(01)
தொந்தி வயிறு, தொங்கும் கழுத்து, கறுத்த விகாரமான முகம், காவி படிந்த கோரப் பற்கள், பழுப்பேறிச் சிவந்த கண்கள். இப்படியான ஒருவரிடம், அவரது எருமை மாட்டுப் பாரத்தைத் தாங்கும் கட்டில் மெத்தையின் கீழ் நசிபட்டுக் காலந்தள்ளுவதென்றால் யாருக்குத்தான் வெறுப்பேற்படாது. நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா? இரண்டு வாரங்களாக வெறுப்புடன் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன். என்னை மீட்டுச் செல்ல யாரும் வரவில்லை. பக்கத்திலிருப்பவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். என்னை விடப் பத்து மடங்கு பெரியவன் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் தலைக்கனம் அதிகம்தான். அடிக்கடிக் கைமாற்றப்பட்டு அலைக்கழியும் எரிச்சல் மிகு வாழ்க்கை அவனுக்கில்லாதிருந்ததற்கு, அவனது இந்தப் பெரியதனமும் ஒரு காரணம். மானுடத்தின் ஏற்றத்தாழ்வுகளெவையும் அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், கொழுத்த வயிறுடையவர்களும், அவர்களது குளுகுளு வாழ்க்கையும்தான்.
என் நிலைதான் பரிதாபமானது. ஒரு நாளில், கணக்கின்றிக் கைமாறித் திரிகிறேன். வியர்வை வாடையையும், கண்ணீர் உவர்ப்பையும் அடிக்கடி அனுபவிக்கிறேன். வெயிலின் அகோரத்திற்கும், மழையின் ஈரத்திற்கும் பலியாகிப் பலவீனனாகிறேன். அழுக்குக் கைகளில் கசக்கப்பட்டு, துர்வாடைப் பைகளுள் திணிக்கப்பட்டு சுருக்கமும் கிழிவுமாய்ச் சோபையிழக்கிறேன்.