விளக்கைச் சுற்றும் விட்டிலாய்
கிறுகிறுப்பு உள்ளத்துக்கு
மென்மை தழுவிய
உள்ளங்கை ரேகையும்
வாசம் கௌவிய
நாசித் துவாரங்களும்
இன்னும் மயக்கக் கிறக்கத்தில்
நரம்புகளெங்கணும்
உணாவிச் செல்லும்
இன்பக் கிளுகிளுப்புகளிடை
ஒரு வலி இருக்கிறது
மகிழ்ச்சியை மட்டுமே
தூண்டத் தெரிந்த
அற்புதமான வலியது.
சோர்விறுகிச் செயலற்றிருக்கையில்
மீண்டுமொரு புரட்சிக்காகத்
தட்டியெழுப்பி விடுவது அதுதான்!
முரண்பாட்டுணர்வுகளுக்கும்
ஊடல் உறுமல்களுக்கும்
முடிவைத் திணிப்பதும் அதுதான்!
ஆஜானுபாகுவான கொம்புக்காளையாய்
வெகு தொலைவுக்கு
வாழ்க்கை வண்டியை
இழுத்துச் செல்வதும் அதுதான்!
வாழ்வுத் தேடலின்
பெரும் பகுதியைப் பூர்த்தி செய்யும்
அந்த வலியின் சுவைக்குள்
அடங்கிப் போகிறதென்
ஆக்ரோஷங்கள்.
May 2006
No comments:
Post a Comment