Tuesday, June 1, 2010

சிதிலம் சிதிலமாய்...


(01)

வெள்ளை மணலில் பாதங்கள் அழுந்திப் புதைய, கட்டுக் குலையாத தன் தேகச் செழுமையையும், அதன் அழகைப் போர்த்தி மறைத்த பட்டுப் பாவாடை சட்டையின் பளபளப்பையும் பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டே, தன் வீட்டுக்கும், சாச்சியின் வீட்டுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் ஒழுங்கையினூடாக நடந்து கொண்டிருந்த பாத்திமா, மேகக் கூட்டங்கள் குவிந்து மறைக்கும் மாலைச் செந்நிறத்தின் ரம்மியத் தோற்றத்தை ரசிப்பதை விடுத்து, உணர்வுகளெங்கும் குமிழி விட்டுக் கிளுகிளுப்பூட்டும் அமீனின் இதமான நினைவுகளில் மனம் முழுக்கக் கிறங்கி லயித்திருந்தாள்.

ஒழுங்கையைக் கடந்து சாச்சியின் வீட்டையடைய, அதிகபட்சமாக ஒரு நிமிடமேயாகுமென்றாலும், அந்த ஒரு நிமிடத்திலும் அமீனுடன் பேசிப்பழகிக் களிக்கும் ஓராயிரம் கனவுகளைக் கொத்தாகச் சிறையெடுத்து மனதுக்குள் அழுத்தித் திணித்துப் பத்திரப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியில் திளைப்பாள் பாத்திமா. அந்த ஒரு நிமிடப்பொழுது, அவளது வாழ்க்கையின் வேர்களில் செழிப்பான பசளையாகப் படிந்து, மனதிலும் உடலிலும் உறுதியையும் நிறைவையும் துளிர்க்கச் செய்து சிரிக்கும்.

சூரியன் சரிந்து இருள் கவியத் தொடங்கும் நேரமானதும் சாச்சியின் வீட்டில் பிரசன்னமாகிவிடுவது பாத்திமாவின் நாளாந்தப் பணிகளில் ஒன்று. அவளது இந்த வருகைக்கு, நான்கு ஆண் பிள்ளைகளுடன் சிரமப்படும் சாச்சிக்கு வீட்டுதவிகள் ஏதாவது செய்து கொடுக்க முடியும் என்ற பொது நோக்கைவிட, சாச்சியின் மூத்த புதல்வனான ரபீக்கின் நண்பன் அமீனைச் சந்திக்க முடியும் என்ற சுயநலனே முக்கிய காரணமாயிருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, யாரும் முகம் சுளிக்காத வகையில் மிக நாகரிகமாகவும், புனிதமாகவும் ஊர்ந்து கொண்டிருக்கும் அமீனுக்கும் பாத்திமாவுக்கும் இடையிலான காதல், அவளது சாச்சியின் வீட்டைப் பொறுத்தவரை எல்லோரும் அறிந்த இரகசியம். சாச்சியின் கடைக்குட்டியான நௌபர் தொடக்கம் மூத்தவன் ரபீக் வரை எல்லோரும் வழங்கிய ஒத்துழைப்புகள், அமீனுக்கும் பாத்திமாவுக்கும் இடையிலான தொடர்புகளுக்கும், இரண்டு மூன்று மீற்றர் இடைவெளி பேணி நிகழும் அவர்களது நேரடிச் சந்திப்புகளுக்கும் சிறந்த களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.


மாட்டுப்பண்ணை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்த வயற்காணிகள், உழவு இயந்திரங்கள், அன்றாட வேலைக்குப் பணியாட்கள் என முதலாளித்துவத்தின் இறுமாப்புத் தோற்றமாய்க் காட்சியளிக்கும் தாவூதுப் போடியாரின் மகளுக்கும், பாடற்திறனை வயிற்றுப் பிழைப்புக்காய்ப் பயன்படுத்திக் காலம் தள்ளும் ஏழைச் சீனிமுகம்மது அண்ணாவியாரின் மகனுக்கும் திருமணம் என்பது ஊரில் எவரும் எண்ணிப் பார்க்கவே முடியாத அதிசயம். ஆனால், அதை எண்ணிப் பார்க்கவும், செயலுருப்படுத்தவுமான தைரியத்தை அமீனும் பாத்திமாவும் கொண்டிருந்ததில், அவர்களது முறுக்கேறிய இளமையுணர்வுகளுக்கு மட்டுமன்றி, அவளது சாச்சியின் வீட்டில் கிடைத்த ஒத்துழைப்புக்கும் முக்கிய பங்கிருந்தது.

ஒற்றைப் பெண் பிள்ளையென்பதால், தன் செல்வம் முழுவதையும் திரட்டி, ஊரே வாய் பிளக்குமாறு பெரும் ஆடம்பரத் திருமணமொன்றை நடாத்திக் காட்ட வேண்டுமென்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் தாவூதுப் போடியாரின் இரும்புக் கையை எதிர்ப்பது போல், அவரது பிள்ளையின் காதலுக்குத் துணை போவது தொடர்பில் உள்ளூர அச்சமும் நடுக்கமும் இருந்த போதிலும், அமீனின் ஒழுக்கப் பண்புகள், இந்தக் காதலை அங்கீகரிப்பதற்கான அழுத்தத்தைப் போடியாருக்கு வழங்கும் என்ற தைரியத்தில், அவர்களது காதலுக்குக் களங்கொடுத்து வந்தது பாத்திமாவின் சாச்சிக் குடும்பம். சாச்சிக்கு நாம் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென பாத்திமா கூறுவதும், அமீன் அதனைச் சிரித்துக் கொண்டே ஆமோதிப்பதுமான நிகழ்வு, அவர்களது நேரடிச் சந்திப்புகளின் போது தவறாமல் இடம்பெறும். 'சாச்சி புராணத்த உட்டுப்போட்டு நம்மளப் பத்தியும் கொஞ்சம் கதைப்போமா!' என அமீன் அலுத்துக் கூறுமாறும் சில வேளைகளில் பாத்திமாவின் பேச்சு அமைந்து விடும். எவ்வாறாயினும் தமது காதலின் வெற்றியென்பது சாச்சியின் கைகளில்தான் தங்கியுள்ளதென பாத்திமா உறுதியாக நம்பியிருந்தாள்.

அமீனுடன் தொடங்கப் போகும், தனது காதல் திருமணத்தின் பின்னரான வாழ்க்கை குறித்த கனவுகளை நெஞ்சம் முழுக்க அடுக்கிக் கொண்டே சாச்சியின் வீட்டை வந்தடைந்தாள் பாத்திமா. ஹஜ்ஜுப் பெருநாளைக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தமையால், தையல் வேலையில் மும்முரமாய் இருந்த ரபீக்கின் உபயத்தில், தையல் இயந்திரச் சத்தத்தையும் மீறி, வானொலிப் பாட்டும், ஆர்ப்பாட்டப் பேச்சுமாக வீடு கலகலப்புற்றிருந்தது. சாச்சியுடன் கதைத்து விட்டு, முன் மண்டபத்திற்கு வந்து தலை நீட்டிய பாத்திமாவின் கண்களில், ரபீக்குடன் இணைந்து தையலிலும் நகைச்சுவைப் பேச்சிலும் ஆர்வமாயிருந்த அமீனின் அழகு முகம் சிக்கிற்று. மனதுக்குள் திடீரெனத் துளிர்விட்ட அழகு ரோஜாவொன்றை வருடிக் கொடுத்துக் கொண்டே அங்கிருந்து பின்வாங்கி, உள்ளறையிலிருந்த கதிரைகளில் ஒன்றில் வந்தமர்ந்து, அமீனின் வருகையை, வேகமாய் அடித்துக் கொள்ளும் நெஞ்சுச் சத்தத்தைத் தாங்கிக் கொண்டே எதிர்பார்த்திருந்தாள் பாத்திமா.

'பாத்திமா வந்திரிக்கு. பாத்திட்டு வா!' என்ற ரபீக்கின் கூற்றுக்குப் பணிந்து, தைத்துக் கொண்டிருந்த ஷேர்ட்டை பாதியில் இடைநிறுத்தி விட்டு, ஆடையில் அங்குமிங்கும் ஒட்டிக் கொண்டிருந்த நூற் துண்டுகளைத் தட்டிவிட்டுக் கொண்டே எழுந்து தயங்கினாற் போல் நடந்து உள்ளறைக்கு வந்து சேர்ந்தான், அமீன். தன் வருகையைக் கண்டு, மலர்ந்து செழித்த முகக்குறியுடன் கதிரையிலிருந்து எழுந்து, சுவரோரம் ஒண்டிக் கொள்ள முனையும் பாத்திமாவின் நாண அழகைக் கண் நிறையப் பருகிக் கொண்டே கதிரையில் அமர்ந்தான். உள்ளம் முழுக்க அன்பு நிரம்பியிருந்தாலும், அதை வெளிக்காட்டாது மறைத்து வைப்பதில் முரட்டுப் பிடிவாதம் பேணும் பண்பு பொதுவாக எல்லாப் பெண்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. எரிச்சலைக் கிளர்த்தும் இந்த நடைமுறை, பெண்களிடமிருந்து வெளிப்படும் போது மட்டும் அழகாகவும், அவர்களது இயல்பான அழகை மேலும் மெருகேற்றுவதாகவும் அமைந்து விடுவதென்பது உண்மையில் வியப்புக்குரியதுதான்.

வீட்டில் நிரம்பி வழியும் பொருளாதாரச் செருக்கின் சுவடு சற்றும் இல்லாமல், அழகான இளம் பெண்ணுக்குரிய அடக்கமான பாவனையுடன் தலை கவிழ்ந்து கடைக்கண் பார்வையால் தன்னை அளக்க முனையும் பாத்திமாவை, மனம் முழுக்க நிரம்பி வழியும் காதலுடன் நோக்கினான் அமீன். அந்த நிமிடம் தொடக்கம், சரியாக ஒரு மணி நேரத்தின் பின், நான் போகட்டுமா என பாத்திமா கேட்ட நிமிடம் வரையான குறுகிய காலத்திற்குள், அவர்கள், தாம் கடந்து வந்த பாதைகள், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் போராட்டங்கள், திருமணத்தின் பின்னரான வாழ்க்கையில் குடும்பப் பணிகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான தீர்மானங்கள் என, ஒரு நாள் முழுக்கப் பேசித்தீர்க்க வேண்டிய பெருந்தொகையான விடயங்களை அலசியிருந்தார்கள். ஆனாலும், எதையோ பேச மறந்து விட்டாற் போன்ற தவிப்பும், இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாமே என்ற துடிப்பும் வழமை போன்று அன்றும் அவர்களுக்கேற்பட்டது.

'பாத்திமா...!'

'ம்...'

'இன்னும் நாலஞ்சு நாளைக்கி உங்கள சந்திக்க ஏலாம இருக்கும் எண்டு நினைக்கிறன்'

'ஏன்...?' பதறிக் கொண்டு கேட்டாள் பாத்திமா.

'எனக்குத் தெரிஞ்ச ஆளண்டு வெளிநாட்டில இருந்து ஊருக்கு வருவுது. அவரக் கூட்டிட்டு வாரத்துக்கு நாளைக்கி கொழும்புக்குப் போறன்'

'யாரு...?'

'குடும்பத்தில உள்ள ஒரால்தான். ரெண்டு வருஷமா கட்டார்ல இருந்திட்டு இப்பதான் வாறாரு. வேற ஆக்கள் ஒத்தரும் இல்ல. நான்தான் போய்க் கூட்டி வரணும்'

அவளது அழகுக் கண்களில் ஒருவிதச் சோர்வு திடீரெனத் தோன்றி நிலைப்பது சோகத்தைத் திணித்தாலும், தன் பிரிவையிட்டு வாடும் ஒரு ஜீவனின் இருப்பு குறித்த நினைவின் வருடலில், அந்தச் சோகத்தையும் மறந்து அவளை ரசித்தான் அமீன். அன்பு காட்டுவதை விட, அன்பு காட்டப்படுவதில் ஏற்படும் மனநிறைவும், வாழ்க்கைச் சுவையும் அலாதியானதுதான் என்பதை சுய அனுபவமாய் உணர்ந்து புளகாங்கிதமுற்றான்.

பிரிய மனமின்றித் தவிக்கும் ஏக்கத்துடன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, அமீன் எழுந்து சென்ற பின், முன்மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த ரபீக்கின் தையல் இயந்திரச் சத்தத்துடன் மற்றொரு இயந்திரத்தின் சத்தமும் இணைந்து ஒலிக்கும் வரை, அசையாமல் அதே இடத்தில் நின்றிருந்தாள் பாத்திமா.

நாள் தவறாமல் அவர்களது நேரடிச் சந்திப்புகள் இடம்பெற்று வந்தாலும், ஒரு சில நாட்கள் அவை தவறிவிடுவதுமுண்டு. அமீனுக்கு வேலைப்பழுக்கம் அதிகரித்து விடும் போது, அல்லது பாத்திமாவின் வீட்டில் விருந்தாளிகள் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்குமாறு அவளை அவளது தந்தை இருத்தி விடும் போது, சந்திப்புகளைத் தவறவிட வேண்டிய சந்தர்ப்பங்கள் அவர்களுக்கேற்பட்டு விடும். அத்தருணங்களில் அவர்களிருவரதும் உள்ளங்கள், குருதி சொட்டும் பச்சைப் புண்ணாய் வலிப்புற்றுத் துவழும். 'என்ன செய்யுது?' என அருகிலிருப்போர் பதறிக் கேட்குமாறு, அவர்களது கண்களிலும் முகங்களிலும் சோர்வின் அடையாளம் எகிறித் தெரியும். சகிக்க முடியாத இந்தச் சங்கட நிலையை நான்கைந்து நாளைக்கு அனுபவிக்க வேண்டி வருமென்பதை நினைக்கையில், பாத்திமாவின் பளிங்கு முகத்தில் சோகத்தழும்பு கறுப்புச் சரடாய் அழுந்திற்று. அடிப்பாதத்திலிருந்து சரசரவென ஊர்ந்தேறும், துயர் முதிர்ந்த அரிப்பைத் தட்டியதுக்கும் பிரயத்தனத்துடனும், மலர்ச்சியைச் செயற்கையாகவேனும் முகத்தில் குடியிருத்தும் போராட்டத்துடனும் அறையிலிருந்து வெளியே வந்தாள் பாத்திமா.

இரவுச் சாப்பாட்டுக்காக உரொட்டி சுடத் தயாராகிக் கொண்டிருந்த சாச்சிக்கு, தண்ணீர் உப்பிட்டு மாவைப் பிசைந்து கொடுத்து மற்றும் சில உதவிகளையும் செய்துவிட்டு, சாச்சியிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட பாத்திமாவின் நெஞ்சு முழுவதும் அமீனின் நினைவுகளே நிரம்பியிருந்தன. அவனைச் சந்தித்து நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்த மகிழ்ச்சி மனதுக்குள் உசும்பிக் கொண்டிருந்தாலும், சில நாட்களுக்குத் தான் அனுபவிக்க இருக்கும் பிரிவுத்துயரின் ஆற்றாமை பற்றிய நினைவின் உறுத்தல், அவளது மனதின் மறுபக்கத்தில் சங்கடமாய் நெருடிக் கொண்டிருந்தது.

அந்த நெருடலுக்குள்ளும், அமீன் அழைத்து வர இருக்கும் நபர் யாராக இருக்கும் என்பது பற்றிய சிந்தனையும் அவளுள் தோன்றிற்று. அவள் அறிந்த வகையில், அவனது நெருங்கிய குடும்பத்தில் யாரும் வெளிநாடு சென்றதாகயில்லை. தூரத்து உறவினராக இருக்கக் கூடும் என அவள் எண்ணிக் கொண்டாலும், அவன்தான் சென்று அழைத்து வர வேண்டுமெனும் படியான இறுக்கமான உறவினராக இருந்தால், அந்த உறவுமுறை பற்றியும், அவர் வெளிநாட்டில் உள்ளமை பற்றியும் இதுவரை காலப் பழக்கத்தில் ஏன் ஒருமுறையேனும் அமீன் தன்னிடம் பேசவில்லை என்பது அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது. எனினும், ஒரு சின்ன விடயத்தைப் பெரிதாக அலட்டிக் கொள்கிறேனோ எனத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு உறுத்தலை அடக்கும் முயற்சியுடன், சாச்சியின் வீட்டுக் கேட்டைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் கால்பதித்தாள் பாத்திமா. ஒழுங்கையில் நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தையறியாது, வெள்ளை மணலில் பாதங்கள் அழுந்திப் புதையப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, சாவகாசமாய் நடக்கத் தொடங்கினாள்.

(02)

பாறூக், ஒருபக்கம் மகிழ்ச்சியும், மறுபக்கம் தயக்கமுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தான். தன் உள்ளத்தில் ஏற்பட்டு விட்ட புதியதோர் உணர்வின் நெருடலில் இரவுப் படுக்கை முட்புதராகிப் போன அசௌகரியத்தைக் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகத் தவிப்புடன் அனுபவித்து வருகிறான், அவன். இந்தத் தவிப்புக்கும் தடுமாற்றத்திற்கும் காரணமானவள் பாத்திமா.

சிறு வயதிலிருந்து, அயல் வீட்டினர் என்ற உறவுமுறையில் பாத்திமாவுடன் சிறு பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த பாறூக், பொலிஸ் வேலையில் இணைந்து, சரியாக எட்டு வருடங்களின் பின் சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற்று வந்த போது, பெரியவளாகிப் பூரண நிலவாய்க் கண்களைக் கௌவி இழுக்கும் ஆர்ப்பாட்டமான வசீகர அழகுடன் பாத்திமாவைக் கண்டு வியந்து, கனவிலும் பின் அவள் மீதான காதலிலும் விழுந்தான்.

ஒரு தலைப்பட்சமாய் உருவாகி, உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும் இந்த முரட்டுணர்வை எவ்வாறேனும் அவளிடம் கொட்டி விடுவதென அவன் ஒவொரு நாட் பொழுது புலர்வின் போதும் எடுக்கும் முடிவை, பக்கத்து வீட்டுக்காரனாய் இருந்தும் இவ்வளவு நாளும் தவறான கண்ணோட்டத்துடன்தான் பழகியிருக்கிறான் எனத் தன்னைப் பற்றி அவள் தவறாகக் கணித்து விடுவாளோ என்ற அச்சம், வெளிப்படுத்த விடாது தடுத்து விடும்.

ஒவ்வொரு நாள் அந்திப் பொழுதிலும், பாத்திமா அவளது சாச்சியின் வீட்டுக்குச் செல்ல ஒழுங்கையில் நடந்து வரும் போது, தன் வீட்டுப் புழக்கடை வேலியிலிருந்த சிறு துவாரத்தின் வழியாகக் கண்விட்டு, அந்த மங்கிய வெளிச்சத்திலும், பளபளக்கும் அவளது அழகைப் பருகிக் களிப்பது பாறூக்கின் வாடிக்கையாயிற்று. சாச்சியின் வீட்டுக்குச் செல்லும் போது அவளது உடலில் தெரியும் மெல்லிய பதட்டத்தையும், அங்கிருந்து திரும்பி வரும் போது தெரியும் ஆனந்தச் சாந்தத்தையும் அவன் துல்லியமாகக் கணித்திருந்தானாயினும், அது அவளது சாச்சியின் மீது அவளுக்குள்ள பற்றுதலே என்றெண்ணிக் கண்களில் வியப்புக் கொட்டுவான். எப்போதும் சுத்தமாகவும், பிறர் கண்களைக் கவர்ந்திழுத்துக் கிறங்கடிக்குமாப் போலவும் தெரிவு செய்து அவளணியும், நிறப்பொருத்தப்பாட்டுடனான பாவாடை சட்டையும், அவை போர்த்தி மறைத்திருக்கும் அவளது நேர்த்தியான தேகக் கட்டமைப்பின் வசீகரமும் அவனது கண்களூடு படிந்து பசியைத் தூண்டிக் கால்களை உரசும். அவள் ஒழுங்கையைக் கடந்து சென்ற பல மணி நேரத்திற்குச் சூழலைச் சுவைப்படுத்தும், அவளுக்கு மட்டுமேயுரிய மென்மையான நறுமணத்தைக் கண்களை மூடி, நாசிக்குள் இழுத்துச் சேர்த்து மனதுக்குள் பத்திரப்படுத்திச் சுகம் பெறுவான், அவன்.

நீண்ட நாட்களாக மனதுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வை இன்று எப்படியாவது அவளிடம் திறந்து கொட்டிவிடுவதென்ற உறுதியான தீர்மானத்துடன், பேனாவும் தாளுமாய் அமர்ந்து இரண்டு மணி நேரமாகப் போராடிச் சிறு காதல் கடிதமொன்றை எழுதி முடித்துப் பேனாவை மூடி வைத்து விட்டு, நீளமாய்ப் பெருமூச்செறிந்தான், பாறூக்.

தனது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாய் அமையப்போகும் அந்தக் கடிதத்தைத் தூய ஆதுரப் பார்வையால் தழுவிச் சுவைத்தான், அவன். கடிதத்தை வாசித்துப் பார்த்ததும் பாத்திமாவின் பதில் எவ்வாறிருக்கும். நிச்சயமாகத் தன்னை நிராகரிப்பதற்கான எந்த நியாயமான காரணமும் அவளிடமோ அவளது தந்தையிடமோ இருக்க முடியாதென்பதில் அவனுக்கிருந்த உறுதியான நம்பிக்கை, பாத்திமாவுடனான திருமண வாழ்வின் மகிழ்ச்சிக் களிப்பில் அவனை அமிழ்த்தியெடுத்திற்று.

கடிதத்தை அவளிடம் கொடுப்பதற்குப் பொருத்தமான நேரமாக, அவள் சாச்சியின் வீட்டுக்குச் செல்லும் மாலை நேரத்தைத் தேர்ந்தெடுத்தான் பாறூக். அதிலும், பதட்டம் தணிந்து, ஆனந்தச் சாந்தத்துடன் அவள் சாச்சியின் வீட்டிலிருந்து திரும்பி வரும் நேரமே மிகப் பொருத்தமானதெனவும் கணித்தான். அதனால், குறித்த நேரம் வரும் வரை நிமிடங்களை யுகங்களாகக் கழித்துக் காத்திருந்தான். காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டென யாரோ கூறிவைத்தது எரிச்சல் மிகு நினைவாய் அவனது இறுக்கத்தைத் தளர்த்திற்று.

தன் உணர்வுகளின் நகலாய் மேசையில் கிடக்கும் கடிதத்தைக் கையிலெடுத்து, நேரத்தைக் கடத்தும் நோக்குடன் மீண்டுமொரு முறை வாசித்துப் பார்த்தான், பாறூக்.

'அன்பின் பாத்திமாவுக்கு!

நீண்ட நாட்களாக என் உள்ளத்தைக் குடையும் உணர்வுகளை உன்னுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீ பிறந்ததிலிருந்து உன்னை எனக்குத் தெரியும். சிறு வயதில் உன்னுடன் பேசியிருக்கிறேன்; பழகியிருக்கிறேன்; விளையாடியும் இருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குள் ஏற்படாத மாற்றம், எனக்குள் தோன்றாத உணர்வு, எட்டு வருட பொலிஸ் வேலையிலிருந்து இடமாற்றம் பெற்று ஊருக்கு வந்து, மயக்கும் அழகுக் கவர்ச்சியுடனிருந்த உன்னைக் கண்ட போது எனக்கு ஏற்பட்டது. உன் அழகு முகத்தைக் கைகளில் ஏந்திக் களிப்புற வேண்டும்; உன் கட்டான தேகத்தை இறுக்கியணைக்க வேண்டும் என்றெல்லாம் புறுபுறுக்கும் என் உடலைக் கட்டுப்படுத்துவது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

பாத்திமா, நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னையே திருமணம் முடிப்பதென்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கடிதம் எனது விருப்பத்தை உனக்குத் தெரியப்படுத்துவதற்கும், உன் முடிவை நான் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமாகும். அதன் பிறகு முறைப்படி எனது உம்மாவிடம் சொல்லி ஏனைய சம்பிரதாயங்களைக் கவனிக்கலாம்.

கனவிலும் கற்பனையிலும் உன்னுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நிஜதரிசனம் தரும் நல்ல முடிவை எனக்குச் சொல்வாய் என்ற நம்பிக்கையுடனான எதிர்பார்ப்புடன் கடிதத்தை நிறைவு செய்கிறேன்'

கடிதம் எல்லா வகையிலும் போதுமானதாகவும், கவர்ச்சியானதாகவும் அமைந்து விட்டதில், பூரணத் திருப்தியுற்றிருந்தான், பாறூக். எனினும், கடிதத்தின் மூலமான திருப்தியை விட, அதற்குப் பதிலாக வரும் முடிவு திருப்தியானதாக அமைய வேண்டுமென்பதே அவனது மனமுருகும் பிரார்த்தனையாயிற்று.

சூரியன் சரிந்து இருள் கவியத் தொடங்குகையில், பாத்திமா சாச்சியின் வீட்டுக்குச் செல்வதை ஒளிந்திருந்து கவனித்த பாறூக், அவள் திரும்பி வருவதை எதிர்பார்த்துப் படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தான்.

பாத்திமா, சாச்சியின் வீட்டில் என்ன செய்வாள்? சாச்சியுடன் பேசுவாள்; வீட்டு வேலைகளில் பங்கெடுப்பாள்; சாச்சியின் மூத்த இரண்டு புதல்வர்களான அவளது நானாமாருடனும், இளைய இரண்டு புதல்வர்களான அவளது தம்பிமாருடனும் அளவளாவுவாள். இந்தச் சாதாரண நிகழ்வுகளின் மூலம் நாளாந்தம் ஆனந்தச் சாந்தமடைவதென்பது உண்மையில் வியப்புக்குரியதுதான்.

அதேவேளை, சொந்த வீடாயிருந்தாலும், பொருளாதார இறுமாப்பில் நெஞ்சு புடைத்துத் திமிறும் தாவூதுப் போடியாரின் தங்கச் சிறையிலிருந்து சற்று நேர விடுதலையும், ஓய்வும் தரும் சாச்சியின் வீட்டுச் சூழலில் பாத்திமாவுக்கேற்படும் ஆனந்தச் சாந்தமென்பது முற்றிலும் நியாயமானதுதான் என்றும் பாறூக் எண்ணிக் கொண்டான்.

விவரம் தெரிந்த நாளிலிருந்து, தன்னையும் தன் குடும்பத்தையும் சற்றும் இலட்சியம் செய்யாத போக்கையே தாவூதுப் போடியாரிடம் அவதானித்து வந்த பாறூக், பொலிஸிலிருந்து இடமாற்றம் பெற்று வந்த பின் அவருடன் ஏற்பட்ட முதற் சந்திப்பில் அவரது நடத்தையிலும் பேச்சிலும் தெரிந்த மாற்றத்தையும், தன்னை மதித்துப் புன்முறுவல் உதிர்த்த அவரது கறுப்பு முகத்தின் களிப்பையும் பார்த்து உண்மையில் வியந்துதான் போனான். தனது உத்தியோகத்தின் வலிமை ஏற்படுத்திய மாற்றம் என அதைக் கணித்தான். பாத்திமாவின் மீதான அவனது ஆர்வம் மேலும் மிகைப்படவும், அவளுடனான தனது திருமணம் குறித்த அவனது நம்பிக்கை இன்னும் வலுப்படவும் இந்நிகழ்வு காரணமாயிற்று.

ஆனாலும், தாவூதுப் போடியார் குறித்த அச்சம் அவனுக்குக் கொஞ்சமும் இருக்கவில்லை. அவர் தனது செல்வ பலம் முழுவதையும் திரட்டித் தன்னை எதிர்த்தாலும், அவற்றையெல்லாம் முறியடித்துத் துவம்சம் செய்ய முடியும் என்ற தைரியம், அவனது நெஞ்சு முழுக்கப் பரவியிருந்தது. அவனது இப்போதைய தேவையெல்லாம் பாத்திமாவின் விருப்பம் மட்டுமே.

பாறூக், இருட்டை ஊடறுத்துக் கண்களைத் தீட்டிக் கவனித்துக் கொண்டிருந்தான். சாச்சியின் வீட்டுக்கேட்டைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் கால் பதித்துத் தனது வெண் பஞ்சுப் பாதங்கள் வெள்ளை மணலில் அழுந்திப் புதையப் புதைய நடந்து வரும் பாத்திமாவைக் கண்டு, திடீர் உற்சாகம் பெற்றவன் போல் எழுந்தான், அவன். வழமையாக, அவளது முகத்தில் படிந்திருக்கும் ஆனந்தச் சாந்தம் இன்று தவறியிருப்பதையும், புதுவிதச் சிந்தனையின் லயிப்பு அவளது முகத்தைச் சூழ்ந்து கௌவியிருப்பதையும் கண்டு, ஒரு கணம் பாறூக் பின்வாங்கினாலும், இன்றைய நாளை எப்படியும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற பிடிவாதத் தீர்மானத்துடன், எழுந்து வேலிக்கு மேலால் எம்பிக் குதித்து ஒழுங்கைக்குள் விழுந்து, சரேலென அவள் முன்னால் சிரித்த முகத்துடன் வந்து நின்றான், அவன்.

திடீரெனத் தன் முன்னால் தோன்றிய இருட்டுருவத்தைக் கண்டு அச்சத்துடன் பின்வாங்கிய பாத்திமா, பின் அது தனக்கு அறிமுகமான நபர்தான் என்றுணர்ந்து, பாறூக்கின் முகம் பார்த்துச் சினேகபூர்வமாகப் புன்னகைத்தாள்.

'என்ன பாறூக் நானா! சுகமா இரிக்கீங்களா?' என்று புன்னகை மாறாமலேயே அவனைப் பார்த்துக் கேட்டாள்.

ஆனால், அவளது செயலிலும் பேச்சிலுமிருந்த சரளம் அவனிடத்தில் இருக்கவில்லை. அவளது கேள்விக்கு 'ஓம்' என ஒற்றை வார்த்தையில் பதில் கூறிய பாறூக், அவள் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில், அவளது வலக்கையைப் பிடித்து, அதில் தான் கொணர்ந்திருந்த கடிதத்தைத் திணித்து, அதே கையில் மென்மையாக ஒரு முத்தமும் பதித்து விட்டு, 'பாத்திமா! என்ட விருப்பத்த இந்தக் கடிதத்தில எழுதியிருக்கன். வாசிச்சிப் பாத்திட்டு ஒரு நல்ல முடிவச் செல்லுங்க' என்று கூறிக் கொண்டு, சிட்டாக விரைந்து இருட்டுக்குள் மறைந்து காணாமல் போனான்.

நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்ட இந்தத் திடீர் அசம்பாவிதத்தின் திடுக்கத்திலிருந்து தன்னை மீட்டெடுத்துச் சுதாகரித்துக் கொள்ளச் சற்று நேரமாயிற்று, பாத்திமாவுக்கு. அவளுக்கு உடல் முழுக்கக் கூசிக் கண்களில் கோபக்களை முறுகிற்று. ஒளிந்திருந்து பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தவன், இன்று மிக அநாகரிகச் செயலொன்றைச் செய்து விட்டதாகக் கறுவி, மனதுக்குள் கொதிக்கும் வன்மத்துடன் அவனைச் சபித்துத் தீர்த்தாள், பாத்திமா. தான் அவமானப்பட்டதாகவும், களங்கப்பட்டதாகவும் எண்ணி உள்ளுக்குள் வெடித்துக் குமுறினாள்.

அவன் முத்தமிட்ட வலப்புறங்கையைத் தாவணி முனையில் அழுத்தித் துடைத்தாள். அவன் திணித்து விட்டுப் போன கடிதம் அவளது கையில்தான் இருந்தது. அதில் என்ன இருக்கும் என்பதை யூகித்துணர அவளுக்கு அதிக நேரமெடுக்கவில்லை. எனினும் அதைக் கிழித்தெறியத் தோன்றாது, கையில் இறுக்கிப் பொத்திக் கொண்டு வீட்டுக்கு நடக்கத் தொடங்கிய பாத்திமாவின் கண்களில் பாறூக்கின் முகம் விகாரமாகத் தோன்றிச் சிரித்து மிக ஆங்காரமாக அச்சுறுத்தத் தொடங்கிற்று.

வீட்டுக்கு வந்ததும், கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு, தன் மனதிலிருந்த கொதிப்புகளையெல்லாம் பேனா முனையூடு தாளில் கொட்டிக் கடிதத்தையெழுதி, மறுநாளே பாறூக்கிடம் சேரும்படியாக அதனை அனுப்பி வைத்து விட்டாள் பாத்திமா.

(03)

பக்கத்து வீட்டுச் சிறுவன் தந்து விட்டுப் போன பாத்திமாவின் பதில் கடிதம் பாறூக்கின் கையிலிருந்தது. அதனைப் பலமுறை அவன் படித்துவிட்டான். ஒவ்வொரு முறை படிக்கும் போதும், வெறுப்பும் ஏமாற்றமும் இணைந்த அருவருப்புக் கலவையன்று அவனது அடிவயிற்றிலிருந்து உற்பத்தியாகி உச்சந்தலைக்கு எகிறிக் குதித்து, அவனது உணர்ச்சிகளைப் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தது. நியாயமான எக்காரணமுமின்றித் தன்னை பாத்திமா நிராகரித்து விட்டதாகக் கருதிப் பற்களைக் கடித்தான், பாறூக். ஏதோ பெரிய உலக மகா தவறு போல், அவளது கையைப் பிடித்து முத்தங்கொடுத்ததைத் தூஷித்துக் கண்டித்திருந்த அவளது கடித வரிகள் அவனுள் எரிச்சலாய்க் கவிழ்ந்திருந்தன.

'இதில் என்ன தவறு இருக்கிறது! கல்யாணம் பண்ணிக்கப் போறவள்தானே என்ற நம்பிக்கை ஏற்படுத்திய உரிமையில் அன்பின் அடையாளமாகப் பதித்த உணர்ச்சி முத்திரையது. அதைப் போய்த் தவறாகச் சித்தரித்து, வரிக்குவரி அதைத் தூற்றித் துவம்சம் பண்ணியிருக்கிறாளே கிராதகி. அன்பை ரசிக்கத் தெரியாத பட்டிக்காட்டுக் கழுதை'

அதேவேளை, தான் ஒவ்வொரு நாள் மாலையிலும், புழக்கடை வேலிக்குப் பின்னால் ஒளிந்திருந்து அவளை ரசித்துக் கொண்டு வந்த விடயத்தை எப்படி அவள் அறிந்து கொண்டாள் என்பதையெண்ணி வியப்புக் கொட்டினான், அவன்.

இவையெல்லாவற்றையும் விட இறுதியாக அவள் குறிப்பிட்டிருந்த விடயம்தான் அவனது உணர்ச்சிகளைக் கொதிப்படையச் செய்து விட்டது.

'உன்னை விட ஒழுக்கமும், அறிவும், அழகும் நிரம்பிய ஒருவரை நான் ஏற்கனவே விரும்பிக் கொண்டிருக்கிறேன். ஒரு வருடமாகத் தொடரும் எங்களது புனிதமான அன்புக்கு முன்னால், உனது மோகமெல்லாம் வெறும் தூசு. மோகத்தில் மிதக்கும் அழுக்கு மூட்டைகளை எந்த நல்ல பெண்ணும் விரும்பமாட்டாள்' என்று எழுதியிருந்தாள் பாத்திமா. அதை வாசிக்க வாசிக்க, பாத்திமா தன் முகத்தில் காறித்துப்பி விட்ட உணர்வில் அவனது முகத்தில் சீற்றம் கொப்பளித்துச் சிதறிற்று. 'விடமாட்டேன்' எனக் கண்களில் அனல் தெறிக்க உறுமினான்.

பாறூக்கைப் பொறுத்தவரை இது இரண்டாவது ஏமாற்றம். ஏற்கனவே, உயர்தரத்தில் படித்துக் கொண்டிருந்த போது, சாதாரண தரத்தில் பயின்று கொண்டிருந்த நஸீமாவின் மீது அவனது விருப்பம் விழுந்திருந்தது. அதைக் கடிதம் மூலம் அவளிடம் வெளிப்படுத்திய போது, எந்தவித உணர்ச்சியுமின்றி, 'இதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் படிக்கணும். வாப்பாவுக்குத் தெரிஞ்சா அடிச்சிக் கையக்கால முறிச்சிப் போட்டுடும்' எனச் சிணுங்கிக் கொண்டு ஓடிவிட்ட நஸீமாவின் மீது அவனுக்குக் கோபம் வரவில்லை; சிரிப்புக் கலந்த பரிதாபமே தோன்றிற்று. இப்போது அவளுக்குப் பக்குவம் போதவில்லை; கொஞ்ச காலம் போகட்டும் என அவன் தள்ளி வைத்தாலும், உயர்தரம் முடித்துப் பாடசாலையிலிருந்து அவன் வெளியேறிய போது, அவனுள்ளிருந்த அவள் மீதான ஆர்வமும் வெளியேறித் தொலைந்து போயிற்று.

'நான் படிக்கணும்' என்று சிணுங்கியவள், உயர்தரத்துக்குச் சித்தியடைந்தவுடனேயே திருமணம் முடித்துக் குழந்தையும் கையுமாகச் சோபையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கொண்டமை பற்றிப் பின்னர் பாறூக் கேள்வியுற்றான். அவளது கணவன் வெளிநாட்டில் ரைவராக வேலை பார்ப்பதாகவும், இவள் எப்போதும் நோயில் வாடிக் கொண்டிருப்பதாகவும் கூட அறிந்திருந்தான்.

நஸீமாவுடனான காதலைத் தோல்வியாக பாறூக் கருதவில்லை; ஆனால், பாத்திமாவுடனான காதல் வடிகட்டிய படுதோல்வியாய்ப் போனமையை அவன் ஏற்றுக் கொண்டேயாக வேண்டியதாயிற்று. அந்தத் தோல்வியின் நகைப்பு, அவனது உள்ளத்தின் ஆழம் வரை வலி கொட்டும் கூர்வாளைச் செருகி விட்டிருந்தது.

'உன்னை விட ஒழுக்கமும், அறிவும், அழகும் நிரம்பிய ஒருவரை நான் ஏற்கனவே விரும்பிக் கொண்டிருக்கிறேன்'

அவளது எழுத்து வரிகள், அவனது மனக்கண்களில், சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டேயிருந்தன.

'என்னை விட ஒழுக்கமானவனா? என்னை விட அறிவுள்ளவனா? என்னை விட அழகானவனா? பார்க்கிறேன். நீ எப்படி அவனைக் காதலித்துக் கல்யாணம் முடிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்டி'

பாறூக்கின் சிந்தனை தறிகெட்டு ஓடிற்று. பாத்திமாவைக் கவர்ந்திழுத்துக் கொண்ட அந்தக் கயவன் யாராக இருக்கும். பாத்திமா வீட்டிலிருப்பாள்; மாலை நேரத்தில் சாச்சியின் வீட்டிலிருப்பாள். இந்த இரண்டையும் தவிர வேறு வெளியுலகமே அவளுக்குத் தெரியாது. அவளது வீட்டில், இந்தக் காதலுக்கெல்லாம் சாத்தியமில்லை. அப்படியானால், அவளது சாச்சியின் வீட்டில்தான் ஏதோ நடக்கிறது. செல்லும் போது பதட்டத்துடனும், திரும்பி வரும் போது ஆனந்தச் சாந்தத்துடனும் காணப்படும் அவளது இயல்பு மாற்றத்திற்கான காரணம், சாச்சியின் வீட்டில் நிகழும் அவளது காதல் லீலைகளாகத்தான் இருக்க வேண்டும். கண்டுபிடிக்கிறேன்; கண்டுபிடித்து, அந்தக் கர்வம் பிடித்த தாவூதுப்போடியாரிடம் பற்ற வைக்கிறேன்.

மனதுக்குள் உறுமி உறுமிப் பெருமூச்செறிந்து கொண்டிருந்த பாறூக், வெறும் உறுமலோடு மட்டும் நின்று விடாமல், துப்பறியும் வேடமிட்டுக் களமிறங்கி, இரண்டு நாட் பிரயத்தனத்தில் அமீனைக் கண்டுபிடித்தான். கண்டுபிடித்த மறுகணமே தாவூதுப்போடியாரிடம் பற்ற வைத்து விட்டுப் பக்குவமாய்ப் பதுங்கிக் கொண்டான்.

பாத்திமாவின் வீட்டில் அணுகுண்டு வெடித்துப் புகை கக்கிற்று. அவளது கன்னங்களையும், முதுகையும் போடியாரின் முரட்டுக் கரங்களும், இடுப்பிலிருந்து கைக்கு மாறியிருந்த அவரது கறுப்புப் பட்டியும் கன்றிச் சிவக்கச் செய்தன. குறுக்கே வந்து விழுந்த அவளது உம்மாவைப் பிடரியில் பிடித்துத் தள்ளிச் சுவரில் மோதிவிட்டு, அனற்சாற்றாய் மூச்சுவிட்டுக் கொண்டே அவளது சாச்சியின் வீட்டுக்கு விரைந்தார் போடியார். காலால் எட்டி உதைத்துக் கேட்டைத் திறந்து கொண்டு ஆங்காரமாய் உள்ளே சென்றவர், எதிர்ப்பட்ட மதினி ரசீனாவையும், சகலன் ஹ§ஸைனையும் பார்த்துக் கைவிரல் நீட்டிக் கர்ஜித்தார்.

'பாத்திமாவ எவண்ட ஊட்டுக்கும் போறத்துக்கு நான் உர்ரதில்ல. நீங்கள்ளாம் சொந்தக்காரங்க எங்கிறத்துக்காவத்தான் அவள் இஞ்ச வரக்குல பேசாம இருந்தன். ஆனா, நீங்க உங்கட புத்தியக் காட்டிட்டீங்க. இந்த தாவூதுப்போடிக்கிட்ட யாரும் நொட்ட ஏலாது. இனிமே அவளும் இஞ்ச வரமாட்டாள். நீங்களும் யாரும் அங்க வரக்கூடாது. பொம்பளப் புள்ளயக் கூட்டிக் குடுக்கிறது களிசரைகளுக்கிட்டயெல்லாம் என்ட புள்ளய அனுப்பினது என்ட பிழதான்'

தாவூதுப் போடியாரின் கர்வக் குரலை மிகப் பொறுமையுடன் கேட்டுச் சிலையாய் நின்றிருந்தனர் ரசீனாவும் ஹ§ஸைனும். அத்தருணத்திலும் போடியார் மீது கோபம் கொள்வதை விடுத்து, பாத்திமாவின் எதிர்காலம் குறித்தே அவர்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். ஆத்திரத்தைக் காட்டமான வார்த்தைகளாய்க் கொட்டிவிட்டு முதுகைக் குலுக்கிக் குலுக்கி மகாகர்வமாய்த் தம் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் போடியாரைச் சிந்தனையுடன் அவர்கள் நோக்கினர். பண இறுமாப்புப் போர்த்தியுள்ள அவரது முரட்டு இதயத்துக்கு பாத்திமாவின் மென்னுணர்வுகளைப் புரிந்து கொள்ளச் சக்தியெதுவும் இல்லையென்பதை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தனராயினும், பாத்திமா குறித்த கவலையை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு சோகப் பெருமூச்சு விட மட்டுமே தம்மால் முடியும் என்ற யதார்த்தம் பெரும் துயரத்திரையாக அவர்களது கண்களுக்கு முன் விழுந்து உறுத்துவதை வேறு வழியின்றி அவர்கள் வேதனையுடன் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாவூதுப் போடியாருக்கு முன்னால் எப்போதும் அவர்கள் தமக்கிட்டுக் கொள்ளும் மௌனத்திரையானது அவர்களுக்குப் புதியதோர் அனுபவமல்ல. ரசீனாவின் திருமணத்தின் போது, பெண் வீட்டுச் சீதனமாக அவளது தந்தை அஹமது லெப்பை ஹாஜியார், தனது மருமகனுக்குக் கொடுத்த உழவு இயந்திரத்தையும், ஐம்பது மாடுகளையும், 25 ஏக்கர் வயற்காணியையும், ஹாஜியாருக்குக் கதையைக் கொடுத்து, தாவூதுப் போடியார் தந்திரமாகப் பறித்தெடுத்துக் கொண்ட போதும் அவருக்கு முன்னால் மௌனத்தையே அவர்கள் திரையாக அணிந்திருந்தனர். ஹ§ஸைனைப் பற்றித் தவறான கதைகளைக் கட்டி, அவர் பேசிய வார்த்தைகளைத் திரித்துக் கூறி, அவருக்கும் மாமனாருக்கும் இடையிலே சண்டையை மூட்டிவிட்டுப் பின்னாலிருந்து நகைத்த போதும், தாவூதின் மீது அவர்கள் விரோதம் பாராட்ட முனையவில்லை. எனினும், இவற்றையெல்லாம் வெறும் கோழைத்தனமென அவர்கள் எண்ணிச் சளைக்கவில்லை. இயல்பு நிலைக்குப் புறம்பாகச் சண்டையிலும், வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டு, குடும்பத்துக்குள் ஆறாத மனப்புண்களுடன் நைந்து கொண்டிருப்பதை விட, அமைதியாகிச் சாந்தம் உதிர்ப்பது எல்லா வகையிலும் பாதுகாப்பானதும், எதிர்காலத்திற்கு நன்மையானதும் என அவர்கள் எப்போதும் கருதி வந்தனர்.

குடும்பத்தில் தன்னை விடப் பொருளிலும் அந்தஸ்திலும் உயர்ந்த எவரும் உருவாகி விடக்கூடாதென்பதில் மிகத் தீவிரமாக இருந்ததன் பலனாக, சண்டியன் என்ற அடைமொழிக்குப் பதிலாய்ப் போடியார் எனும் பெயர் இறுக்கமாகத் தன்னுடன் ஒட்டிக் கொண்டமை குறித்து தாவூதுப் போடியாருக்குப் பூரண திருப்தியிருந்தது. இந்த அற்பப் புகழுரைகளுக்கெல்லாம் பலியாகி விடாது, விவசாய நிலங்களில் கூலி வேலைக்கமர்ந்து, அதில் கிடைக்கும் சிறுதொகைப் பணத்தைக் கொண்டு நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலேயே தமக்குரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் கண்டனர் ஹ§ஸைனும் ரசீனாவும். இப்போது வளர்ந்து, சுயமாகத் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள ரபீக்கின் உழைப்பு, அவர்களைப் பொறுத்தவரை, மேலதிக வருமானமாய்க் கணிக்கப்பட்டு, வார்ந்தம் சிறுதுளி பெருவெள்ளமாய் வங்கியில் குவிந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.

பாத்திமாவை இனிச் சந்திக்க முடியாது என்பது அவர்களளவில் வலி முறுகும் தண்டனைதானெனினும், அதை விட அமீனுக்கும் பாத்திமாவுக்கும் இடையிலான அன்புப் பரிமாற்றம் தோல்வியாகி விடுமோ என்ற அச்சம்தான் அவர்களைப் பெரிதும் வாட்டிற்று. இறைவனை அழைத்துப் பிரார்த்திப்பதைத் தவிர தம்மால் முடியுமானது எதுவுமில்லையென்ற முதிர்ச்சோகத்தின் உறுத்தலில் அவர்கள் முகம் வாடிக் கண்கலங்கினர்.

இங்கு, ரசீனா குடும்பத்தினர் பாத்திமா குறித்துக் கவலையில் முண்டிக் கொண்டிருக்க தாவூதுப் போடியாரோ தன் மகளுக்கு உடனடியாக மாப்பிள்ளை தேடிக் கல்யாணம் நடத்தும் பொறுப்பு வாய்ந்த முயற்சியில், தொடை தெரியச் சாரனை உயர்த்திக் கட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் களமிறங்கி விட்டிருந்தார். ஆனால், முயற்சியில் வெற்றி காணாமலே முறிந்து விழுந்து அழிந்து போகும் பரிதாபத்துக்குள் தான் சிக்கப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

(04)

லீலா பஞ்சாக்கச் சித்திரக் கலண்டரில் தொங்கிய முந்தை நாட்குறிப்பை, அன்று காலை கிழித்த போது, சாச்சி குடும்பத்தினரைச் சந்தித்து இன்றோடு முப்பது நாட்கள் பூர்த்தியாவதை எண்ணிக் கண்ணீர் விட்டாள் பாத்திமா. கடந்து விட்ட ஒரு மாத காலத்திற்குள், அவளது வாழ்க்கையை அப்படியே புரட்டித் தலைகீழாய்த் தொங்கவிடுமாப் போல் எத்தனை மாற்றங்கள் நடந்து முடிந்து விட்டன.

களிமண் சுவர்களும், கிடுகுக் கூரையுமான இரண்டறைச் சந்து வீடொன்றில், நோய்ப்படுக்கையில் அழுந்திப் புரளும் உம்மாவுடன் கண்ணீர் விட்டுக் காலந்தள்ளும் மிகக் கொடுமையான நிர்ப்பந்தத்தில், உடலழகும் மனோவுறுதியும் முற்றாகக் கரைந்து நொறுங்கிச் சோர்ந்திருந்தாள் பாத்திமா. உம்மாவின் மீது அவளுக்கு முழுமையான பாசம் எப்போதும் இருந்து வந்தது. ஆனால் வாப்பா மீதுதான், விவரம் புரிந்த நாளிலிருந்து எவ்விதப் பற்றுதலும் இல்லாமலேயே அவள் வாழ்ந்திருக்கிறாள். பிறரை அடக்கியாள நினைக்கும் அதிகார வெறியும், நேர்மையைப் புறந்தள்ளிப் பொருமும் பணமோகமும், நினைத்ததைச் சாதிக்கத் துடிக்கும் வரட்டுப் பிடிவாதமுமாகத் தனக்கு அறிமுகமான தன் வாப்பாவை ஒரு வில்லனைப் பார்ப்பது போன்றுதான் முதலில் பார்த்தாள் பாத்திமா. அவரிடமிருந்து தொடர்புகளறுத்துத் தள்ளியிருக்க வேண்டுமென்பதில் சிறுவயதிலிருந்தே அவள் கவனமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தாள்.

இந்த அதிகார வெறியும், பணமோகமும் ஒரு நாள் அவரது உயிரையே முறித்தெறியப் போகிறதெனத் தோழிகள் பாடசாலையில் படிக்கிற போது பேசிய வார்த்தைகள், அப்போது அவளுக்கு எவ்வகையிலும் அதிர்வைக் கொடுக்கவில்லை. ஆனால், உண்மையாகவே அது நடந்து முடிந்து, அரைச்சாணுக்குக் கழுத்தில் செருகப்பட்ட சைனைட் கத்தியுடன், இரத்தம் சொட்டச் சொட்ட தாவூதுப் போடியார், சடலமாக வீட்டு விறாந்தையில் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தப்பட்ட போது, அவள், தந்தை மீது கொண்டிருந்த இறுக்கத்தைப் பொட்டெனத் தளர்த்தி, உம்மாவுடன் இணைந்து தன் மெல்லிய குரலில் ஓலமிட்டழுது கண்ணீர் உகுத்துப் பரிதவித்தாள்.

தொடர்ந்து வந்த நாட்களில், கொள்ளையர்களின் கயிறுகளில் அகப்பட்டதும், பண்ணை வேலிகளை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்று காட்டில் குழுமாடாகிப் போனதுமாக, மாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, சாணி நிறைந்த பண்ணை நிலம் வெறுமையாய் ஆவென்றாகி விடவும், புதிதாக முளைத்த அறிமுகமற்ற கடன்காரர்கள் எஞ்சியிருந்த உழவு இயந்திரத்தையும், வயற்காணிகளையும், குடியிருந்த வீட்டையும் கணக்குப் போட்டுப் பிடுங்கிக் கொள்ளவும் பாத்திமாவினதும் உம்மாவினதும் தலையில் அகதி வாழ்க்கை கனலும் பாறாங்கல்லாய்க் கவிழ்ந்து விழுந்திற்று.

எல்லைப் புறத்தில் நடந்த பொலிஸார் மீதான தாக்குதலில், நெஞ்சில் குண்டு பாய்ந்திறந்து, இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பாறூக்கினதும், வன்செயல்களுக்குப் பயந்து வெளியூருக்குக் குடிபெயர்ந்து காணாமல் போன சாச்சி குடும்பத்தினரதும் நினைவுத் துயரை மனம் முழுக்க நிரப்பிக் குளறிக் கொண்டு, ஊர்க்கோடியிலிருந்த தரிசு நிலமொன்றில் குடிலமைத்து இடம்பெயர்ந்ததிலிருந்து, கண்ணீருக்கும் கன்னங்களுக்கும் ராசியாகி விட்டதாய்ப் பார்வையை வெறித்துச் சோர்ந்து முறிந்து கிடந்தாள் பாத்திமா.

கடன் தொல்லைகளுக்குப் பலியானது போக மீதமிருந்த நகைகள், தொண்டைக்குழி தாண்டிச் செல்ல மறுத்து வழியும் அவர்களது நாளாந்த ஒருவேளை உணவுக்கான ஆதாரமாயின. வாழ்க்கை வெறுத்துப் போன துயர்க்கொடுமைக்கு மத்தியிலும், பாத்திமாவுக்கிருந்த ஒரே ஆறுதல் அமீனின் நினைவுகள்தான். ஆனால் கொழும்புக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவன், ஒரு மாதம் தாண்டியும் இன்னும் தன்னைச் சந்திக்க வராதது அவளுள் கவலைக் குறியாய் மனதை அரித்துக் கொண்டிருந்தது. தனது இப்போதைய நிலை பற்றி அவன் அறியாதிருக்கச் சாத்தியமில்லையென்பதை அவள் நன்கறிவாள். ஏனெனில், அவளது தந்தைக்கு, ஊரில் மதிப்பிருந்ததோ இல்லையோ, எல்லோர் மத்தியிலும் பிரபலம் மட்டும் செறிவாக இருந்து வந்தது. அவரது படுகொலை, ஊரின் முக்கிய சரித்திர நிகழ்வாய் ஆனமையையும் அவள் அறிவாள். எல்லோருக்கும் தெரிந்த விடயம் அமீனுக்கு மட்டும் எவ்வாறு தெரியாமல் போக முடியும். தெரிந்தால் ஏன் வராமலிருக்கிறான். சாச்சி குடும்பத்தினர் ஊரை விட்டுச் சென்று விட்டதால், என்னைச் சந்திக்கும் வழி தெரியாமலும், நான் தங்கியிருக்கும் இடமறியாமலும் தவித்தலைகிறானோ. இந்த இடத்திற்கு இப்படியான நேரத்தில் அவன் வராமலிருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். 'எந்தச் சூழ்நிலையிலும் கண்ணீர் விட்டவளாகக் கவலைப்பட்டவளாக உங்களைக் காணச் சக்தியில்லை எனக்கு' என எப்போதும் உணர்ச்சி வசப்பட்டுக் கூறுபவன், இப்போதைய துயர் முறுக்கிச் சரித்த வாழ்க்கை எச்சங்களுடன் என்னைக் கண்டால், குலை நடுங்கிக் குற்றுயிரானாலும் ஆகிவிடுவான்.

மனதைத் தேற்றிக் கொள்ள அவள் முயன்ற போதும், அமீனைக் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஆசையும் அடிமனதில் வேர்விட்டுச் செழித்திருக்கும் குறுகுறுப்பை அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது அவள் நெளிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான், அவளது தூரத்து உறவினரான காமிது லெவ்வை அங்கு வந்தார். நல்லா இருந்த காலத்தில் வராதவர், இப்போது கஷ்டப்பட்டுக் கழுத்து நெரியும் நிலையில் பார்க்க வந்திருப்பதையிட்டு அவர் மீது மதிப்புத் தொனிக்க அன்பாக வரவேற்றுப் பாயை விரித்துப் போட்டாள், பாத்திமா.

'என்ன ராத்தா! சுகமா இரிக்கிறியா?' என அவளது உம்மாவிடம் கேட்டுவிட்டு, பதிலை எதிர்பாராமலேயே பாத்திமாவை நோக்கினார், காமிது லெவ்வை.

'பாத்திமா நீயும் இரு புள்ள. உன்னப் பத்திக் கதைக்கத்தான் நான் இப்ப வந்த' என்று கூறிவிட்டு, மீண்டும் அவளது உம்மாவின் பக்கம் திரும்பினார்.

'ராத்தா! பாத்திமாவுக்கு நல்ல மாப்புளயண்டு இரிக்கி. வெளிநாட்டில ரைவரா வேல செஞ்சி போட்டு ரெண்டு கிழமைக்கு முதல்தான் லீவில வந்திரிக்காரு. கைநிறையக் காசி. கல்யாணம் பண்றத்துக்கு நல்ல பொண் வேணுமெண்டு சென்னாரு. எனக்கு பாத்திமாட நினப்புத்தான் வந்திச்சி. நல்லா இருந்த நீங்க இப்படிக் கஷ்டப்படக்குல அல்லாஹ்வாப் பாத்து சந்தர்ப்பத்த அனுப்பியிருக்கான்'

காமிது லெவ்வை கூறியதைக் கேட்டதும், படுக்கையிலிருந்து ஆர்வமாய் எழுந்து உட்கார்ந்தாள் பாத்திமாவின் உம்மா.

'மாப்புள எப்பிடி? நல்ல புள்ளயா?'

'ஒரு பிரச்சினயும் இல்லாத ஆள். எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. அழகான மனிசன். சிரிச்ச முகம். பாத்திமாவப் பத்தி அவருக்கிட்ட சென்னன். பரவால்ல, கஷ்டப்பர்ர புள்ளய முடிச்சா நன்மதான எண்டு சரி செல்லிட்டாரு. கல்யாணத்துக்குப் புறவு நீயும் பாத்திமாவும் அவர்ர ஊட்லயே போய் இரிக்கலாம். அவர் இப்ப ஊட்ல தனியாத்தான் இரிக்காரு. கூட ரெண்டு புள்ளெகள் மட்டுந்தான் இரிக்கி'

'புள்ளெகளா....?' புருவங்களை நெறித்துக் குரலெழுப்பினாள் பாத்திமாவின் உம்மா.

'ஓம் ராத்தா. போன கிழமதான் அவர்ர பொஞ்சாதி மௌத்தாப் போனிச்சி. ஒரு பொம்பளப்புள்ளெயும், ஒரு ஆம்புளப்புள்ளெயும் மட்டுந்தான் இரிக்கி. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? ஊர்ல உலகத்தில நடக்காததா? உனக்கு சம்மதமெண்டா ரெண்டு மூணு நாளைலயே கல்யாணத்த முடிச்சிரலாம், ராத்தா!'

காமிது லெவ்வை, மாப்பிள்ளைக் கதையைத் தூக்கியவுடனே, அங்கு பேசப்படும் விடயங்களிலிருந்து மனதை விலக்கிக் கொண்டு, பாயின் முனையை நோண்டியவாறு வெறுமையாய் உட்கார்ந்திருந்தாள், பாத்திமா. உம்மாதான், கேள்வியும் பதிலுமாக அவரோடு உரையாடித் தீர்மானம் கூறாமலேயே அவரை அனுப்பி வைத்தாள். பாத்திமாவுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணிக் கொடுத்து அனுபவிக்கும் கஷ்டத்திலிருந்து அவளை விடுதலையாக்கிக் கரையேற்ற வேண்டுமென்பதொன்றே உம்மாவின் இப்போதைய ஆசையாகவும் இலட்சியமாகவும் இருந்தது. செல்லமாக வளர்த்த பிள்ளை, இப்படிச் சின்னாபின்னமாகிக் கண்ணீரில் கரைந்து அழிந்து போவதை எந்தத் தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்.

'போய்ட்டு புறவு வாறன் புள்ள' என்று கூறிக் கொண்டு வீட்டிலிருந்து வெளிப்பட்ட காமிது லெவ்வையை, 'போய்ட்டு வாங்க மாமா' எனக் கூறி அனுப்பி வைத்து விட்டு, முன்வாசலில் படர்ந்திருந்த குருத்து மணலில் சாவதானமாய் வந்தமர்ந்து கொண்டாள் பாத்திமா.

அவளைக் கல்யாணம் பண்ணத்தான் அமீன் இருக்கும் போது, இன்னொரு மாப்பிள்ளை பற்றிய பேச்சில் அவள் ஏன் அக்கறை காட்ட வேண்டும்! அதுவும், ஏற்கனவே திருமணம் முடித்து, மனைவியை இழந்து, இரண்டு பிள்ளைகளுடன் உள்ள ஒரு முதிர் மாப்பிள்ளை பற்றி.

அவள் கண்களை மூடிக் கொண்டாள். ஆகாய முகில் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு அமீன் பறந்து வருகிறான். இவளை நோக்கிக் கைநீட்டுகிறான். அவள் தனது கையை நீட்டி, அவனது கையைப் பற்றிக் கொள்கிறாள். இருவரும் உலகின் கவலை முடிச்சுகளையெல்லாம் அவிழ்த்தெறிந்து விட்டு, ஆனந்தச் செழுமை வழிய வழிய அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இருவரது முகங்களும் மகிழ்ச்சியின் இறுக்கத்தில் பிரகாசித்துச் சூரியனையும் சந்திரனையும் தலைகுனியச் செய்கின்றன.

முதுகில் தட்டப்படுவது உணர்ந்து கண் திறந்த பாத்திமா, முன்னால் நின்றிருந்த றியாஸாவைக் கண்டதும், முகத்தில் திடீர் மலர்ச்சியைத் தெளித்துச் சோகத்தை மறந்த புன்னகையுடன் அவளை வரவேற்றுக் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

றியாஸா, பாத்திமாவின் பள்ளித்தோழி. அவளது அந்தரங்கம் முழுதும் அறிந்தவள். பாடசாலையிலிருந்து விலகிய பிறகு அறுந்து விட்ட பல நட்புகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் நிலைத்திருப்பது றியாஸாவின் நட்பு மட்டும்தான். இந்த நட்பின் நீடிப்புக்கு முழுக்கக் காரணமாயிருப்பவளும் றியாஸாதான். பாத்திமாவைத்தான் வெளியில் எங்கு செல்லவும் அவளது தந்தை அனுமதித்ததில்லையே.

பாத்திமாவைக் கூர்ந்து நோக்கினாள் றியாஸா. பாடசாலைக் கலைவிழாக்களில் அழகுராணியாய் முடிசூட்டிக் கொள்ளத் தகுதியான ஒரேயருத்தி என எல்லோராலும் ஏகமனதாகப் பாராட்டி வருடாவருடம் அரங்கேற்றம் கண்டுவந்த பாத்திமாவையும், இன்று வாழ்க்கை மாற்றங்களில் கசக்கியெறியப்பட்டு, சாறுறிஞ்சித் துப்பப்பட்ட வெறும் சக்கை போலச் சோர்ந்து விழுந்திருக்கும் பாத்திமாவையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் றியாஸா. அவளது உள்ளத்தில் கனமான சோகம் மண்டிச் சிலும்பிற்று.

இந்த நிலையில், தான் கொண்டு வந்துள்ள கொடிய செய்தியை பாத்திமா எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறாளோ எனச் சங்கடமாய்ப் பயந்து விழித்துக் கொண்டிருந்தாள் றியாஸா. துயரத்தை விடத் துரோகத்தின் வலி கொடியது என்பது அவள் அறியாததல்ல. துயரத்தையே தாங்கத் திராணியற்று உடலும் மனமும் பலவீனமுற்றுத் துவண்டிருக்கும் பாத்திமா, அமீன் தனக்குச் செய்து விட்ட கொடிய துரோகத்தை அறிந்தால், அதனை எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறாள் என்றெண்ணித் தயங்கித் தயங்கி மென்று முழுங்கிக் கொண்டிருந்தாள், அவள். எனினும், சொல்லாது விடுவதும் சரியல்ல என்ற உந்துதலில், பாத்திமாவோடு சாவகாசமாய் உரையாடி, அவளைச் சரளமாக்கிவிட்டு, மிகப்பக்குவமாக அந்தக் கூர்வாளை அவளது நெஞ்சில் செருகினாள் றியாஸா.

மிக அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாத்திமா, கட்டுப்பாடுகளை மீறிக் கண்களில் ஊறித்தழும்பும் கண்ணீருடனும், நெஞ்சில் முட்டி மோதும் கனத்துயருடனும் நீண்ட நேரம் மௌனமாக இருந்தாள். பின், எழுந்து சென்று மண் குடத்திலிருந்து குவளையில் தண்ணீரை மொண்டு, கண்களை மூடிக் கொண்டே ஆறுதலாகப் பருகி முடித்துக் குவளையை அதனிடத்தில் வைத்து விட்டு, றியாஸாவுக்கருகில் வந்தமர்ந்து மிகச் சோகமாக அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

'தண்ணீரக் குடிச்சி, கண்ணீர அடக்கிக்கிட்டன். கத்துறத்துக்கும் என்ட உடம்பில தெம்பில்ல றியாஸா'

இறுக்கமான ஒரு தீர்மானத்துடன் தலைகுனிந்து கண்ணீரை மறைக்க முயன்று கொண்டிருந்தாள், பாத்திமா.

(05)

உடல் முழுக்க இறுக்கிப் போர்த்திய கம்பளி ஆடையுடன் குளிரோடு போராடிக் கொண்டிருந்த றிஸானா, மனதில் குமுறும் உணர்வுகளின் கொதிப்பில் உடற்குளிர்மையைப் போக்கிவிடும் பிரயத்தனத்துடன் தன் அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தித் தாளிட்டாள். அவமானச் சிறைக்குள் அகப்பட்டு விட்ட ஏமாற்றத்தின் கொடும்பிடி அவளது குரல்வளையைக் கடித்துக் குதறிற்று. மிகச் சங்கடமான ஜந்து ஒன்று அடிவயிற்றுள் உருண்டு பிரள்வதாய் அவளை அசௌகரியப்படுத்திற்று.

சுமார் ஒரு வருடமாகத் தன் உள்ளத்தின் பசுமைக்குள் நீரூற்றிச் செழிக்க வைத்த நம்பிக்கை விருட்சத்தை வேரோடு அறுத்தெறிந்து விட்ட இஸ்மாயிலின் மீதான வன்மம் அவளுள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. பிறந்த நாட்டைப் பிரிந்து, மொழியிலும், கலாசாரத்திலும் அந்நியமான ஒரு சமூகத்தின் மத்தியில் வாழத்தொடங்கிய வாழ்க்கையின் ஆரம்பகால மன இறுக்கத்தையும், தனிமையின் கண்ணீர்ச் சூழலையும் தளர்த்துவதில் அக்கறையாய் இறங்கி வந்த இஸ்மாயிலின் மீது அப்போது ஏற்பட்ட நம்பிக்கையும், அன்பும் இன்று முற்றாகச் சிதைந்து போனதில், அவமானமும் இழப்பும் தனக்கு மட்டுமே என்பதை நினைத்து, அவளது உள்ளம் ஓலமிட்டுத் துடித்தழுதது.

'றிஸானா! நம்ம ரெண்டு பேரும் ஒரே ஊராக்கள். நீங்க பணிப்பெண்ணா வேல செய்ற இடத்திலயே எனக்கு ரைவராக வேல செய்யக் கிடைச்சது நமக்கு எவ்வளவு நல்லது தெரியுமா! அது மட்டுமில்லாம, கட்டாருக்கு வந்து சேந்த இந்த மூணு மாசப் பழக்கத்தில உங்களப்பத்தி நான் நல்லா அறிஞ்சிக்கிட்டன். உங்களயே கல்யாணம் பண்ணிக்கலாமெண்டும் நல்லா யோசிச்சி முடிவெடுத்திருக்கிறன். உங்களுக்கும் விருப்பமிருந்தா செல்லுங்க. ஊருக்குப் போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். தேவப்பட்டா திரும்பவும் இஞ்ச ரெண்டு பேரும் ஒண்டாவே வரலாம். அதுக்கும் இப்ப விசா குடுக்கிறாங்கதான'

மிகப் பக்குவமாகத் தன் உள்ளக்கிடக்கையை இஸ்மாயில் வெளிப்படுத்திய போது, தனக்கு அவன் மீது ஏற்பட்டுள்ள அதே அபிமானம், அவனுக்கும் தன் மீது ஏற்பட்டிருப்பதையிட்டுப் புளகாங்கிதமடைந்தாள் றிஸானா. மேற்கொண்டு தொடர்ந்த அவனது பேச்சிலிருந்து அவனது தனிமையையும், தாய் தந்தை குடும்பமற்ற வெறுமையையும் அறிந்து அவன் மீது அனுதாபமும் அன்பும் கொண்டாள். தன் சம்மதத்தையும், அவன் மீதான பற்றுதலையும் வெளிப்படையாகவே அவனிடம் கூறினாள்.

இது நடந்து சரியாக ஒரு வருடமாகி விட்டது. இந்தக் காலப்பகுதியில், வீட்டில் எஜமானி இல்லாத நேரத்தைப் பார்த்து, பல தடவை அவனது அறைக்குச் சென்று வந்திருக்கிறாள் றிஸானா. அவனது கெஞ்சலுக்குப் பணிந்து, அவனின் தனிமையையும் தாகத்தையும் போக்கியிருக்கிறாள். அவனது தொந்தி வயிறு அழுந்த, இறுக்கியணைத்துக் கட்டிலில் புரண்டு அவனைச் சுகப்படுத்தியிருக்கிறாள். அவனது திருப்திப் பெருமூச்சிலும் மகிழ்ச்சிப் புன்னகையிலும் தன்னை மறந்து மகிழ்ந்திருக்கிறாள். பிறந்து வளர்ந்த கலாசாரக் கட்டுப்பாட்டுக் கயிறுகளை அறுத்தெறிவதற்கும், இறுக்கமான சமயத் தடைகளைச் சுயமாகத் தளர்த்திக் கொள்வதற்குமான தைரியத்தை அவள் பெற்றிருந்தமைக்கு, திருமணம் தொடர்பாக அவளுக்கு அவனளித்திருந்த வாக்குறுதிகளே பிரதான காரணமாயின. எனினும், ஒவ்வொரு முறை அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் போதும், கர்ப்பத் தடைகளை ஏற்படுத்திக் கொள்வதில் அவள் வெகு அவதானமாகவே இருந்து வந்திருக்கிறாள்.

அவற்றிலெல்லாம் அவதானமாக இருந்துவிட்டு, அவன் ஏற்கனவே திருமணம் முடித்தவனா இல்லையா என்பதை அறிந்து கொள்வதில் மட்டும் அவதானமற்றுப் போயிருந்த தன் மடமையையிட்டு இப்போது மனம் வருந்தி வெதும்பினாள் றிஸானா.

இன்று காலை பூத்தூவலாய்ப் பனி கொட்டிக் கொண்டிருந்த குளிர்மைச் சூழலில், இஸ்மாயிலின் உடற்கதகதப்பை நாடி, எஜமானி வெளியே சென்றிருந்த தருணத்தைப் பார்த்து, அவனது அறைக்கு ஓடினாள், அவள். பூட்டாது சாத்தப்பட்டிருந்த அறைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே சென்றவள், அவன் அறையில் இல்லையென்பதை உணர்ந்து, பரிதாபம் முற்றிய ஏக்கப் பாவனையுடன் முகங்குப்புற அவனது கட்டிலில் விழுந்தாள். அவனது உப்பிப் பெருத்த தலையணையை எடுத்துத் தன் கால்களிடை பொருத்தி இறுக்கிக் கொண்டே அங்குமிங்கும் புரண்ட போதுதான், தலையணையின் கீழ் மிகப் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு உறையுடனான கடிதத்தைக் கண்டாள். சேரல் பகுதியில் இஸ்மாயிலின் பெயரும் முகவரியும் எழுதப்பட்டிருப்பது கண்டு புருவங்களை நெறித்தாள்.

யாருமில்லாத அநாதையென்று சொன்னவருக்கு, யார் கடிதம் அனுப்பியிருக்கக் கூடும்?

உணர்வுகளுள் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை உள்வாங்கித் தலையணையை அப்பால் வைத்து விட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள் றிஸானா.

'என் அன்பின் கணவருக்கு, உங்கள் மனைவி நஸீமா எழுதிக் கொள்வது, நானும் நமது பிள்ளைகளான அஸ்மியாவும், அன்ஸாரும் நலமாக இருக்கிறோம். உங்கள் நலத்திற்காகப் பிரார்த்திக்கிறோம்.

நீங்கள் பணம் அனுப்பி இரண்டு மாதமாகிறது. இங்கு நாங்கள் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். போதாததற்கு, அஸ்மியாவும் பெரியவளாகி விட்டாள். அவளுக்குச் செய்ய வேண்டிய கருமங்களை முறைப்படி செய்யவும் பணமின்றித் தவிக்கிறேன்.

வழமையாக வரும் மாரடைப்பு நேற்றும் எனக்கு வந்து விட்டது. மௌத்தாகி விடுவேன் என்றுதான் நினைத்தேன். பக்கத்து வீட்டு நானா வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் மருந்தும் எடுத்துத் தந்தார். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இது நிரந்தரமில்லை என்பது எனக்குத் தெரியும். நான் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். திடீரென நான் மௌத்தாகி விட்டால், நமது பிள்ளைகளை யார் பார்ப்பது! நீங்கள் ஒரு தடவை ஊருக்கு வந்து செல்லுங்கள். வேண்டுமென்றால், எனக்குக் கடும் சுகயீனம் என்று நான் ஒரு தந்தி அடிக்கிறேன். நீங்கள் வந்தால்தான் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் ஆறுதலாக இருக்கும்.

இப்படிக்கு உங்கள் மனைவி நஸீமா'

கடிதத்தை மடித்து உறைக்குளிட்ட போது, றிஸானாவின் உடல் முழுக்கத் தீயின் உஷ்ணம் கனன்று கொண்டிருந்தது. ஏமாற்றம் அவளது இளநெஞ்சைச் சுட்டெரித்துக் கருக்கிற்று.

நேற்று முன்தினம் தொடக்கம், இஸ்மாயிலின் நடத்தையில் தொற்றியிருந்த மாற்றத்தையும், வழமையான கலகலப்புக்குப் புறம்பாக உம்மென்றிருந்த அவனது போக்கையும், தான் சாதாரணமாகக் கருதித் தள்ளிவிட்டிருந்ததை இப்போது நினைவு கூர்ந்தாள் றிஸானா.

வெளி ஆண்கள் யாருடனும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்று ஆரம்பம் தொடக்கம் கண்டிப்பாகக் கூறிவரும் அவன், நேற்றுக் காலை அவனிடம் சென்று, 'லண்டனிலிருந்து விடுமுறையில் வந்துள்ள எஜமானியின் மகன், இரவு என்னைப் பலவந்தப்படுத்திப் பணியவைத்து விட்டான்' எனக் கூறிய போது கூட அதைச் சற்றும் இலட்சியம் பண்ணாமல், 'பரவாயில்ல' என ஒதுக்கியதும் இப்போது அவளுக்கு நினைவு வந்தது.

பரஸ்பரம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற தனது கொள்கையின் அடிப்படையில், தனக்கு நேர்ந்த பலாத்காரத் துயரையும் அவனிடம் பகிர்ந்து கொள்ளத் துணிந்த தன்னை, இவ்வளவு அகோரமாக ஏமாற்றி விட்டானே பாவி என இஸ்மாயிலை நினைத்து மனதுக்குள் கறுவினாள் றிஸானா.

அவள் கனவு கண்டு கொண்டிருந்த எதிர்கால வாழ்வின் பிரகாசச் சூரியன் திடீரென அஸ்தமிக்க, வாழ்க்கை இருளுக்குள் புதையுண்டு நொறுங்கியதாக எண்ணிக் குமுறினாள், அவள். தன் உடலை மட்டுமன்றி சம்பாதித்தவற்றில் ஊருக்கு அனுப்பியது போகச் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியையும் இஸ்மாயிலிடம் இழந்து விட்டிருந்தாள் அவள். பணத்தைச் சண்டை பிடித்தேனும் மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்று வைத்துக் கொண்டாலும், இழந்து தொலைத்த மானத்தை எப்படி மீளப்பெறுவது!

மாதாந்தச் சம்பளத்தையெடுத்து, ஊருக்கு அனுப்பும் போது, சேரல் பகுதியில் அவள் எழுதும் 'அமீன்' எனும் பெயரைச் சந்தேகமாய்ப் பார்த்து அவன் புருவங்களை நெறிக்கும் போது, 'எங்க உம்மா எழுதப் படிக்கத் தெரியாதவ. அதனால எங்கட சொந்தக்காராளுக்கு காச அனுப்புறன். அவர் செக்க மாத்திக் காச உம்மாக்கிட்ட குடுப்பாரு. எனக்கு ஊடு கட்ற வேலயயும் அவர்தான் பாத்துக்கிறாரு' என அவள் வெளிப்படையாகக் கூறுவாள்.

'நீங்க எடுக்கிற சம்பளக் காச யாருக்கு அனுப்புறீங்க?' என அவள் மாறிக் கேட்டால், 'பேங்குக்கு அனுப்புறன்' என்றும், 'கூட்டாளி ஒருத்தனுக்கு அனுப்புறன்' என்றும் அவன் கூறிச் சமாளிக்க முனைவதை அவள் சந்தேகக்கண் கொண்டு பார்த்ததில்லை. ஆனால், இது வரை காலப் பழக்கத்தில், தான் எழுதும் சேரல் முகவரியைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அவன் அவளுக்கு வழங்கியதேயில்லை. நீண்ட காலமாகவே திட்டமிட்டுத் தன்னை ஏமாற்றியிருக்கிறான் என்பதை இப்போது உணர்ந்து கண் கலங்கினாள் றிஸானா.

அந்த ஏமாற்றத்தின் மத்தியிலும் துவண்டு விடாமல் மனத்திண்மையுடன் சிந்தித்தாள், அவள். இனி இஸ்மாயிலை நம்பிப் பயனில்லை. உடனடியாக ஊருக்குச் செல்ல வேண்டும். வீட்டுக் கட்டட வேலைகளில் அரைவாசியையேனும் அமீன் முடித்திருப்பான்.

தேவைப்பட்டால், மத்திய கிழக்குக்கு மீண்டும் ஒரு பயணம் வந்து, உழைத்து, வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும். உடனே ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், எஜமானியுடன் சண்டையிட்டு இலங்கைத் தூதுவராலயத்தில் முறைப்பாடு செய்தால்தான் முடியும்.

இஸ்மாயிலைச் சந்திப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொண்ட இந்த மூன்று நாட்களில், றிஸானா திட்டமிட்டபடி எல்லாக் காரியங்களும் கச்சிதமாக நடந்தேற, தந்தியின் மூலம் தான் ஊருக்கு வருவதாக அமீனுக்கு அறிவித்து விட்டு, சேமித்து வைத்திருந்த பணத்தையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள் றிஸானா.

(06)

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விமான நிலையத்திற்கு வந்துவிட்டான் அமீன். சரியாக ஐந்து பதினைந்துக்குத் தரையிறங்கும் கட்டார் விமானத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அதில்தான் றிஸானா நாட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறாள்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவரை அழைத்து வரப்போவதாகக் கூறி பாத்திமாவிடம் விடைபெற்றுக் கொண்டு வந்த அமீன் அன்றிரவு தூக்கமின்றித் தவித்துப் படுக்கையில் புரண்டான். உம்மாவிடம் கொஞ்சத்தைக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்தில் வீடு கட்டுமாறு கூறி, றிஸானா மாதம் தவறாமல் அனுப்பி வைத்த பணத்தை, தனது தங்கைக்கு வீடு கட்டித் திருமணம் முடிக்கப் பயன்படுத்தி விட்ட தன் தவறையெண்ணிக் குற்ற உணர்வில் நெளிந்து கொண்டிருந்தான், அவன். வீட்டுக் கட்டடப் பணிகளில் பெரும்பகுதி நிறைவு பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஊருக்கு வரும் றிஸானாவுக்கு, அவள் வாங்கிப் போட்டுவிட்டுச் சென்ற நிலத்தையே புற்புதர்களடர்ந்த வெறும் மயான பூமியாகக் காண்பிக்க வேண்டியுள்ள தன் துரதிர்ஷ்ட நிலையையெண்ணிக் கைகளைப் பிசைந்தான். அவனது நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்புத் தணலொன்று சுற்றிச் சுற்றி உழலத் தொடங்கிற்று.

றிஸானாவுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், அல்லது அவள் அனுப்பிய பணம் முழுவதையும் மீள அவளிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டுமே அவனால் முடியாத காரியங்கள். தையலில் அவன் சம்பாதிக்கும் பணமும், பாட்டிசைத்து அவனது தந்தை உழைத்துக் கொணரும் பணமும் இணைந்தும், ஏழு தங்கைகளும் இரண்டு தம்பிமாருமாகப் பனிரெண்டு பேரடங்கிய அவனது குடும்பத்தின் அன்றாடத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாமற் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இலட்சக்கணக்கான ரூபாய்ப் பணத்தை ஒரே நாளில் புரட்டுவதென்றால், அவனால் எப்படிச் சாத்தியமாகும்.

அதற்காக, றிஸானாவின் பணத்தை அவளுக்குக் கொடுக்காது இருந்துவிட முடியுமா? எனது பஞ்சத்தையும் பட்டினியையும் அவள் எதற்காகச் சுமக்க வேண்டும்? அப்படியானால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? றிஸானா மட்டுமே இதற்குத் தீர்வு கூற முடியும். அவள் நினைத்தால், பணம் முழுவதையும் அமீனுக்காக விட்டுக் கொடுத்துத் தள்ளுபடி செய்யலாம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாகவேனும் தருமாறு அவனை நிர்ப்பந்திக்கலாம். அவள் எது கூறினாலும் அதற்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தான், அமீன். அதற்குத் தயாராகவும் இருந்தான்.

தான் புரிந்துள்ள இப்பிழையான செயல் பற்றித் தெரிய வந்தால் பாத்திமா என்ன செய்வாள் என எண்ணிப் பார்த்தான், அமீன். அற்பப் புழுவாய் நினைத்துத் தன்னை முற்றாக வெறுத்தொதுக்கி விடுவாளோ! அல்லது தன் காதலைச் சந்தேகித்துக் கோபத்துடன் பின்வாங்கி விடுவாளோ! இரண்டுமே அவளால் முடியாதெனத் திண்ணமாக நம்பியிருந்தான், அவன். இரண்டொரு நாட்கள் தன்னைச் சந்திக்க முடியாத பிரிவுத்துயரையே தாங்கொணாது, கண்களிலும் கன்னக் கொழுகொழுப்பிலும் சோகத்தைப் பூசிக் கறுத்தவளால், முற்றாகத் தன்னை ஒதுக்கித் தள்ளிவிடுவதென்பது நடக்கவே முடியாத அசாத்தியம் என்றெண்ணிய போது அவனது மனதுக்குள் மகிழ்ச்சியும், தன் மீது பாத்திமா கொண்டுள்ள அன்பின் ஆழம் குறித்த வியப்பும் ஒருசேரத் தோன்றி மறைந்தன. ஆனால், றிஸானாவுக்குத் தான் செய்துள்ள ஏமாற்றுக் கைங்கரியம் பற்றித் தெரிந்த பின், பாத்திமாவின் முன் எப்படித் தன்னால் முகம் நிமிர்த்தி நிற்க முடியும் என்றும் எண்ணிச் சவுங்கினான், அவன்.

அதிகாலை இருள், முன்னேறி வரும் காலைப் பிரகாசத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து கொண்டிருந்தது. வெளியில் வெளிச்சம் ஏற ஏற, உள்ளுக்குள் இருள் மண்டுவதாகச் சிலாகித்துக் கழுத்து நரம்புகள் புடைக்கப் புடைக்க விழித்துக் கொண்டிருந்தான், அமீன். றிஸானாவிடம் எப்படி நடந்ததை எடுத்துக் கூறுவது என்று புரியாமல் இன்னமும் தடுமாறிக் கொண்டுதானிருந்தான், அவன்.

றிஸானாவின் குடும்பம் மிகவும் வறியது. அவளது உம்மா-வாப்பாவுக்கு அவள் ஒரே பிள்ளை. எனினும், ஒரே பிள்ளையென்பதற்காகச் செல்லமாக அவள் வளர்க்கப்படவில்லை. அவளது சிறு வயதிலேயே, வாப்பா வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டு வெளியூரொன்றில் காணாமல் போய்விட, பெரும் சிரமங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் மத்தியில் அவளது தாய் தனியாளாய் நின்று போராடி அவளை வளர்த்தெடுத்தாள். உலக விவகாரங்களைக் கிரகித்துக் கொள்ளச் சக்தியற்ற அந்தச் சிறு பருவத்தில் றிஸானா எதிர்கொண்ட சவால்களின் ஆதிக்கம், உடலும் உள்ளமும் வலிமை பெற்றவளாகவும், எத்தகைய துயரின் போதும் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளும் மனோவுறுதி மிக்கவளாகவும் அவளை ஆக்கிற்று. அவ்வயதில் அவள் சிரமப்பட்டுச் சுமந்த வேலைப்பழுக்கள், அவளது உடலைச் செம்மைப்படுத்தி, பெண்மையின் இலட்சணங்களையும் முறுக்கேற்றித் திரட்சியுறச் செய்திருந்தன.

காலவோட்டத்தில், நோயிலும் முதுமையிலும் ஒடிந்துலர்ந்து உம்மா மூலைக்குள் முடங்கி விட்டபின், பத்தாம் ஆண்டுச் சித்தியென்ற கல்வித் தராதரத்தை வைத்துக் கொண்டு எதுவும் சாதிக்க முடியாதென்ற உண்மை, அவளை வெளிநாட்டுக்குத் துரத்திற்று. உம்மாவைக் கவனிப்பது, தனக்கெனக் கல்வீடொன்றை நிர்மாணித்துக் குடிசை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகிய இரண்டை மட்டுமே இலட்சியமாக வரித்துக் கொண்டு விமானமேறியவள், தன் இலட்சியங்களை எய்த, தூரத்து உறவினனான அமீனின் உதவியை நாடினாள். அவனது வழிகாட்டுதலிலேயே கட்டாருக்குப் பயணமாகியுமிருந்தாள். அதனால், உழைத்த பணத்தை - தன் இலட்சியங்களை நினைவூட்டும் கடிதங்களுடன் இணைத்து - அவனுக்கே அனுப்பி வைத்தாள். ஏழ்மையிலும் நேர்மை வழுவாதவர்கள் என அமீனின் குடும்பத்தினர் மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை, அனுப்பும் பணம் தொடர்பில் ஐயமேதுமின்றி நிம்மதியாக அவளை உறங்கச் செய்தது.

ஆனால், அவளது நம்பிக்கைக்கு முற்றிலும் விரோதமாக, அவள் கஷ்டப்பட்டு உழைத்தனுப்பிய பணமெல்லாம், அவளுக்குத் தெரியாமலேயே கொள்ளையடிக்கப்பட்டு விட்டமைதான் மிகவும் பரிதாபமானது.

அதேவேளை, றிஸானாவின் மீது அமீனுக்குப் பாசம் இல்லாமலில்லை. அவளது பணத்தை மோசடி செய்ய வேண்டுமென்று அவன் எப்போதும் எண்ணியதில்லை. 32 வயது நிரம்பிய அவனது மூத்த தங்கைக்குத் திடீரென நல்ல மாப்பிள்ளை அமைந்த போது, வீடு, நகை எதுவும் தேவையில்லை என்ற மாப்பிள்ளை வீட்டாரது வார்த்தையை நம்பித் திருமணத்தை உடனடியாக நடத்தி முடித்தனர், அமீன் குடும்பத்தினர். எனினும் இரண்டாம் மாதமே, அழுதழுதுச் சிவந்த கண்களோடு, மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த அமீனின் தங்கை, வீடு கட்டித் தருமாறு கேட்டு கணவனும் மாமியாவும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறிக் கண்ணீர் விட்டு விம்மிய போது, வேறு வழியின்றி, கையிலிருந்த றிஸானா அனுப்பிய பணத்தில், தனது வளவுக்குள் அடித்தளத்தைப் போட்டான் அமீன். அதன் பிறகு தொடர்ந்து அவள் அனுப்பிய பணம், அவ்வீட்டின் சுவராக, முகடாக, கூரையாகவெல்லாம் மாறி, வீட்டை முழுமைப்படுத்திற்று.

பொறுப்பு முடிந்து விட்டது, இனியாவது றிஸானா அனுப்பும் பணத்தில் அவளுக்குரிய வீட்டைக் கட்டலாம் என்று அமீன் நிம்மதிப் பெருமூசு விட்ட மறுநாளே, தங்கை கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றாள். ரி.வி, ரேடியோ உள்ளிட்ட வீட்டுத்தளபாடங்களும், நகைகளும் வாங்கித் தருமாறு கேட்டு கணவன் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறிக் கண்ணீர் விட்டழுதாள். மீண்டும் றிஸானாவின் பணத்தை எதிர்பார்க்க வேண்டியதாயிற்று, அமீனுக்கு.

றிஸானா, வெளிநாட்டிலிருந்த இரண்டு வருடங்களும், அவளது உம்மாவைச் சரியாகக் கவனிப்பதில் கொஞ்சமும் குறை வைக்காது நடந்து கொண்டமை குறித்து அமீனுக்குச் சற்றுத் தைரியம் இருந்தாலும், மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் அபாயச் சங்கு ஒலித்துக் கொண்டிருப்பது போன்ற எரிச்சல் மிகு பிரமையை மட்டும் அவனால் தட்டியதுக்க முடியவில்லை.

விமான நிலையக் கடிகாரம் 5:15ஐக் காட்டி நின்ற போது, ஓடு பாதையில் பளபளக்கும் நீள விமானமொன்று தரையிறங்கியிருந்தது. பதினைந்து நிமிடத் தவிப்புடனான காத்திருப்பின் பின், தோளிலும் கையிலும் கனமான பைகளுடன் ஒய்யாரமாக நடந்து வரும் றிஸானாவைக் கண்டான், அமீன். மகிழ்ச்சிச் சிரிப்பைப் பலவந்தமாக முகத்தில் பூசிக் கொண்டு, அவளை வரவேற்க எழுந்து சென்றான்.

'என்ன றிஸானா! சுகமா இரிக்கிறியா?'

'ஓம் நானா இரிக்கன்' வாய் நிறையச் சிரித்தாள் றிஸானா.

'பிரயாணமெல்லாம் எப்பிடி இருந்திச்சி?' ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக அவன் கேட்டு வைத்தான்.

'பரவால்ல நானா. நல்லா இருந்திச்சி. உம்மா எப்பிடி இரிக்கா?'

'அவக்கென்ன, சந்தோசமாத்தான் இரிக்கா. ஒவ்வொரு நாளும் நான் போய் பாத்திட்டுத்தான் வாற'

வாடகைக்கு அமர்த்திக் கொண்ட வேனில், பெட்டிகளை ஏற்றிப் போட்டுக் கொண்டு இருவரும் சௌகரியமாய் அமர்ந்து கொண்டனர். வாகன ஓட்டத்தின் வேகத்தில், வேனுக்குள் வேகமாகப் புகுந்து சுழன்றடிக்கும் காற்றின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாது சிதறும் தன் முக்காட்டையும், தலைக்கேசத்தையும் அடிக்கொரு முறை சரிசெய்து கொண்டே சிந்தனை வயப்பட்டிருந்த றிஸானாவைத் தயக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான், அமீன்.

'றிஸானா...!'

'ம்...'

'என்ன, ஏதோ பெரிய யோசனைல இரிக்காய் போலக்கிடக்கு'

'சே... அதெல்லாம் ஒண்டுமில்ல'

'றிஸானா! உனக்கிட்ட ஒரு விசயத்தச் செல்லணும். செல்லத் தயக்கமாவும் இரிக்கி. நீ கோவப்படக்கூடாது. சரியா?'

'பரவால்ல செல்லுங்க நானா. எவ்வளவோ கோவப்பர்ர விசயத்தயெல்லாந் தாண்டி வந்திட்டன். இனிக் கோவப்பர்ரதுக்கு ஒண்டும் இரிக்காது'

அவள் பீடிகையோடு பேசினாலும், அதனைத் துருவி ஆராய்ந்தறியும் மனோ நிலையில் அமீன் இல்லை. தான் சொல்ல வேண்டியுள்ள விடயத்தை எப்படியாவது பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட வேண்டுமென்ற தவிப்பிலேயே அவனது புலன்கள் முழுதும் ஒன்றித்திருந்தன.

விஷயத்தைக் கேட்டதும் றிஸானா சீறிச் சினப்பாளா? கொதித்துக் குமுறுவாளா? காறித் துப்புவாளா? என்றெல்லாம் எண்ணிப் பார்த்துப் பயந்து கொண்டிருந்தான், அமீன். எனினும், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, தங்கையின் திருமணம் தொடக்கம் அனைத்தையும் விலாவாரியாகவும், மனம் நெகிழும் படியாகவும் அவள் முன்னால் கொட்டிவிட்டு, அச்சம் முறுகிய தவிப்புடன் அவளை நோக்கினான், அவன்.

றிஸானாவின் கண்களில் கோபத்தின் அதிர்வு தெரிந்தது. எனினும், மறுகணமே அவள் கண்களை மூடிக் கொண்ட போது அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாது தடுமாறினான் அமீன். றிஸானா நீண்ட நேரம் மௌனமாய் இருந்து விட்டுப் பெருமூச்செறிந்தாள். அவள் சீறுவாள், குமுறுவாள் என்றெண்ணிப் பயந்து கொண்டிருந்த அமீனுக்கு அவளது இந்த அமைதி பெரும் சங்கடமாயிற்று. அவளிடமிருந்து என்ன வார்த்தை வரப்போகிறது என்பதையறியும் ஆர்வத் துடிப்புடன், கைகளைப் பிசைந்து கொண்டு அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'றிஸானா! ஏன் இப்பிடிப் பேசாம இரிக்காய்? நான் செஞ்சது பிழதான். அதுக்காக லேசா மன்னிப்புக் கேட்டுட்டு உன்ன ஏமாத்த எனக்கு விருப்பமில்லை. நீ என்ன சென்னாலும், என்னால ஏலுமெண்டா அத நான் செஞ்சி உன்ட கடன அடைக்கிறன்' மிகத் தாழ்ந்த குரலில் கூறிவிட்டு மீண்டும் அவளது முகத்தையே பார்த்தான் அமீன்.

றிஸானா கண்களைத் திறந்து அவனைச் சற்று நேரம் ஆழமாகப் பார்த்தாள்.

'இதுக்கு ஒரேயரு வழிதான் இரிக்கி'

'என்ன றிஸானா? செல்லு' அவன் ஆர்வமாய்க் கேட்டான்.

'நீங்க என்னக் கல்யாணம் பண்ணிக்கணும்'

(07)

இரண்டு மாதக் கைக்குழந்தையைச் சுமந்து கொண்டு, பரபரப்பாய் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த ஜனூபா, தான் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்று எண்ணியதாலோ என்னவோ, தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளச் சத்தமிட்டுக் கதைத்துக் கொண்டும், தன் வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களைக் கண்டித்து வேலை வாங்கிக் கொண்டும் மிகச் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

வீடு முழுக்க புதுப்பாய் விரிக்கப்பட்டிருந்தது. மேலே விதம்விதமான புடவைகளால் பந்தலிடப்பட்டிருந்து. தடிப்பான நீல நிறப் பெயின்ட்டில் வீட்டுச் சுவர்கள் கண்களை மிரட்டின. பளபளக்கும் காகிதப் பூக்கள் உத்தரத்தில் தொங்கிச் சுழன்று கொண்டிருந்தன. வளவுக்குள்ளிருந்த பூவரசை மர உச்சியில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஒலிபெருக்கிகளிலும், நாகூர் ஹனீபா, தன் கம்பீரக் குரலில் 'மாலை சூடும் மணமக்களே வாழ்க! நல்ல மாண்பு மேவும் குலமக்களே வாழ்க!' எனப் பாடிக் கொண்டிருந்தார். புத்தாடைகளணிந்த சிறுவர்கள், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், விளையாடிக் கொண்டும் வீட்டைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தனர். வயது முதிர்ந்தோரின் முகங்களில் மகிழ்ச்சியுடன் இணைந்த பொறுப்பும் அக்கறையும் கனமாகப் படிந்திருந்தன. பாவாடை தாவணி அணிந்த குமரிகள் தங்களுக்குள் கைகோர்த்துக் கொண்டு குசுகுசுப்பதும், எடுபிடி வேலைகளில் மும்முரமாய் நின்ற இளைஞர் குழாத்தின் ஜோக்கில் கண்கள் மட்டும் தெரியும் படியாகக் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு கொல்லெனச் சிரிப்பதுமான சுவாரசிய நிகழ்வுகளும் அங்கு நடந்தேறிக் கொண்டிருந்தன. கிராமத்துக் கல்யாண வீட்டின் வசீகரக் களையில் முழுமையாகத் தோய்ந்து நனைந்திருந்தது, அந்த வீடு.

அழகான பெட்ஷீட் விரிக்கப்பட்டு, விட்டுவிட்டு ஒளிரும் பல நிறச் சிறிய மின்குமிழ்களும், பளபளப்பான தோரணங்களுமாகச் சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இரட்டைக் கட்டிலில் அமர்ந்திருந்தாள், மணப்பெண் றிஸானா. மறு அறையில் அவளுக்குத் தாலி கட்டித் தலைமுடி பற்றித் தன் மனைவியாய் ஏற்றுக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான், அமீன்.

தன்னைச் சுற்றி நிகழும் கலகலப்புக்கும், சிரிப்பு இருமல்களுக்கும் மத்தியிலும் இறுக்கம் தளராது ம்மென்றிருந்த அவனது முகத்தைப் பார்த்துச் சந்தேகித்துக் கவலையுறுவதற்கெல்லாம், மணப்பெண்ணின் குடும்பத்தினரென்று யாரும் அங்கில்லையென்பது, அமீனின் தங்கையான ஜனூபாவுக்குச் சற்று ஆறுதலாக இருந்தாலும், அடிக்கடி அவனது அறைக்குள் நுழைந்து, அவனது காதுகளில் எதையோ கிசுகிசுத்து அவனைச் சிரிக்க வைக்கும் தன் முயற்சியை - பலமுறைத் தோல்விக்குப் பின்னாலும் - விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாள், அவள்.

எனினும், சிரிப்பதற்கான எந்த நியாயமுமின்றிப் பெருமூச்செறிந்து கொண்டிருந்தான் அமீன். எத்தனை கனவுகள்! எத்தனை கற்பனைகள்! எத்தனை எதிர்பார்ப்புகள்! எல்லாமும் தீயிலிட்டுக் கருகிய சாம்பலாய்த் தூர்ந்து சிதறப் போகும் கொடிய தருணமிது. அவனால் எப்படிச் சிரிக்க முடியும்.

அவனது தூய காதல், சுற்றியுள்ள இந்த அழுக்கு மூட்டைகளின் அசுரப்பிடிக்குள் சிக்கித் திணறிச் செத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே எப்படி அவனால் நிம்மதிப் பெருமூச்சு விட முடியும். வெறும் பணத்தை மட்டுமே இலட்சியமாய் வரித்துக் கொண்டு, தன் உணர்வுகளைச் சற்றும் மதிக்காது, விருப்பமற்ற இந்தத் திருமணச் சிறைக்குள் தன்னை வலிந்துத் திணித்துவிட்டவர்களை துர்நாற்றம் பிடித்த அழுக்கு மூட்டைகளாகவே எண்ணிச் சலித்தான் அமீன். அதேவேளை, இந்தத் திருமணம் பற்றி அறிய வந்தால், பாத்திமா, தன்னையும் இவர்களையத்த ஓர் அழுக்கு மூட்டையாகவே கருதிச் சினப்பாள் என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றிக் கலவரப்படுத்திற்று.

பாத்திமா பற்றிய நினைவு சோகத்தணலாய் அவனது உள்ளத்தைக் கௌவிற்று. ஒரு வருடமாக அன்பு வழிய வழியப் பேசிக் களித்த, கனவுச் செறிவுடனான காதல், இன்று வேரோடு முறிந்து விழுந்து நொறுங்கப் போவதை நினைக்க நினைக்க, அவனது கண்களில் கண்ணீர் பொங்கித் தளும்பிற்று. அவனது உள்ளத்தின் அழுகைக் குரல் வீடு முழுக்கக் கதறிற்று.

என்ன தடை வந்தாலும், எதிர்த்துப் போராடுவோம் என்று கூறிவிட்டு, இந்தச் சின்னப் பிரச்சினைக்குக் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல், றிஸானாவுக்குப் பதில் கூறத் திராணியற்றுக் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவித்த தன் கையாலாகாத் தனத்தையெண்ணி இன்னமும் அவன் வருந்திக் கொண்டுதானிருந்தானெனினும், அது தவறான முடிவு என்பதை மட்டும் அவனுள்ளம் ஏற்க மறுத்தது. ஏனெனில், அதைத் தவிர, றிஸானாவுக்குப் பதிலுரைப்பதற்கான வேறு நியாயமான எந்த வழியும் அவனுக்கிருக்கவில்லை.

'என்ட காசி முழுதையும் தரணும்; இல்லாட்டி என்னக் கல்யாணம் பண்ணிக்கணும்' எனப் பெரும் குண்டொன்றை றிஸானா தூக்கிப் போட்ட போது, இரண்டுமே முடியாத விடயம் என்றுதான் முதலில் அவன் கூறினான். ஆனால், அவளது பிடிவாதம் முறுகிய நச்சரிப்பும், உம்மா வாப்பாவினதும் தங்கைகளினதும் கட்டளை முதிர்ந்த கெஞ்சலும், அழுகையும், மச்சானின் உறவுரிமையுடனான அதிகாரத் தொனியும் இணைந்து, அவனது கனவுகளை கதறக் கதறக் குழிதோண்டிப் புதைத்தன. அந்தக் குற்ற உணர்ச்சியில், வாப்பாவையும் பின் சொத்துகளையும் இழந்து ஊர்க்கோடியில் அநாதையாய் அகதியாய் அல்லலுற்றுத் துவழும் அவனது அன்பு தேவதையான பாத்திமாவுக்கு ஆறுதல் கூறச் செல்லவும் முடியாமல் சோர்ந்து குமுறிக் கண்களுள் கண்ணீரைப் புதைத்தழுதான் அமீன். பாத்திமாவைக் கண் குளிரக் கண்டு இன்றோடு ஒன்றரை மாதம் பூர்த்தியாவதைக் கவலையுடன் அவர் நினைவு கூர்ந்தான். இனி பாத்திமாவைப் பார்க்கவே முடியாது என்பதை விடப் பார்க்கவே கூடாது என்பதுதான் கொடிய சித்திரவதையாக அவனை நைத்து வருத்திற்று.

றிஸானாவுக்கு வீடு இல்லையென்பதால், திருமணத்தையும், அதன்பின் ஒரு மாத மாப்பிள்ளை-பொண் தரிப்பையும் ஜனூபாவின் வீட்டிலேயே செய்வதென முடிவெடுக்கப்பட்ட போது, ஜனூபா அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று ஆமோதித்தாள். கல்யாணம் நடக்கு முன்னமேயே, 'மதினி! மதினி!' எனக் கொஞ்சத் தொடங்கிவிட்ட ஜனூபாவின் உள்ளத்தில், றிஸானா எவ்வளவு பணம் கொண்டு வந்திருப்பாள்? எத்தனை பவுண் நகை கொண்டு வந்திருப்பாள்? என்பது பற்றிய சிந்தனையே முடிவின்றிச் சுனைத்தோடிக் கொண்டிருந்தது. அவள் கொண்டு வந்ததில் தனக்குப் பெரியதொரு பங்கிருக்கிறது என்ற எதிர்பார்ப்புடனேயன்றி, றிஸானாவின் பணத்தில் கட்டப்பட்ட வீடுதானே என்ற எண்ணத்தில் அவ்வீட்டில் திருமணம் நடத்த அவள் சம்மதிக்கவில்லை. நானாவை, அவள் பலவந்தப்படுத்திச் சம்மதிக்க வைத்ததிலும், இந்த எதிர்பார்ப்பே பிரதான காரணமாய்த் தொக்கி நின்றது.

றிஸானா வரும் போது கையில் கொண்டு வந்ததும், வங்கியில் வைப்புச் செய்திருந்ததுமான பணத்தின் ஒரு பகுதிதான், வீட்டின் அலங்காரங்களாகவும், ஆடம்பரங்களாகவும், தடல் புடலான பகற்போசன விருந்துபசாரமாகவும், அந்திச் சிற்றுண்டியாகவும் மாறி, வீட்டினரையும் நிகழ்வில் கலந்து கொள்ள வருவோரையும் வயிறு புடைக்கத் திருப்திப்படுத்திக் கொண்டிருந்தது. 'மகராசியான மருமகப்புள்ள' என அமீனின் உம்மா அடிக்கடி மணப்பெண் அறைக்கு வந்து றிஸானாவின் தலையைக் கோதிவிட்டுச் செல்வதற்கு, வெளியே பளபளத்துக் கொண்டிருக்கும் தனது பணம்தான் காரணமென்பதை றிஸானா அறியாதவளல்ல.

அஸர்ப் பொழுதைத் தாண்டிச் சூரியன் சரியச்சரிய, ஆட்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கிற்று. ஊர்ப்பெரியவர்கள் வீட்டினுள்ளேயும், ஏனையோர் வெளிவாசலிலும் விரிக்கப்பட்டிருந்த பாயில் கலகலவென அமர்ந்திருந்தனர்.

தூய வெள்ளையில் சட்டையும் சாரனும் அணிந்து, தலையில் மாப்பிள்ளைத் தொப்பியும் மாட்டியவாறு அறையிலிருந்து வெளிப்பட்டு மண்டபத்திற்கு வந்து வெள்ளை விரிப்பில் அமர்ந்த அமீனின் கைகளைப் பிடித்து, றிஸானாவின் தூரத்துச் சகோதரன் முறையிலான ஒருவனின் கையுடன் இணைத்து, வகீலாக இருந்து திருமணத்தை நடத்தி முடித்தார், அவ்வூர்ப் பெரிய பள்ளிவாயலின் பேஷ் இமாம் மஜீதாலிம்.

அமீன், மணப்பெண் அறைக்குச் சென்று, றிஸானாவின் சகோதரன் பிடித்துத் தந்த அவளது முன்னெற்றி ரோமத்தைப் பிடித்துத் தன் மனைவியென்பதைச் சம்பிரதாயபூர்வமாக ஒப்புக்கொண்டு, சர்பத் கிளாஸை அவளுடன் பகிர்ந்து விட்டு மீண்டும் மண்டபத்திற்கு வர, கேக் வாழைப்பழம் சாப்பிட்டு சர்பத்தும் குடித்து முடித்துத் தயாராக இருந்த சபையினர் ஸலவாத்துரைத்துப் பின் மணமகனின் கைகளைப் பிடித்து வாழ்த்துக் கூறிவிட்டுச் சிரித்த முகத்துடன் கலைந்து செல்லத் தொடங்கினர்.

திருமணமானதும், இரு குடும்பத்தாரும் இணைந்து, மாப்பிள்ளையையும் பொண்ணையும் அழைத்துக் கொண்டு, சேமன் அவ்லியா கபுறடிக்குச் சென்று உண்டியலில் காணிக்கையிட்டு பாத்திஹாவும் ஓதி, புதுமணத் தம்பதியினரின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தித்து விட்டுத் திரும்புவது அவ்வூர் மக்களின் நீண்டகாலச் சம்பிரதாயம்.

கபுறடிக்குச் செல்ல எல்லோரும் ஆயத்தமாகினர். வீட்டின் முன்னால் வந்து நின்று இளைப்பாறிக் கொண்டிருந்த வெள்ளை வேனில் மாப்பிள்ளையும் பொண்ணும், அவர்களது மிக நெருங்கிய உறவினர்களும் ஏறிக் கொள்ள, கபுறடி நோக்கி வேன் விரைந்தது.

அருகில் தன் உடலோடு உரசினாற் போல், பட்டுச்சாரியும் பளபளக்கும் நகைகளும் அணிந்து புதுமணப் பெண்ணாய் அமர்ந்திருந்த தன் மனைவியின் அருகாமையைப் பெரும் சங்கடமாய் அனுபவித்துக் கொண்டிருந்தான், அமீன். அருகில் மனைவியிருந்தாலும் அவனது நினைவுகள் பாத்திமாவையே பலவந்தமாய் இழுத்துக் கொண்டிருந்தன. ஆனால், அது தவறென அவனது மனசாட்சி அவனைக் குத்திக்காட்டிற்று. மனைவியென ஒருத்தியைச் சம்பூரணமாக ஏற்றுக் கொண்ட பின்னாலும், அவளையன்றிப் பிறிதொருத்தியை மனதுக்குள் எண்ணிக் கொண்டிருப்பது இருவருக்கும் இழைக்கும் பெருந்துரோகமல்லவா! அறிவு அவனை எச்சரித்த போதும், மனமோ அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டுப் படிதாண்டிக் கொண்டுதானிருந்தது.

பாத்திமாவுடனான தனது காதல் பற்றித் தெரிய வந்தால் றிஸானா என்ன செய்வாள்? கொதித்துக் குமுறுவாளா? கைகழுவி விட்டுக் கரையேறுவாளா?

றிஸானா, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படியாக அவனிடம் கேட்ட போது, பாத்திமாவை ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் விடயம் பற்றி அவளிடம் சொல்லாமல் விட்டது சாதகமானதா, பாதகமானதா என இப்போது மனதுக்குள் விவாதித்துப் பார்த்தான், அமீன்.

தன் கடந்த காலக் காதல் குறித்துச் சங்கடமும் உறுத்தலுமாய் அமீன் நெளிந்து கொண்டிருக்க, அவனருகிலிருந்த றிஸானாவோ, தன் கடந்த காலத்தைச் சிறிதும் நினைவு கூராது, அது பற்றி எவ்வித அச்சமும் கொள்ளாது, மகிழ்ச்சியில் முறுவல் தெறிக்கும் முகத்துடன், முக்காடிட்டுப் பக்குவமாய்ப் பார்வையை வெளியே எறிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

நான்கு நிமிடப் பயணத்தின் பின், கபுறடிக்கு முன்னால் வந்து நின்று மூச்சுவிட்டுச் சுதாகரித்த வேனிலிருந்து இறங்கிய அமீனும் றிஸானாவும், தமக்கு முன்னால் மற்றொரு வெள்ளை வேன் வந்து நிற்பதையும், அதிலிருந்து புதுமணத் தம்பதியன்று இறங்குவதையும் சாதாரணமாக நோக்கினராயினும், பின் ஏதோ ஒருவித உந்துதலில் அத்தம்பதியினர் யார் என அடையாளங்காணும் ஆவலுடன் அவர்களது முகங்களைக் கூர்ந்து நோக்கியவர்கள், திடும்மெனப் பலமான அதிர்ச்சிக்குட்பட்டவர்கள் போல், ஒரு நிமிடம் இமை மூடவும் நினைவிழந்து ஸ்தம்பித்து நின்று விட்டனர். பவுடர் பூசி வெளுத்திருந்த அவர்களது முகங்கள், பெரு மழையின் கரு மேகங்களாய்ச் சட்டெனக் கறுத்துச் சிறுத்தன. உச்சந்தலையில் ஓங்கி விழுந்த அடியின் கனதியாய் கழுத்து நரம்புகள் புடைக்க அசூசையான எச்சிலுருண்டையன்று தொண்டையிலிருந்து கீழிறங்கிற்று.

சற்று நேரத்திற்கு முன்னர்தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டு, ஆசீர்வாதம் பெறக் கபுறடிக்கு வந்து வேனிலிருந்து இறங்கிய அந்தப் புதுமணத் தம்பதியினரான இஸ்மாயிலும் பாத்திமாவும், தமக்கு முன்னால் நின்றிருந்த அமீனையும் றிஸானாவையும் அதிர்ச்சி விழுங்கிய விழிகளுடன் பார்த்துத் திடுக்கிட்டு அசைவிழந்து நின்றிருந்தனர்.

நரம்புகளெங்கணும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறிச் சீறிவரும் உணர்ச்சியின் கொதிப்பை வெளிப்படுத்தாது அடக்கப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று அந்நால்வரும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வௌ;வேறு விதக் கதையாடல்களும் காட்சிக் கோர்வைகளும் சர்சர்ரெனச் சுழன்றடித்துத் தலைகளை உருட்டிக் கொண்டிருந்தன.

உஷ்ணக் கண்ணீர் நிறைத்துக் கொண்ட செந்நிறக் கண்களுடன் பாத்திமாவை நோக்கினான், அமீன். தன் வெண்ணிறப் பிஞ்சுப் பாதங்களை ஒன்றன் பின் ஒன்றாய்ச் சரியான வேகத்தில் நகர்த்திக் கொண்டு, அவளை விட மூன்று மடங்கு வயது முதிர்ந்தவனாக மதிக்கத்தக்க அவளது கணவனுக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கும் தன் காதல் தேவதையை நெஞ்சம் முழுவதும் மூச்சடைக்கக் கழிவிரக்கமாய்ப் பார்த்தான், அவன். அவனது உள்ளமெங்கும், குரல்வளையை அறுத்துப் பொங்குவதாய், ரத்தம் சொட்டிற்று.

கணவனின் பின்னால் நடந்து கொண்டிருந்த பாத்திமா, தலை நிமிர்த்தி அமீனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில், சகிக்க முடியா துர்வாடையுடனான அழுக்கு மூட்டையன்றைப் பார்க்கும் அருவருப்பான முரட்டுப் பாவனை கண்ணீருடன் கலந்திணைந்து காட்டமாகத் திமிறிக் கொண்டு தெரிந்தது.

ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமாகியிருந்தும் பேசிக் குசலம் விசாரித்துக் கொள்ள முடியா இறுக்கத்தில் முகம் கறுத்துத் தலை குனிந்திருந்த இரண்டு புதுமணத் தம்பதியினரும், ஆசீர்வாதம் பெறும் நோக்குடன், கபுறடிக்குள் நுழைந்து கொண்டிருக்கும் நேரம், மேற்கு வானில் தன் பழுப்பு நிறக் கன்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டு, கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான், அஸ்தமனச் சூரியன்.

No comments:

Twitter Bird Gadget