமைகளை இறுக்க மூடிச் சற்று ஆறுதலை, சுவாசத்தோடு சேர்த்து உள்ளிழுத்துக் கொண்டான்.

தன் தவறையெண்ணி வருந்தினான் அவன். தவறென அவன் எண்ணியது, பணத்தை எடுத்துப் பைக்குள் திணித்ததையல்ல; பிறர் கண்டுபிடிக்குமாறு அதைச் செய்த தன் அவதானிப்புக் குறைச்சலைத்தான். ஏனெனில், இது அவனுக்குப் புதிதில்லை. இதற்கு முன்னர், டிராயரிலிருந்து எவருக்கும் தெரியாது இவனது காற்சட்டைப் பைக்குள் புகுந்தவைதான், அவனது நாளாந்தப் பொழுதுபோக்குக்குப் பிரதான ஸ்தூலமாய் நின்றிருக்கின்றன. சினிமாத் தியேட்டர்களிலும், விபசார விடுதிகளிலும் அவனது களியாட்டத் தேடலுணர்வுகளை அவைதான் திருப்திப்படுத்தியிருக்கின்றன.

இன்று, தான் அகப்பட்டுக் கொண்டதற்கு, அந்தப் பொல்லாத கெஷியர்தான் காரணமென அவன் எண்ணினான். நீண்ட நாளாகவே தன்னுடன் முரண்பட்டு வந்த கெஷியர் மீது கோபமும் வெறுப்பும் அவனுக்கிருந்தது. இப்போது தன்னைக் காட்டிக் கொடுத்துத் தன் வேலைக்கும் உலை வைத்து விட்ட துரோகத்துக்காக அவனைப் பழிவாங்குவதென இவன் கங்கணம் கட்டிக் கொண்டான்.

பஸ் இன்னும் வந்தபாடில்லை. இதற்கு முன்னரெல்லாம், பஸ் வரும் தாமதம் குறித்துக் கால்களை உதைத்துக் கொண்டே காத்திருப்பவனுக்கு, இன்று அந்தத் தாமதம் - தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் - மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. கொலை வெறி கண்களில் கொப்பளிக்க, முரட்டுக் கட்டைகளோடு தன்னைத் துரத்தியவர்களைப் பற்றி அவன் எண்ணிப்பார்த்தான். அவர்களது கைகளில் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் என் நிலை! அடித்துத் துவைத்து நார் நாராகக் கிழித்தெறிந்திருப்பார்கள்; எடுத்த பணத்தை மீளப் பிடுங்கியிருப்பார்கள்; ஏற்கனவே எடுத்தவற்றையும் கணக்குப் போட்டு உருவியிருப்பார்கள். நொடிப்பொழுதில் சுதாகரித்துக் கொள்ள முடிந்ததால், இழப்பேதுமின்றி இப்படி முழுதாய் வந்து நிற்கிறேன். பள்ளம் மேடு பாராது, பாய்ந்தோடிக் காப்பாற்றிய கால்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

அவன், தனக்குள் பேசிக் கொள்வது என் செவிப்புலனை எரிச்சல் படுத்திற்று. தொழில் புரியும் இடத்திலேயே திருடித் தின்ன முனையும் இவன் போன்ற இழுக்கர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் அது போதாதுதான். எனினும், அவனது இத்துர்ச் செயல் - இப்படியான ஒன்றை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் - பாரியளவில் என்னைப் பாதிப்படையச் செய்யவில்லையென்பது, அந்தத் துன்பத்திலும் சிறு ஆறுதலாய் என் மனதைச் சாந்தப்படுத்திற்று.

ஆடி அசைந்து கடமுடா சத்தத்துடன் வந்து நின்றது பஸ். அவன் ஓடிச் சென்று, கம்பியைப் பிடித்துத் தாவி உள்ளே ஏறினான். அவனைத் தொடர்ந்து மற்றையோரும் திமுதிமுவென ஏறிக் கொள்ள, பஸ் கஷ்டப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டே, அழுக்குப் புகை கக்கி நகரத் தொடங்கிற்று. அது ஒரு தனியார் பஸ்ஸாக இருக்க வேண்டும். அவன், சட்டைப் பையிலிருந்த என்னைத் தூக்கி பஸ் நடத்துனரிடம் கொடுத்துத் தான் போக வேண்டிய இடத்தின் பெயரைக் குறிப்பிட்டான். மீதியை வாங்கிச் சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு, உட்கார்ந்து வரும் யுவதியருத்தியின் நெஞ்சுக்குழியைத் தன் கோரப் பார்வையால் துழாவத் தொடங்கினான்.

இப்போது, ஒரு கையில் பேனாவும் மறுகையில் பிரயாணச் சீட்டுப் புத்தகமுமாய் கம்பியில் சாய்ந்து நின்றிருந்த பஸ் நடத்துனரிடம் நான் இருந்தேன். அவன், கறுப்பாயும் கரடுமுரடாயும், குழந்தைகளை அச்சுறுத்தும் கற்பனைக் கதைகளில் வரும் வில்லன்களின் தோற்றத்தினனாயும் இருந்தான். கடைவாயினோரம் வழியும் வெற்றிலை எச்சிலைப் புறங்கையால் துடைத்தபடி, தனது கரகரத்த குரலில், பிரயாணிகளை முன்னாலும் பின்னாலும் செல்லுமாறு சத்தமிட்டுக் கத்தி, அவர்களை முகஞ்சுளிக்கச் செய்து கொண்டிருந்தான்.

அவனது பேனா தொடர்ந்தும் ஓய்விலேயே இருந்தது எனக்கு வியப்பாயிற்று. பிரயாணச் சீட்டுக் கொடுக்காது பணத்தை மட்டும் வாங்கிச் செருகிக் கொள்ளும் அவனது செயல் குறித்து என்னுள் சந்தேகம் தெறித்தது. தெரியாது தவறிழைக்கின்றானா? அல்லது தெரிந்து கொண்டே குற்றமிழைக்கின்றானா? ஒரு வேலையில் - அது தொடர்பான அறிமுகமோ ஆளுமையோ அற்றவர்களை இணைத்துக் கொள்ளும் கேலிச் செயல் எல்லாத் துறையிலும் இருக்கின்றதென்பதற்கான சான்றாக இதைக் கொள்ளலாமா? அல்லது, எல்லாத் துறையிலும் - அதைச் சுரண்டிப் பிழைக்கும் மோசடியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகக் கொள்ளலாமா?

பஸ், நீண்ட தூரம் ஓடிச் சளைத்து, பயணிகள் எல்லோரும் இறங்கிய பின், அதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் மூச்சுத் தணிந்து உறங்கத் தொடங்கிற்று. பஸ்ஸிலிருந்து இறங்கிய அவனையும், சாரதியையும் இருள் போர்த்திய இரவு முகத்திலறைந்து வரவேற்றது. குளிர்காற்று தம்மை அசௌகரியப்படுத்துவதாக அவர்கள் கருதிச் சலித்தனர். காற்சட்டைப் பைக்குள் வேறாகப் பிரித்து வைத்திருந்த நோட்டுகளை அள்ளியெடுத்து சாரதிக்குச் சரிசமனாய்ப் பங்கு கொடுத்தான் அவன். இருவரும் நடந்து, உயர்ந்த இரண்டடுக்கு மாடி வீட்டை அடைந்தனர். அதுதான் அவர்கள் ஓடி வந்த பஸ்ஸின் உரிமையாளரின் வீடு. இதைவிடுத்து இன்னும் பல பஸ்கள் அவர் பெயரில் நகருக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலுமிருந்து கிடைக்கும் நாளாந்த இலாபம் அவரது உடலுக்குள் சீனி, மாரடைப்பு, இரத்த அழுத்தம், குடற்புண் எனப் பல்வேறு நோய்களாக உறங்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் தமது பேச்சுகளின் போது நகைச்சுவையாக அலசிக் கொள்வர்.

வீட்டுக்குள்ளிருந்து, வேறொரு பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் வெளியேறி வருவதை இவர்கள் கண்டனர். அவர்களை இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் நேர்மை, நாணயம் என்ற வெற்றுப் பேச்சொன்றே அவர்களுக்கும் இவர்களுக்குமிடையிலான இறுக்கமான வேற்றுமைக்குப் பிரதான காரணமாய் நீண்டு நிலைத்து வருகின்றது.

அவர்கள் வீட்டை நெருங்கினர். வாயிற் காவலன் சினேகபூர்வமாகச் சிரித்து, அவர்களை உள்ளே அனுமதித்தான். பளிங்குத் தரையும், விலையுயர்ந்த சோபா செட்டுகளுமாய் ஆடம்பரப் பளபளப்பு வழியும் மண்டபத்திற்குள் நுழைந்து, ஓரமாக இருந்த கதிரைகளில் அமர்ந்து இருவரும் யாரையோ எதிர்பார்ப்பவர்கள் போல் காத்திருந்தனர். அன்றைய பிரயாணத்தின் சுவையான அனுபவங்கள் பற்றிய அளவளாவுதலில் கழிந்த சிறிது நேரத்தின் பின், வீட்டினுள்ளேயிருந்து ஒருவர் வந்தார். அவரைக் கண்டு இவர்கள் இருவரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்களாயினும், நான்தான் மிகவும் பயந்து போனேன். ஆடம்பரத்திலும், அச்சுறுத்தும் தோற்றம் விலகாத அந்த உருவத்தைக் கண்டு யார்தான் பயப்படாதிருக்க முடியும். இப்படியரு தோற்றத்திலும் மனிதர்கள் இருக்கிறார்களா? தொந்தி வயிறு, தொங்கும் கழுத்து, கறுத்த விகாரமான முகம், காவி படிந்த கோரப் பற்கள், பழுப்பேறிச் சிவந்த கண்கள்.

பஸ் உரிமையாளரான அவரிடம், என்னையும் மற்றும் பலரையும் - இன்றைய வசூல் எனக் கூறி - கணக்குப் புத்தகத்துடன் ஒப்படைத்தார்கள். அவர்களுக்குரிய பங்கை, கணக்குப் பிள்ளையின் உதவியுடன் பங்கிட்டுக் கொடுத்தனுப்பி விட்டு, மீதியாகப் பரந்து கிடந்த நோட்டுகளைப் பெறுமதி வாரியாகப் பிரித்தடுக்கிக் கொண்டு, தனது படுக்கையறைக்கு வந்தார் அவர். கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த மெத்தையை உயர்த்தி, கீழே கட்டுக்கட்டாயிருந்த நோட்டுகளுடன் எம்மையும் இணைத்து அடுக்கி விட்டு, மெத்தையைக் கீழிறக்கி அழுத்திச் சிரித்துக் கொண்டே மேலேறிப் படுத்துக் கொண்டார். அவரது எருமை மாட்டுப் பாரத்தைத் தாங்கும் மெத்தையின் கீழ் நசிபட்டுக் காலந்தள்ளும் துயரம் என்னை நசுக்கிப் பிடித்துக் கொண்டது. மூச்சுத் திணற நான் முடங்கிக் கிடந்தேன்.

நசிபட்டுத் துவழும் துயரத்தை விட, இன்றைய நாள் முழுக்கச் சந்தித்த தீயழுக்கங்களுடனான மானுடத்தின் கோரமுகம் கண்டுழலும் துயரமே என்னை பலமாகத் தாக்கிற்று. உலகின் வசீகரத்தைப் பிடுங்கியெறியும் தீய உயிரினமாக அச்சமூகத்தை என் மனம் அடையாளங் கண்டு வெறுப்புதிர்த்தது. இத்தகைய சமூகத்தாரிடையே கைமாறி அலைக்கழிவதை விட, அவர்களது முகங்களில் விழிக்காது, இவ்விதம் இருட்டுக்குள் முடங்கிக் கிடப்பது கொஞ்சம் பரவாயில்லைதான் என என் சிந்தனை கூறிற்று. மனம் முழுக்கச் சுற்றிச் சுற்றியலையும் எண்ணிலடங்கா சிந்தனைச் சிதறல்களையெல்லாம் கட்டுப்படுத்தியபடி, சிரமப்பட்டுக் கண்களை மூடிக் கொண்டு, நான் உறங்க முயற்சிக்கலானேன். தூக்கம் முரண்டு பிடித்து விலகி நிற்கிறது.


(02)

அவனை வியப்புடன் நான் நோக்கினேன். மனதுக்குள் ஓய்வின்றிச் சுற்றியலையும் சிந்தனைகளில், மானுடத்தைக் கரித்துக் கொட்டிவிட்டு, உறங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்க்கையில் எனக்கு வேடிக்கையாகவும் இருந்தது. அவனது தவறான புரிதலையெண்ணி, ஏளனப் பார்வையுடன் அவன் மீது பரிதாபமுதிர்த்தேன். அவனது புரிதல் தவறானது என நான் உறுதியாகக் கூறுவதற்கு, அவனைப் போன்ற பெறுமதியுடையவனாக நானும் இருக்கின்றமை ஒன்றே போதாதா? ஏனெனில், தான் சந்தித்துத் துவண்டதாக அவன் கூறும் எந்தச் சங்கடங்களும் எனக்கு ஏற்படவில்லையே.

இப்போது, எருமை மாட்டுப் பாரத்தைத் தாங்கும் மெத்தையின் கீழ் நசிபட்டுக் கிடக்கிறேன். வெளிச்சமும் காற்றோட்டமுமான வெளியுலகில் மானுடரின் கைகளில் மாறி மாறிப் பயணித்துத் திரிவதை விட இது ஆறுதலானது என எண்ணினால் அந்த எண்ணம் எவ்வளவு மடமையானதாக இருக்கும்?

நேற்று, நானுக் கூட புது அலமாரியன்றில்தான் என்னையத்தவர்களுடன் அடுக்காயிருந்தேன். பக்கத்திலிருந்த தங்க நகைகளெல்லாம் என்னைப் பார்த்துச் சினேகமாய்ப் புன்னகைத்தன. வெளிச்சம் புகாத அந்த இருட்டிலும் தம் பளபளப்புக் காட்டிப் பிரகாசித்தன. “என்ன நூறு! சௌக்கியம்தானே?” என அவை கேட்ட போது, நான் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தேன். என் போன்றோர் இல்லையெனில், அவை போன்றோரை வாங்க முடியாது என்பது அவற்றுக்கும் தெரிந்திருந்தன. அவற்றோடு சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்த போது, அலமாரியின் கதவு கிரீச் சத்தத்துடன் திறக்கப்பட்டது. நான், அவற்றிடம் விடைபெற்றுக் கொண்டு தயாராயிருந்தேன். நினைத்தது போலவே, மேலிருந்த நான் உருவி வெளியே எடுக்கப்பட்டேன். வெளிச்சம் என்னை வரவேற்றது. இருட்டிலிருந்து விடுதலை பெற்று வெளிச்சத்துக்கு வந்த மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. அலமாரிக் கதவைச் சாத்தித் தாளிட்டு, அது சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, என்னைத் தன் வலது கைவிரல்களிடை நசித்துப் பிடித்துக் கொண்டு செல்லும் அந்த மானுடனைப் பார்த்தேன். நடுத்தர வயதினராக இருந்த அவரது முகம் முழுக்க மகிழ்ச்சி பந்தலிட்டிருந்தது. அறிவுக் கூர்மையும், அன்புப் பெருக்கமும் கண்களில் பிரகாசித்தன. ஏதோ நற்செயலொன்றைப் புரியும் திருப்தியான ஆர்வம் அவரது அசைவுகளில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

உள்ளறையிலிருந்து வெளிப்பட்டவர், முன்வாசலுக்கு வந்தார். வாசலோரமாக, கொத்தி முறிக்கப்பட்ட சில விறகுக் கட்டைகள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு முன்னால், ஒரு கையில் கோடரியும், மறுகையில் கழற்றிய மேற்சட்டையுமாக, நெற்றி வியர்வை கண்களை மறைக்கும் முயற்சியைத் தன் புறங்கையால் தடுத்தவாறு முறுக்கேறிய விறகு வெட்டியருவன் நின்றிருந்தான். விறகு வெட்டியின் வேலையைப் பாராட்டிய அவர், தன் விரல்களிடையே வைத்திருந்த என்னைத் தூக்கி அவனிடம் கொடுத்தார். அவன், திருப்தி வழியும் முகத்துடன் மகிழ்ச்சி பொங்கிக் களிக்க என்னைப் பெற்றுக் கொண்டு, அவருக்கு நன்றி கூறியபடி அங்கிருந்து விடைபெற்று வெளிப்பட்டான்.

உழைப்பு வியர்வை வற்றுமுன் கிடைத்த கூலியாகிய என்னை, அவன் நன்றியுணர்வோடு நோக்கினான். இன்று பசியில் வாடவேண்டியிருக்காது என்ற எண்ணம் அவனது உள்ளத்தில் முழுநிலவாய் குளிர்மையைக் கொட்டிற்று. மனைவி, பிள்ளைகளுக்கு வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுள் மகிழ்ச்சியாய்ச் சுடர்விட்டது. தனக்கு உணவில்லையென்றால் அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் மனைவி மக்களுக்கு உணவில்லையெனில் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்! தன் தோள் மீதுள்ள பொறுப்பை உதறித் தள்ளிவிட்டு, தெருவோரம் அமர்ந்து சமூகத்தைக் குறைகூறிச் சபிக்கும் பழக்கமெல்லாம் அவனுக்கில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பும், குடும்பப் பொறுப்பும்தான். ஒவ்வொரு முறை உழைத்துக் கூலி பெற்று, அதனை மனைவி மக்களின் பசிக்குணவாக்கும் போது, அவனது ஆழ்மனதில் ஏற்படுமே ஒரு திருப்தி, சுவைசுவையான உணவு வகையறாக்களை வயிறுமுட்டச் சாப்பிட்டுக் களித்துப் பஞ்சு மெத்தையில் படுத்துழன்றாலும் கூட அந்தத் திருப்தி வராது.

ஒரு கடைக்குச் சென்று, அன்றைய உணவுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி, என்னைத் தூக்கிக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அவன் அங்கிருந்து அகன்றான். கடையின் உரிமையாளர் போலிருந்த அந்த முதிர்ந்த மனிதர், என்னைத் தூக்கி மேசை டிராயரில் போட்டு விட்டுத் தன் வியாபாரக் கெடுபிடிகளில் மும்முரமானார்.

உயர்ந்த மேசையன்றிலிருந்த வானொலியிலிருந்து கசிந்து பரவிக் கொண்டிருக்கும் ஆன்மீக நறுமணத்தை, அந்தக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பக்குவமாய் நுகர்ந்து கொண்டிருந்த அவரது பக்தியுணர்வு என்னை வியப்பிலாழ்த்திற்று. ஆன்மீகமின்றி  அகிலம் செழிக்க முடியுமா? வழிபாடின்றி வாழ்க்கை இலக்கையடையுமா? முடியாதுதான். ஆனால், செவியினூடு புகுத்தி, உள்ளத்தை நிரப்பிக் கொள்வதற்கு மட்டுமில்லையே ஆன்மீகம்! செயலிலும் அது பரிணமிக்க வேண்டுமே. பொதுநலனும், பரோபகாரமும் ஆன்மீகத்தின் முக்கிய வெளிப்பாட்டுப் பண்புகள். இவற்றைப் புறத்தொதுக்கும் ஆன்மீகம் முழுமையடைவது எங்ஙனம்?

ஆன்மீகத்தை, வெறுமனே ஆன்மச் சுதாகரிப்புக்காகப் பயன்படுத்தும் ஒருவராக அவர் எனக்குத் தோன்றவில்லை. பால் போல் நரைத்தும் இடையிடையே பொன்னிறம் விரவிச் சடை தரித்துமிருந்த தாடி அடர்ந்த முகவிலாசத்தின் நடுவே, அவரது சுடர்விழிகள் குளுமை வழியச் சிவந்திருந்தன. அதில் உலகக் கட்டுகளைக் கடந்து வந்த ஞானத்தின் மோனச் செழுமை செறிந்திருந்தது. அவர்தான் அந்தக் கடையின் முதலாளியாக இருக்க வேண்டும். ஆனால், முதலாளிமாரில் இயல்பாகப் படிந்திருக்கும் இறுமாப்புப் பார்வை அவரில் இருக்கவில்லை. பொருட்களை ஏற்றுவதிலும் இறக்குவதிலும், வாடிக்கையாளர்களுக்குப் பண்டங்களைப் பரிமாறுவதிலும் மிக்க சுறுசுறுப்பாயிருந்த கடையின் பணியாளர்கள், அவருக்கு முன்னால் மரியாதையை மகிழ்ச்சியுடனும் விருப்புடனும் அணிந்து கொண்டிருந்தனரேயன்றி, அவரைக் கண்டு அஞ்சியடுங்கிக் குலைநடுங்கியதாகத் தெரியவில்லை.

அவரது முகத்தில் புன்முறுவல் பூத்துச் செழித்திருந்தது. பொருள் வாங்க வருவோர், அவரது பூக்களையும் இலவசமாகப் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். நெரிசல் அதிகரித்த போதும், குறைந்து வெறுமையான போதும் தனது முகபாவனையில் மாற்றமேதுமின்றி நிலைத்திருந்த அவரது வசீகரம் என்னை வியப்பு சூழ அழகாகக் கவர்ந்திழுத்தது. அந்த வசீகரத்தில் ஆன்மீக நறுமணம் பொங்கி வழிந்து சுகவாசனை கொட்டிற்று.

வாடிக்கையாளர்கள் யாருமற்றிருந்த நேரமொன்றில், முதுமையில் முதுகு கவிழ்ந்த வறியவன் ஒருவன் கடையின் முன்வந்து நின்று, பரிதாபச் சிரிப்பைப் போர்த்திய பார்வையுடன் அவரை ஏறிட்டான். சேர்ந்திருந்த நோட்டுகளையும் நாணயங்களையும் வெவ்வேறாக்குவதில் மும்முரமாய் இருந்த அவர், ஆளரவம் கேட்டுத் தலையுயர்த்தி வறியவனைப் பார்த்ததும், அவனை வரவேற்கும் பொருட்டு மென்மையாகச் சிரித்தார். பின் ஏதோ நினைவு வரப்பெற்றவராக, எண்ணிக் கொண்டிருந்த நோட்டுகளில் சிலவற்றையெடுத்து, எழுந்து வந்து அவனது கைகளில் கொடுத்தார். ஏற்கனவே கோரியிருந்ததற்கிணங்க இப்பணத்தைத் தருவதாகவும், மகனுடைய படிப்புக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுக்குமாறும் கூறி அவனை அன்புடன் அனுப்பிவைத்து விட்டுத் தனது பணியைத் தொடர்ந்தார்.

எனக்குப் பெருமையில் நெஞ்சு விம்மிற்று. இவ்வளவு பரந்த பொதுநலப் பண்போடும் உயர்ந்த குணத்தோடும் உள்ள மானுட குலத்தைப் பற்றிய பிரமிப்பு என் உணர்வுகளில் குளிர் தடவிற்று. உலகின் செழிப்புக்கும் இருப்புக்கும் இத்தகைய பண்புகளன்றி வேறென்ன காரணமாக இருக்க முடியும். பரஸ்பர ஒத்துழைப்பும் ஒற்றுமையும் என்ற அடித்தளத்தில்தானே இந்த வாழ்க்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அடித்தளம் பசுமை குமையும் போது, அதன் கட்டடச் செழுமை பற்றிக் கேட்கவா வேண்டும்!

உள்ளக வேலைகளில் சுறுசுறுப்பாயிருந்த கடைப் பணியாளன் ஒருவனை அவர் அழைத்தார். அழகான இளைஞனாக இருந்த அவன், மிகப் பவ்யமாக அவர் முன்னால் வந்து நின்றான். அவனது பார்வையின் கனிவு, அவர் மேலுள்ள அவனது ஆழ்ந்த மரியாதையை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தியது. அவர், நோயுற்றுப் படுக்கையில் விழுந்துள்ள அவனது தாயின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார். டிராயரிலிருந்த என்னைத் தூக்கி, அவனிடம் கொடுத்து, கடை சாத்தும் நேரம் வரை காத்திராது, இப்போதே சென்று தாயைக் கவனிக்குமாறும், மேலதிக பணம் தேவையென்றால் தயங்காது தன்னைக் கேட்குமாறும் கூறி, அவனை அன்புப் பெருக்கு வழியும் பார்வையால் தழுவி அனுப்பி வைத்தார்.

முதலாளியிடமிருந்து மிகப் பணிவாக என்னைப் பெற்றுக் கொண்ட அவனது கண்களில், அருளின் குளுமை அணையுடைத்துப் பீறிட்டு வழிந்து அலையலையாய்ப் புரண்டது. நன்றி கூற வார்த்தைகள் பிடிபடாத தவிப்பில் யதார்த்தம் செறிந்த சிரிப்பொன்றை முதலாளியின் முகத்தில் உதிர்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறி நடந்தான். முதலாளி பற்றிய நினைவுகள், இனிப்புப் பொட்டலமாய் அவனுள்ளே அவிழ்ந்து சிதறின. நோயாளியான தாயையும், நொண்டியான தம்பியையும் வைத்துக் கொண்டு, வருமானம் பெறத் தொழிலின்றி வறுமையின் வெம்மையில் தீய்ந்து கருகிக் கொண்டிருந்தவனுக்கு, பொருத்தமான தொழிலையும், போதுமான வருமானத்தையும் காண்பித்தவர் முதலாளிதான். நொண்டித் தம்பிக்கு வைத்தியம் பார்த்துச் சீராக்கியதோடு, அவனது கல்விக்கான பொறுப்பையும் தன் தோள் மீது அவர் போட்டுக் கொண்டார். தாயின் மருத்துவத்திற்காக அடிக்கடி அவனுக்குப் பணம் கொடுத்து ஆறுதலும் கூறிக் கொண்டிருந்தார். எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஒரு மனிதனால் இவ்வளவு சேவைகளையும் ஆற்ற முடியுமா என்பது, அவனைப் பொறுத்தவரை நடைமுறைச் சாத்தியமற்ற ஓர் அதிசயமான நிகழ்வாகவே இருந்து வந்தது. எனினும், தன் கண் முன்னால், தனக்கே அது நடந்து வரும் போது, அவன் அதனைச் சாத்தியமென ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும்.

அவர் தன் மேல் காட்டும் அன்புக்குப் பிரதியுபகாரமாக, அவன், அவரது தொழில் விருத்திக்காக முழுமையான விசுவாசத்துடன் உழைத்தான். அவர் இருக்கும் போதை விட, இல்லாத போதில் மிக நம்பிக்கையாக நடந்து கொண்டான். அவனது விசுவாசத்திற்குக் கூலியாக அவர் மேலும் மேலும் வழங்க முன்வந்த போது, இதற்கு மேற்பட்ட அன்பின் கனத்தைச் சுமக்கும் சக்தி தனக்கில்லையென அவன் மறுத்து விட்டான். அந்த மறுப்பு, அவனைப் பற்றிய நல்லெண்ணத்தை முதலாளியிடத்தில் மேலும் அதிகப்படுத்திற்று.

அவனது மனதுள், கடந்த கால நிகழ்வுகள் கோர்வையாய் வந்து விழுந்து கூறிய கதை எனது கண்களைப் பனிக்கச் செய்தது. பரந்து விரிந்த மானுடத்தின் பசுமையை அள்ளிப் பருகக் கண்கள் போதாத தவிப்பில் நான் சிலிர்த்தேன். அந்த மானுடத்தின் ஒரு பிரதிநிதியாய் ஆக முடியாது போன என் வாழ்நிலை குறித்து, என்னுள் கொஞ்சம் அதிருப்தியும் தோன்றலாயிற்று. அவனது சட்டைப்பை, அமைதியான அழகும் அரவணைக்கும் தென்றலுமாய்ச் செழித்துக் குலுங்கும் பசுஞ்சோலையன்றை என் கண்களின் முன்னிறுத்திற்று.

அவனிடம் அன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதிய பணம் இருக்கிறது. முதலாளி தந்தது இப்போதைய நிலையில் மேலதிகமானதுதான். ஆகவே, அதைத் தேவையுள்ளோருக்கு வழங்குவது தனது கடமையென அவன் எண்ணினான். இவ்விதமாக மேலதிகப் பணம் கிடைக்கும் போதெல்லாம், அவன் வழமையாகச் செல்லும் இடத்தை நோக்கி அவனது கால்கள் நடந்தன.

அது ஒரு குடிசை. உதிர்ந்த சருகுகள் ஒட்டி நிமிர்த்தப்பட்டாற் போலிருக்கும் அதனுள் அவன் கால்பதித்தான். வாழ்க்கை என்ற பெயரில் தாயும் மகளுமாய் இரண்டு ஜீவன்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் போர்க்களம், அந்தக் குடிசை. அவர்களது வாழ்க்கைத் துயரை நினைக்கும் போதெல்லாம், மந்தகாசத் தென்றலில் பற்றியெரியும் தீயாய் அவனது உள்ளம் கொதிக்கும். கண்கள், வெம்மை வழிய எரியும் தணல் போல் சிவந்து முறுகும். கணவன் கைவிட்டுச் சென்ற பின், பச்சிளங்குழந்தையுடன் வாழ்க்கைச் சவால்களை எதிர்த்துப் போராடும் இறுக்க வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டுள்ள அவளது நிலையையும், முழுமையாக அதற்குதவ முடியாத தன் இயலாமையையும் எண்ணி அவன் மனதுக்குள் புழுங்குவான். அவ்வப்போது சில நோட்டுகள் அவள் கைகளில் புழங்கினாலும், பெரும்பாலும் பசியும் கண்ணீருமே அவளது பிரதான அடையாளங்களாய் உயிர்ப்பெடுத்து நிற்பது அவன் அறியாததல்ல.

குடிசைக்குள் யாருமில்லாதிருந்தது அவனை வியப்பிலாழ்த்திற்று. கடந்த இரண்டு நாட்களாகக் கடும் காய்ச்சலினால் வாடிக் கருகிக் கொண்டிருக்கும் அவளது குழந்தையின் சிகிச்சைக்குப் பணம் கொடுக்கும் எண்ணத்துடன்தான் அவன் வந்திருந்தான். கொஞ்சமாக இருந்தாலும், அதைப் பத்திரமாகப் பதுக்கி வைப்பதை விட, தேவையுள்ளோருக்குக் கொடுத்துதவுவதில்தான் உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் இருக்கின்றன என்பது அவனது நீண்ட நாட் சிந்தனை.

குடிசையிலிருந்து வெளிப்பட்டுத் தன் வீட்டை நோக்கித் தெருவோரமாய் நடந்து சென்றவன், வறுமைத் துயரின் அழுக்கில் தோய்ந்து சோர்ந்து, நடைபாதையில் நின்றவாறு, வயிற்றுப் பசிக்குத் தானமிரைஞ்சிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியைக் கண்டு கண்கலங்கினான். முதலாளியின் அன்பும் அக்கறையும் இல்லாது போயிருந்தால், தானும் தாயுடனும் தம்பியுடனும் இத்தகைய நிலைக்குத்தான் இறங்கி வரவேண்டி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்த போது, அவன் உள்ளம் விம்மிக் கண்கலங்கினான். நன்றியுணர்வு பெருக முதலாளியை நினைத்துக் கொண்டான்.

இந்த மூதாட்டிக்கு உதவ வேண்டுமென மனம் அவனை ஏவிற்று. மேலதிகப் பணமாக அவன் கணித்திருந்த என் மீது அவனது பார்வை விழுந்தது. மூதாட்டியை நெருங்கிச் சென்று, தனது கையிலிருந்த என்னைத் தூக்கி அவளிடம் கொடுத்தான். அவளது வாழ்க்கை நிலைகளை உண்மையான பரிவுடன் கேட்டறிந்தான். திருப்தியாகச் சாப்பிடுமாறு கூறி விட்டு அங்கிருந்து அகன்றான் அவன்.

அவனுக்கு வாய் நிறைய நன்றிகூறிவிட்டு, தன் அழுக்குக் கையில் கசங்கியவாறு அமர்ந்திருந்த என்னை ஆதுரமாய்ப் பார்த்தாள் மூதாட்டி. அவளது முகத்தை மலர்ச்சி கௌவிற்று. தன் யாசகப் பணியை இடைநிறுத்தி விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள் அவள். அவளது மங்கிய கண்களில் மகிழ்ச்சியான காட்சியன்று படமாக ஓடிக் கொண்டிருந்தது. அதில் அவளும், இரண்டு கால்களையுமிழந்த அவளது கணவனும் இணைந்து ருசி மிகுந்த உணவு வகையறாக்களை வயிறார உண்டு, பலநாள் பட்டினியைத் துரத்தியடிக்கும் படியான சுவையான நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

திருமணம் இணைத்து வைத்த அவர்களது வாழ்வில், குழந்தைப் பாக்கியம் இல்லையென்ற குறை நீங்கலாக, எல்லாமும் மகிழ்ச்சியான அனுபவங்களாகவே விழுந்த வண்ணமிருந்த ஆனந்த நிலைக்கு, கணவனது கால்களைப் பலியெடுத்த பஸ் விபத்து முற்றுப்புள்ளியிட்டது. அதன் பிறகு தன் தோளுக்கு மாறிய குடும்பப் பொறுப்பைச் சுமக்க அவள் சிரமப்பட்டுழைத்தாள். வயது முதிர்ந்து தள்ளாமை தலைநீட்டிய போது, வேறு வழியின்றிக் கையேந்தி நிற்கும் இழிவைத் தன் தொழிலாக வரித்துக் கொண்டாள். பல நாள் பட்டினியும், சில நாள் உணவுமாக அவர்களது காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்துள்ள இவ்வளவு பெரிய பணத்தொகை அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தாதா? மீண்டும் என்னை ஆசை தீரப் பார்த்தாள் மூதாட்டி.

இப்போது, அவளது பார்வையில் மகிழ்ச்சியுடன் இணைந்து பொறுப்புணர்ச்சியும் மின்னிற்று. அவள் கொண்டு வரும் சில நாணயக் குற்றிகளுக்காக, அல்லது எச்சில் உணவுகளுக்காகக் குடிசையில் அவள் கணவன் காத்துக் கொண்டிருப்பான். மிகக் கனமான இரண்டு புத்தம்புது உணவுப் பொட்டலங்களுடன் அவன் முன்னால் போய் நின்றால், அவன் எவ்வளவு மகிழ்ச்சியடைவான்! நம்ப முடியாமல் கண்களைக் கசக்கித் தலையை உசுப்பிக் கொள்வானோ? நன்றியுணர்வுடன் ஆசை தீர என்னை அள்ளிப் பருகுவானோ? இந்நிலையிலான அவனது முகப் பிரதிபலிப்பைப் பார்த்து ரசிக்க வேண்டுமென அவள் மனம் குழந்தைத்தனமாய் அவாவுற்றது.

தனக்காகவும், தன் கணவனுக்காகவும் தனியாளாய் நின்றுழைக்கும் வாழ்க்கைச் சுமையை அவள் நீண்ட காலமாகச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆனால், எப்போதுமே அதை அவள் சுமையாகக் கருதியதில்லை. சுகமான கடமை, சுவையான பணி என்ற உணர்வே அது தொடர்பாக அவளுக்கிருக்கிறது. கணவன் உழைத்து வந்த காலங்களில் அவளே உணவு பரிமாறுவாள். அவன் உழைக்க முடியாது படுக்கையில் வீழ்ந்துள்ள இக்காலத்திலும் அவளே உணவு பரிமாறுகிறாள். உழைக்கும் பொறுப்பு அவனிடமிருந்து விலகி அவள் மீது மேலதிகமாக விழுந்துள்ளமை மட்டுமே இப்போதைய வித்தியாசம். கணவன் மீது தனக்குள்ள பற்றுறுதியை வெளிப்படுத்தத் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பென இந்நிலையை அவள் வரவேற்றிருந்தாள்.

இவ்விதமான உயர்ந்த இலட்சியத்தையும், விரிந்த பார்வையையும் கொண்ட அவளைச் சாதாரணப் பெண்ணெனக் கருத முடியுமா? அடிப்படையில் அவள் ஒரு பிச்சைக்காரியாய் இருந்தாலும், மனதளவில் ஒரு மகாராணியாகவே என் மனம் அவளை நோக்கிற்று. மானுட குலத்துக்குப் பெருமை சேர்க்கும் இத்தகைய ஜீவன்களைத் தன் பிரதிநிதியாய்ப் பெற அக்குலம் என்ன தவம் செய்ததோ?

ஆர்ப்பாட்டமான வானொலி இசையுடன் கலகலவென்றிருந்த ஹோட்டலொன்றைக் கண்டதும் அவள் தன் நடையைத் தளர்த்தி நிறுத்தினாள். முன்னர், பிச்சை கேட்டுச் செல்லும் போது, நெஞ்சு தாழ்த்தித் தேவையற்றுச் சிரித்துக் குழைந்து கெஞ்சும் அடிமை முறிவைத் தூர வீசிவிட்டு, எல்லோரையும் போன்று சாவதானமாக உள்ளே நுழைந்தாள். தன்னைக் கண்டதும் முகஞ்சுளித்தும் மூக்கைப் பொத்தியும் அருவருத்து ஒதுங்குபவர்களை அலட்சியமாகப் பார்த்து விட்டு, கையிலிருந்த என்னைத் தூக்கி கெஷியரிடம் கொடுத்து, சுடச்சுட இரண்டு புதிய உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு, உற்சாகம் கொப்பளிக்க நடந்து போனாள் அவள்.

மீண்டும் மேசை டிராயரொன்றில் நான் விழுந்து கிடந்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியே தூக்கியெடுக்கப்படுவதும், வெளியே இருந்து புதியவர்கள் உள்ளே வந்து விழுவதுமாக அந்த டிராயர் மிகச் சுறுசுறுப்பாக இருந்தது. எந்த நேரத்திலும் தூக்கப்படலாம் என நானும் தயாராகத்தான் இருந்தேன்.

எனது பார்வை சுற்றிச் சுழன்றது. அந்த ஹோட்டல் இவ்வளவு விசாலமாக இருந்ததால்தான், எவ்வளவு சனக்கூட்டத்தையும் இலாவகமாக விழுங்கிக் கொள்ள அதனால் முடிகின்றது. ஒரே நிறத்திலான சீருடை அணிந்த பணியாளர்கள், பம்பரமாகச் சுழன்று, குவிந்திருக்கும் வாடிக்கையாளர்களின் உள்ளங்களைக் குளிர்வித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

வானத்தில் மேகம் கறுத்துக் குவிந்தது. மேகத்தின் அடர்த்தியான கருமை, அடைமழையன்றைக் கட்டியம் கூறிய சற்றைக்கெல்லாம், மழைத்துளிகள் சொட்டுச் சொட்டாய் பூமியில் விழுந்து சிதறின. ஊதல் காற்று மழை நீரை வாரியடித்து சுற்றுப்புறச் சுவர்களையெல்லாம் ஈரமாக்கிற்று. மழைத்தாரை, கட்டடங்களின் கூரை மீது பேரோசை கிளப்பின.

மழைக்குள் அகப்பட்டு விடக்கூடாதெனத் தலையை மூடிக் கொண்டு ஓடியவர்களில் சிலர், ஹோட்டல் தாழ்வாரத்தின் கீழே பதுங்கினர். சிலர் உள்ளே வந்தமர்ந்து சூடான பானமருந்திக் குளிர் விலக்கினர். வியாபாரம் சூடுபிடித்தது.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு நான் டிராயரின் உள்ளே மல்லாந்து கிடந்த போது, புதிய ஆயிரமொன்று உள்ளே வந்து விழுந்தது. தொடர்ந்து, நானும் என் போன்ற சிலரும் வெளியே தூக்கியெடுக்கப்பட்டு, சிறு பாத்திரமொன்றில் போடப்பட்டோம். கட்டணம் எழுதப்பட்ட சீட்டொன்றும் அதனுள்ளே இருந்தது. பணியாளன் ஒருவன் பாத்திரத்தைத் தூக்கிச் சென்று ஒரு மேசையில் வைத்தான். கனமாக ஏப்பமிட்டவாறு அம்மேசையுடன் ஒட்டிய கதிரையில் அமர்ந்திருந்த, மிக நேர்த்தியாக உடையணிந்த ஒருவர் பணியாளனைப் பார்த்து நன்றிக்கடையாளமாய்ச் சிறுநகையன்றை உதிர்த்தார். முன்னால் கிடந்த எம்மைப் பக்கெட்டுள் திணிப்பதற்காக அள்ளியெடுத்தார். அந்த நேரம் பார்த்து, மேசையில் கிடந்த அவரது செல்ஃபோன் அலறியதால், அவசரமாக எம்மைச் சட்டைப் பைக்குள் திணித்தவர், நான் நழுவிக் கீழே விழுவதைக் கவனிக்காமலேயே, செல்ஃபோனை எடுத்துக் காதில் பொருத்திப் பேசத்தொடங்கினார். நீண்ட நேரமாகப் பேசிவிட்டு ஃபோனைக் கீழே வைத்தவர், மீண்டும் அழைப்பு வர எடுத்துப் பேசினார். இப்போது அவரது முகத்தில் மாறுதல் தெரிந்தது. உடலில் லேசான பதற்றம் தொற்றிக் கொண்டது. பேசி முடித்து விட்டு உடனே எழுந்தார். தன் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.

மேசையின் கீழே குப்புற விழுந்து கிடந்த நான், அவரைப் பரிதாபம் முறுகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் அவருக்குத்தானே சொந்தம். அவர் என்னைக் கவனிக்காமல் விட்டுச் செல்வது எனக்குக் கவலையாயிற்று. பிறிதொருவன் என்னைக் கண்டெடுத்துப் பைக்குள் செருகிக் கொண்டால் அது அநீதியாகி விடுமே என நான் பயந்து கொண்டிருந்தேன்.

நல்ல வேளையாக, பணியாளர்களில் ஒருவன் என்னைக் கண்டு கொண்டான். என்னையும், என்னைத் தவற விட்டுச் செல்லும் அவரையும் மாறிமாறிப் பார்த்தான். ஏதோ புரிந்து கொண்டவன் போல் தலையை மேலும் கீழும் அசைத்தான். தாமதிக்காது, விரைந்து வந்து, என்னையெடுத்துக் கொண்டு, அவரை மரியாதையாக அழைத்தபடி அவரை நோக்கி ஓடினான்.

மழைக்குப் பயந்து வேகமாக நடந்து கொண்டிருந்த அவர், தான் அழைக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்பி, தன்னை நோக்கி ஓடிவரும் ஹோட்டல் பணியாளனைக் கண்டதும், நெற்றிச் சுருக்கத்துடன் நடையை நிறுத்தி, மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அருகிலிருந்த கடையன்றில் ஒதுங்கி, அவன் வரும் வரை காத்திருந்தார். அவரை நெருங்கி வந்து நின்ற பணியாளன், தன் கையிலிருந்த என்னை அவரிடம் நீட்டி, தவறவிட்டதாகக் கூறிய போது, அவர் என்னையும் அவனையும் பார்த்து விட்டு வெள்ளையாகச் சிரித்தார். அவனது நேர்மையைப் பாராட்டி, அதற்கான தன்னுடைய பரிசாக வைத்துக் கொள்ளுமாறு என்னை அவனிடமே மீளக் கொடுத்தார். அவனது நன்றியையும் புன்முறுவலையும் பெற்றுக் கொண்டு காரிலேறிக் காணாமல் போனார்.

எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மை வழுவாக ஒருவனை எஜமானனாகக் கொண்டிருப்பதென்றால், என்னைப் போன்ற எவருக்குத்தான் மகிழ்ச்சி ஏற்படாது. நற்பண்பு என்பது எல்லோராலும் விரும்பப்படுகின்றது. கெட்ட பழக்கங்களை யாரும் விரும்புவதில்லை. அவற்றைத் தொடராகச் செய்பவர்களும் கூட, அவை தொடர்பான வெறுப்பும் அதிருப்தியும் அவர்களது உள்ளத்தின் ஆழத்தில் - அவர்களுக்கே தெரியாமலேனும் - உறுத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் அதனைச் செய்து வருகிறார்கள் நற்பண்புதான் உலகின் இயல்பு. அடிப்படை இயல்பை மீறினால், வாழ்க்கை சுவையிழந்து போகும்; மகிழ்ச்சி உயிர்விட்டுச் சாகும்.

அவன் என்னைத் தன் சட்டைப் பையில் திணித்துக் கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். வாடிக்கையாளர்களை மலர்ந்த முகத்துடன் உபசரித்து அனுப்பினான். அவனது உபசரிப்பு, அவர்களது வயிறுகளையும் உள்ளத்தையும் திருப்தியுறச் செய்தது. அந்தத் திருப்தி, அவனது சட்டைப்பையில் அன்பளிப்புப் பணமாக நிரம்பிக் கனத்தது. அவன், மனம் நெகிழ்ந்து மகிழ்ந்தான். அவனது மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன். நான் கொஞ்சம் கூடிய பெறுமதியென்பதால் என்னை சட்டையின் மேற்பையிலும், அன்பளிப்பாகக் கிடைத்தவற்றைக் கீழ்ப்பையிலும் அவன் இட்டிருந்தான். இந்த மரியாதையும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திற்று.

நேரமாக ஆக, மழை ஓய்வெடுத்துக் கொள்ளலாயிற்று. அது கண்டு சூரியனும் தன் பணி முடித்து ஓய்வெடுக்க மேற்கு வானில் மெல்ல மெல்லச் சரியத் தொடங்கினான். மேகத்தின் கருமையும், நிலவின் வெண்மையும் கலந்துதிர்த்த மாலை இருள், தயங்கித் தயங்கிப் பாய் விரிக்கத் தொடங்கிற்று.

தனக்குரிய வேலை நேரம் முடிந்ததும், அவன் உடைகளை மாற்றிக் கொண்டு வெளிப்பட்டான். கெஷியரும், மற்றும் பணியாளர்களும் சினேகம் கவிழ்த்து முறுவலித்து, அன்புடன் அவனை அனுப்பி வைத்தனர்.

தன்னைத் தழுவி அணைத்துக் கொள்ள முனையும் இருளைக் கிழித்துக் கொண்டே அவன் நடந்தான். இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தாயும் தந்தையும் அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆசுவாசகமாக அமர்ந்திருந்து அவர்களுடன் மனம் விட்டுச் சிறிது நேரம் உரையாடிச் சிரித்து அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தால்தான் அன்றிரவு அவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள். அவர்களது கைகள் அன்பு வழிய வழியத் தன் தலையைக் கோதிவிட்டால்தான் அவனாலும் அன்றிரவு சலனமின்றி உறங்கிச் சாந்தமடைய முடியும்.

வீட்டுக்குச் செல்வதற்கிடையில், அவனுக்கு இன்னொரு பணி இருக்கிறது. அருகிலுள்ள தொழினுட்பக் கல்வி நிறுவனத்தில், ஆறுமாதப் புதிய கற்கை நெறியன்றை அவன் ஆரம்பித்திருக்கிறான். வார இறுதி நாட்களின் மாலை நேர வகுப்பாக நடைபெறும் அக்கற்கைநெறி, அவனது எதிர்கால வாழ்வில் பிரகாச நட்சத்திரங்களை உற்பவிக்கும் அழகான எதிர்பார்ப்பை அவனுள் திரளச் செய்திருந்தது.

அவனது உள்ளத்தில் நிறைய இலட்சியங்கள் இருந்தன. அந்த இலட்சியங்களை நோக்கிய தன் பயணப் பாதையில் அவசியப்படும் ஆளுமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக அந்தக் கற்கைநெறியை அவன் கருதியிருந்தான். பசியில் வாடிக் கருகும் வறியவர்களின் துயரமும், கல்வி மறுக்கப்பட்ட ஏழைச் சிறார்களின் அவலமுமாக, நாளாந்தம் அவன் சந்தித்துச் சோகத்தில் அமிழும் துன்பியல் நிகழ்வுகள், அவனது இலட்சியப் பரப்பை மேலும் விரிவாக்கியிருந்தன.

சற்று நேர நடையில் பஸ் தரிப்பிடமொன்றை அடைந்து, பஸ்ஸ§க்காகக் காத்திருந்தான். ஆடி அசைந்து கடமுடா சத்தத்துடன் வந்து நின்ற பஸ்ஸில், கம்பியைப் பிடித்துத் தாவி உள்ளே ஏறி, வெற்றிடமாயிருந்த ஆசனமொன்றில் சௌகரியமாய் அமர்ந்து கொண்டான் அவன். ஒரே இடத்தில் நிற்காது, அனுபவ முதிர்ச்சியால், ஓடும் பஸ்ஸிலும் அங்குமிங்குமாக நடந்து, புதிதாக ஏறுபவர்களிடம் கட்டணம் வசூலித்து, உடனுக்குடன் பிரயாணச் சீட்டையும் கிழித்துக் கொடுத்துச் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த அழகான பஸ் நடத்துனரை அவன் மரியாதையுடன் நோக்கினான். மிக நேர்த்தியானதும் சுத்தமானதுமான உடை, சிரித்த முகம், மரியாதையான பார்வை போன்ற அவனது வெளிப்புறத் தோற்றங்களை விட, அவனது முகத்தில் முழுமை பெற்றிலங்கிக் கொண்டிருந்த கடமையுணர்ச்சி ஒன்றுதான் அவனது முக்கிய அடையாளமாய் இவனுக்குத் தோன்றிற்று. ஒவ்வொரு பணியிலும், அது தொடர்பான அறிவும் ஆளுமையும் உள்ளவர்கள் அமர்த்தப்பட்டால், நாட்டின் செழிப்பையும் முன்னேற்றத்தையும் யாரால் தடுத்து நிறுத்த முடியும்!

சட்டையின் மேற்புறப் பையிலிருந்த என்னைத் தூக்கிக் கொடுத்து, தனக்குரிய பிரயாணச் சீட்டையும் மீதிப்பணத்தையும் பெற்றுக் கொண்டு, கையிலிருந்த புத்தகத்தை விரித்து, சென்ற வாரப் பாடங்களை மீட்டிப் பார்க்கும் பணியில் மூழ்கினான் அவன்.

பஸ் நடத்துனர், என்னையெடுத்துத் தன் கையிலிருந்த கட்டணப் பதிவுப் புத்தகத்துள் செருகிக் கொண்டு, தொடர்ந்து ஏறுபவர்களை அவதானிக்க அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் யாரையும் அதட்டவில்லை. முன்னால் செல்லுமாறோ, பின்னால் நகருமாறோ கத்திக் கத்திப் பிரயாணிகளை அசௌகரியப்படுத்தவில்லை. அவனது இதமான அணுகுமுறை, பிரயாணிகளிடமிருந்து அன்பு நிறைந்த சகோதரப் பார்வையை அவனுக்குச் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது.

உள்ளிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, குறிப்பிட்ட இடத்தை அடையும் போது பஸ் வெறுமையாகி அமைதியுற்றுத் தணிந்து இளைப்பாறிற்று. சாரதியுடன், கீழே இறங்கிய அவனை இருள் தன் விசாலமான சேலையால் போர்த்தி மகிழ்வித்தது. குளிர் காற்று அவர்களது முகங்களில் பசுமை பொழிந்தது. இதமான சூழல் மாற்றம் வேலைக் களைப்பை விரட்டியடித்த மகிழ்ச்சியில் அவர்கள் மீள உற்சாகம் பெற்றனர்.

இருவரும், இருளைக் கிழித்துக் கொண்டு சற்றுத் தூரம் நடக்கலானார்கள். உயர்ந்த இரண்டடுக்கு மாடி வீட்டையடைந்து, வாயிற்காப்பாளனின் சினேகபூர்வ முறுவலை ஏற்றுப் பதிலிறுத்திக் கொண்டு உள்ளே கால்பதித்தார்கள்.

பளிங்குத் தரையும், விலையுயர்ந்த சோபா செட்டுகளுமாய் ஆடம்பரப் பளபளப்பு வழியும் அவ்வீட்டின் மண்டபத்திற்குள் அவர்களிருவரும் நுழைந்தனர். சுவரோரமாகச் சாய்ந்து நின்று, தமது முதலாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அன்றைய பிரயாணத்தின் சுவையான அனுபவங்கள் பற்றியும், தம்மைக் கவனிப்பதில் சற்றும் குறைவைக்காது நடந்து கொள்ளும் முதலாளியின் நற்பண்பு பற்றியுமான அளவளாவுதலில் கழிந்த சிறிது நேரத்தின் பின், வீட்டினுள்ளேயிருந்து ஒருவர் வந்தார். அவரைக் கண்டு இவர்கள் இருவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் நான் கொஞ்சம் பயந்துதான் போனேன். ஆடம்பரத்திலும், அச்சுறுத்தும் தோற்றம் விலகாத உருவம் அவர்களது முதலாளிக்கு. அதற்காக அவரைக் குறை கூற முடியுமா? அது இறைவனது படைப்பின் விசித்திரங்கள். தலையைச் சிலுப்பிக் கொண்டு மீண்டும் அவரைப் பார்த்தேன். தொந்தி வயிறு, தொங்கும் கழுத்து, கறுத்த விகாரமான முகம், காவி படிந்த கோரப் பற்கள், பழுப்பேறிச் சிவந்த கண்கள்.

பஸ் உரிமையாளரான அவரிடம், என்னையும் மற்றும் பலரையும் - இன்றைய வசூல் எனக் கூறி - கணக்குப் புத்தகத்துடன் ஒப்படைத்தார்கள். அவர்களுக்குரிய பங்கை, கணக்குப் பிள்ளையின் உதவியுடன் பங்கிட்டுக் கொடுத்தனுப்பினார் முதலாளி. மீதியாக மேசிய்ல பரந்து கிடந்த நோட்டுகளைப் பெறுமதி வாரியாகப் பிரித்தடுக்கிக் கொண்டு, தனது படுக்கையறைக்கு வந்தார். கட்டிலில் விரிந்து கிடந்த மெத்தையை உயர்த்தி, கீழே கட்டுக்கட்டாயிருந்த நோட்டுகளுடன் எம்மையும் இணைத்து அடுக்கி விட்டு, மெத்தையைக் கீழிறக்கி நன்றாக அழுத்திக் கொண்டே மேலேறிப் படுத்துக் கொண்டார். அவரது கனத்த பாரத்தைத் தாங்கும் மெத்தையின் கீழ் நசிபட்டுக் காலந்தள்ளும் துயரம் என்னை நசுக்கிப் பிடித்துக் கொண்டது. மூச்சுத் திணற நான் முடங்கிக் கிடந்தேன்.

இன்றைய நாள் முழுக்கச் சந்தித்த, இதம் தரும் அழகான நிகழ்வுகளில் மனம் லயித்திருந்தது. மானுட சமூகத்தின் செழிப்பான தோற்றம் உள்ளத்தில் பசுமை படர்த்திற்று. உலகின் அழுக்குத் துகள்களையெல்லாம் அழுத்திப் புதைத்துத் தூய்மைப்படுத்தும் புத்துணர்ச்சி மிக்க உயிரினமாக அச்சமூகத்தை என் மனம் அடையாளங் கண்டு ரசித்தது. இத்தகைய சமூகத்தாரின் கைகளில் மிதந்து களிப்புறும் வாழ்க்கை பிடுங்கப்பட்டு, இருட்டுக்குள் முடங்கிக் கிடக்கத் திணிக்கப்பட்ட இப்போதைய நிலை குறித்து நான் அமைதியிழந்து கவலையில் தவித்தேன். அந்தக் கவலையிலும், மானுடத்தின் அழகுத் தோற்றம் ஆறுதல் படுத்தும் மயிலிறகாய் மனதைத் தடவிக் கொடுத்துச் சாந்தப்படுத்தியமை உடலெங்கும் நிம்மதியாய் மண்டிற்று.

சுற்றிச் சுற்றியலையும் மனதின் சிந்தனைச் சிதறல்களில் பளபளப்பாய்ப் படியும் மானுட வாழ்வின் அழகியல் பண்புகளை, அன்பு முறுக ரசித்துக் கொண்டே நான் மகிழ்ச்சியுடன் கண்களை மூடி உறங்க முயற்சிக்கிறேன்.

தூக்கம் என்னைத் தழுவிக் கொள்கிறது.

No comments:

Twitter Bird Gadget