Monday, October 10, 2011

டியூஷன் கடை



நசீரோடு சண்டையிட்டு விலகி வந்து இன்றோடு இரண்டு மாதங்களாகி விட்டன. உருப்படியாக எதுவும் செய்து முடித்துவிடவில்லை. மாலை நேரங்களில் கறுப்புப் புறாக்களாகப் பாதைகளில் மிதந்து செல்லும் இளஞ்சிட்டுகளைப் பார்க்குந் தோறும் அடிவயிற்றிலிருந்து எழுந்து நுனி நாவைக் கவ்வும் எரிச்சல்.

'ஊருக்குள்ள அவனுக்குத்தான் புள்ளெகள் கூட'

'மாசமொண்டுக்கு லச்சத்துக்குக் குறையாத வருமானம்'

'அவன், குடுத்து வெச்சவன். மாமனார் சீதனமாக் குடுத்த ஆறு பாகக் காணிக்குள்ள சிக்கனமா அஞ்சாறு குடில அடிச்சி, எப்பிடி உழைக்கிறான்!'

'நம்மட மாமனாரும் இருக்கிறானே. கஞ்சப் பண்டி. ஒரு ஊட்ட முழுசா முடிச்சித் தாரதுக்கே பத்து வருஷம் காத்துக் கிடக்க உட்டுட்டான்'

'சன் டியூடோரியல்' எண்டு பேரு வெச்சிக் குடுத்ததே நான்தான்'

'ரெண்டு வருஷமா சொந்த இடத்தப் போல எவ்வளவு அழகா பராமரிச்சி வந்தன். கொடுக்கல் வாங்கல்கள்ள எவ்வளவு உட்டுக் குடுத்துப் போனன். கடைசில நாய விரட்டுற மாதிரி வெளிய போட்டுட்டான். நண்டி கெட்டவன்'

'இங்கிலீஷ்ல என்ன அடிக்க எவன் இருக்கான் இங்க! 12 காலங்களெயும் கரச்சிக் குடிச்சவன் நான்'

'இதுகளும் நண்டி கெட்ட குரங்குகள்! டியூஷன்ல நான் இல்லெண்டு தெரிஞ்சவுடன, போறத்த நிப்பாட்டினிச்சுகளா? அதுகள்ற பாட்டுக்கு விடாம போய்க்கிட்டிருந்தா, அவனுக்கு எப்படி நம்மட அரும விளங்கும்?'

'இந்த ரெண்டு மாசமா யோசிச்சதில ஐடியாவுல பட்ட ஒரே வழி. நம்ம ஊட்டயே சென்டராக்கிட வேண்டியதுதான். ஒரு ரூம்ல குடும்பத்த வெச்சிட்டு, மத்த ரெண்டு ரூமயவும் ஒதுங்க வெச்சி எடுத்தா, நாலஞ்சி டியூஷன் கிளாஸ் நடத்தப் போதுமாயிருக்கும். எல்லாப் பாடமும் தேவல்ல. இங்கிலீஷ், மெட்ஸ், சைன்ஸ், தமிழ் அவ்வளவும் போதும். வேணுமெண்டா ஸ்கொலஷிப் வகுப்பொண்டும் போடலாம். ஃபேமஸான ரெண்டு மூணு சேர்மார எடுத்து, எல்லாப் பள்ளிலயும் ஜும்மா டைம்ல நோட்சும் குடுத்துட்டா, மறுவா, நாம எழும்பிடலாம்'

'இரிடா நசீர், உனக்குப் போட்டி நாந்தாண்டா!'

'நம்மட சென்டருக்கு என்ன பேரு வெக்கலாம்...! சன், மூன், ஸ்டார்... ம்ஹூம்.... அதெல்லாம் வாணா. ப்ரைட் டியூஷன் சென்டர்! வாவ்... வண்டர்புல்...'

'குறெஞ்சது முண்ணூறு புள்ளெகள். மாசமொண்டுக்கு ஒராலுக்கு ஐநூறு ரூபா. மொத்தம் ஒரு லச்சத்து அம்பதாயிரம்'

'படிப்பிக்கிறவங்களுக்கும் மத்த மத்த செலவுகளுக்கும் அம்பதாயிரத்த தூக்கி எறிஞ்சா, மிச்சம் நம்ம கைல ஒரு லச்சம். ஆஹா...'

'டேய் நசீர்! நீ என்ன ஹன்க் பைசிக்கிள்ளயா திரியிறாய். பாருடா, நான் கார்ல வந்து இறங்குறன்'.

2 comments:

Mahess said...

உண்மைதான் நீங்கள் கூறியிருப்பது. பணம் சம்பாதிக்கும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டு விட்ட இன்றைய சமூகச் சூழல் ஐரோப்பிய சமூகங்களிடமிருந்து இந்தியாவும் இந்தியாவிடமிருந்து இலங்கையும் பெற்றுக் கொண்டுள்ள அழிவுப் பொதி.

Anti Clinton said...

பாடசாலையில் கற்பிக்கும் சில ஆசிரியர்களும் கூட, கற்பித்தலை வெறுமனே ஒரு தொழிலாகவே கருதி வருவதுடன், சிறார்களின் கல்விக்கும் அநீதி இழைத்து வருகின்றனர். இன்னும் சிலர், பாடசாலையில் கற்பிக்காது காலம் கடத்தி விட்டு, டியூஷன்களுக்கு கட்டளை போட்டு மாணவர்களை வரவழைத்து தமது பக்கட்டுகளை நிரப்பிக் கொள்கின்றனர். மற்றும் சிலரோ தமது பிரைவேட் டியூஷன்களுக்கு வருபவர்களுக்கு மட்டுமே பாடசாலையில் கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளர். இத்தகையோரின் அநியாயங்களிலிருந்து இறைவன்தான் எமது பிள்ளைகளையும் அவர்களது எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டும்.

Twitter Bird Gadget