Saturday, May 1, 2010

இருண்மைக்குள் ஒரு பணி



நிஜத்துக்கும் நிழலுக்கும்
வேறுபாட்டறியா
ஓர் இருண்மைக்குள்
அழைக்கப்படுகிறேன்.

விதிகளும் மரபுகளுமற்ற
விளையாட்டு மைதானமது

உடலசைவுகளெல்லாம்
விதிகளாகும்

உணர்வெழுச்சிகளெல்லாம்
மரபுகளாகும்

மண்புழுவாய் ஊர்ந்தலையும்
உணர்வுகளின் விகசிப்புக்குள்
முரட்டுக் காளையது
மூச்சடக்கி அமுங்கும்

மனம் ஒன்றித்து விட்ட
மகிழ்ச்சிக்குள் விழுந்து
சிறு குழந்தையாய் நீச்சலடிக்கும்
ஸ்பரிசங்கள்

தொலைந்து விட்ட
வாழ்வின் தேடலாய்
இருளின் நீளத்துடன்
போட்டியிட்டுக் கொண்டே
பணி தொடரும்

இரவின் இருண்மைக்கும்
கதவிடுக்கினூடு
கசியும் பகலின் வெளிச்சத்துக்கும்
நன்கு பரிச்சயமாகிப் போன
பணி அது

அன்பின் முடிச்சுகளிடை
அவிழ்த்து விடப்பட்டு
விண்ணையும் மண்ணையும்
முட்டி நிற்கும்
அந்தப் பணி
இருண்மையின் தழுவலை
ரசித்து ரசித்து
எதிர்கால வெளிச்சங்களைப்
பொறுக்கிக் கொண்டிருக்கும்

September 2006

No comments:

Twitter Bird Gadget